05) தடுக்கப்பட்டவையும் அதன் கேடுகளும்

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை

தடுக்கப்பட்டவை கெட்டவையே

மனிதனின் உடல், உயிர், அறிவார்ந்த நம்பிக்கை, மானம் மரியாதை என வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனிதனுக்குத் தீங்கு தருவதைத் தான் இறைவன் தடைசெய்துள்ளான்.
இதைப் பற்றி இறைவன் கூறும் போது…

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை அவர்கள் பின்பற்றுகின்றனர் தங்களிடம் உள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிளும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்.இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை வி ட்டும் அவர்களை தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். அசுத்தமானவைகளை அவர்களுக்கு தடை செய்கிறார்.
(அல்குர்ஆன்: 7:157)

தடுக்கப்பட்ட உணவை உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் பெருகும், வலிமை கூடும் எனக் கூறப் பட்டால் அது பெரும்பாலும் மறுக்கப்பட வேண்டிய க்ஷைத்தானியக் கூற்றாகத் தான் இருக்கும் ஏனெனில் க்ஷைத்தான் நமது ஆதிப் பெற்றோர் ஆதம், ஹவ்வா இருவரிடமும் சென்று இறைவன் உங்களுக்கு தடை செய்திருக்கும் மரத்திலிருந்து நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை விளையும் என்ற ஆசை வார்த்தையின் மூலம் தான் வழி கொடுத்தான். ஆதமே நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள் இந்த மரத்தை நெருங்காதீர்கள். (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள் (என இறைவன் கூறினான்)
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத் தலங்களைப் பற்றி புரிய வைப்பதற்காக க்ஷைத்தான்
அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவே தவிர உங்கள் இறைவன் இந்த மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை என்று கூறினான். நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே என்று அவர்களிடம் சத்தியம் செய்தான். அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான்.
அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத் தலங்கள் பற்றி அவர்களுக்குப் புரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றார்கள். அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து இம்மரத்தை உங்களுக்கு நான் தடை செய்யவில்லையா? க்ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா? எனக் கேட்டான்.
(அல்குர்ஆன்: 7:19-22, 20:120-121)

மதுபானம் மற்றும் சூதாட்டத்தைத் தடை செய்யும் வசனத்திலும் அவற்றால் மனிதனுக்கு அதிக கேடுகள் ஏற்படுகின்றன என்பதே தடை செய்வதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர் அவ்விரண்டிலும் பெரும் கேடும் மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டில் பயனை விட கேடு மிகப் பெரியது எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 2:219)

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவும் க்ஷைத்தான் விரும்புகிறான் எனவே (அவற்றிலிருந்து) விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 5:90-91)

இறைவன் விதித்துள்ள தடைகள் அனைத்துமே மனிதனைக் காக்கும் கேடயங்கள் தான். அவனது சுதந்திரத்தைப் பறிப்பதற்காக போடப்பட்ட வெற்றுச் சட்டங்கள் இல்லை. உயரமான மலைப் பாதைகளிலும், மேம்பாலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் மனிதச் சுதந்திரத்தை எப்படி
முறைப்படுத்துகின்றனவோ அது போல கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் பெரும் இடர்களில் போய் மனிதன் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பது தான் இறைச் சட்டத்தின் நோக்கம் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

தாமாகச் செத்தவை

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி,அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை
ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 2:173, 5:3, 16:115)

இவ்வசனம் நான்கு பொருட்களை உண்ணக் கூடாதவை என தடை செய்கிறது. அதில் முதலாவதாக தாமாகச் செத்தவற்றை சாப்பிடக்கூடாது என்கிறான் இறைவன்.தாமாகச் செத்தவை என்றால் யாராலும் கொல்லப்படாததுஎன்பதை எளிதாக விளங்கிக் கொள்வோம். அது போல
கடல் வாழ் உயிரிகளைத் தவிர்த்து கால்நடை மற்றும் பறவைகளில் இஸ்லாம் கூறும் முறைப்படி அறுக்கப்படாமல்மனிதனாலோ , விலங்குகளா லோ முறைதவறி கொல்லப்பட்டவையும் தாமாகச் செத்தவையாக கருதப்படும்.

கீழ்காணும் வசனம் அதைத் தெளிவுப்படுத்துகிறது. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிப்பட்டவை (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை. (தமக்கிடையே) மோதிக் கொண்டவை
மற்றும் வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன) (அல்குர்ஆன்: 5:3)

பெரும்பாலும் ஏதேனும் ஒரு நோய்த் தொற்றின் காரணமாகவோ அல்லது விக்ஷத் தன்மையுள்ள பொருட்களைச் சாப்பிடுவதனாலோ பிராணிகள் தாமாக இறக்கின்றன. அந்த இறைச்சியை நாம் சாப்பிட்டால் அதில் உள்ள நோய்க் கிருமியும், விக்ஷமும் நமது உடலுக்குள் சென்று
நமது ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும்.

மேலும், தாமாகவும் முறைப்படி அறுக்காமலும் சாகின்ற பிராணிகளின் உடலில் உள்ள இரத்தம் வெளியேறாமல் உடலிலே தங்கிவிடும். அந்த இரத்தத்தில் உணவிலிருந்து பெறப்படும் சத்துக்கள் மட்டுமல்லாது அதன் கழிவுகளும் பல்வேறு கிருமிகளும் ஓடிக்கொண்டிருக்கும் பிராணிகள் உயிருடன் இருக்கும் போது உடனுக்குடன் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால் அந்தக் கிருமிகள் எந்தக் கேட்டையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அவை இறந்தவுடன் அதில் உள்ள கிருமிகள் பல்கிப்பெருக ஆரம்பிக்கும். பிறகு சுற்றியிருக்கும் இறைச்சிக்கும் பரவி அதையும் உண்பதற்குத் தகுதியற்றதாக ஆக்கிவிடும்.

அவைகள் இறந்து ஓரிரு நாட்கள் ஆகிவிட்டால் எந்த அளவுக்கு அவை கெட்டுப் போய் இருக்கின்றன என்பதை ஆராய்ச்சி ஏதுமின்றி அதில் உள்ள கிருமிகளையும், புழுக்களையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

இரத்தம்

மேற்கூறப்பட்ட (அல்குர்ஆன்: 2:173, 5:3, 16:115) வசனத்தின் படி இரத்தமும் உண்பதற்கு தடுக்கப்பட்டதாகும். உணவில் உள்ள சத்துக்களைப் பிரித்தெடுத்து உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு சேர்ப்பதும் அவற்றின் கழிவுகளை சுமந்து வந்து சுத்திகரிப்பு நிலையமான சிறுநீரகத்தில் தள்ளி சுத்தப்படுத்துவதும் இரத்தத்தின் மிக முக்கியப் பணியாகும்.

நுரையீரல் வழியாக நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எல்லாத் திசுக்களுக்கும் கொண்டு சேர்த்து விட்டு அவற்றின் கழிவுப் பொருளான கார்பன்-டை-ஆக்ஸைடைச் சுமந்து வந்து மூக்கின் வழியாக வெளியேற்றுவதும் இரத்தத்தின் வேலையே! கழிவுகளைச் சுமந்து கொண்டே ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தை சுத்திகரித்து தூய்மைப்படுத்தும் பணியை சிறுநீரகம் ஒவ்வொரு
வினாடியும் செய்து கொண்டே இருக்கும்.

நிமிடம் ஒன்றுக்கு 1.2 லிட்டர் வீதம் நாள் ஒன்றுக்கு 1700 லிட்டர் இரத்தம் சிறுநீரகத்தில் பாய்ச்சப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக நடைபெறும் இப்பணி ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டாலும் இரத்தம் என்பது அசுத்தம் நிறைந்த கழிவு நீராகி விடும்.

உடலில் உள்ள நோய்களின் பாதிப்பை அறிய மல ஜலத்தைப் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள்
இரத்தத்தையும் சோதனைக்கு உட்படுத்துவது மல ஜலத்தைப் போல் இரத்தத்திலும் கிருமிகள் நிறைந்துள்ளன என்பதற்கு வெளிப்படையான ஓர் சான்றாகும். சிறுநீரகம் பழுதாகி சுத்திகரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டால் அதில் உள்ள கிருமிகள் வளர்ந்து சோர்வு, வாந்தி,மூச்சுத் திணறல் நிறம் கருத்தல் என உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாய் தளர்ச்சியடைந்து இறுதியில் உயிரிழப்பில்
போய் முடிந்து விடும்.

இரத்தத்தில் உள்ள அசுத்தம் அதற்குரிய உடலையே செல்லரிக்கச் செய்து விடுகிறதென்றால் அதை எடுத்து நாம் சாப்பிட்டால் நமக்கு ஏற்படும் கேடுகளை விவரிக்கத் தேவையில்லை.
கை விரல்களில் காயம்பட்டு வடியும் இரத்தத்தை வாயில் வைத்து உறிஞ்சும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. இதுவும் தடைசெய்யப்பட்டது தான்.

பன்றி

மேற்கூறப்பட்ட (அல்குர்ஆன்: 2:173, 5:3, 16:115) வசனத்தின் படி பன்றியும் உண்பதற்குத் தடுக்கப்பட்டதாகும். பன்றியை உணவாக உட்கொள்வதால் 70 வகை நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. வட்டப் புழு, கொக்கிப் புழு, நாடாப் புழு, ஊசிப் புழு
போன்ற நுண்கிருமிகள் அதில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நாடாப் புழு மூளைக்காய்ச்சல், பன்றிக்
காய்ச்சல், இதய வீக்கம் போன்ற நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுவதும் உண்டு.

அதிகபட்ச வெப்பத்திலும் அழிந்து விடாத திரிகூரா திச்சுராஸிஸ் எனும் ஆபத்தான குடற்புழுவும் பன்றியில் உள்ளது. இதய நோயாளிகளுக்கு கொழுப்பு நிறைந்த பண்டங்கள் தான் முதல் நிலை எதிரிஎன்பதை நாம் அறிவோம்100 சதவீதம் கொழுப்பு (கொலஸ்டிரால்) நீக்கப்பட்ட எண்ணெய், என்ற
விளம்பரமெல்லாம் இவர்களை குறி வைத்து தான் வலம் வருகின்றன.

இவர்களை ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிப்பதும் அவற்றில் உள்ள கொழுப்பின் காரணமாகத் தான். பன்றியை எடுத்துக் கொண்டால் ஒரு கிலோ இறைச்சியில்
அரை கிலோ கொழுப்பாகவே இருக்கிறது. இதோடு ஒப்பிடும் போது ஆடு, மாடுகளில் உள்ள
கொழுப்பை ஒன்றுமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் ஒரு கிலோ ஆட்டிறைச்சியில் கொழுப்பு என்பது வெறும் 170 கிராம் மட்டுமே அதுவே மாட்டிறைச்சியில் வெறும் 50 கிராம் தான்.

கிலோவுக்கு ஐம்பது கிராம் எங்கே? அரைக் கிலோ எங்கே? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பன்றியை உணவாக உட்கொள்கிற மேல்திசை நாடுகளை விட மற்ற நாடுகளில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது கூட இதற்கு ஒரு சான்று. அல்லாஹ் அல்லாதோருக்காக உருவாக்கப்பட்டவை அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்காக அறுக்கப்பட்டது,
படையல் செய்யப்பட்டது, நேர்ச்சை செய்யப்பட்டது ஆகியவையும் மேற்கூறப்பட்ட (அல்குர்ஆன்: 2:173, 5:3, 16:115) வசனத்தின் படி உண்பதற்கு தடுக்கப்பட்டதாகும்.

இவை மனித உடலுக்கு நேரடியாக எந்தக் கேடும் செய்வதில்லை. ஆனால் உடலை விட உயர்வான பகுத்தறிவுக்கு கேடு செய்கிறது. அதன் கூர்மையையும், சிந்தனைத் திறனையும் மழுங்கடித்து விடுகிறது. சாதாரண உணவில் இல்லாத ஆற்றலும் சக்தியும்படையல் உணவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அதனால் தான் குறைந்த அளவுள்ள பொருளைக் கூட(படையல் அல்லது தப்ரூக்) கூட்டத்திலிருக்கும்
அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறார்கள். சாதாரண நேரத்தில் ஒரு வாழைப் பழத்தை பல
துண்டுகளாகப் பங்கிட்டுக் கொடுத்தால் முகம் சுளித்து வாங்க  மறுப்போர் கூட படையலிடப்பட்டது என்றதும் பக்தி சிரத்தையோடு வாங்கிக் கொள்வதற்கும் இதுவே காரணமாகும்.

இந்த நம்பிக்கையை பகுத்தறிவின் துணை கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தினால் இது அர்த்தமற்ற மூட நம்பிக்கை என்பது தெளிவாகும். படையிலிடும் பொருளை படைப்பதற்கு முன் ஆய்வுக்
கூடத்திற்க்கு அனுப்பி அதில் என்னென்ன பொருட்கள், சத்துக்கள் அடங்கியுள்ளன என ஆய்வு செய்வோம். அதே பொருளை படையலுக்குப் பின் மீண்டும் பழையபடி சோதனைக்கு உட்படுத்துவோம். இரண்டு முடிவுகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. எந்தச் சத்தும் அதிகரிக்கப் போவதுமில்லை.

அழுகும் பொருளாக இருந்தால் முன்பிருந்ததை விட மேலும் கெட்டுப் போக வாய்ப்புண்டு
எந்தச் சத்தும் அதிகமாகவில்லை என்பது அறிவியல்பூர்வமாக சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் இல்லை இல்லை அதில் ஏதோ இருக்கத் தான் செய்கிறது. அது எங்கள் நம்பிக்கை என வாதிட்டால் அது அறிவார்ந்த நம்பிக்கையாக இருக்க முடியுமா? என்பதை
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யாருமில்லாத வெட்ட வெளியை நோக்கி வெகு ஆக்ரோக்ஷத்துடன் பேசிக் கொண்டிருப்போரைப் பார்த்து மன நோயாளிகள் என பரிதாபப் பட்டிருப்போம். அது போலத் தானே படையிலிடப்பட்ட உணவில் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதும் மவ்லூது, கத்தம், பாத்திஹா. கந்தூரி, உரூஸ் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு வழங்கப்படும். உணவுகளும் இதே நிலையில் உள்ளவை தான். ஏனெனில் அங்கும் இதே நம்பிக்கைத் தான் வெளிப்படுகிறது.

பாத்திஹாவுக்காக தயாரிக்கப்படும் உணவைப் பொறுத்த வரை மொத்த உணவும் பாத்திஹாவின் போது எடுத்து வைக்கப்படுவதில்லை. கொஞ்ச உணவு தான் பாத்திஹாவின் போது முன்னால் இருக்கும். அந்த கொஞ்சத்தை மட்டும் தவிர்த்துக் கொண்டால் போதுமானது ஒட்டு மொத்தமாக ஃபாத்திஹா உணவையே ஒதுக்கத் தேவையில்லை என சிலர் கூறி வருகின்றனர்.
முன்னால் வைக்கப்பட்டது கொஞ்சமாக இருந்தாலும் வைக்கப்படாத உணவிலும் பரகத் இறங்குவதாகத் தான் நம்பப்படுகிறது.

அதனால் தான் பாத்திஹா ஓதுவதற்கு முன்னால் அந்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக் கூடாது எனும் கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படுகின்றன. எனவே பாத்திஹா உணவில் இதைச் சாப்பிடலாம் அதைச் சாப்பிடக் கூடாது என வித்தியாசப்படுத்த வழியில்லை. மேலும் அவர்கள்தான் தவறான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் நீங்கள் அந்த நம்பிக்கையில்லாமல் சாப்பிடலாமே என்று சிலர்கேட்கின்றனர்.

இது போன்ற தவறான நம்பிக்கை வைக்கப்பட்ட உணவை நாம் சாப்பிட்டால் அவர்களின் மூட நம்பிக்கையை நாமும் ஆதாரித்த நிலை ஏற்படும். தவறுகளைக் கண்டால் எதிர்த்தல், தடுத்தல், தவிர்த்தல் எனும் உயர்பண்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டு நாமும் அந்த தவறில் விழுந்து விடும் பேரபாயமும் ஏற்பட்டுவிடக்கூடும்.

எனவே இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை விட்டும் முற்றாக விலகிக் கொள்ள வேண்டும்.
இது வரை கூறப்பட்டதைத் தவிர மேலும் சில உணவுகள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன.இவற்றால் ஏற்படும் கேடுகளைப் பற்றி நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை.ஆயினும் பூரணமான இறை நம்பிக்கையோடு அதை தம் வாழ்வில் கடைபிடித்தார்கள்.அது போல நாமும் அறியாத பல விக்ஷயங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் நாம் அறிந்திருப்பதை விட நமக்கு
பின் வரக்கூடியவர்கள் அதைப் பற்றி அதிகம் அறிந்து கொள்வார்கள். அது வரை நாமும் முழுமையான இறையச்சத்தோடு அவற்றை நம்வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் பெயர்கூறப்படாதவை நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக
இருந்தால் அவன் பெயர்கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள். (அல்குர்ஆன்: 6:118)
அல்லாஹ்வின் பெயர்கூறப்படாததை உண்ணாதீர்கள். அது பாவமாகும். (அல்குர்ஆன்: 6:121)

வேட்டை நகமுடைய பறவைகள்

மிக்லப் உடைய ஒவ்வொரு பறவையையும் உண்பதற்கு
நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (வேட்டையாடித் தின்பதற்கு பயன்படும் நகங்கள் மிக்லப் எனப்படும்.) அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : (முஸ்லிம்: 3574, 3575)
(நஸாயீ: 4273), (அபூதாவூத்: 3309, 3311)(இப்னு மாஜா: 3225) (அஹ்மத்: 2083, 2488, 2611, 2867, 2910, 2974, 3363)

கோரைப் பல்லுடைய விலங்குகள்

விலங்கினங்களில் கோரைப் பற்கள் உள்ளவற்றை சாப்பிடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் அறிவிப்பவர் : அபூஸஃலபா (ரழி) நூல் (புகாரி: 5530, 5781) (முஸ்லிம்: 3570, 3571, 3572), (திர்மிதீ: 1397), (நஸாயீ: 4251, 4252, 4267), (அபூதாவூத்: 3308), (இப்னு மாஜா: 3223) (அஹ்மத்: 17072)

கோரைப்பல் என்பது தாடையின் முன் பகுதியில் இருக்கும் நான்கு பற்களை அடுத்திருக்கும் கூர்மையான நீண்ட பற்களைக் குறிக்கும்.

கழுதை

கைபர் போரின் போது நாட்டுக் கழுதையின் இறைச்சியை சாப்பிடுவதை விட்டும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல்: (புகாரி: 4217, 4215, 4218, 5522)

மதுபானம் மற்றும் போதை தருபவை

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள் குறி கேட்பதற்கான அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், க்ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து  விலகிக் கொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள். மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையே பகைமையை, வெறுப்பை ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத்
தடுக்கவுமே க்ஷைத்தான் விரும்புகிறான் எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(அல்குர்ஆன்: 5:90-91)

எதை அதிகம் (சாப்பிடும் போது) போதை தருகிறதோ அதில் குறைவானதும் ஹராமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரழி) நூல் : (திர்மிதீ: 1788), (அபூதாவூத்: 3196), (இப்னு மாஜா: 3384)(அஹ்மத்: 14176)

விபச்சாரர்கள் விபச்சாரம் செய்யும் போதுஇறைநம்பிக்கையாளனாக இருப்பதில்லை. குடிகாரன் குடிக்கும் போது முஃமினாக இருப்பதில்லை. திருடன் திருடும் போது முஃமினாக இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரழி) நூல் : (புகாரி: 5578, 2475, 7672),
6810) (முஸ்லிம்: 86, 87), (நஸாயீ: 4787, 4788, 4789, 5565, 5566)
(அபூதாவூத்: 4069), (இப்னு மாஜா: 3926) (அஹ்மத்: 7017, 7855, 8646)

மதுவின் தீமைகள்
நமது மூளையின் செயல்பாடுகள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு பிரிவில் கோளாறு ஏற்பட்டால் அதற்குரிய பணிகள் யாவும் முடங்கிப் போகும். பேசுதல், கேட்டல், சிந்தித்தல், பார்த்தல், சிரித்தல்,

அழுதல், இயங்குதல் என அனைத்து செயல்களுக்கும் தனித் தனி பிரிவுகள் உள்ளன. கண்ட்ரோல் ரூம் (கட்டுப்பாட்டு அறை) என்பது அதில் ஒரு பிரிவு. மனிதன் செய்யத் தகாத காரியத்தை செய்ய விடாமல் தடுத்து கட்டுப் படுத்துவது இந்தப் பிரிவின் பணியாகும்.

உதாரணமாக நான்கு பேர் கூடியிருக்கும் பொது இடத்தில் இருக்கும் போது மல ஜலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் உடனே கண்ட்ரோல் ரூம் தனது பணியை துவக்கும். இந்த இடம் அதற்குரிய இடமில்லை என்பதை உணர்த்தி சம்பந்தப்பட்ட உறுப்பை கட்டுக்குள் வைக்கும்.
கழிவறைக்கு சென்று உரிய இடத்தில் அமரும் வரை இந்தப் பணி தொடரும். உரிய இடத்தில் அமர்ந்ததும் தனது கட்டுப்பாட்டை நீக்கிக் கொண்டு கழிவு வெளியேற உதவும்.

இவ்வாறே கோபம், பாசம், அழுகை சிரிப்பு, பாலுணர்வு என அனைத்து உணர்ச்சிகளையும், செயல்பாடுகளையும் அதுவெளிப்படக் கூடாத இடங்களில் வெளிப்படாமல் தடுத்து வைக்கும் மதுபானங்கள் இந்த கண்ட்ரோல் ரூமை தாக்கி அதை செயல்படவிடாமல் முடக்கி விடும். அதனால் தான் பொது இடங்களில் நாகரீகமுள்ள எந்த மனிதனும் செய்யத் தயங்குகிற கேவலமான பல காரியங்களை குடிகாரர்கள் சர்வசாதாரணமாக செய்து மானமிழந்து நிற்பதை பார்க்கிறோம்.

கொலை, கற்பழிப்பு, வீண் சண்டை போன்ற ஏராளமான குற்றச் செயல்களுக்கு பின்ணணியில் போதைப் பொருட்களே உள்ளன. மனித உயிர்களை மொத்தமாக அள்ளிச் செல்லும் வாகன விபத்துகளுக்கு குடிகார வாகன ஓட்டிகளே, முதன்மை காரணமாக இருக்கின்றனர் குடும்பப் பிரச்சனைகள் பலவற்றுக்கும் போதையில் தட்டழியும் கணவன்மார்களே காரணமாய்த் திகழ்கின்றனர் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயன்பட வேண்டிய பொருளாதாரம் குடியின் மூலம் பாழாய்ப் போகிறது.

தொடர்ச்சியாக மது அருந்தும் போது உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரிக்கும். அதன் மூலம் நோய்
எதிர்ப்பு சக்தி குறையும். சிறு சிறு நோய்களைக் கூட எதிர்த்து நிற்க முடியாமல் உடல் பலஹீனமடையும். கை, கால் பதற்றம், உடல் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி, குடல் அழற்சி, இதய நோய் என உடல் உறுப்புகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக பாதிக்கப்பட்டு இறுதியில் படுத்த படுக்கையாகி விடுவார். அவர் மூலம் வரவேண்டிய வருமானம் தடைபடும்! படிக்க வேண்டிய வயதில் அவரது பிள்ளைகள் பணிக்குச் செல்லும் அவலம் ஏற்படும். பிள்ளைகளின் வருமானமும் குடும்பத் தேவைக்குப் பயன்படாமல் அவரின் மருத்துவத்திற்கே செலவிட்டு அழ வேண்டியிருக்கும். தந்தையின் குடிப் பழக்கம் சிறு வயதிலே பிள்ளைகளையும் தொற்றிக் கொண்டு எதிர்கால சந்ததியும் கெட்டுப் போகும் வாய்ப்புகளும் அதிகம்.

இவ்வாறு மது பல எண்ணற்ற தீமைகளின் கூடாரமாக திகழ்கிறது. தீங்கு தருபவை மேற்கூறப்பட்டவற்றைத் தவிர உயிரினங்கள், தாவரங்கள், தானியங்கள் என எந்தவொன்றிலும் மனிதனுக்கு தீங்கு இருக்கிறது என ஊர்ஜிதமாக கண்டறியப்பட்டால் அதுவும் தடுக்கப்பட்டவையே!
உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள் (அல்குர்ஆன்: 4:29)
உங்கள் கைகளால் நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன்: 2:195)