05) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 3

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

வழக்கு விசாரணை

சீடர்கள் எப்போதும் ஏசுவையும் அவரது பணியையும் தவறாகவே விளங்கி வைத்திருந்தனர். யூதர்களின் அரசராக அவரைப் பிரகடனப்படுத்துமாறு கேட்டனர். வானத்திலிருந்து தீயை இறக்குமாறு வேண்டினர். கடவுளின் ஆட்சியில் அவனது வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமருமாறு அவரிடம் கோரினர். கடவுளைத் தங்கள் கண் முன்னால் நேரடியாகக் காட்ட வேண்டும் என்று முறையிட்டனர். அவரது திட்டத்திற்குப் பொருந்தாத எதையும், எல்லாவற்றையும் அவரிடம் கேட்டு அவரையும் செய்ய வைத்து, தாங்களும் அவ்வாறு செய்தனர்.

இப்படித் தான் அவர்கள் கடைசி வரை செயல்பட்டனர். அந்தக் கடைசி நேரம் வந்ததும் அவரை அவர்கள் அனைவரும் விட்டு விட்டு ஓடி விட்டனர் என பேராசிரியர் மாமெரி என்பார் ஏசுவின் சீடர்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

மைக்கேல் ஹெச். ஹார்ட் கூறுவது போல் வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் முஹம்மது (ஸல்) என்றால்…

பிரிட்டனின் 11வது கலைக் களஞ்சியம் கூறுவது போல் மதத் தலைவர்களில் மாபெரும் வெற்றித் தலைவர் முஹம்மது (ஸல்) என்றால்…

டைம் மாத இதழ் கூறுவது போல் எல்லாக் காலத்திலும் சிறந்த தலைவர் முஹம்மது (ஸல்) என்றால்…

லாமர்டைன் தனது துருக்கிய வரலாற்று நூலில் கூறுவது போல் உலகில் வாழ்ந்த தலை சிறந்த மனிதர் முஹம்மது (ஸல்) என்றால்…

உலகில் வாழ்ந்த தூதர்களிலேயே மிகவும் சோதனைக்குள்ளான தூதர் ஏசு என்று குறிப்பிட்டுச் சொல்லி விடலாம்.

காரணம், அவரது மிக நெருங்கிய சீடர்கள் அவரைத் தவறாகப் புரிந்து வைத்திருந்தனர் என்று பைபிள் கூறுகின்றது.

யூத சமுதாயம் அவரது அறிவுரைகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது.

அவரைப் பின்பற்றியவர்கள் இன்று வரை அவரைத் தவறான முறையில் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய ஏசு தான், மத குருக்களின் விசாரணையில் மாட்டித் தவிக்கின்றார். அந்த விசாரணையை இப்போது பார்ப்போம்.

தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.

சிலர் எழுந்து, “மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்” என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.

அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?” என்று இயேசுவைக் கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை.

மீண்டும் தலைமைக் குரு, “போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, “நானே அவர்; மேலும் மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்” என்றார்.

தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக் கொண்டு, “இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாக வேண்டியவன்” என்று தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர் மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, “இறைவாக்கினனே, யார் எனச் சொல்” என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.

மாற்கு 14:55-65

முடிவு செய்யப்பட்ட தண்டனை

தலைமைக் குரு கயபா, ஏசுவைத் தீர்த்துக் கட்டுவது என்று ஏற்கனவே முடிவு செய்து விட்டார்.

கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை” என்று சொன்னார்.

யோவான் 11:49, 50

தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும் தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப் பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார்.

யோவான் 18:19-21

ஆதாரம் கேட்கும் ஏசு

இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார்.

யோவான் 18:23

ஒருவாறாக, ஏசுவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. கடவுளைப் பழித்துரைத்தார் என்று ஏசு மீது குற்றம் சாட்டப்பட்டது. “மஸீஹ்’ என்று சொன்னதால் கடவுளைப் பழிப்பதாகி விடாது. அது போல் யூதர்களிடம் “கடவுளின் குமாரர்’ என்று சொன்னாலும் பழிப்புரை வருவதில்லை. இருப்பினும் ஏசுவைக் கொல்ல வேண்டும் என்று மதகுரு கயபா ஏற்கனவே முடிவெடுத்து விட்டார். அதை அரங்கேற்ற வேண்டும். எனவே தீர்ப்பு அந்தத் திசையை நோக்கிச் சென்றது. தீர்ப்பளிக்கப்பட்ட ஏசுவை இப்போது யூதர்களால் தண்டிக்க முடியாது.

பிலாத்து அவர்களிடம், “நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்றார். யூதர்கள் அவரிடம், “சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்றார்கள்.

யோவான் 18:31

பிலாத்து முன் ஏசு

கடவுளைப் பழித்துரைத்தல் என்பதிலிருந்து, அரச துரோகம் என்று திடீரென குற்றச்சாட்டை யூதர்கள் மாற்றியமைத்தார்கள். காரணம், ஏசு தன்னைக் கடவுள் என்று வாதிடுகிறார் என்று சொன்னால் அது ஆளுநர் பிலாத்துக்கு மரண தண்டனைக்குரிய குற்றமாகத் தோன்றாது. அது மட்டுமின்றி கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சாதியினர் அவரைச் சுற்றி கணக்கற்ற வகையில் இருந்தனர்.

நம் நாட்டுக் காவலர்கள், முதல் தகவல் அறிக்கையைக் கடைசி வரை, நீதி மன்றத்தில் தாக்கல் செய்கின்ற வரை மாற்றி மாற்றி எழுதுவது போல் யூதர்கள் குற்றச்சாட்டை மாற்றி அமைக்கின்றனர்.

ஏரோத் முன்னிலையில் ஏசு

“இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம்” என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.

பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்க, அவர், “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று பதில் கூறினார்.

பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்து, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை” என்று கூறினான்.

ஆனால் அவர்கள், “இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்” என்று வலியுறுத்திக் கூறினார்கள்.

இதைக் கேட்ட பிலாத்து, “இவன் கலிலேயனா?” என்று கேட்டான்;

அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.

இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித்துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந்தான்.

அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை.

அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள்.

ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான்.

அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.

லூக்கா 23:2-12

பிலாத்து தீர்ப்பளிப்பதற்கு முன்னால் பிலாத்தின் மனைவி ஒரு தகவலை அனுப்பி வைக்கிறாள்.

பிலாத்து நடுவர் இருக்கை மீது அமர்த்திருந்த பொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, “அந்த நேர்மையாளன் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார்.

மத்தேயு 27:19

அப்போது பிலாத்து, “என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?” என்றான்.

இயேசு மறுமொழியாக, “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன் தான் பெரும் பாவம் செய்தவன்” என்றார்.

அது முதல் பிலாத்து அவரை விடுவிக்க வழி தேடினான். ஆனால் யூதர்கள், “நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி” என்றார்கள்.

யோவான் 19:10-12

பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவழைத்தான்.

அவர்களை நோக்கி, “மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்டனைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்றான்.

(விழாவின் போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.)

திரண்டிருந்த மக்கள் அனைவரும், “இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்” என்று கத்தினர்.

பரபா என்பவன் நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டு கொலை செய்ததற்காக சிறையிலிடப்பட்டவன்.

பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான்.

ஆனால் அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள்.

மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, “இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்” என்றான்.

அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது.

அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான்.

கலகத்தில் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.

லூக்கா 23:13-25

இந்த இடத்தில் கிறித்தவ அழைப்பாளர்களைக் கொஞ்சம் அடையாளம் காட்டியாக வேண்டும்.

அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார்.

ஏசாயா 53:7

இந்த மேற்கோளின்படி ஏசு என்ற செம்மறியாடு விசாரணையின் போது வாய் திறக்கவில்லை என்று கிறித்தவ அழைப்பாளர்கள் சாதிக்கின்றனர். இதை உரைநடையாகவும் உற்சாகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கவிதையாகவும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏசு மவுனமாக இருந்தாரா? விசாரணையின் போது தமக்காக வாதிடாமல் இருந்தாரா? இதோ பிலாத்துக்கு முன்னிலையில் அவர் பேசுவதைக் கேளுங்கள்.

பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.

அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.

பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன் தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.

யோவான் 18:33-37

மதகுரு கயபாவுக்கு முன்னால் பேசுவதைக் கேளுங்கள்.

இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார்.

யோவான் 18:23

கடவுளிடம் பிரார்த்தனை செய்தது:

அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

மத்தேயு 26:39

இதுவெல்லாம் எதைக் காட்டுகின்றது? தன்னுடைய நியாய நிலைப்பாட்டை ஏசு பொருத்தமான இடங்களில், மிகப் பொருத்தமாகவும், போதுமான அளவிலும் எடுத்து வைக்கின்றார். ஆனால் இந்தப் பாதிரிகளும், கிறித்தவ அழைப்பாளர்களும் ஏசு பேசவில்லை என்று சாதிக்கின்றனர். அதனால் இவர்கள், “கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை” என்று மத்தேயு 13:13 கூறும் பட்டியலில் உள்ளவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இந்தப் பாதிரிகள் தங்களையும் வழிகெடுத்து, பிறரையும் வழிகெடுக்கக் கூடியவர்கள் என்பதற்காக இந்த எடுத்துக்காட்டு. இப்போது ஏசுவின் விசாரணைக்கு வருவோம்.

பிலாத்து தன் விசாரணையின் போது ஏசு குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கின்றார். அடுத்து, பிலாத்தின் மனைவியும், ஏசுவுக்கு எதிராக எந்த அநீதியும் இழைத்து விடக் கூடாது என்று செய்தியனுப்புகிறாள்.

இவை நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கும் செய்தி, அரசும், அரசு இயந்திரமும் ஏசுவை சிலுவையில் அறைந்து கொல்வதற்கு ஆயத்தமாக இல்லை என்பதைத் தான்.

அரசும், அரசு இயந்திரமும் உதவி செய்தால் மட்டுமே ஏசு கொல்லப்பட முடியும். இல்லையெனில் அது நடக்காது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பிலாத்து, நன்கு விசாரித்த பிறகே ஏசுவைக் குற்றமற்றவர் என்று தீர்மானிக்கிறார். தான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும் என்பதில் ஏசு உறுதியாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தனக்குத் தண்டனை வழங்கும் விதமாக பிலாத்திடம் தன்னுடைய கருத்தை அழுத்தமாகப் பதிய வைத்திருக்க வேண்டும்.

கடவுளின் ராஜ்யத்தை அமைக்க வந்தவர் தான் என்பதைப் பிலாத்திடம் கூறியிருந்தால் அது அரச துரோகமாகக் கருதப்பட்டு உடனே தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஏசு அவ்வாறு செய்யாததால் பிலாத்து ஏசுவைக் குற்றமற்றவர் என்று தீர்மானிக்கின்றார்.

தலை போனாலும் பரவாயில்லை என்ற கருத்தில் ஏசு தன் வாதத்தை வீராவேசமாகப் பதிய வைக்கவில்லை. தன் தலை தப்பினால் போதும் என்ற ரீதியில் தான் தன் வாதத்தை ஏசு எடுத்து வைக்கின்றார். இந்நிலையில் அவரை மனித குல மீட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும்?