05) நபிமார்களின் விளக்கமும் அவசியமே

நூல்கள்: அஹ்லே குர்ஆன் கூட்டத்தாரின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

எல்லா இறைத் தூதர்களுக்கும் இறைவனிடமிருந்து வேதத்தைப் பெற்று மக்களுக்குச் சேர்ப்பிக்கும் பணியுடன் அவ்வேதத்துக்கு விளக்கவுரை அளிக்கும் பணியும் சேர்த்தே ஒப்படைக்கப்பட்டன.

இறைத் தூதர்களின் விளக்கவுரை தேவைப்படாத எந்த வேதமும் இறைவனால் அருளப்படவில்லை என்பதைத் திருக்குர்ஆனே தெளிவாக அறிவிக்கின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது வழித்தோன்றல்களில் ஒரு இறைத்தூதரை அனுப்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனை திருக்குர்ஆனிலும் இறைவனால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

“எங்கள் இறைவா! (எங்கள் வழித்தோன்றல்களான) அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (என்றனர்.)

(அல்குர்ஆன்: 2:129)

இப்ராஹீம் நபியவர்களின் இப்பிரார்த்தனை வேதம் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதை மேலும் உறுதி செய்கின்றது.

“உனது வசனங்களை அந்தத் தூதர் அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்”

“அவர்களுக்கு வேதத்தைக் கற்றுத் தருவார்”என்று இப்ராஹீம் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். வசனங்களை ஓதிக் காட்டியவுடன் மக்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால் – வசனங்களை ஓதிக் காட்டுவது மட்டுமே இறைத்தூதர்களின் பணியாக இருந்திருந்தால் – இப்றாஹீம் (அலை) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்திருக்க மாட்டார்கள்.

உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள். அல்லது வேதத்தை அவர்களுக்கு கற்றுத் தருவார் என்று மட்டும் கூறியிருப்பார்கள். இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கூறாமல் இரண்டையும் சேர்த்துக் கூறியதிலிருந்து வசனங்களை ஓதிக் காட்டுவது வேறு. ஓதிக் காட்டிய பின் வேதத்தைக் கற்றுக் கொடுப்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை எப்படி ஆதாரமாகக் கொள்ள முடியும்? அல்லாஹ் இவ்வாறு கூறவில்லையே என்று யாரும் நினைத்து விடக்கூடாது. ஏனெனில் அல்லாஹ்வும் இப்படித் தான் கூறியுள்ளான்.

உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

(அல்குர்ஆன்: 2:151)

இது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டது குறித்து கூறுகின்ற வசனமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையும், அதிகாரத்தையும் தெளிவாகப் பறைசாற்றும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசுகின்ற சமுதாய மக்களுக்கே தூதராக முதலில் அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதமும் தெளிவான அரபு மொழியிலேயே அருளப்பட்டது.

அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களுக்கு அரபு மொழி வேதத்தை ஓதிக் காட்டியவுடன் அதன் பொருள் நிச்சயம் விளங்கி விடும்.

ஆனால் மேலே கண்ட வசனம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை ஓதிக் காட்டுவார்கள்

2. பின்னர் வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள்!

3. ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்கள்.

4. பின்னர் அம்மக்கள் அறியாமல் இருந்த பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள்.

5. அவர்களைப் பரிசுத்தம் செய்யும் பணியையும் செய்வார்கள்.

இப்படி ஐந்து பொறுப்புக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வுடைய வார்த்தையில் வீணான ஒரு சொல்லும் இருக்காது, இருக்கக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருப்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

வசனங்களை ஓதிக் காட்டியவுடன் பெரும்பாலான வசனங்களின் பொருள் புரிந்து விடும் என்றாலும் நபிகள் நாயகம் விளக்கம் சொன்ன பிறகு விளங்கக் கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன. அவ்வாறு இருப்பதால் தான் வசனங்களை ஓதிக் காட்டுவார். மேலும் வேதத்தைக் கற்றுத் தருவார் என்று இறைவன் கூறுகிறான்.

ஹஜ் செய்யுங்கள் என்பதன் பொருள் விளங்கலாம். ஹஜ் என்றால் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் விளக்கினால் தான் புரியும். உம்ராச் செய்யுங்கள் என்று குர்ஆன் கூறுவதன் பொருள் விளங்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் விளக்க வேண்டும்.

இப்படி ஏராளமான வசனங்களுக்கு எவ்வாறு செயல் வடிவம் கொடுப்பது என்பதை விளக்கும் அதிகாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது.

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.

(அல்குர்ஆன்: 3:164)

வெறும் வேதத்தை மட்டும் அருளியதை அருட்கொடையாக அல்லாஹ் கூறவில்லை. மாறாக தூதரை அனுப்பியது தான் அருட்கொடை என்கிறான். அதுவும் அந்தத் தூதர் வேதத்தை வாசித்துக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதற்கு விளக்கம் கூறும் அதிகாரமும் பெற்றவராக இருப்பதையும் கூறி விட்டு இதைத் தனது அருட்கொடை என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இதே போன்று ஜும்ஆ அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாசித்துக் காட்டிய குர்ஆன் எங்கே என்றால் இதோ என்று கூறி விடுவோம். அந்த வேதத்துக்கு விளக்கம் அளித்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அந்த விளக்கம் எங்கே? அறியாதவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறானே அவையெல்லாம் எங்கே?

இறைவன் அந்தப் பணிகளைச் செய்வதற்காகவே அனுப்பியுள்ளான் என்பதிலிருந்து அவர்களின் விளக்கம் இன்றியமையாத ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த இன்றி அமையாத விளக்கம் எங்கே? குர்ஆன் மட்டும் போதும் என்போர் அதை ஒருக்காலும் எடுத்துக் காட்ட முடியாது.

வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும், வசனங்களை ஓதிக் காட்டுவதும், ஹிக்மத்தைக் கற்றுக் கொடுப்பதும் எல்லாம் ஒன்று தான் என்று உளறுவதைத் தவிர அவர்களிடம் இதற்கு பதில் கிடையாது.

அல்லாஹ் தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறான் என்று அல்லாஹ்வின் தகுதியைக் குறைத்தாவது தங்கள் மனோ இச்சையை நிலைநாட்டப் பார்க்கிறார்கள்.

பயனற்ற தேவையற்ற ஒரே ஒரு சொல்லும் அல்லாஹ்வின் வேதத்தில் இருக்காது என்ற நம்பிக்கையுடன் வேதத்தை ஆராய்ந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை வெறுமனே வாசித்துக் காட்ட மட்டும் வரவில்லை. வாசித்துக் காட்டும் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் பெற்றவர்களாகவும், நடைமுறைப்படுத்திக் காட்டும் அதிகாரம் பெற்றவர்களாகவுமே வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ – இறைச் செய்தி உள்ளது என்பதற்கான சான்றுகள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.