05) பிறப்பு மற்றும் வளர்ப்பு

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

பிறப்பு

நபி(ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் திங்கட்கிழமை கி.பி 571 ல் சவூதி அரேபியா நாட்டில், மக்கா என்ற ஊரில் பிறந்தார்கள். (நூல் பிதாயா வன்நிகாயா,(முஸ்லிம்: 2153)

நபி(ஸல்) அவர்கள் பிறந்த தேதி எதுவென்று குறிப்பிட்டு சொல்வதில் பல தகவல்கள் உள்ளன. அவற்றில் 12 ஆம் தேதியில் பிறந்தார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களிடம் பிரபல்யமான கருத்தாகும்.

பெயர் : நபி(ஸல்) அவர்களின் இயற்பெயர், முஹம்மத்.

இத்துடன் மேலும் நான்கு பெயர்களும் அவர்களுக்கு உண்டு. அவை :

1.அஹ்மது

2.அல்மாஹி

3.அல்ஹாஷிர்

4. அல்ஆக்கிப்.

என்பனவாகும். (புகாரி: 3532)

தாய், தந்தை

நபி(ஸல்) அவர்கள் தங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தகப்பனார் அப்துல்லாஹ் இறந்துவிட்டார். (ஆதாரம் : தபக்காத் இப்னு ஸஅத்) அதனால் அவரது பாட்டனார் அப்துல்முத்தலிப் அவர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள் ஆறு வயது குழந்தையாக இருக்கும் போதே அவர்களது தாயார் இறந்து விட்டார்கள். (இப்னு இஸ்ஹாக்)
எனவே அவர்களது ஊர் வழக்கப்படி ஏனைய பெண்களே பாலூட்டினார்கள்.

வளர்ப்பு

அன்றைய காலங்களில் நகரத்தின் பிரமுகரர்களும் வசதி படைத்தவர்களும் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டிடவும் அவர்களை வளர்த்திடவும் கிராமங்களிலுள்ள சில பெண்மணிகளிடம் இருந்துள்ளனர். இவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கு ஹலீமா ஸஅதிய்யா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள். (தப்ரானி)

நபிகள் நாயகத்தின் தந்தையின் சகோதரர் அபூலஹபின் அடிமைப் பெண்ணான சுவைபா பாலூட்டினார் (புகாரி: 5101)

அதன் பிறகு உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்கள். (ஆதாரம் : அல்இஸ்தீஆப்)

சிறு வயது முதலே நல்ல குணநலன்களை கொண்டவர்களாக நபிகள் நாயகம் வளர்க்கப்பட்டார்கள்.
கஃபாவை அந்நகர மக்கள் புதிப்பிக்கும் வேலையே செய்த போது நபிகள் நாயகம் அவர்களும் அதற்காக கற்களை சுமந்து உதவி செய்துள்ளார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்

(நபியவர்களின் காலத்தில் குறைஷியரால் இறையில்லம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது) அவர்களுடன் (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கஅபாவிற்காக கற்கைள(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் மீது வேட்டி (மட்டுமே) இருந்தது. அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள் (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களிடம், “என் சகோதரன் மகேன! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்துத் தோள் மீது (வைத்துள்ள) கல்லுக்கு கீழே வைத்து (கற்களைச் சுமந்து) கொண்டு வரலாமே!” என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தமது வேட்டியை அவிழ்த்து தமது தோள்கள் மீது வைத்தார்கள். (வைத்த) உடன் மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டார்கள். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் (ஒரு போதும்) பிறந்த மேனியுடன் (ஒரு போதும்) காணப்பட்டதில்லை. (புகாரி: 364)

வாலிபம்

நபி(ஸல்) அவர்கள் வாலிபப் பருவத்தை அடைந்தவுடன் வியாபாரம் செய்ய விரும்பினார்கள். ஆகையால் வியாபாரம் செய்ய தன் பெரிய தந்தை அபூதாலிபுடன் சிரியாவிற்குச் சென்றார்கள். அவர்களின் நன்னடத்தையும் நற்பண்புகளும் பல திசைகளிலும் பரவத் தெடங்கியது. மக்கள் நபி(ஸல்) அவர்களை நம்பிக்கைக்குரியவராகவும் நாணையமானவராகவும் கருதினர்.
(ஆதாரம் : முஸன்னஃப் இப்னு அபீஷைபா, (திர்மிதி: 3553)

ஆடு மேய்த்தல்

தம் இளமைப்பருவத்தில் மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்த்துள்ளார்கள்.                  (புகாரி: 2262)

ஹில்ஃபுல் முதய்யிபீன்

பொதுமக்களின் நலனுக்காக செயல்படுவதிலும் பிறருக்கு உபகாரம் புரிவதிலும் சிறுவயது முதலே ஆர்வம் கொண்டு செயலாற்றியுள்ளார்கள்.

ஹில்ஃபுல் முதய்யிபீன் எனும் பெயில் நற்சிந்தனை கொண்ட ஒரு சிலர் ஒரு குழுவாக கூடி பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வந்தனர். நபிகள் நாயகம் அவர்களும் தம் இளமைப் பருவத்தில் அந்த குழுவில் தன்னை இணைத்து சேவையாற்றியுள்ளார்கள். (அஹ்மத்: 1567)

திருமணம்

தமது 25ம் வயதில் 40 வயதான கதீஜா (ரலி) அவர்கள் திருமணம் செய்தார்கள். கதீஜா அவர்களுக்கு முன்னரே இரண்டு திருமணம்  நடைபெற்ற போதும் கணவன்மார்கள் இறந்து விட்டார்கள். கதீஜா அவர்கள் பெரும் செல்வ வளமுள்ளவர்களாக இருந்தார்கள். (பத்ஹூல் பாரி, (அஹ்மத்: 2705)

குழந்தைகள்

நபி(ஸல்) அவர்களுக்கும் அன்னை கதீஜா பின்த் குவைலித்(ரலி) அவர்கள் மூலம் ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸும், ஃபாத்திமா என்ற நான்கு பெண் குழந்தைகளும் தாஹிர், தய்யிப், காஸிம் என்ற மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்தன. நபி(ஸல்) அவர்களுக்குப் பிறந்த 3 ஆண் குழந்தைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படி சிறுவயதிேலேய இறந்துவிட்டன. ஆண் குழந்தைகள் எத்தனை என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. (ஆதாரம் ஃபத்ஹுல் பாரி)

ஹஜருல் அஸ்வதுடன் ஒரு நிகழ்வு

ஒரு சந்தர்ப்பத்தில் ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை அதற்குரிய இடத்தில் வைப்பதில் மக்காவாசிகளிடையே  சச்சரவு உண்டாகிறது. அது புனிதமான கல் என்பதால் அதை நாங்கள் தான் வைப்போம் என ஒவ்வொரு தரப்பாரும் கூறுகின்றனர். அப்போது அவர்களிடையே சிலர் இது தொடர்பாக தகுந்த தீர்ப்பளிக்க ஒரு நீதிபதியை ஏற்படுத்திக் கொள்வோம் இந்த வழியாக யார் முதலாவது வருகிறாரோ அவரே அந்நீதிபதி அவரின் தீர்ப்பை நாம் அனைவரும் ஏற்போம் என்ற முடிவிற்கு வருகின்றனர்.

அவர்கள் எதிர்பார்த்த வழியிலே அந்நேரம் முஹம்மது நபி அவர்கள் வரவும் இதோ நம் அனைவரின் நம்பிக்கைக்கு உரியவர் வந்து விட்டார் என்று கூறியதுடன் ஒரு ஆடையே எடுத்து கொண்டு அதில் ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து ஆடையின் முனையே அனைவரும் பிடித்து குறிப்பிட்ட அதற்குரிய இடத்தில் வையுங்கள் என்ற முஹம்மது அவர்களின் தீர்ப்பையும் ஏற்று செயல்பட்டுள்ளார்கள். நபிகள் நாயகம் நபியாக ஆவதற்கு முன் நடைபெற்ற இந்நிகழ்வு அம்மக்கள் நபிகள் நாயகத்தை எவ்வளவு மதித்துள்ளார்கள் என்பைத தெளிவுபடுத்துகிறது.

(அஹ்மத்: 14957)