05) ஆட்சிப் பணி

மற்றவை: அபூபக்ர் (ரலி) விரிவான வரலாறு

எந்த ஒரு தலைவராக இருப்பினும் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆற்றுகின்ற முதல் ஆட்சிப் பணி முக்கியத்துவம் பெறுவதாக அமையும். அது போலவே அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பதவியேற்றதும் ஆற்றுகின்ற முதல் ஆட்சிப் பணி அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.
ஜைத் பின் ஹாரிஸா (ரலி), ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட இடமான சிரியாவிலுள்ள பல்கா என்ற இடத்திற்கு உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள். அந்தப் படை மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள ஜுர்ஃப் என்ற இடத்தில் இருந்த போது, நபி (ஸல்) அவர்களின் இறப்புச் செய்தியைக் கேட்டு படையில் இருந்தவர்கள் பின் தங்கி மதீனாவிற்கு வந்து விட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த மறு தினம், அதாவது அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற மறு தினம் அன்னாரின் அறிவிப்பாளர் ஓர் அறிவிப்பை வெளியிடுகின்றார்.
“படைத் தளபதி உஸாமாவின் படையின் கீழ் படை வீரராக இணைந்த யாரும் இனி மதீனாவில் இருக்கக் கூடாது. இத்தகையோர் உடனே ஜுர்ஃப் என்ற இடத்திலுள்ள உஸாமாவின் படையில் போய் தங்களைத் இணைத்துக் கொள்வாராக!”
இது தான் அபூபக்ர் (ரலி) அறிவித்த பிரகடனமாகும். ஆட்சிப் பொறுப்பேற்றதும் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டது ஏன்? நமக்கு ஏற்படும் இந்தச் சந்தேகம் நபித்தோழர்களுக்கும் ஏற்பட்டது. இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், இந்த அறிவிப்புக்குப் பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி விட்டு ஆற்றுகின்ற பேருரையை இப்போது பார்ப்போம்.
மக்களே! நான் உங்களைப் போன்றவன் தான். (ஆட்சியாளன் என்பதால் நான் உயர்ந்தவன் அல்லன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அளவுக்குத் தன் சக்திக்கு உட்பட்டு செயல்பட்டார்களோ அந்த அளவுக்குச் செயலாற்றும் படி என்னை நீங்கள் வற்புறுத்தலாம். (நபியவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்) முஹம்மது (ஸல்) அவர்களை அகிலகத்தாரில் இறைத்தூதராக அல்லாஹ் தேர்வு செய்து அவர்களை ஆபத்துக்களை விட்டும் காத்தருளினான். நான் நிச்சயமாக அவர்களைப் பின்பற்றுபவன் தான். இஸ்லாத்தில் இல்லாத புதுப்புது காரியங்களை (என் சுய விருப்பத்தின் படி) ஆற்றுபவன் அல்லன். நான் சரியாக நடப்பின் என்னிடத்தில் உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள். நான் நெறி தவறினால் என்னை நீங்கள் சீர்படுத்துங்கள்.
இந்தச் சமுதாயத்தில் உள்ள எவரும் ஒரு சாட்டையடிக்குச் சமமாக அல்லது அதை விடக் குறைந்த அளவுக்கு துரோகம் இழைக்கப் பெற்று அதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீதி கேட்டுச் சென்றதில்லை. அப்படிப்பட்ட ஆட்சியாளராக அவர்கள் மரணித்தார்கள். என்னிடத்தில் ஷைத்தான் ஊடுருவலாம். அப்படி அவன் என்னிடம் வந்து விடின் என்னை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (என்னிடம் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டுவதால்) உங்கள் தோற்றங்களை, உடல்களின் அங்க அடையாளங்களைப் பார்த்து வைத்துக் கொண்டு உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்த மாட்டேன்.
உங்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட தவணையில் நீங்கள் காலையிலும், மாலையிலும் (பிழைப்புக்காக) சென்று வருகின்றீர்கள். அதே சமயம் உங்கள் வாழ் நாள் எப்போது முடியும் என்ற ஞானம் உங்களுக்குக் கிடையாது. உங்கள் வாழ்க்கைப் பயணத்தை நற்செயல்கள் செய்வதிலேயே கழிக்க இயலுமாயின் அவ்வாறு செய்யுங்கள். ஆனால் இதை நீங்கள் அல்லாஹ்வின் அருளைக் கொண்டே தவிர செய்ய முடியாது. மரணம் எனும் செயலற்ற நிலைக்கு நீங்கள் செல்வதற்கு முன் உங்களுக்கு வழங்கப் பட்ட வாழ்நாள் அவகாசத்தில் நன்மைகளைச் செய்ய முந்திக் கொள்ளுங்கள்.
ஏனெனில் ஒரு சாரார் தங்கள் வாழ்நாட்களை மறந்து விட்டு, அமல்களைப் பின்னால் செய்து கொள்ளலாம் என்று இப்போது கோட்டை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் அவர்களைப் போன்று ஆகி விடுவதை நான் எச்சரிக்கை செய்கின்றேன்.
முயற்சி செய்வீர்களாக! முயற்சி செய்வீர்களாக! வெற்றி பெறுவீர்களாக! வெற்றி பெறுவீர்களாக! நன்மையை நோக்கி விரைவீர்களாக! நன்மையை நோக்கி விரைவீர்களாக! தீமையை விட்டும் விலகுவீர்களாக! தீமையை விட்டும் விலகுவீர்களாக!
உங்களை நன்மையின் பக்கம் தூண்டி, நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்களா என்று உங்களுக்குப் பின்னால் ஒரு சக்தி எதிர்பார்த்து ஏங்கி நிற்கின்றது. உங்கள் தவணை முடியும் காலமும் உங்களுக்குப் பின்னால் எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கின்றது. அதன் வேகம் அதிகமானதாகும். எனவே மரணத்தைப் பயந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர்கள்,பிள்ளைகள், சகோதரர்கள் மூலம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் திருமுகம் நாடப்பட்ட அமல்களையே அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். எனவே நீங்கள் செய்யும் அமல்களில் அல்லாஹ்வையே நாடுங்கள்.
உங்களுக்கு வறுமை, தேவை, கஷ்டம் என்று வருகின்ற போது மட்டும் நீங்கள் அல்லாஹ்விடம் தூய்மையாக நடந்து கொள்கின்றீர்கள். (மற்ற நேரங்களில் அவ்வாறு நடப்பதில்லை) உங்களில் இறந்தவர்களைக் கொண்டு நீங்கள் படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களைக் கொண்டு நீங்கள் சிந்தனை பெறுங்கள். நேற்று அவர்கள் எங்கிருந்தனர். இன்று எங்குள்ளனர்? போர்க்களங்களில் வீர வெற்றி வரலாறு படைத்த ஆதிக்கபுரிகள் எங்கு போயினர்? காலம் அவர்களை இழிவு படுத்தியது. அவர்கள் மண்ணோடு மண்ணாகிப் போயினர். வறுமை அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. தீயவைகளுக்குத் தீயவர்கள். தீயவர்களுக்குத் தீயவைகள் என்ற நிலையில் அவர்கள் ஆகி விட்டார்கள்.
பூமியை அரசாண்டு கொண்டிருந்த அரசர்கள் எங்கே? அவர்கள் கால ஓட்டத்தில் காணாமல் போனார்கள். அவர்களது நினைவுகளும் மங்கி, மறைந்து போய் விட்டன. அதே சமயம் அல்லாஹ் அவர்களைப் பிந்தையவர்களுக்குப் பாடமாக ஆக்கினான். அவர்களின் ஆசைகளை அறுத்தெறிந்தான். அவர்கள் மறைந்தார்கள். அவர்களது செயல்பாடுகளும் மறைந்தன. அவர்கள் வாழ்ந்த உலகம் அவர்களுக்காக இல்லாமல் அடுத்தவர்களுக்காக ஆனது. அவர்களது பின் தோன்றல்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியிருக்கின்றான். அவர்கள் மூலம் நாம் படிப்பினை பெறுவோமாயின் நாம் வெற்றி பெறுவோம். நாமும் அதே வழியில் இறங்கினால் அவர்களைப் போன்று நாம் ஆகி விடுவோம்.
முகம் ஜொ-க்க தங்கள் இளமைப் பருவத்தின் மூலம் உலகை வியக்க வைத்த கட்டிளங் காளையர் எங்கே? கா-ல் மிதிபடுகின்ற தூசிகளாயினர். வரம்பு கடந்த அவர்களது வாழ்வு அவர்களுக்குக் கைசேதமாக அமைந்தது.
பெரும் பெரும் நகரங்களை நிர்மாணித்து அவற்றைச் சுற்றிலும் சுவர்களை எழுப்பி அதிசயங்களைக் கண்டார்களே, அவர்கள் எங்கே? அந்நகரங்களை தங்கள் பின்னாளில் தோன்றுவோருக்காக அவர்கள் விட்டு விட்டுப் போய் விட்டார்கள். இதோ அவர்கள் வாழ்ந்த வீடுகள் இடிந்து கிடக்கின்றன. அவர்களோ இருள் சூழ்ந்த மண்ணறைகளில் வீழ்ந்து கிடக்கின்றனர்.
“(அழிக்கப்பட்ட) அவர்களில் எவரையாவது நீர் உணர்கிறீரா? அல்லது அவர்களது முனகலையேனும் செவியுறுகிறீரா?”
(அல்குர்ஆன்: 19:98)
உங்கள் தந்தையரி-ருந்து, உங்கள் சகோதரர்களிலிருந்து உங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் எங்கே? அவர்களின் தவணை முடிந்து விட்டது. எனவே அவர்கள் செய்த செயல்களின் பலன்களை அனுபவிப்பதற்காக அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் தங்கள் துர்பாக்கியத்தையோ அல்லது நற்பாக்கியத்தையோ சந்தித்துக் கொண்டுள்ளனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நிகரானவன் எவனும் இல்லை.
ஓர் அடியானுக்கு அல்லாஹ் நன்மையை வழங்க வேண்டுமாயின், அது போல் அவனைத் தீமையி-ருந்து தடுக்க வேண்டுமாயின் அவன் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவனுடைய கட்டளையைப் பின்பற்ற வேண்டும். இது தான் அல்லாஹ் அவனுக்கு நன்மையை வழங்குவதற்கும், அவனை தீமையி-ருந்து காப்பதற்கும் உரிய காரணமாக ஆகுமே தவிர வேறெதுவும் அல்ல! நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள்! நீங்கள் அவனால் கூ- வழங்கப் படவுள்ள அடிமைகள். அவனிடமிருந்து கூலியைப் பெற வேண்டுமாயின் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
நரகம் தன்னை விட்டு விலகவும், சுவர்க்கம் தனக்கு நெருக்கமாக அமைவதற்கும் உரிய நேரம் உங்களில் எவருக்கும் இன்னும் வரவில்லையா?
– அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆற்றிய பேருரை இது தான்.
உஸாமா (ரலி) அவர்களின் படையிலிருந்து வந்த மக்கள் மீண்டும் அந்தப் படையில் போய் சேர்வதற்காகவும், அந்தப் படையை அனுப்புவதற்கான முக்கியத்துவத்தை மற்ற மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த உரையை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்த அடுத்த நாளே இதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஏன் இவ்வளவு அவரசம் காட்ட வேண்டும்?