05) குடும்ப அமைப்பின் அவசியம்

நூல்கள்: இஸ்லாம் கூறும் குடும்பவியல்

அல்லாஹ் மனிதனைப் படைத்த காரணமே குடும்பமாக வாழவேண்டும் என்பதற்காகத் தான். எனவே குடும்ப அமைப்பில் வாழ்வது தான் இயற்கை நியதியாகும். இதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன்: 7:189)

இப்படி ஜோடியைப் படைத்ததே, அவர்கள் இருவரும் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பதற்காகத் தான். அதையும் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

நீங்கள் அமைதிபெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.   (அல்குர்ஆன்: 30:21)

இறைவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று இந்த வசனத்தில் இருக்கிறது. அல்லாஹ் ஆதம் என்கிற ஒரு ஆணை களி மண்ணிலிருந்து படைத்து, அவரிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அவரது ஜோடியைப் படைக்கிறான். ஆதமை மண்ணிலிருந்து படைத்திருப்பதினால் அவரது மனைவியையும் மண்ணிலிருந்தே தனியாகப் படைப்பது ஆதமைப் படைத்ததை விட இலேசானது தான்.

அல்லாஹ் மண்ணிலிருந்து ஆதம் என்கிற ஆணைப் படைத்ததைப் போன்று, இன்னொரு பெண்ணையும் மண்ணிலிருந்து படைத்திருந்தால் அவ்விருவருக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஆகிவிடும். எனவே தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரு தொடர்பு இயற்கையாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனித சமூகத்தைப் படைக்க விரும்பும் போது, ஆதமை மட்டும் மண்ணிலிருந்து படைத்துவிட்டு, அவரது மனைவியை அவரிடமிருந்து படைக்கிறான்.

அந்தக் காரணத்தையும் அல்லாஹ் திருமறையில் சொல்லிக் காட்டுகிறான். ஆண் பெண்ணிடத்தில் அமைதியையும் நிம்மதியையும் பெறவேண்டும் என்பதற்காகத் தான் ஆதமிலிருந்து ஹவ்வாவை அல்லாஹ் படைத்திருக்கிறான்.

எனவே ஆணுக்கு ஆண் என்றும், பெண்ணுக்குப் பெண் என்று தடம் புரண்டு போகிற மனித சமூகம், அல்லாஹ் ஆணிலிருந்து ஆணைப் படைக்கவில்லை என்றும் பெண்ணிலிருந்து பெண்ணைப் படைக்கவில்லை என்கின்ற அடிப்படைத் தத்துவத்தை சிந்திக்க வேண்டும். மேலும் ஆணுடைய ஒரு பகுதியிலிருந்து தான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் அப்படிப் படைத்திருப்பதன் நோக்கமே ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் அன்பையும் கருணையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் என்பதையும் இத்தகையவர்கள் சிந்திக்க வேண்டும்.

யாரோ எவரோ என்று தெரியாது; ஆணுக்கு ஒரு ஊராக இருக்கும்; பெண்ணுக்கு வேறொரு ஊராக இருக்கும். இவனது குலமும் மொழியும் அவளது குலமும் மொழியும் கூட வெவ்வேறானவையாக இருக்கும். இப்படிப் பல வித்தியாசங்கள் இருந்தாலும் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவதை நடைமுறையில் பார்க்கிறோம். அன்பைப் பரிமாறிக் கொள்கிறவர்களாகவும் பார்க்கிறோம்.

இது இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்புக்குள் கணவன் மனைவி என்றாகிவிடும் போது, ஒருவருக்கொருவர் மாய்ந்து மாய்ந்து அன்பையும் இரக்கத்தையும் பொழிகின்றனர். இவளுக்கு அவன் உதவுகிறான். அவனுக்கு இவள் பணிவிடை செய்கிறாள். இப்படியெல்லாம் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் ஈடுபாடு காட்டுவதையும் பார்க்கிறோம்.

எனவே கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பை நிறுவி, அவர்களில் ஒவ்வொருவரும் தன்னைத் தானே ஈர்க்கப்படுவதாக ஏற்படுத்தியது இறைவனின் ஆற்றலில் உள்ளதாகும். அதனால் தான் இந்த ஈர்ப்பைச் சொல்லிக் காட்டிய இறைவன், இதில் சிந்திக்கிற சமுதாயத்திற்குப் பல சான்றுகள் இருப்பதாகவும் கூறுகிறான்.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.   (அல்குர்ஆன்: 4:1)

அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில், ஒரு ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் இறைவன் படைத்தான் என்று கூறி அனைவரும் சமம் என்றும் மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதைப் போதிக்கிறான்.

ஆனால் இந்த வசனத்தில் அல்லாஹ் ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து படைத்ததாகச் சொல்லுகிறான். ஹவ்வா உட்பட அனைத்து மனிதர்களையும் சேர்த்துக் கொண்டு ஆதம் என்கிற ஒரு ஆத்மாவிலிருந்து படைத்ததாகச் சொல்கிறான். அதாவது ஹவ்வா உட்பட அனைவரும் ஆதமிலிருந்து தான் உருவாக்கப்பட்டார்கள் என்பதாகச் சொல்கிறான். அதாவது நம் அனைவருக்கும் ஆதாம், ஹவ்வா மூலமாக இருந்தாலும், ஹவ்வாவுக்கு மூலம் ஆதாமாகத் தான் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் அல்லாஹ் இந்த வசனத்தில் “ஒரே ஒரு ஆத்மாவிலிருந்து’ படைத்தாகச் சொல்கிறான். மேலும் அவரிலிருந்து அதாவது அவரில் ஒரு பகுதியை எடுத்து அதிலிருந்து அவரது ஜோடியைப் படைத்ததாகவும், இந்த இரண்டு பேர் மூலமாக இவ்வுலகத்திலுள்ள அனைத்து ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்த இறைவன் நான் தான் என்றும், எனவே எனக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

இவைகளையெல்லாம் சொல்லக் காரணம், மனிதன் குடும்பமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் குடும்ப அமைப்பை உடைத்து தனியாக மனிதனால் ஒருக்காலும் வாழவே முடியாது என்பதை மனித சமூகம் ஒத்துக் கொண்டாக வேண்டும். ஏதாவது காரணத்தைக் கூறி குடும்ப அமைப்பை மனிதன் உடைக்க முடியாது என்பதையும் நம்ப வேண்டும்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.      (அல்குர்ஆன்: 6:89)

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான்.    (அல்குர்ஆன்: 39:6)

அதேபோன்று ஆதமைப் படைத்துவிட்டு, எல்லாவிதமான இன்பங்களையும் கொடுத்து, சொர்க்கத்திலோ அல்லது தோட்டத்திலோ தங்கச் சொல்லும் போதுகூட, ஆதமை மட்டும் தனியாகத் தங்கச் சொல்லவில்லை. அவரது துணையுடன் தான் தங்கச் சொன்னான். ஏனெனில் அதில் தங்க வைப்பதற்கு முன்னாலேயே ஆதமுடைய ஜோடியைப் படைத்துவிட்டான்.

“ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்” என்று நாம் கூறினோம்.   (அல்குர்ஆன்: 2:35)

எனவே தோட்டத்திலோ அல்லது சுவர்க்கத்திலோ குடியமர்த்தும் போதே ஜோடியாகத் தான் அல்லாஹ் குடியமர்த்துகிறான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அல்லாஹ் ஆதமை மட்டும் படைத்து, அவர் தனக்கு ஒரு ஜோடி வேண்டும் என்கிற அளவுக்கு அவரைத் தனியாக ஏங்க வைத்து, காக்க வைத்த பிறகு அவரது ஜோடியான ஹவ்வாவைப் படைக்கவில்லை. ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் மத்தியில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. ஆதமைப் படைத்தவுடனேயே அவருக்குரிய ஜோடியையும் உடனே படைத்துவிட்டான் என்றே இந்த வசனம் நமக்குச் சொல்லிக் காட்டுகிறது.

எனவே இந்த ஆதாரங்களையெல்லாம் அலசிப் பார்க்கின்ற போது, ஆண் பெண் என்கிற அடிப்படையில் படைத்திருப்பது தான் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்பதை மனமார ஏற்றுக் கொண்டு வாழவேண்டும். எனவே இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கை நியதிக்கு மாற்றமான உடலுறவு, பாலியல் உறவுகளுக்கு இஸ்லாத்தில் அறவே எந்த அனுமதியும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆண் பெண்ணல்லாத உறவு முறையை ஏற்றுக் கொள்ளவோ வலியுறுத்தவோ கூடாது.

சமீப காலமாக ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் மணமுடிக்கும் அவல நிலையைச் சரிகாண்கிற கேடுகெட்ட நிலையைச் சமூகத்தில் பாôக்கிறோம். இந்த அவல நிலை இஸ்லாத்தில் இருப்பதாகவும், இஸ்லாம் அதை அங்கீகரிப்பதாகவும் சிலர் காட்டப் பார்க்கின்றனர். அவர்கள் முஸ்லிம்களின் பட்டியலில் வரமாட்டார்கள் என்பதையும் எச்சரிப்பதற்காகத் தான், கணவன் மனைவி அதாவது ஆண் பெண் உறவுகளை இப்படி மிகவும் வலியுறுத்தி சொல்கிறோம்.

அதேபோன்று ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் இல்லை என்பதைப் போன்றும் இப்படியெல்லாம் இஸ்லாமிய குடும்பங்களிலும் இருக்கத் தான் செய்கிறது என்றும் மீடியாக்களும் பத்திரிக்கைகளும் முஸ்லிம்கள் என்று பெயர் வைத்துக் கொண்டவர்களில் சிலரை வைத்து தவறாகச் சித்தரிக்கின்றனர்.

அதாவது முஸ்லிமல்லாதவர்கள் இதைச் சரி காண்பதினால் இஸ்லாமும் முஸ்லிம்களும் சரிகாண்கிறார்கள் என்று தவறாகக் காட்டுவதற்காக சில கேடுகெட்ட ஷியாக்களை முஸ்லிம்கள் எனக் காட்டப் பார்க்கிறார்கள். எனவே யாரெல்லாம் இப்படிச் சொல்கிறார்களோ அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும், எந்தக் காலத்திலும் ஆணும் பெண்ணும் தான் இல்லறத்திலும் குடும்ப உறவுகளிலும் ஈடுபட வேண்டும் என்பதையும் சரியாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம்.

மேலும் இதுபோன்ற ஓரினக் கலாச்சாரத்தை அழிப்பதற்காகவே இறைவன் ஒரு நபியை அனுப்பி எச்சரித்து அந்தச் சமூகத்தை அழித்திருக்கிறான் என்பதிலிருந்தே அது மனித சமூகக் கட்டமைப்பையே நாசமாக்குகின்ற மிகப் பெரிய மாபாதகச் செயல் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.