05) மண்ணறையில் தண்டனைக்கான காரணங்கள்
மண்ணறையில் அளிக்கப்படும் கடுமையான வேதளைகளை அறிந்து கொண்ட முஸ்லிம் அவ்வேதனைக்கான காரணங்கள் என்ன என்பதையும் அறிந்து கொள்ள தீவிரம் காட்ட வேண்டும்
நாம்தான் இறைநம்பிக்கையாளர்கள் ஆயிற்றே? நம்மை அல்லாஹ் தண்டிப்பாணி? என்ற மிதப்பான எண்ணம் ஒரு போதும் நம்மில் துளிர்விட அனுமதிக்க கூடாது
உலகில் நாம் புரியும் பல்வேறு தீய செயல்கள் நம் மண்ணறை வேதளைக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இவற்றை ஒரு இறைநம்பிக்கையாளர் செய்தாலும் அவரும் மண்ணறையில் வேதனைக்கு உட்படுத்தப்படுவார் ஆகவே மண்ணறை வேதனைக்கான காரணங்கள் அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகியவர்களாக முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்
குர்ஆனின் போதனைகளை அறிந்தும் அதன் படி நடக்காமல் குர்ஆனுடைய போதனைகளை புறக்கணித்து வாழ்வது மண்ணறையில் தண்டனை வழங்கப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்து விடுகின்றது
வானவர் மூலம் தலை பாறையால் நசுக்கப்பட்டு பிறகு தலையிள் பகுதி சீராகும் போது மீண்டும் அவ்வாறே பாறையால் தலை நகக்கப்படும்படியான தண்டனை குர்ஆனின் போதனைகளை புறக்கணித்து வாழ்ந்தவருக்கு மண்ணறையில் வழங்கப்படுகிறது.
இதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்
நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி “இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், “அல்லாஹ் நாடியது நடக்கும்’ எனக் கூறுவார்கள்.
இவ்வாறே ஒரு நாள். ”உங்களில் யாரும் இன்றிரவு சுனவு கண்டீர்களா?” என்று கேட்டதும் நாங்கள் “இல்லை’ என்றோம் அவர்கள்
“நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கெர்க்கிகள் இருந்தன.
அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின், கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார் இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் “இது என்ன?’ என்று கேட்டேன் அதற்கு அவ்விருவரும் “நடங்கள்’ என்றனர்.
அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடி விட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார்.
உடனே “இவர் யார்?’ என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் ‘நடங்கள்’ என்றனர் எனவே நடந்தோம் (இறுதியில்) நான் இருவரிடமும் “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன் அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர்.
அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத் தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை எனவே அத் தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அறிவிப்பவர் ஸமுரா பிள் ஜூன்துப் (ரலி),(புகாரி: 1386)
முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டே குர்ஆனின் பல போதனைகளுக்கு மாற்றாக இவ்வுலகில் நடந்து கொள்கின்றனர் குறிப்பாக கொள்கை ரீதியிலான விஷயத்தில் கூட குர்ஆனின் போதனைகளை பெரும்பலான முஸ்லிம்கள் பின்பற்றுவதில்லை
குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் தெளிவாக எண்ணற்ற வசனங்களில் எடுத்துரைக்கின்றது.
‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது. உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள் தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ என்று கூறுவீராக!
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’ எனக் கூறுவீராக!
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!!
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும். அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
இப்படி எண்ணற்ற வசனங்கள் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் போதிக்கும் போது இந்த போதனையை புறக்கணிக்கும் விதமாக முஸ்லிம்கள் பல அனாச்சாரங்களை புரிகின்றனர்
ஒரு பறம் தர்கா வழிபாடு, சந்தனக் கூடு, மவ்லிது மீலாது என்ற பெயரில் அனாச்சாரங்கள். தகடு தாயத்து போன்ற இணைவைப்புக் காரியங்களை அரங்கேற்றுகின்றனர்
மறுபுறம் ஸஹாபாக்கள், இமாம்கள், பெரியோர்கள், முன்னோர்கள் சொன்னதும் மார்க்கமே அவைகளையும் பின்பற்ற வேண்டும். என்று குர்ஆனின் போதனைகளை புறக்கணித்து செயல்படுகின்றனர்.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். “எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” (எனவும் கூறுவார்கள்.)
இவ்வாறு எந்த வகையில் குர்ஆனின் போதனைகளை புறக்கணித்தாலும் அது நம் மண்ணறை வாழ்வை நாசமாக்கி விடும் என்ற எச்சரிக்கையை முஸ்லிம் சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.’
இன்று பொய் அவதூறு என்பதெல்லாம் ஒரு பாவமான செயலாகவே பார்க்கப்படுவது கிடையாது. சர்வ சாதாரணமாக பொய் பேசும் பழக்கம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டுள்ளது.
பொய்யான தகவல்களை மக்களிடையே கூறுவதும், அதை பேஸ்புக் போன்ற இணையதள ஊடகங்கள் மூலம் பரப்புவதும் பலருக்கும் அன்றாட பழக்கமாகி விட்டது.
உறுதி செய்யப்படாத யூகங்கள் அனைத்தும் பொய்யே என்று நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள்.
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப் படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக் கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில் ) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி, நூல்: (புகாரி: 6064)
உறுதி செய்யப்படாத எத்தனையோ செய்திகளை தங்களுக்கு பிடிக்காதவர்கள் விஷயத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அதை மக்களிடையே பரப்பிடும் சீர்கெட்ட கலாச்சாரம் மலிந்து விட்டது.
இப்படி எதற்கெடுத்தாலும் பொய் கூறுவது கப்ரில் தண்டனையை பெற்றுத் தரும் பாவ செயலாகும். இரும்பாலான கொக்கிகளால் முகம் முழுவதும் சிதைக்கப்படும்படியான தண்டனை பொய் மற்றும் அவதூறு பேசுபவருக்கு வழங்கப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி “இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?’ என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். யாராவது கனவு கண்டு அதைக் கூறினால், “அல்லாஹ் நாடியது நடக்கும்’ எனக் கூறுவார்கள்.
இவ்வாறே ஒரு நாள், “உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?” என்று கேட்டதும் நாங்கள் “இல்லை’ என்றோம். அவர்கள்,
“நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றுகொண்டிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவருடைய பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற்பகுதி ஒழுங்காகிவிட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் “இது என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்’ என்றனர்.
அப்படியே நடந்தபோது அங்கு ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருந்தார். அவரது தலை மாட்டில் பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரது தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே “இவர் யார்?’ என நான் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் “நடங்கள்’ என்றனர். எனவே நடந்தோம்.
(இறுதியில்) நான் இருவரிடமும் “இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு இருவரும் “ஆம், முதலில் தாடை சிதைக்கப் பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத் தண்டனை அவருக்கு மறுமை நாள்வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார்; பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜூன்துப் (ரலி), நூல்: (புகாரி: 1386)
எனவே மண்ணறை வேதனையை உண்மையாக நம்பியவர், அதை அஞ்சக் கூடியவர் பொய், அவதூறு போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இஸ்லாம் தூய்மைக்கு பெரிதும் முக்கியத்துவம் வழங்கும் சன்மார்க்கமாகும். தொழுகைக்காக உளூ எனும் தூய்மை செய்தல், பல் துலக்குதல். தூய்மையான ஆடையணிதல் என இஸ்லாத்தின் பெரும்பாலான கடமைகளில் தூய்மை வெளிப்படுவதை காணலாம்.
ஆதலால் தான் நபிகள் நாயகம் பின்வருமாறு சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.
அறிவிப்பவர்: அபூமாலிக் (ரலி), நூல்: (முஸ்லிம்: 381)
தூய்மையாளர்களை இறைவன் விரும்புவதாக திருக்குர் ஆனும் தெரிவிக்கின்றது.
(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
தூய்மைக்கு பெரிதும் முக்கியத்துவம் வழங்கும் இஸ்லாம் சிறுநீர் கழித்து விட்டு துப்புரவு செய்யாததை பெரும் அசுத்தமாக கருதுகிறது. உண்மையில் அது பெரும் கேடு தரும் செயலுமாகும். சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யாததால் சிறுநீரின் சில சொட்டுக்கள் மறை உறுப்பிலேயும், ஆடையிலும் தங்கி விடுகிறது. அதனால் சில பாக்டீரியாக்கள் உருவாகி நோய்கள் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது.
இத்தகைய கேடு தரும் சிறுநீரை கழித்து விட்டு துப்புரவு செய்யாதவர்கள் மண்ணறையில் வேதனை செய்யப்படுவார்கள் என நபிகள் நாயகம் எச்சரிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை வேதைனையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல்) இருப்பதால் ஏற்படுகிறது.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல்: (இப்னு மாஜா: 342)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது (கப்ரில் உள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பாவத்திற்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. இவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்துவிட்டு தூய்மை செய்து கொள்ளாதவராக இருந்தார். மற்றவர் கோள் சொல்லி நடப்பவராக இருந்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (நஸாயீ: 2042)
அது போல சிறுநீர், மற்றும் மலம் ஜலம் கழிக்கும் போது மறை உறுப்பை மக்கள் பார்வையிலிருந்து மறைக்காவிடில் அதுவும் மண்ணறையில் வேதனையை பெற்றுத்தரும். இதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல் ) அவர்கள் சென்றபோது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை.
ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லிலித் திரிந்தவர்” எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (புகாரி: 1361)
இதற்கு இஸ்லாம் வெட்க உணர்வை அதிகம் போதிப்பதுதான் காரணமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரை(க் கண்டிக்காதீர்கள்;) (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 24)
தம் மறை உறுப்பை பிறர் பார்த்தால் என்ன? என்ற வெட்கமற்ற உணர்வே தற்போதயை உலகில் அதிகம் வெளிப்படுகிறது.
மனிதர்களில் அதிக வெட்கத்தன்மை கொண்ட அண்ணல் நபியவர்கள் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதாக இருந்தால் மக்கள் பார்வை படாத வகையில் சற்று தூரமாக போய் செல்வார்கள்.
நபிகள் நாயகம் கழிவறைக்கு செல்வதாக இருந்தால் தூரமாக செல்வார்கள்
அறிவிப்பவர்: முகீரா பின் ஷூஃபா (ரலி), நூல்: (அபூதாவூத்: 1)
இன்று பஸ் நிலையங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் பார்க்கும் வகையில் மறைக்காமல் சிறுநீர் கழிக்கும் நடைமுறை சர்வ சாதராண காட்சியாகும் அத்தகையவர்களின் பட்டியலில் நாம் இருந்து விடக் கூடாது.
முஸ்லிம்களிடம் உள்ள மிக மோசமான குணம். புறம் பேசுவதாகும். குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் பெரும்பாலான நேரங்கள் இந்த புறம் பேசுவதில் தான் கழிகின்றது. நம்மில் பலரும் இது ஏற்படுத்தும் விளைவை பற்றி அஞ்சாமல், புறம் பேசுவதில் லயித்து, இன்பம் காண்கின்றனர்.
போதைக்கு அடிமையாகி விட்டவர்களைப் போல, இந்த புறத்திற்கு அடிமையாகிவிட்டவர் பலர்.
புறம் என்றால் என்ன? என்று நபிகளார் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன் கறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, “நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிலி) நூல்: (முஸ்லிம்: 5048)
தேவையின்றி பிறர் குறையை அலசும் இத்தகைய புறம் மண்ணறை வேதனையை பெற்றுத்தரவல்லதாகும்.
நாம் சாதரணமாய் கருதுகின்ற புறம் பேசுதல் என்ற தீமை, மறுமையில் தண்டனையை பெற்றுத்தருவதோடு மண்ணறையிலும் வேதைனையை பெற்றுத்தருகின்றது.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இருவருடைய கப்றுகளைக் கடந்து நபி (ஸல் ) அவர்கள் சென்ற போது, “இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லிலித் திரிந்தவர்” எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரு கப்றுகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இவ்வாறு செய்கின்றீர்கள்?” என்று கேட்டதும், “இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : (புகாரி: 1361)
கடும் வேதனையை புறம் பேசுதல் ஏற்படுத்துகின்றது என்பதை ஒவ்வொரு முஸ்லிமான ஆண்களும், பெண்களும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பிறர் குறையை அம்பலம்படுத்தி பேசுவது புறம் என்றும் அது மண்ணறையில் வேதனையை ஏற்படுத்த போதுமானது என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. எனினும் சில சந்தர்ப்பங்களில் (புறம் பேசுவது) பிறர் குறையை வெளிப்படுத்துவது மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகின்றது. இதை நாம் சுயமாக கூறவில்லை. நபிகளாரின் நடைமுறையிலிருந்தே கூறுகின்றோம்.
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்” என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதைப் போன்றே) அவரிட (மு)ம் நபி (ஸல்) அவர்கள் கனிவாகப் பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரைக் குறித்து ஒரு விதமாகச் சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?” என்று கேட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர் யாரெனில், மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தம்மைத்) தற்காத்துக் கொள்ள ஒதுங்கிக்கொள்கிறார்களோ அவர்தான். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல் (முஸ்லிம்: 5050)
இந்த ஹதீஸின் அடிப்படையில் மக்கள் ஒருவரை நல்லவர் என்று நம்பி ஏமாந்து போகும் நிலை ஏற்படுமாயின், அவர் நம்பகமானவரல்ல என்பதை மக்களுக்கு உணர்த்த, அவரால் ஏற்படும் தீமையைப்பற்றி எச்சரிக்கையூட்ட அவரைப்பற்றியான குறைகளை எடுத்துக் கூறலாம். எச்சரிக்கை செய்வதற்காக பிறரது குறையை எடுத்துக் கூறினால் இதை புறம் என்று இஸ்லாமிய பார்வையில் சொல்லக்கூடாது.
பிறரது பொருள்கள் புனிதமானது என்பது இஸ்லாத்தின் கொள்கை முழக்கமாகும். உரியவரின் அனுமதியின்றி பிறரது பொருள்களை எடுக்கலாகாது என்றும் அடுத்தவர் பொருள் அற்பமானதாக இருந்தாலும் அது முஸ்லிம்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது என்றும் இஸ்லாம் கூறுகிறது.
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 5010)
இஸ்லாத்தின் இப்போதனைகளை மீறி எவன் பிறரது பொருள்களை அபகரிப்பானோ அவன் மண்ணறையில் நெருப்பாலான அதே பொருளால் தண்டிக்கப்படுவான் என்று நபிகள் நாயகம் எச்சரித்துள்ளார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “கைபர்” தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லாத கால்நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையே பெற்றோம். ‘பனுள் ளுபைப் எனும் குலத்தாரில் ரிஃபாஆ பின் ஸைத் என்ற ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு “மித்அம்’ எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வாதில் குரா’ எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது ”மித்அம்’ என்ற அந்த அடிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று
மித்அமை(த் தாக்கி)க் கொன்று விட்டது. இதைக் கண்ட மக்கள் “அவருக்குச் சொர்க்கம் கிடைத்து விட்டது; வாழ்த்துக்கள்” என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படிச் சொல்லாதீர்கள். என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக் கொண்டுவிட்ட போர்வை அவர் மீது நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்கள். இதை மக்கள் செவியேற்ற போது, ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “ஒரு செருப்பு வாரை’ அல்லது “இரு வார்களைக்’ கொண்டு வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “”இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண செருப்பு வாராக இருந்திராது. மாறாக,) “நெருப்பு வாராக’ அல்லது “இரு நெருப்பு வார்களாக’ மாறியிருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: (புகாரி: 6707)
எரிந்து கொண்டிருக்கின்றது எனும் நபிகளாரின் வாசகம் மறுமைக்கு முன் மண்ணறையில் அளிக்கப்படும் வேதனையையே குறிக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம். திருடப்பட்டது செருப்பு வாராக இருந்தால் கூட அது நெருப்பு வாராக மாறிவிடும் எனும் நபிகள் நாயகம் அவர்களின் எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.
இறந்தவரின் குடும்பத்தார் அழுவதால் மய்யித்திற்கு வேதனை கிடைக்கின்றது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை தவறாக அறிவிக்கப்பட்டவையாகும். ஒருவரது பாவத்தை மற்றொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை யாரோ அழுவதால் மய்யித்திற்கு வேதனை என்பது இஸ்லாத்தின் மேற்கண்ட அடிப்படைக்கு மாற்றமான கருத்தாகும். எனவே நபிகள் நாயகம் அவர்கள் இந்த கருத்தில் கூறியிருக்க மாட்டார்கள். நபிகளாரின் சொல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற ஆயிஷா ரலி அவர்களின் விளக்கமே சரியானதாக இருக்கின்றது.
இது தொடர்பாக அன்னை ஆயிஷா ரலி அவர்களின் விளக்கம் பின்வருமாறு
உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஸுஹைபே எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா? என்றார்கள். உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக. அல்லாஹ்வின்
மீதாணையாக (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53:43) ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது (அல்குர்ஆன் 35 : 18) (என்று குர்ஆன் கூறுகிறது) குர்ஆனே உங்களுக்குப் போதும் என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: (முஸ்லிம்: 1694)
உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது : இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதின் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல் ) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர் என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (முஸ்லிம்: 1697)
குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச்சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில்தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
எனவே இறந்தவர் தம் பாவத்திற்காக தண்டிக்கப்படுகிறார். அவரது குடும்பத்தார்களோ அழுது கொண்டிருக்கிறார்கள் எனும் நபிகளாரின் சொல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. குடும்பத்தார் அழுவதால் மய்யித்திற்கு வேதனை என்பதெல்லாம் கிடையாது என்பேத சரியான விளக்கமாகும்.