05) ஜகாத், பொருளைத் தூய்மைப்படுத்துமா? மனிதர்களைத் தூய்மைப்படுத்துமா?
ஜகாத் பொருட்களைத் தூய்மைப்படுத்தாது. மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும் எனக் கூறி பின்வரும் ஆதாரத்தை முன் வைக்கிறார்கள்.
صحيح مسلم
ثُمَّ قَالَ لَنَا إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِآلِ مُحَمَّدٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் ஜகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கும் போது, இவை மனிதர்களின் அழுக்குகள் என்று குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து, ஜகாத் மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும், பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பது ஹதீஸ் அடிப்படையில் நாம் கூறிய கருத்தாகும். இவர்கள் அந்த ஹதீஸுக்குப் போட்டியாக இந்த ஹதீஸைக் கொண்டு வந்து அந்த ஹதீஸை மறுக்கின்றனர்.
கீழ்க்காணும் வசனத்தையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக!
திருக்குர்ஆன் 9:103
சிந்தித்துப் பார்த்தால் இரண்டுக்கு முரண்பாடு இல்லை என்பது விளங்கும்.
மனிதர்களின் அழுக்குகள் என்றால் மனிதர்களின் உடலிலிருந்து நீக்கப்பட்ட அழுக்குகள் என்பது அதன் பொருள் அல்ல.
உடல் முழுவதும் அழுக்கடைந்து இருப்பவர் குளித்து கழுவி அழுக்கை நீக்குவதற்குப் பதிலாக நூறு ரூபாய் ஜகாத் கொடுத்து விட்டால் அந்த அழுக்கு நீங்கி விடும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
ஆன்மீக ரீதியிலான அழுக்கைப் பற்றியே அந்த ஹதீஸ் பேசுகிறது என்று தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.
பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பதற்கும் இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும். அழுக்கடைந்த லட்சம் ரூபாயில் ஆயிரம் ரூபாயை ஜகாத்தாக கொடுத்து விட்டால் அழுக்கடந்த நோட்டுக்கள் சலவை நோட்டுக்களாக மாறி விடும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.
பொருளைத் திரட்டும் போது நம்மை அறியாமலோ அறிந்தோ தவறான வழைமுறைகள் கையாளப்பட்டு இருக்கலாம் இதனால் அந்தப் பொருள் ஆன்மிக ரீதியான அழுக்காகிறது. அந்தப் பொருள் அழுக்கானால் அது மனிதனின் அழுக்கு தான்.
ஆன்மீக ரீதியான அழுக்கு என்றால் அது மனிதனுடன் தொடர்புடையதாக இருப்பது போல் பொருளுடனும் தொடர்புடையதாக ஆகின்றது.
பணத்தில் அழுக்கு உள்ளதால் அதையும் தூய்மையாக்கும் அவசியம் உள்ளது போல் அழுக்கான முறையில் பணம் திரட்டிய மனிதனிடமும் அழுக்குப் படிகின்றது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவையாகும்
எனவே பொருளைச் சுத்தமாக்கும் என்றாலும் மனிதனைச் சுத்தமாக்கும் என்றாலும் இரண்டுமே ஒரே கருத்தைச் சொல்லும் வாசகங்கள் தான் என்பதை அறியாமல் இப்படி வாதிடுகிறார்கள்.
ஜகாத் கொடுப்பது மனிதர்களைச் சுத்தப்படுத்தும் என்பதால் பொருட்களைச் சுத்தப்படுத்தாது என்றாகி விடுமா?
புதிய துணியை ஊசி தைக்கும் என்று கூறினால் கிழிசலைத் தைக்காது என்று இதற்குப் பொருள் கொள்ள முடியுமா?
ஜகாத் மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்று மேற்கண்ட வசனம் சொல்வதால் அதையும் நாம் நம்ப வேண்டும். பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்று முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுவதால் அதையும் நம்ப வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல!
ஜகாத் மனிதர்களையும் தூய்மைப்படுத்தும்; பொருட்களையும் தூய்மைப்படுத்தும் என்றே நாம் கூறுகின்றோம்.