05) அனுமதிக்கப்பட்டவை

நூல்கள்: நவீன வடிவங்களில் வட்டி- ஓர் இஸ்லாமிய பார்வை
மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு நிறுவனத்தில் சேர விரும்புபவர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி குறிப்பிட்ட காலத்துக்கு உறுப்பினராக இருப்பார்.

உதாரணமாக ஒருவருடத்துக்கு 4000 ஆயிரம் ரூபாய் ஒருவர் செலுத்துகிறார். இந்தத் தொகையை உறுப்பினரின் வயது உடல் நிலை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நிறுவனே முடிவு செய்யும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான தொகையை நிர்ணயிக்கமாட்டார்கள். இந்த ஒருவருடத்துக்குள் இவருக்கு நோய்கள் ஏதாவது ஏற்பட்டால் இந்த நிறுவனம் அவருக்கு இலவசமாக மருத்துவம் செய்யும். அவர்கள் செலுத்திய தொகையை விட அதிகமாக செலவு ஏற்பட்டாலும் அதை இந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டு மருதுவம் செய்யும்.

காப்பீடு செய்த காலத்துக்குள் அவருக்கு எந்த நோயும் ஏற்படவில்லை என்றாலோ அல்லது இவருடைய மருத்துவத்திற்கு ஆன செலவு இவர் நிறுவனத்திடம் செலுத்திய தொகையை விட குறைவாக இருந்தாலோ நிறுவனம் இவர் செலுத்திய பணத்தை திருப்பிக்கொடுக்காது. இதற்கு மருத்துவக் காப்பீடு என்று சொல்லப்படுகின்றது. இம்முறையில் வட்டி எதுவும் இல்லை. 4000 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு திருப்பித் தரும் போது 5000 ரூபாய் தருவேன் என்று சொன்னால் தான் வட்டி.

ஆனால் மருத்துவக் காப்பீட்டில் நாம் செலுத்திய அசல் பணமே நமக்கு கிடைக்காது என்றால் அதை விட கூடுதலான பணத்துக்கு பேச்சே இல்லை. அதுவும் கிடைக்காது. எனவே இதில் வட்டி இல்லை.  இதில் இணைந்தவர்கள் நமக்கு நோய் வந்தால் இதன் மூலம் பயனடைவோம். நமக்கு நோய் வராவிட்டால் யாருக்கு நோய் வருகின்றதோ அவருக்கு நம் பணம் பயன்படட்டும் என்று மனிதாபிமான அடிப்படையில் தன்னுடைய பணத்தை விட்டுக்கொடுக்கின்றனர். பத்து பேர் ஒன்று கூடி ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

திடீரேன நமக்கு பெரிய நோய் வந்துவிட்டால் அதை நம்மால் சமாளிக்க இயலாது. எனவே நம்மில் யாருக்காவது நோய் வந்துவிட்டால் நம் அனைவருடைய பணத்தையும் அவருக்கு விட்டுக்கொடுப்போம் என்று ஒப்பந்தம் செய்கின்றனர். மருத்துவக் காப்பீடு என்பது இது போன்றதாகும். பெரும்பாலும் பெரிய செலவை ஏற்படும் பயங்கரமான நோய்கள் அனைவருக்கும் ஏற்படுவதில்லை. சமுதாயத்தில் குறிப்பிட்ட சிலருக்கே ஏற்படுகின்றது. இந்த சில நோயாளிகளுக்கு மற்றவர்களின் பணம் உதவுகின்றது. இதை நடத்தும் நிறுவனம் இதன் மூலம் இலாபமும் அடைகின்றது. இதில் வட்டியோ மோசடியோ இல்லை. மனிதாபிமானத்துடன் கூடிய சுய பாதுகாப்புத் தன்மையே இதில் உள்ளது. திடீரென பெரிய நோய்கள் வந்துவிட்டால் மருத்துவ செலவுக்காக அடுத்தவரிடம் கையேந்தாமல் இதன் மூலம் மருத்துவம் செய்து தன்மானத்தை காத்துக்கொள்ள முடியும். மருத்துவக் காப்பீட்டில் இன்னொரு நன்மையும் உள்ளது. பொதுவாக ஒரு சிறிய நோய்க்கு மருத்துவம் செய்வதற்காக மருத்துவர்களை அணிகினால் நம்மிடமிருந்து பணத்தை பறிப்பதற்காக தேவையில்லாத பரிசோதனைகளை செய்யச் சொல்வார்கள். தேவையற்ற மருந்துகளையும் வாங்கச் சொல்வார்கள். இதனால் நம்முடைய பொருளாதாரமும் உடல் நலமும் கெடுகின்றது.  மருத்துவக் காப்பீட்டில் இந்த பாதிப்புகள் நமக்கு ஏற்படாது. நமக்குத் தேவையான வைத்தியத்தை மட்டுமே பார்ப்பார்கள். எனவே மருத்துவக் காப்பீடு செய்வது பல வகைகளில் நமக்கு நன்மையாக உள்ளது.

மருத்துவக் காப்பீடு சூதாட்டமா?

மருத்துவக் காப்பீடு கூடாது என்பதற்கு சிலர் தவறான காரணங்களை கூறுகின்றனர். இவர்களின் கூற்று ஏற்புடையதாக இல்லை. காய்கள் பழுப்பதற்கு முன்பாக அவை மரத்தில் இருக்கும் நிலையில் அவற்றுக்காக விலை பேசுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இதை சுட்டிக்காட்டி மருத்துவ காப்பீடும் இதைப் போன்றது என சிலர் கூறுகின்றனர். காய்கள் கனிந்து பறிக்கப்படுவதற்கு முன்பாக விலை பேசினால் வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகக் கனிகளை குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் விற்றவர் நஷ்டப்படுவார். விலை பேசப்பட்ட காய்கள் முறையாகக் கனியாமல் அழிந்து விட்டால் வாங்கியவர் நஷ்டப்படுவார். இந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட கனிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.

அதனடிப்படையில் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகின்றது. இந்த ஒப்பந்தத்திற்கு மாற்றமாக முடிவு ஏற்பட்டால் விற்பவரோ வாங்குபவரோ ஏமாற்றப்பட்டு விடுகின்றார். செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவு அமையவில்லை. இதில் ஒப்பந்த மீறல் இருக்கின்றது. இதன் காரணத்தால் இதை மார்க்கம் தடை செய்கின்றது. ஆனால் மருத்துவ காப்பீடு என்பது மேற்கண்ட வியாபாரத்தைப் போன்று ஏமாறுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதல்ல. செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாற்றமாக நடக்கும் எந்த அம்சமும் இம்முறையில் இல்லை.

இதில் இணையும் அனைவரும் இந்தத் திட்டத்தால் தனக்கு பயன் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம் என்பதை அறிந்து கொண்டு தான் இணைகிறார்கள். இவர்கள் ஒப்பந்தம் செய்தபடி நோய் ஏற்பட்டவர்கள் பலனடைகிறார்கள். நோய் ஏற்படாதவர்கள் தங்கள் பணத்தை விட்டுத் தருகின்றனர். செய்யப்பட்ட ஒப்பந்தம் அப்படியே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனவே இதை மேற்கண்ட தடை செய்யப்பட்ட வியாபாரத்துடன் ஒப்பிடக் கூடாது.

அடுத்து மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் இதன் மூலம் அதிக லாபம் ஈட்டுவதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஒரு வியாபாரத்தில் அதிக லாபம் வருவதால் அது கூடாத வியாபாரமாகி விடாது. இஸ்லாம் தடை செய்யாத வியாபாரத்தில் எவ்வளவு அதிகமாக லாபம் வந்தாலும் அது தவறல்ல. மேலும் இந்த நிறுவனங்கள் வட்டித் தொழிலில் ஈடுபடாமல் இருப்பதில்லை என்றும் கூறுகின்றனர். இவ்விஷயத்தில் மருத்துவக் காப்பீடு செய்பவருக்கும் அந்த நிறுவனத்துக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் வட்டி அம்சம் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். அவர்கள் நம்மிடம் ஒப்பந்தம் செய்யும் போது நோய் ஏற்படாதவர்கள் கொடுத்த பணத்திலிருந்தே நோய் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் வட்டி இல்லையென்பதால் இது அனுமதிக்கப்பட்ட வியாபாரம். இதன் பிறகு அவர்கள் நமது பணத்தை வாங்கி என்ன செய்தாலும் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். மேலும் இந்த முறை சூதாட்டத்தைப் போன்று உள்ளது என்றும் கூறுகின்றனர். மருத்துவ காப்பீடு செய்வதும் சூதாட்டமும் ஒரே மாதியானதல்ல. இரண்டிற்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. 87 சூதாட்டத்தில் பங்குகொண்டவர்கள் ஒவ்வொருவரும்., தானே வெற்றி பெற்று அனைவரின் பொருளையும் பெற வேண்டும் என்று பேராசைப்படுவார்கள். தோல்வியுற்றவர்கள் தங்களுடைய பொருள் தவறிவிட்டதே என வயிற்றெரிச்சல் படுவார்கள். வெற்றி பெற்றவன் மீது பொறாமைப்படுவார்கள். அடுத்தவன் பொருளை எடுக்க வேண்டும் என்ற பேராசையினாலும் இழந்த தன்னுடைய பொருளை மீட்க வேண்டும் என்ற வெறியினாலும் எதை வேண்டுமானாலும் வைத்து சூதாட முன்வருவார்கள்.

இறுதியில் அனைத்தையும் இழந்து மன உளைச்சலுடனும் ஏமாற்றத்துடனும் வெறுங்கையோடு திரும்புவார்கள். இதனால் தான் சூதாட்டத்தில் பிரச்சனைகளும் சண்டைகளும் எழுகின்றன. இதனால் இது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவக் காப்பீடு என்பது இது போன்றதல்ல. இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் நோயுற்றால் தான் இதன் மூலம் பலனடைய முடியும்.

இந்தப் பலனை அடைவதற்காக தான் நோயுற வேண்டும் என யாரும் விரும்ப மாட்டார்கள். நோயுற்றவர் பலனடைந்தால் அவரைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட மாட்டார்கள். மனிதாபிமான அடிப்படையில் அனைவரின் ஒப்புதலுடனும் நோயுற்றவருக்காக மற்றவர்களின் பணம் செலவிடப்படுகின்றது. இதில் போட்டி பொறாமை ஏமாற்றம் வயிற்றெரிச்சல் ஆகிய அம்சங்கள் எதுவுமில்லை. எனவே மருத்துவக் காப்பீடு செய்வது தவறான ஒன்றல்ல.

வாகனக் காப்பீடு

வாகனம் வாங்குபவர்கள் கண்டிப்பாக இந்த இன்சூரன்ஸ் செய்யாமல் வாகனம் வாங்க முடியாது. இந்த சட்டத்தால் இந்த இன்சூரன்ûஸ செய்ய வேண்டிய நிர்பந்த நிலைக்கு நாம் ஆளாகிறோம். 88 என்றாலும் மார்க்க அடிப்படையில் இதில் தவறான அம்சங்கள் எதுவும் இல்லை. இதுவும் மெடிக்கல் இன்சூரன்ûஸ ஒத்து இருக்கின்றது. விபத்தில் மூன்று வகைகளில் பாதிப்பு ஏற்படலாம். ஒன்று எதிரில் வருபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இரண்டாவது நாம் ஓட்டிய வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்பு. மூன்றாவது வாகனத்தை ஓட்டியவருக்கு ஏற்படும் பாதிப்பு.

இப்படி மூன்றுவிதமான பாதிப்புகள் ஏற்படும். நாம் வாகனத்தை ஓட்டிச் சென்று ஒருவன் மீது மோதி அவன் இறந்து விட்டால் இஸ்லாமிய சட்ட அடிப்படையில் அவனுடைய குடும்ப நிலையை பார்த்து அவனுக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டும். ஒருவர் வாகனம் ஓட்டிச் சென்று எதிரில் வருபவர் மீது தெரியாமல் மோதி அவர் இறந்துவிட்டால் மோதியவர் ஏழை என்பதால் அவரால் நஷ்டயீடு கொடுக்க முடியாது. இவர் வாகனக் காப்பீடு செய்திருந்தால் மூன்று வகையான பாதிப்புகளில் எவ்வகையில் பாதிப்பு இருந்தாலும் அந்த நிறுவனமே அந்த பாதிப்புக்கு பொறுப்பேற்கும். அதற்குரிய நஷ்ட ஈட்டுத்தொகையை வழங்கும். வாகனம் வாங்கும் போது இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த வகைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொள்கிறது. இதன் பிறகு நாம் ஒருவர் மீது மோதி அவர் மரணத்திதாலோ அல்லது வாகனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது நமக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கான உதவித் தொகையை அந்த நிறுவனம் வழங்கும். அப்படி எதுவும் ஆகவில்லையென்றால் நாம் கொடுத்த பணம் திரும்ப வராது. இவ்வாறு கூறித்தான் அனைவரிடமும் பணம் வாங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைந்துகொண்டவர்களில் விபத்தை சந்திப்பவர்களும் உண்டு. விபத்து நேராதவர்களும் உண்டு. விபத்து நேராதவர்கள் தங்கள் பணத்தை விபத்து நேர்ந்தவர்களுக்காக விட்டுத் தருகின்றனர். வீட்டுக்கும் வியாபாரக் கடைகளுக்கும் இவ்வாறு இன்சூரன்ஸ் செய்யமுடியும். இதில் வட்டி இல்லை. அதற்கான சாயலும் இல்லை. இது ஒரு கூட்டு உதவித் திட்டமாகவே உள்ளது. எனவே இதில் இணைவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

குலுக்கல் சீட்டு

இந்தத் திட்டத்தை நடத்தக்கூடிய பொறுப்பாளர் ஒருவர் இருப்பார். இவர் இதில் இணைந்த ஒவ்வொருவரிடமும் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை வசூலிப்பார். அனைவரின் பெயரையும் தனித் தனி சீட்டுகளில் எழுதி குலுக்கல் போடுவார். இதில் யாருடைய பெயர் வருகின்றதோ அவரிடம் அந்த மாதத்தில் கிடைத்த மொத்த தொகையையும் ஒப்படைப்பார். தான் ஆற்றிய பொறுப்புக்காக ஒரு சிறிய தொகையை மட்டும் இதில் எடுத்துக்கொள்வார்.

உதாரணமாக பத்து நபர்கள் சேர்ந்து 10 மாதத்துக்கு குலுக்கல் சீட்டுத் திட்டத்தில் சேருகிறார்கள். ஒவ்வொருவரும் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு மாதத்திலும் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். குலக்கல் சீட்டை நடத்தகூடியவர் இதில் உள்ள அனைவரின் பெயரையும் தனித் தனித் தாள்களில் எழுதி சீட்டுக் குலுக்கிப் போடுவார். யாருடைய பெயர் வருகின்றதோ அவரிடம் அந்த ஒரு லட்சத்தை ஒப்படைப்பார். இந்தப் பணியை செய்ததற்கு கூலியாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதம் 99 ஆயிரம் ரூபாயை கொடுப்பார்.

90 இந்த திட்டத்தில் வெளிப்படையில் மார்க்கத்திற்கு மாற்றமான எந்த அம்சமும் இல்லை என்றாலும் வட்டியின் சாயல் இதில் தென்படுவதால் குலுக்கல் சீட்டு நடத்தக்கூடியவர்கள் 1000 ரூபாய் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சீட்டு யாருக்கு விழுந்ததோ அவர் கடன் வாங்குபவர் ஆவார். சீட்டை நடத்தக்கூடியவர் கடன் தரக்கூடியவராக உள்ளார். இந்நிலையில் பணத்தைக் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து 1000 ரூபாயை வாங்கினால் இது வட்டியாகவேத் தெரிகிறது. எனவே இதை தவிர்க்க வேண்டும்.

வங்கியுடன் வியாபார ஒப்பந்தம்

வட்டித் தொடர்புடைய வேலைகைளை செய்து கொடுப்பதே தவறு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வட்டி தொடர்புடைய வேலைகளைச் செய்பவர்களை சபித்துள்ளார்கள். வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: (முஸ்லிம்: 3258)

வட்டிப் பணத்தை வசூலித்தல் வட்டிக்கு கணக்குப் பார்த்தல் வட்டிப் பணத்தை வழங்குதல் இதை ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்தல் போன்ற வேலைகள் வட்டி தொடர்புடைய வேலைகள் என்பதால் இவற்றைச் செய்வது கூடாது நாம் செய்கின்ற வேலை பொதுவாக அனுமதிக்கப்பட்ட காரியமாக இருந்தால் அதை வங்கிக்கும் செய்து கொடுக்கலாம். நாம் செய்கின்ற வேலை வட்டியுடன் நேரடியாக சம்பந்தப்படுகின்றதா? என்று கவனிக்க வேண்டும்.

உதாரணமாக வங்கியின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது வெள்ளையடிப்பது எலக்ட்ரிக் பிரச்சனைகளை சரிசெய்வது போன்றவை வட்டியுடன் தொடர்புடைய பணிகள் அல்ல. இவை பொதுவாக அனுமதிக்கப்பட்டவை. நாம் ஆகுமான ஒரு பொருளை விற்கின்றோம். நம்மிடமிருந்த அதை வாங்கியவன் அதை முறைககேடாக பயன்படுத்தினால் அதற்கு நாம் பொறுப்பாளியாகமாட்டோம். தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். மார்க்கம் தடுத்துள்ள நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இந்நிலையில் தொலைக்காட்சியை ரிப்பேர் செய்து கொடுக்கும் தொழில் செய்கின்ற ஒருவரிடம் மார்க்கம் தடுத்துள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கின்ற ஒருவர் தன்னுடைய தொலைக்காட்சியை சரி செய்வதற்காகக் கொடுக்கின்றார்.

இப்போது தொலைக்காட்சியை ரிப்பேர் செய்து கொடுப்பவரை தீமைக்கு துணை செய்பவர் என்று யாரும் கூறுவதில்லை. ஒருவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்கின்றார். அதில் ஏறிய பயணி தன்னை சினிமா தியேட்டரில் விடுமாறு கூறினால் ஆட்டோ ஓட்டுநர் தீமைக்குத் துணை செய்து விட்டார் என்று யாரும் கூறுவதில்லை. எனவே பொதுவாக அனுமதிக்கப்பட்ட வேலைகளை வங்கிக்கு செய்து கொடுத்தால் அதில் தவறேதுமில்லை. வங்கியில் பணத்தை சேமிக்கலாமா? வங்கி வட்டி அடிப்படையில் இயங்கும் நிறுவனமாக இருப்பதால் நாம் கொடுக்கும் பணத்தை வங்கி வட்டித் தொழிலுக்கு பயன்படுத்தலாம். எனவே வங்கியில் நம் பணத்தை போடக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.

ஒருவரிடத்தில் நம் பணத்தை ஒப்படைக்க நினைக்கும் போது அவர் நாணயமானவரா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். மற்ற விசயங்களில் அவர் மோசமானவராக இருந்தாலும் சரியே. ஒருவர் ஐந்து நேரத் தொழுகை உட்பட வணக்க வழிபாடுகளை அதிகம் செய்யக்கூடியவராக இருக்கின்றார். ஆனால் இவரிடத்தில் பணத்தை கொடுத்தால் திருப்பித்தரமாட்டார். இந்த விசயத்தில் இவரிடம் கோளாறு உள்ளது. அதே நேரத்தில் ஒரு இறைமறுப்பாளன் பண விசயத்தில் மிகவும் நாணயமானவாக இருக்கின்றான். இப்போது நாம் யாரிடத்தில் பணம் கொடுப்போம்? யாரிடத்தில் பணம் கொடுத்தால் நமக்கு திருப்பிக் கிடைக்குமோ அவரிடத்திலே கொடுப்போம். அவர் மற்ற பாவங்களை செய்யக்கூடியவராக இருந்தாலும் சரியே.

இந்த அடிப்படையில் தான் நாம் வங்கியில் பணம் சேமித்து வைக்கின்றோம். வங்கி வட்டித் தொழிலை செய்யக் கூடிய நிறுவனமாக இருந்தாலும் நாணயம் பொருளின் பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்தால் இன்றைய சூழலில் வங்கி சேமிப்பே பாதுகாப்பானதாக உள்ளது. ஒரு தனி மனிதரிடம் கொடுத்தால் அந்த மனிதர் ஏமாற்ற வாய்ப்புள்ளது. அல்லது அவருக்கு திடீரென நஷ்டம் ஏற்பட்டு திவாலாகிவிட வாய்ப்புள்ளது. யாரிடத்திலும் கொடுக்காமல் வீட்டிலே வைத்திருப்பதும் பாதுகாப்பானதாக இல்லை. ஆனால் வங்கியில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது மிகக் குறைவாகும்.

வங்கியை அரசாங்கம் நடத்துவதால் நட்டம் ஏற்பட்டாலும் அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மக்களுக்கு பணம் கிடைத்துவிடும். எனவே நாணயம் பாதுகாப்பு ஆகியவற்றை கவனித்தால் வங்கியில் பணம் சேமிப்பதைப் போன்ற பாதுகாப்பு வேறு எதிலும் இல்லை என்று கூறலாம். 93 ஒருவருடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது நாணயத்தை மட்டுமே பார்க்க வேண்டும். இதைத் தாண்டி வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை. இதற்கு குர்ஆனும் நபிமொழிகளும் ஆதாரமாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதம் கொடுக்கப்பட்டவர்களான யூதர்கள் வட்டித் தொழில் செய்து வந்தனர். இவர்களில் சிலர் மிகவும் நாணயமாக நடந்துகொண்டனர். இத்தகையவர்களிடத்தில் நமது பொருளை கொடுத்து வைக்கலாம் என்று குர்ஆன் அனுமதிக்கின்றது.

நம்பி, ஒரு குவியலையே ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். நீர் நம்பி ஒரு தங்கக் காசை ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். (அல்குர்ஆன்: 3:75)

நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடத்தில் அடைமானம் வைத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தமது இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்.                             அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 2068)

இந்த ஹதீஸின் அடிப்படையில் தங்க நாணயத்தை யூதரிடம் நாம் அடைமானம் வைக்கலாம். யூதன் நம்மிடமிருந்து வாங்கிய நாணயங்களை வைத்து வட்டி சம்பாதித்தால் அதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம். வங்கியுடன் நாம் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் மார்க்கத்திற்கு மாற்றமான விசயங்கள் எதுவும் இருக்கின்றதா? எனப் பார்க்க வேண்டும்.

வங்கியில் புதிதாக அக்கவுண்ட் திறப்பவர்கள் நான் கொடுக்கும் பணத்தை வங்கி வைத்திருக்க வேண்டும். நான் கேட்கும் நேரத்தில் எனக்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்கின்றனர். நாம் விரும்பிய நேரத்தில் நம் பணத்தை பெற்றுள்கொள்ள முடியும். இதில் மார்க்கத்திற்கு மாற்றமான எந்த அம்சமும் இல்லை.

எனவே இது அனுமதிக்கப்பட்டதாகும். நம்மிடமிருந்து வாங்கப்பட்ட பணம் தவறான தொழிலுக்கு பயன்படுகின்றதே என்ற கேள்வி தேவையற்றது. நமக்குத் தொடர்பில்லாத விசயங்களுக்கு நாம் குற்றவாளியாக மாட்டோம். நாம் பாட்டல்களில் தண்ணீர் அடைத்து விற்பனை செய்கிறோம். ஒருவன் நம்மிடமிருந்து தண்ணீர் பாட்டலை வாங்கி மதுவுடன் கலந்து குடித்தால் இதில் நமக்கு எந்த குற்றமும் வராது. நம்மிடமிருந்து தீப்பெட்டியை விலைக்கு வாங்கி அதை சிகிரெட் பிடிப்பதற்கு ஒருவன் பயன்படித்தினாலும் நாம் மீது குற்றம் வராது. வங்கியில் பணத்தை சேமிப்பது இது போன்றதாகும்.

வட்டிக்குப் கடன் வாங்கி முதலீடு செய்யப்பட்ட வியாபாரத்தில் வேலை செய்யலாமா?

நண்பர் ஒருவர் வட்டிக்கு கடன் வாங்கி ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்கிறார். அதை நிர்வகித்து வேலை செய்யும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைக்கின்றார். கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் லாபம் தருவதாக கூறுகிறார். இந்த சம்பாத்தியம் ஆகுமானதா என்ற கேள்வி சிலருக்கு எழுகின்றது. கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் பங்கு வாங்குவதை சம்பளம் என்று கூற முடியாது. ஏனென்றால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் போது நமக்கு பணம் 95 கூடுதலாகக் கிடைக்கும். நஷ்டம் ஏற்படும் போது நமக்கு நஷ்டம் ஏற்படும்.

இது போன்ற பிரச்சனை கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்யும் பாட்னர்களுக்கே ஏற்படும். எனவே இந்தத் தொழிலில் நாம் நம்முடைய நண்பருடன் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்கிறோம். நண்பர் முதலீடு செய்துள்ளார். நாம் நம்முடைய உழைப்பைக் கொடுக்கின்றோம். ஒரு வியாபாரத்தில் கூட்டுச் சேருபர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எந்த வியாபாரத்தை நடத்தப் போவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கின்றதோ அந்த வியாபாரம் மார்க்கத்தில் ஹலாலா? அல்லது ஹராமா? என்று பார்க்க வேண்டும். எந்த வியாபாரத்தைத் தனியாக நடத்துவதை மார்க்கம் தடை செய்கின்றதோ அதைக் கூட்டு சேர்ந்து நடத்தினாலும் தவறு தான். எந்த வியாபாரத்தைத் தனியாக நடத்த அனுமதியுள்ளதோ அதைக் கூட்டாக சேர்ந்து நடத்துவதற்கும் அனுமதியுள்ளது.

உதாரணமாக வட்டிக் கடை மதுக்கடை ஆகியவற்றை நடத்த கூட்டு சேருவது கூடாது. அதே நேரத்தில் மளிகைக் கடை நடத்துவதற்குக் கூட்டுச் சேர்ந்தால் அதில் தவறில்லை. எனவே செய்யப்படும் தொழில் ஹலாலாக இருக்கும் பட்சத்தில் அதில் ஒர்கிங் பாட்னராக வேலை செய்வது பணம் சம்பாதிப்பது தவறில்லை. நண்பர் வட்டிக்கு வாங்கி முதலீடு செய்திருப்பதால் அந்த வியாபாரத்தில் கிடைக்கும் பங்கு ஆகுமானதல்ல என்று கூற முடியாது. கடன் கொடுத்து வட்டி வாங்குவதற்கும், வட்டிக்குக் கடன் வாங்குவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. நண்பர் பிறருக்குக் கடன் கொடுத்து அதற்காக அவர் வட்டி வாங்கினால் அந்த வட்டிப் பணம் தான் அவருக்கு ஹராமாகும்.

பிறரிடம் கடன் வாங்கி வாங்கிய பணத்துக்காக வட்டி கட்டும் போது இதனால் கடன் வாங்கப்பட்ட பணம் ஹராமாகி விடாது. மாறாக வட்டிக்குத் துணை நின்றார் என்ற குற்றம் மட்டுமே ஏற்படும். அந்த வகையில் நண்பர் குற்றவாளியாகிறார். ஆனால் அவர் வியாபாரத்தில் முதலீடு செய்த பணம் ஹராமாகாது. நாமும் அவரும் சேர்ந்து வங்கியில் கூட்டாகக் கடன் வாங்கினால் அந்தப் பாவத்தில் நமக்கும் பங்கு உண்டு. அவர் மட்டும் தனிப்பட்ட முறையில் வட்டிக்கு கடன் வாங்கி அந்தக் கடனில் நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஒர்க்கிங் பார்ட்னராக நாம் இருந்தால் நம் மீது எந்தக் குற்றமும் இல்லை. இந்த வியாபாரத்தில் நமக்கும், நண்பருக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம் மார்க்க வரம்புகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா? என்பதை மட்டும் நாம் கவனித்தால் போதும்.

நண்பர் எந்த வழியில் பணத்தைப் பெற்று முதலீடு செய்திருந்தாலும் அதில் நமக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நாம் வேலை பார்க்கின்றோம். அந்த வேலைக்காக 30 சதவிகிதம் பங்கு தரப்படுகின்றது. நமக்கு பணம் வருகின்ற வழி ஹலாலாக இருக்கின்றது. நண்பருக்கு இந்தப் பணம் ஹலாலான வழியில் வந்ததா? என்று பார்க்க வேண்டியதில்லை.

வட்டி வாங்குவோர் தரும் உணவை உண்ணலாமா?

பொதுவாக உணவைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில உணவுகள் தான் முழுமையாக தடைசெய்யப்பட்ட உணவுகளாக உள்ளது. பன்றி இறைச்சி இரத்தம் இறந்துபோன உயிரினங்கள் அல்லாஹ் அல்லாதோருக்காக பலியிடப்பட்ட பிராணிகள் ஆகியவை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எந்த வகையில் கைமாறினாலும் கைமாறாவிட்டாலும் இவை ஹராம்.

யாரும் இதை சாப்பிடக்கூடாது. இவையன்றி பொதுவாக அனுமதிக்கப்பட்ட பொருட்கள் நிறைய உள்ளது. பணம் அரிசி கோதுமை இன்னும் ஏராளமான பொருட்கள் உள்ளது. இவற்றை ஒருவர் தவறான அடிப்படையில் சம்பாதித்தால் தவறான அடிப்படையில் இந்தப் பொருட்களை சம்பாதித்தற்கான பாவத்தை சுமப்பார். இதனால் இவை பயன்படுத்த தடைசெய்யப்பட்ட பொருட்களாகிவிடாது. வட்டி வாங்குவோருடைய வீட்டின் நிழலில் கூட நாம் நிற்கக்கூடாது என்று ஒரு தவறானக் கருத்து மக்களிடம் பரவியுள்ளது.

ஒருவர் தவறான முறையில் பொருளீட்டினாலும் அவரிடமிருந்து அந்தப் பொருள் அவருடைய நண்பருக்கு ஆகுமான வழியில் கிடைத்தால் அந்த நண்பருக்கு அந்தப் பொருள் ஆகுமானதாகும். ஒருவரிடமிருந்து நமக்கு பொருள் வரும் வழி சரியான வழியா என்று பார்த்தால் போதும். அவருக்கு அந்தப் பொருள் எப்படி வந்தது என்று நாம் யோசிக்க வேண்டியதில்லை. அவர் அந்தப் பொருளை எந்த முறையில் பெற்றாலும் அதற்கு அவரே பொறுப்பாளி. அது குறித்து அல்லாஹ் நம்மிடம் கேட்க மாட்டான். உதாரணமாக நாம் ஒரு வியபாரியாக இருக்கின்றோம். நம்மிடம் பலர் வந்து பணம் கொடுத்து பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.

வருவோரில் ஹராமான வழியில் பொருளீட்டியவர்களும் ஹலாலான வழியில் பொருளீட்டியவர்களும் இருப்பார்கள். இந்த வியபாரத்தில் இந்தப் பொருள் நுகர்வோருக்கு எப்படி வந்திருந்தாலும் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. நாம் பொருள் தருகிறோம். அவர்கள் பணம் தருகிறார்கள் என்பதை மட்டுமே கவனிக்கின்றோம். இதேப் போன்று தான் இந்தப் பிரச்சனையும் அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் வட்டித்தொழில் செய்து வந்தனர். அதன் வருமானத்தையே உண்டு வந்தனர். இதைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர் கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்ட தாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) தயாரித்துள்ளோம். மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் (அல்குர்ஆன்: 4:161)

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “”வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை தமக்கு வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் (2:275)

இந்நிலையில் வட்டித் தொழில் செய்து வந்த யூதர்கள் தரும் அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

அனஸ் ரலி) அவர்கள் கூறினார்கள் : யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களீடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். “”அவளைக் கொன்று விடுவோமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், “”வேண்டாம்” என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (புகாரி: 2617)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேறு கொள்கையில் இருந்த மன்னர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்கள். பொதுவாக அன்றைய காலத்தில் மன்னர்கள் தவறான அடிப்படையில் பொருளீட்டக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து அன்பளிப்பு என்ற ஆகுமான வழியில் பொருள் தனக்கு வரும்போது அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அபூ ஹுமைத் அஸ் ஸôஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். “”அய்லா’வின் அரசன் நபி (ஸல்) அவர்களுக்கு (“”தல்தல்’ எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபி (ஸல்) அவர்கள் அவனுக்குச் சால்வையொன்றை(அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவனுக்கு எழுதினார்கள். (புகாரி: 3161)

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : தூமத்துல் ஜந்தலின் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளீப்புகளை அனுப்பினார். (புகாரி: 2616)

யூதர்கள் வட்டி வாங்கி சம்பாதித்து இருந்தாலும் அவர்களிடமிருந்து வந்த அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள். யூதர்களிடமிருந்து தனக்கு இந்த பொருட்கள் எவ்வாறு வந்தது என்பதை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் பார்த்துள்ளார்கள். அதாவது அன்பளிப்பு என்ற ஆகுமான வழியில் வந்துள்ளது. யூதர்கள் இந்த அன்பளிப்புகளை ஹராமான வழியில் சம்பாதித்து இருக்கின்றார்கள். எனவே நாம் இதை வாங்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் முடிவு எடுக்கவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம் ஜிஸ்யா என்ற வரியை வாங்கினார்கள். யூதர்களின் சம்பாத்தியம் ஹராமானதாக இருந்தாலும் அதைப் பற்றி பொருட்படுத்தாமல் இந்த வரியை வசூலித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எதிரிகள் ஹராமான முறையில் சம்பாதித்து வந்தார்கள். இவர்கள் போர்களத்தில் விட்டுச் சென்ற கனீமத் பொருட்களை நபியவர்கள் எடுத்து பயன்படுத்தினார்கள். இது ஹராமானது என்று அவர்கள் ஒதுக்கவில்லை. எனவே ஒருவரிடமிருந்து நமக்குப் பொருள் வந்தால் அவரிடமிருந்து நமக்கு பொருள் வந்த வழி சரியாக இருக்கின்றதா என்பதை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் பார்த்துள்ளார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : பரீராவுக்கு தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்”” என்றார்கள். (புகாரி: 1495)

எனவே வட்டி வாங்கி சம்பாதித்த ஒருவர் அன்பளிப்பு விருந்து என்ற ஆகுமான வழியில் நமக்கு ஏதேனும் கொடுத்தால் அதை பெறுவது தவறில்லை. அதே நேரத்தில் ஒருவர் தீமை செய்திருப்பதை நாம் காணும் போது சம்பந்தப்பட்டவரிடம் அவர் செய்த தவறை சுட்டிக் காட்டுவது நமது கடமையாகும். எனவே வட்டி எவ்வளவு பெரிய பாவம் என்பதை அவருக்கு விளக்கிக் கூற வேண்டும்.

வட்டிக்கு கடன் வாங்கி கட்டிய வீட்டில் வசிக்கலாமா?

தந்தை வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டினால் அவர் வட்டி செலுத்தும் குற்றத்தை செய்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் அவர் கடனாக வாங்கிய பணம் ஹராமானது என்று கூற முடியாது. அந்த பணத்தை வைத்து அவர் கட்டிய வீடும் ஹராமான பொருள் என்று கூற முடியாது. ஒரு ஹராமான செயலுக்குத் துணை செய்த குற்றமே அவரைச் சேரும்.

தந்தை ஹராமான வழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வீடு கட்டி இருந்தால் அது அவருக்குத் தான் ஹராம். வாரிசு உரிமைப்படி அச்சொத்து பிள்ளைகளுக்கு வந்தால் அதை பிள்ளைகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். பிள்ளைகளுக்கு அது ஹலாலாகும். ஏனென்றால் அந்த வீடு தந்தையிடமிருந்து பிள்ளைகளுக்கு கிடைத்த வழி ஆகுமானதா? என்று மட்டுமே பார்க்க வேண்டும். தந்தைக்கு அந்த வீடு எப்படி கிடைத்தது என்று பார்க்க வேண்டியதில்லை. அந்த வீடு வாரிசு உரிமைப்படி பிள்ளைகளுக்கு வருவதால் இது மார்க்கம் அனுமதித்த வழியிலேயே பிள்ளைகளுக்கு வருகின்றது. எனவே அதை பிள்ளைகள் தாராரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

உழைக்காமல் லாபம் வாங்கலாமா?

நாம் வியாபாரத்தில் முதலீடு மட்டும் செய்திருப்போம். வேறு ஒருவர் அந்த வியாபாரத்தை நடத்துவார். கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிட்ட அளவு நமக்குக் கொடுப்பார்.இந்த வியாபாரத்தில் பணத்தை கொடுத்ததைத் தவிர வேறு எந்த வேலையையும் நாம் செய்யவில்லை. வேலை செய்யாமல் பணம் வாங்குகின்றோம். இது வட்டியைப் போல் உள்ளதே என்று சிலருக்கு சந்தேகம் எழுகின்றது. இது வட்டி இல்லை. பணத்தைக் கொடுத்து லபாத்தை மட்டும் எதிர்பாப்பது தான் வட்டி. கடன் வாங்கியவர் லாபம் அடைந்தாலும் நஷ்டம் அடைந்தாலும் கடன் கொடுத்தவர் இதைப் பற்றி கவலைப்படாமல் வட்டியை கண்டிப்பாக வாங்கிடுவார்.

ஆனால் வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்பவர் வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தில் பங்கெடுப்பதைப் போன்று நஷ்டத்திலும் பங்கெடுக்க வேண்டும். லாபம் குறைந்தால் இவருக்கு கிடைக்க வேண்டிய தொகையும் குறையும். லாபம் அதிகரித்தால் இவருக்கு கிடைக்கும் தொகையும் அதிகரிக்கும். லாபமே வராமல் நஷ்டம் ஏற்பட்டாலும் அதிலும் இவர் பங்கெடுப்பார். எனவே இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணத்தைக் கொடுத்தால் இது வட்டியாகாது. இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் பொருள் ஈட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கைபர் நிலத்தை யூதர்களிடம் கொடுத்தார்கள். யூதர்கள் அந்த நிலத்தில் வேலை செய்து வருகின்ற வருமானத்தில் பாதியை நபி (ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்கள். மீதமுள்ள பாதியை தாங்கள் வேலை செய்ததற்கு கூலியாக எடுத்துக்கொண்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : விளைச்சலில் பாதி தரப்படும் என்ற அடிப்படையில், கைபருடைய நிலங்களை உழைத்துப் பயிரிட்டுக்கொள்வதற்காக, யூதர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். நூல் : (புகாரி: 285)

மட்டுமே நபி (ஸல்) அவர்கள் உடல் உழைப்பு எதையும் செய்யவில்லை. தன்னுடைய நிலத்தை கொடுத்தார்கள். பங்கேற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரித் கிடைக்கும் தோழர்கள் லாபம் நஷ்டத்தில் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களுடன் இந்த அடிப்படையில் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் “எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்’ என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நூல் : (புகாரி: 2630)

வட்டியில் மாட்டிக் கொண்டவருக்கு உதவி செய்யலாமா?

வட்டி வாங்குவதும் வட்டி கொடுப்பதும் பாவமான காரியமாகும். ஒருவர் வட்டி வாங்கிவிட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் மிகவும் சிரமப்பட்டால் வட்டிப் பணம் உட்பட கடன் முழுவதையும் அவர் சார்பில் மற்றவர்கள் அடைக்கலாமா? இவ்வாறு அடைத்தால் வட்டிக்கு துணைபோன குற்றம் ஏற்படுமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. பொதுவாக ஒருவர் வட்டிப் பணம் கட்ட நாம் உதவியாக இருப்பது மார்க்க அடிப்படையில் தவறாகும். ஏனென்றால் பாவமான விசயங்களில் உதவிக்கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்: 5:2)

ஆனால் வட்டிக்கு கடன் வாங்கியவன் பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் இருப்பதை கண்கூடாகப் பார்க்கின்றோம். அவன் அசலைக் கூட கட்டுவதற்கு வழியில்லாமல் சிரமப்படுகிறான். இவனுக்கு நாம் உதவி செய்யாவிட்டால் வட்டி மெம்மேலும் பெருகி காலம் முழுவதும் கஷ்டப்படுவான். இந்நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் இவனுக்கு உதவி செய்ய வேண்டும். இவனுடைய சுமையை இறக்கி வைக்க வேண்டும்.

உதவி செய்வது நமக்கு நிர்பந்தமாக இல்லாவிட்டாலும் இந்த உதவியை வாங்கும் நிர்பந்தம் அவனுக்கு உள்ளது. மார்க்கத்தில் பிறருக்கு நிர்பந்தம் ஏற்பட்டாலும் அது நீங்க உதவி செய்யலாம். ஒருவனுக்கு மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட பொருளைக் கொண்டு வைத்தியம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. வைத்தியம் செய்யும் மருத்துவருக்கு இது நிர்பந்தம் இல்லாவிட்டாலும் அவனுக்கு நிர்பந்தம் என்பதால் இந்த சிகிச்சையை செய்யலாம்.

இந்த அடிப்படையில் வட்டியில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு உதவி செய்து வட்டியிலிருந்து மீட்கலாம். இவ்வாறு செய்தால் ஒருவனுக்கு உதவி நன்மையும் பாவத்திலிருந்து அவனை மீட்ட நன்மையும் கிடைக்கும்.