06) அனுமதிக்கப்பட்ட உணவுகள்
உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை எவை? என்பதற்கு தனியாக எந்த பட்டியலும் இல்லை அவ்வாறு பட்டியலிட நினைத்தால் அதைப் படித்து பின்பற்றுவது சாத்தியமும் இல்லை ஏனெனில் அவற்றின் எண்ணிக்கை மில்லியன் ட்ரல்லியன்களைத் தாண்டும் அதே நேரத்தில் தடுக்கப்பட்டவற்றின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு .எனவே தடுக்கப்பட்ட்தை அறிந்து கொண்டால் மீதியுள்ள அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையே என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான் (அல்குர்ஆன்: 2:29) ➚
தடுக்கப்பட்டவை தவிர உலகில் உள்ள ஏனைய அனைத்தும் நாம் உண்பதற்கும் பயன்படுத்துவதற்கும் உரியவையே அதில் நாம் விரும்பியதை சாப்பிடலாம் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது
எனவே எந்தவொன்றையும் சாப்பிட அனுமதி இருக்கிறதா? என ஆய்வு செய்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறதா? என்று பார்த்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.
மேலும் தடுக்கப்பட்டவை கூட சில நேரங்களில் சில இடங்களில் சில மனிதர்களை கவனித்து அனுமதிக்கப்பட்டவையாகலாம் அவை என்னென்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
நிர்பந்தத்தில் உள்ளவர் ஹராமைச் சாப்பிடுதல் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட எந்த உணவும் கிடைக்கப் பெறாத ஒருவர் தடுக்கப்பட்டதைச் சாப்பிடலாம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை
ஆகியவற்றை அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும் வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 2:173, 5:3, 6:145, 16:115) ➚
ஹலாலான உணவு இருக்கிறது ஆனால் அதை வாங்கிச் சாப்பிட வசதி இல்லாத வறிய நிலையில் ஒருவர் இருந்தால் அவரும் தடுக்கப் பட்டதை சாப்பிடலாம். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு ஆளானோரை, அல்லாஹ் மன்னிப்பான், அவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 5:3) ➚
ஒரு மனிதர் தம் மனைவி மக்களுடன் ஹர்ரா எனும் இடத்தில் தங்கியிருந்தார். அவரிடம், ஒருவர் வந்து எனது ஒட்டகம் காணாமல் போய்விட்டது. அதைப் பார்த்தால் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் (சென்றார்.அவரது ஒட்டகம் கிடைத்து விட்டது.) உரிமையாளர் வரவில்லை. அது நோயுற்றது அதை அறுத்து விடுங்கள் என அவரது மனைவி கூறினார். அவர் மறுத்து விட்டார். ஒட்டகம் இறந்து விட்டது. இப்போதாவது இதன் தோலை உறியுங்கள் கொஞ்சத்தை சாப்பிட்டு விட்டு இறைச்சியையும் கொழுப்பையும் காய வைத்து பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.
நபியவர்களிடம் கேட்காமல் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டு நபியிடம் வந்து இதைப் பற்றி முறையிட்டார்.அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறரிடம் தேவையாகாத அளவு உம்மிடம் வசதி இருக்கிறதா? எனக் கேட்டார்கள் இல்லை என பதிலளித்தார். அப்படியானால் சாப்பிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரழி) நூல் : (அபூதாவூத்: 3320),
(அஹ்மத்: 19902, 19908, 19998, 20013, 20086)
இந்தச் செய்தியில் வறிய நிலையில் உள்ளவருக்கு செத்த ஒட்டகத்தைச் சாப்பிட நபியவர்கள் அனுமதியளித்துள்ளார்கள். பசியோடிருப்பவர் பிறர் தோட்டத்தில் சாப்பிடுதல் உண்ண உணவின்றி பசியில் வாடும் ஒருவர் பிறருக்குச் சொந்தமான தோட்டத்தில் விளைந்து நிற்கும் விளை பொருட்களை சாப்பிட்டுக் கொள்ளலாம். முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைக்கிறார் (அ) விதை விதைத்து விவசாயம் செய்கிறார். அதிலிருந்து மனிதனோ, விலங்கோ (அ) பறவையோ சாப்பிட்டால் அது அவருக்கு தர்மத்திற்குரிய நன்மையைப் பெற்றுத் தரும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல் : (புகாரி: 2320, 6012),
(முஸ்லிம்: 2904), (திர்மிதீ: 1303), (அஹ்மத்: 12938, 12529, 12910, 13064)
இங்கே நபி (ஸல்) அவர்கள் விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுவதைப் பற்றிப் பேசவில்லை. அப்படியிருந்தால் அது வியாபாரமாகிப் போகும் அதை தர்மமாகக் கருத முடியாது.விலங்கு மற்றும் பறவைகளோடு சேர்த்துச் சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது அவைகள் எப்படி பசிக்கும் போது யாரிடமும் அனுமதி பெறாமல் சாப்பிடுகின்றனவோ அது போல பசியில் வாடும் ஒரு மனிதன் உரிமையாளரின் அனுமதி பெறாமல் விளைந்து நிற்கும் தானியங்களை,பழங்களைப் பசி போக்குவதற்காகப் பறித்துத் தின்னலாம் என்பது விளங்குகிறது. முஸைனா குலத்தைச் சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் மரத்திலிருந்து பறிக்கப்படா (மல் அதிலே தொங்கிக் கொண்டிருக்கும்) பழங்களைப் பற்றிக் கேட்டார்.அதற்கு சேகரித்துக் கொள்ளாமல் வாயால் (வயிற்றுக்கு)
சாப்பிட்டவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி)நூல் : (அஹ்மத்: 6641, 6396, 6458, 6597, 6797) (திர்மிதீ: 1210), (நஸாயீ: 4872), (அபூதாவூத்: 1455, 3816), (இப்னு மாஜா: 6586)
தோட்டத்தில் சாப்பிடலாம் எனும் அனுமதி மரம் செடி, கொடிகளில் பறிக்கப்படாமல் இருப்பவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும். பறித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களில் தோட்டக்காரரின் அனுமதியின்றி கை வைத்திடக் கூடாது. அவ்வாறு செய்தால் அது திருட்டுக் குற்றமாகக் கருதப்படும். பழங்களை (மரத்தை விட்டு விட்டு அதன்) பாதுகாப்பு இடங்களிலிருந்து எடுத்தால் (எடுக்கப்பட்ட பொருளின் விலை) ஒரு கேடயத்தின் விலைக்கு சமமாக இருப்பின் அவரது
கைகள் வெட்டப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல் : (அஹ்மத்: 6641, 6396, 6458, 6597), (நஸாயீ: 4872), (அபூதாவூத்: 1455, 3816) ((இப்னு மாஜா: 2586)
மேலும் இந்த அனுமதி பசியைப் போக்கிக் கொள்வதற்கு மட்டும் தான் அங்கிருந்து எதையும் எடுத்துச் செல்வதற்கு அல்ல. எடுத்துச் சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்படும்.
தோட்டத்திலிருந்து அனுமதியின்றி பழங்களை எடுத்துச் செல்பவரிடம் அதே போல இரு மடங்கு தொகையை அபராதமாக பெற்றுக் கொண்டு தண்டனைக்காக அடிக்கவும் வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல் : (அஹ்மத்: 6641, 6396, 6597), (நஸாயீ: 4872) (அபூதாவூத்: 1455, 3816), (இப்னு மாஜா: 2586)
வயிற்றுக்கு வழியில்லாமல் வறிய நிலையில் இருப்போர்நம் தோட்டத்தில் நுழைந்து எதையேனும் பறித்து தின்பதைக்கண்டால் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது. இயன்றவரை மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். ஓராண்டு எங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது நான்
என் சிறிய தந்தையுடன் மதீனா வந்தேன். (வரும் வழியில்) எல்லையோரத்தில் இருந்த தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்து கதிர்களைப் பறித்துச் சாப்பிட்டேன். கொஞ்சத்தை என்
ஆடையிலும் எடுத்துக் கொண்டேன். அங்கு வந்த தோட்டக்காரர் என்னை அடித்து என் ஆடையையும் பிடுங்கிக் கொண்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவரைப் பற்றி முறையிட்டேன்.
நபியவர்கள் அவரை அழைத்து வர ஆளனுப்பினார்கள். அவர் வந்ததும் இவ்வாறு உம்மை செய்யத் தூண்டியது எது? எனக் கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! இவர் என் தோட்டத்தில் நுழைந்து கதிர்களைப் பறித்து எடுத்துக் கொண்டார் எனக் கூறினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் இவர் அறியாமையில் இருந்தார். இவருக்கு நீ சொல்லிக் கொடுக்கவில்லை. பசியுடன் இருந்தார் இவருக்கு நீ உணவளிக்கவும் இல்லை. எனவே இவரது ஆடையை திருப்பிக் கொடுத்து விடும் என்று
கூறி விட்டு எனக்கு ஒரு மரக்காலோ (அ) அரை மரக்காலோ உணவு (தானியம்) வழங்கி (உதவுமாறு) கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : அப்பாத் பின் க்ஷரஹ்பீல் (ரழி) நூல் : (நஸாயீ: 5314) (அபூதாவூத்: 2252), (இப்னு மாஜா: 2289) (அஹ்மத்: 16865)
இந்த நிகழ்ச்சியில் பசிக்காக சாப்பிட்டது போக மேலும் கொஞ்சத்தை அவர் எடுத்துக் கொள்ளவும் செய்திருக்கிறார். அவருக்கு தண்டனை தர ாமல் உதவி செய்திருக்கிறார்கள்.இதை வைத்துக் கொண்டு சேகரித்துக் கொள்வதை குற்றமில்லை என கருதிவிடக் கூடாது. ஏனெனில் சேகரித்துக் கொள்ளக் கூடாது என்றும் அவ்வாறு செய்பவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் நபி
(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக கட்டளையிட்டிருப்பதால் அதைத் தான் நாம் பின்பற்ற் வேண்டும்
இந்த நிகழ்ச்சியை அவரது அறியாமை மற்றும் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நபியவர்கள் வழங்கிய விதி விலக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முடியாதசின்னஞ்சிறு பிராணிகள் வழி தவறி வந்து விட்டால் அதன் உரிமையாளர் யாரென்று தெரியாத போது அவற்றை அப்படியே வீதியில் விட்டு விட்டால் வேறு விலங்குகள் கவ்விச் சென்று விடும். அவற்றை நாம் சாப்பிடுவதில் தவறில்லை.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! வழி தவறி வந்து விட்ட ஆட்டை
என்ன செய்வது? எனக் கேட்டார். அது உனக்குரியது (அ) உன் சகோதரனுக்குரியது (அ) ஓநாய்க்குரியது எனக் கூறினார்கள். வழி தவறி வந்து விட்ட ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார்.
அதைக் கேட்டதும் நபியவர்களின் முகம் (கோபத்தில்) சிவந்துவிட்டது. உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் உள்ளது. நீர் நிலைகளுக்குச் செல்கிறது. மரத்திலிருந்து தின்கிறது. (பிறகென்ன பயம்?) என அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள்
கேள்வியெழுப்பினார்கள். அறிவிப்பவர் : ஜைத் பின் காலித் (ரழி) நூல் : (புகாரி: 2427, 91, 2372, 2430, 2436, 2438, 5292, 6112)
பேரீத்தம் பழம் ஒன்று கீழே கிடந்தது. அதைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் இது தர்மப் பொருளாக இருக்கலாம் (எனும் சந்தேகம்) இல்லாவிடில் இதை நான் சாப்பிட்டிருப்பேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல் : (புகாரி: 2055, 2431, 2433), (முஸ்லிம்: 1781, 1782, 1783), (அபூதாவூத்: 1408, 1409), (அஹ்மத்: 11893, 12447, 12535, 13044, 13210, 13596)
நபி (ஸல்) அவர்களுக்கு தர்மப் பொருள் ஹராமாகும்அந்த சந்தேகத்தினால் அதை தவிர்த்துக் கொண்டார்கள். நமக்கு அந்த சிக்கல் இல்லை. எனவே பே.பழத்தைப் போல அற்பமான பொருட்கள் கிடைத்தால் உரியவரின் அனுமதியில்லையே என அச்சப்படத் தேவையில்லை. (மேலும்
அற்பமானது எது என்பதை நம் மனசாட்சியின் படி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்)
வேட்டையாடிச் சாப்பிடுதல் இஸ்லாம் கூறும் முறைப்படி அறுக்கப்படாத பிராணிகளை
சாப்பிடக் கூடாது என்பதை நாம் அறிவோம். ஆனால் வேட்டையாடப்படும் பிராணிகள் இதிலிருந்து விதிவிலக்குப் பெறுகின்றன. வேட்டையாடப்படுபவை முறைப்படி அறுப்பதற்கு முன் செத்துப் போனாலும் அவற்றை சாப்பிடலாம். தமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் .தூய்மையானவைகளும் வேட்டையாடும் பிராணிகளில் எவற்றுக்கு நீங்கள பயிற்சியளித்து அல்லாஹ் உங்களுக்கு கற்றுத் தந்ததைக் கற்றுக் கொடுக்கிறீர்களோ அவை (வேட்டையாடியவை)களும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.எனக் கூறுவீராக!அவை உங்களுக்கு பிடித்துக் கொண்டு வந்ததை சாப்பிடுங்கள்.(அதை அனுப்பும் போது)அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் விரைந்து கணெக்கெடுப்பவன்.
(அல்குர்ஆன்: 5:4) ➚
நாங்கள் பயிற்றுவிக்கப்பட்ட நாயை (வேட்டைக்கு) அனுப்புகிறோம் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கவர்கள் (தான் சாப்பிடாமல்) உனக்காக அவை கொண்டு வருவதைச் சாப்பிடு என்றார்கள் அவை கொன்று விட்டாலுமா? என்று கேட்டேன் ஆம் கொன்று விட்டாலும் தான்.என்று
விளக்கமளித்தார்கள். நாங்கள் அம்பால் வேட்டையாடுகிறோம் என்று கூறினேன்.அதற்கவர்கள்(அம்பின் முனை) கிழித்துச் சென்றால் சாப்பிடு!அதன் அகலவாக்கில் தாக்கியிருந்தால் சாப்பிடாதே என்றார்கள்.
அறிவிப்பவர் :அதீ பின் ஹாதிம்(ரழி) நூல்:(புகாரி: 5477)
யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் எனும் நோக்கில் பொதுவில் வைக்கப்பட்ட உணவை உரிமையாளரின் தனிப்பட்ட அனுமதி பெறாமலே சாப்பிடலாம். நாங்கள் பேரீச்சை மரங்கள் உடையவர்களாக இருந்தோம். எங்களில் ஒவ்வொருவரும் தமது பேரீச்சையின் விளைச்சலுக்கு
தகுந்தாற் போல ஒரு குலையோ (அ) இரண்டு குலைகளோ கொண்டு வந்து பள்ளிவாசலில் தொங்க விட்டு விடுவோம் அங்கே உணவுக்கு வழியில்லாத திண்ணைத் தோழர்கள் இருப்பார்கள். அவர்களில் எவருக்கும் பசித்தால் அந்த பேரீச்சங் குலையின் பக்கம் வந்து தமது கைத்தடியால்
அடிப்பார். கனிந்ததும் கனியாததுமாக பே.பழங்கள் கீழே விழும். அதை எடுத்துச் சாப்பிட்டுக் கொள்வார். அறிவிப்பவர் : பர்ரா இப்னு ஆஸிப் (ரழி)நூல் : (திர்மிதீ: 2913), (இப்னு மாஜா: 1812)
(பொது மக்களுக்காக) தொங்கவிடப்பட்ட பழங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதிலிருந்து சேகரித்து எடுத்துப் கொள்ளாமல் தேவைக்கு சாப்பிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல் : (திர்மிதீ: 1210), (நஸாயீ: 4872) (அபூதாவூத்: 1455, 3816)
உங்கள் வீடுகளிலோ உங்கள் தந்தையர்வீடுகளிலோ, உங்கள் அன்னையர்வீடுகளிலோ, உங்கள் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது எதன் சாவிகளை நீங்கள் உடமையாக வைத்துள்ளீர்களோ அங்கேயோ அல்லது உங்கள் நண்பரிடமோ நீங்கள் சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றோர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ, தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. (அல்குர்ஆன்: 24:61) ➚
மார்க்கத்தில் தடுக்கப்பட்ட வழிகளில் பொருளீட்டிய ஒருவர் தரும் உணவைச் சாப்பிடுவதில் தவறில்லை.ஏனெனில் அவர் செய்த குற்றத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பாளியாவார். ஒருவர் மற்றவரின் சுமையை சுமக்க மாட்டார். கனத்த சுமையுடன் வரும் ஒருவர் அதைச் சுமக்குமாறு யாரையேனும் அழைத்தால் (அழைக்கப்படுபவன்) உறவினராக இருந்தாலும் அதிலிருந்து எதுவும் அவன் மீது சுமத்தப்படாது. (அல்குர்ஆன்: 35:18, 39:17, 17:15, 6:164) ➚
ஒரு பொருளை தருபவரும், பெறுபவரும் எந்த அடிப்படையில் பரஸ்பரம் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதைத் தான் கவனிக்க வேண்டும். அந்தப் பொருள் கடந்து வந்த பாதையை ஆய்வு செய்யத் தேவையில்லை. அந்த ஆய்வுக்குள் நுழைந்தால் எந்த ஒன்றையும் சாப்பிடவோ (அ) பயன்படுத்தவோ இயலாத நிலை தான் மிஞ்சும். எனவே இதில் நம்முடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அல்லாஹ்வும்,ரசூலும் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தான் பார்க்க வேண்டும்..
நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் அதற்கு முன்னும் பின்னும் வட்டி, மோசடி போன்ற தவறான வழிகளில் பொருளீட்டும் பொருளாதாரக் கொள்கையைக் கடை பிடித்து வந்தனர் குர் ஆனும் இந்தக் கருத்தைப் பறைசாற்றுகிறது. யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின்
பாதையை விட்டு அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும் , வட்டியை விட்டும் அவர்கள்
தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு தடை செய்தோம் அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:160-161) ➚
யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! கொழுப்பு அவர்களுக்கு தடுக்கப்பட்ட போது அதை விற்று அதன்
கிரயத்தைச் சாப்பிட்டார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி) நூல் : (புகாரி: 2224), (முஸ்லிம்: 2962, 2963) (அஹ்மத்: 8390)
யூதர்களின் கேடு கெட்டப் பொருளாதாரக் கொள்கையை விளக்கும் ஆதாரங்கள் இவை, இப்படிப்பட்டவர்களின் உணவைத் தின்பதில் தவறில்லை என்கிறான் இறைவன். வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உங்கள் உணவு அவர்களுக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 5:5) ➚
இந்தக் கட்டளைக்கு நபி (ஸல்) அவர்கள் செயல் வடிவமும் கொடுத்திருக்கிறார்கள். யூதப் பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விக்ஷம் தடவிய
ஆட்டை கொடுத்தாள். (விக்ஷம் இருப்பது தெரியாமல்) அதிலிருந்து கொஞ்சத்தை சாப்பிட்டார்கள். (பிறகு) அவள் பிடித்து வரப்பட்டாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைப் பற்றி அவளிடம் கேட்டார்கள். உங்களை கொல்வதற்காகத் தான் (இவ்வாறு) செய்தேன் என்றாள். என்னைக் கொல்வதற்கு அல்லாஹ் உன்னை நியமிக்கவில்லை என நபி (ஸல்) அவர்கள் அவளிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி)நூல் : (புகாரி: 2617), (முஸ்லிம்: 4060), (அபூதாவூத்: 3909) (அஹ்மத்: 12808)
வட்டிக்காரர்களாகிய யூதர்களின் உணவை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டிருக்கிறார்கள். என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஹராமானதை சாப்பிட்டு விட்டார்கள் என்று சொல்ல முடியுமா? முடியாது என்றால் அது தரும் பாடம் என்ன? ஒருவர் நமக்குத் தரும் பொருள் அவருக்கு எந்த வழியில் கிடைத்திருந்தாலும் அது குறித்து நாம் அச்சப்படவோ, ஆய்வு செய்யவோ தேவையில்லை என்பதைத் தானே கற்றுத் தருகிறது.
மார்க்கத்தில் அன்பளிப்பு, தர்மம், விருந்தோம்பல்போன்றவை அனுமதிக்கப் பட்டிருக்கும் போது அதை யார்தந்தாலும் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.இன்னா ர ிடத்தில் (அ) இன்ன வழியில்
பொருளீட்டுபவரிடத்தில் எதையும் வாங்கக் கூடாது எனநேரடியாகவோ, (அ) மறைமுகமாகவோ தடை இருப்பின்அதைப் புறக்கணிக்கத்தான் வேண்டும்.அவ்வாறு எந்த தடையும் இல்லாத பட்சத்தில் வட்டிக்
காரன் சாப்பாட்டை சாப்பிடாதே! வழி தவறியவன் உணவை உண்ணாதே! என்று தடுத்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நமது மன இச்சையை நுழைத்த குற்றவாளியாகி விடுவோம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்குஅனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள் வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: 5:87, 6:138-139, 6:150, 7:32, 10:59, 16:116) ➚
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்குஅனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 5:5) ➚
குர்ஆனில் வேதக்காரர்கள் என குறிப்பிடப்படும் யூதர்களும்,கிறித்தவர்களும், அல்லாஹ்வின் பெயர்கூறி முறைப்படி அறுத்து உண்ண வேண்டியவற்றை அவர்கள் அறுத்துத் தந்தால் அதை நாம் சாப்பிடலாம் என இவ்வசனம் கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள வேதக்காரர்கள் எனும் சொல் இன்று உலகில் உள்ள அனைத்து யூத, கிறிஸ்தவர்களையும் குறிக்கும் பொதுச் சொல் என விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக இஸ்ரவேல் சமூகத்தைச் சார்ந்த வேதக்காரர்களை மட்டுமே
குறிக்கும் ஏனெனில் வேதக்காரர்கள் என்றழைக்கப்படும் யூத கிறிஸ்தவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவருமே இஸ்ரவேல் எனும் சமூகத்திற்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இன்ஜீல் ஆகிய வேதங்களும் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன. மூஸாவுக்கு நாம் வேதத்தை வழங்கினோம். என்னைத் தவிர (யாரையும்) பொறுப்பாளர்களாக்கிக் கொள்ளக் கூடாது என்று (எடுத்துரைத்து) இஸ்ராயீலின் மக்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாகவும் அதை ஆக்கினோம்.
(அல்குர்ஆன்: 17:2) ➚
இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை (ஈஸாவை)முன்னுதாரணமாக்கினோம். (அல்குர்ஆன்: 43:59) ➚
இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்காக அனுப்பப்பட்டஅல்லாஹ்வின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைபடுத்துபவன். எனக்குப் பின் வரவுள்ள அஹ்மது எனும் பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன் என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன்: 61:6) ➚
இந்த வசனங்கள் அ)னைத்தும் வேதக்காரர்கள் என்றால் இஸ்ரவேல் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்பதை சுட்டி காட்டுகின்றன.மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் யூத,கிறிஸ்தவ மதங்களை ஏற்றுக் கொண்டாலும் இஸ்லாத்தின் பார்வையில் அவர்கள் வேதக்காரர்கள் ஆக முடியாது. மேலும் இஸ்ரவேலன் என்பது கொள்கை அடிப்படையில் கூறப்படுவது அல்ல. பிறப்பின் அடிப்படையில் உள்ளதாகும்.
யஃகூப் (அலை) அவர்களுக்கு இஸ்ராயீல் என்றொரு பெயர் உண்டு. எனவே அவர்களின் வாரிசுகள் பனூ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) என்று அழைக்கப்படுவர். எனவே, மற்றவர்கள் யூத மற்றும் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் இஸ்ரவேலராக ஆக முடியாது யார் இஸ்ரவேலராக இல்லையோ அவர் வேதக்காரராக ஆகவும் முடியாது.
எனவே யார் இஸ்ரவேலராகவும் இருந்து வேதக்காரராகவும் இருக்கிறாரோ அவர் அறுத்துத் தருவதைச் சாப்பிடலாம். இஸ்ரவேல் அல்லாத யூத, கிறிஸ்தவர்கள் அறுத்துத் தரும் பிராணிகளை சாப்பிடக் கூடாது. அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர் எனவே இஸ்ரவேலர்கள் தருவதையும் சாப்பிடக் கூடாது என்று சிலர்கூறி வருகின்றனர். இது தவறான வாதமாகும்.
ஏனெனில் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இணை வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களிடம் இணை கற்பித்தல் நடைமுறையில் இருக்கும் போது தான் இந்த சட்டம் அருளப்பட்டுள்ளது. எனவே அவர்களிடமுள்ள க்ஷிர்க்கைக் காரணம் காட்டி இறைவன் வழங்கியுள்ள சலுகையை மறுக்கத் தேவையில்லை.
வேதக்காரர்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் க்ஷிர்க் இருந்தால் அவர்கள் அறுத்ததை ஏற்கக் கூடாது. ஏனென்றால் இவர்கள் விக்ஷயத்தில் வழங்கப்பட்ட அனுமதி வேறு எவருக்கும் வழங்கப்படவில்லை.
இஹ்ராமுடன் இருக்கும் போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 5:96) ➚
இவ்வசனத்தின் மூலம் இஹ்ராமிலிருப்பவர் வேட்டையாடி உண்பதை இறைவன் தடை செய்கிறான். ஆனால் பிறரால் வேட்டையாடித் தரப்படும் உணவு தடுக்கப்படவில்லை. அதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுபடுத்துகிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவிற்கும், மதீனாவிற்குமிடையில் (அல்காஹா என்னுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டியிருந்தார்கள். நான் இஹ்ராம் கட்டாமல் குதிரை மீது இருந்தேன். நான் அதிகமாக மலையேறுபவனாக இருந்தேன்.
இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதையோ பார்ப்பதைக் கண்டேன்.அங்கொரு காட்டுக் கழுதை தென்பட்டது. இது என்ன? என்று மக்களிடம் கேட்டேன். அவர்கள் எங்களுக்கு தெரியாது என்றனர். நான் இது காட்டுக் கழுதை என்றேன். நான் மறந்துவிட்ட என் சாட்டையை என்னிடம் எடுத்துத் தாருங்கள் எனக் கேட்டேன். அதற்கவர்கள் இந்த விக்ஷயத்தில் உமக்கு நாங்கள் உதவமாட்டோம் என்று கூறிவிட்டனர். எனவே நானே இறங்கி அதை எடுத்தேன்.
பிறகு காட்டுக் கழுதையை விரட்டிச் சென்று தாக்கினேன். அதன் கால் நரம்புகளை வெட்டி
வீழ்த்தினேன். பிறகு மக்களிடம் சென்று (இப்போது) எழுந்து கழுதையை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர்கள் அதைத் தொட மறுத்தனர். நானே அதை அவர்களிடம் சுமந்து சென்றேன். சிலர் அதை சாப்பிட்டனர். சிலர் மறுத்து விட்டனர். உடனே நான் உங்களுக்காக நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றி) கேட்டுத் தெரிந்து வருகிறேன் என்று கூறி விட்டு நபியிடம் வந்து செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் அதில் ஏதும் மிச்சம் உள்ளதா? எனக் கேட்டார்கள்.
நான் ஆம் என்றேன் அப்படியானால் உண்ணுங்கள். அது அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரழி) நூல்:(புகாரி: 5492)