05) மண்ணறையின் நிலையே மறுமையின் நிலை
05) மண்ணறையின் நிலையே
மறுமையின் நிலை
மண்ணறை வாழ்க்கை நல்லதாக அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கையும் நன்றாகவே அமைந்து விடும். ஆனால் மண்ணறை வாழ்க்கை சோகத்திற்குரியதாகவும், வேதனைக்குரியதாகவும் அமைந்து விட்டால் மறுமை வாழ்க்கை அதை விட வேதனைக்குரிய தாக அமைந்து விடும். எனவே சந்தோஷமான மண்ணறை வாழ்வைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். “சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன்?” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும்.
இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறாவிட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதைவிடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறைதான் மிகக் கோரமாக இருந்தது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (“எனவே தான் மண்ணறை யைப் பார்த்தால் அழுகிறேன்” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள் )
அறிவிப்பவர் ஹானி (ரஹ்)
நூல்: திர்மீதி-2230
எனவே உடம்பில் உயிர் இருக்கும் போதே நன்மைகளைச் செய்து கொள்ள வேண்டும். இறந்த பிறகு நமக்காக யார் அழுதாலும் கவலைபட்டாலும் அதனால் எந்த பயனும் இல்லை.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்’ என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)