05) இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை என்ன?

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

ஏகத்துவ தத்துவமான ஒரே கடவுள் எனும் கொள்கையை மனதால் ஏற்றுக் கொள்ளும் போது தான் ஒருவர் முஸ்லிமாக கருதப்படுகிறார்.

எந்த சித்தாந்தமும் நேர்மறையாக தனது கடவுட்கொள்கையை அறிமுகம் செய்கிற போது, இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே எதிர்மறையான தத்துவத்தை முன்வைக்கிறது.

1400 ஆண்டுகளுக்கு முன்பாக, முன்சென்ற சமுதாய மக்களால் பின்பற்றப்படாமல் இருந்த இஸ்லாமிய மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர் முஹம்மது நபியவர்கள்.

அல்லாஹ்வை (இறைவனை) வணங்குங்கள்.. என்று போதனை செய்வது அவருடைய நோக்கமாக இருக்கவில்லை.

காரணம், அந்த சமூக மக்கள் இறைவனை (அல்லாஹ்வை) வணங்கிக் கொண்டு தான் இருந்தார்கள்.

நபியே!) “நீங்கள் அறிந்திருந்தால், இப்பூமியும் இதில் உள்ளவையும் யாருக்கு உரியவை?” என்று கேட்பீராக! “(அவை) அல்லாஹ்வுக்கே உரியவை!” என்று அவர்கள் பதிலளிப்பார்கள். “நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:84-85)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான் எனக் கூறுவார்கள்.         (அல்குர்ஆன்: 43:9)

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராயின், ‘அல்லாஹ்’ என்றே கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!” என்று கூறுவீராக! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 31:25)

என்று திருக்குர்ஆன் அந்த சமூக மக்களின் நம்பிக்கையைப் பற்றி சொல்கிறது.

வானங்களையும் சூரிய, சந்திரனையும், தங்களையும் படைத்தது அந்த ஒரே கடவுள் (அல்லாஹ்) தான் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த சமூகம், அந்த ஓரிறையோடு, வேறு பல படைப்பினங்களையும் கடவுள் என தவறாக நம்ப ஆரம்பித்தனர்.

இவையெல்லாம் குட்டி தெய்வங்கள், இவை எங்களை அந்த ஓரிறையோடு நெருக்கமாக்கி வைக்கும் என அவர்கள் கொண்டிருந்த தவறான நம்பிக்கை,தான் முஹம்மது நபியவர்கள் மேற்கொண்ட புனர்நிர்மாணத்திற்கான அடிப்படை காரணம்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்பதே புனர்நிர்மாணத்திற்கான அந்த தத்துவம்..!

‘லா’ என்றால் இல்லை

‘இலாஹ்’ என்றால் கடவுள்

‘இல்லல்லாஹ்’ என்றால் அல்லாஹ்வை தவிர அதாவது, “கடவுளே இல்லை, அல்லாஹ்வை தவிர”. என்பது இதன் முழு பொருளாக்கம்.

பல கடவுள்களை நாமாக கற்னையில் உருவாக்கி வைத்து விட்டு, அவற்றோடு அல்லாஹ்வும் ஒரு கடவுள் என நம்பினால், பல பொய் தெய்வங்களை அவன் வழிபட்டால் என்ன, என்னையும் வழிபடத்தானே செய்கிறான், என இறைவன் கருத மாட்டான். மாறாக இறைவனின் பார்வையில் நாம் கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவராக கருதப்படுவோம்.

அல்லாஹ்வை வணங்குவது முக்கியமல்ல, அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் இறைவன் என கருதி வணங்காமல் இருப்பதே முக்கியம்.

இது தான் இஸ்லாமிய அடிப்படை இறைக் கோட்பாடு என நபிகள் நாயகம் மக்களுக்கு போதனை செய்தார்கள்.

இதில் தான் கலிமா என்று சொல்லக்கூடிய இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை நிலை கொள்கிறது.