04) ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான்

நூல்கள்: அஹ்லே குர்ஆன் கூட்டத்தாரின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாகத் திகழ்கிறதோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மற்றொரு மூலாதாரமாக அமைந்துள்ளன. திருக்குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து வஹீயாக அருளப்பட்டதோ அது போலவே ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான் என்பதைக் கடந்த மூன்று தொடர்களாக விளக்கி வருகிறோம். இதற்கு குர்ஆன் வசனங்களையே ஆதாரமாக எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம்.

திருக்குர்ஆன் எவ்வாறு வஹீயாக இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த செய்தியாக உள்ளதோ அது போலவே ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீயாகவே அமைந்துள்ளன என்பதை நிரூபிக்கும் மேலும் சில சான்றுகளை இந்தத் தொடரில் காண்போம்.

அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப் புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும் மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை.

மாறாக வேதத்தில் எழுகின்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும், கூடுதல் விளக்கம் தேவைப்படும் இடங்களில் அதை அளிக்கவும் தேவையான ஞானத்தையும் சேர்த்தே கொடுத்து அனுப்பியுள்ளான்.

உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்டபோது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன்: 3:81)

எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவுபடுத்துகிறான். (நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் யாரும் வர முடியுமா? என்பதைக் கூறும் இவ்வசனத்துக்குத் தலைகீழாக விளக்கம் கூறி நபிகள் நாயகத்துக்குப் பின் தூதர் வர முடியும் என்று ஒரு மன நோயாளி உளறியிருப்பதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது “நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் நான் வழங்கிய பின்” என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஹிக்மத்தும் வழங்கப்பட்டது. இரண்டுமே இறைவனால் தான் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

84, 85, 86. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம்.

87. அவர்களின் முன்னோரிலும், அவர்களது வழித்தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம்.

88. இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

89. அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும்,164 நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம்.

(அல்குர்ஆன்: 6:84)– 89

இவ்வசனங்களில் 1. இப்றாஹீம் 2. இஸ்ஹாக் 3. யஃகூப் 4. நூஹ் 5. தாவூத் 6. சுலைமான் 7. அய்யூப் 8. யூசுப் 9. மூஸா 10. ஹாரூன் 11. ஸக்கரிய்யா 12. யஹ்யா 13. ஈஸா 14. இல்யாஸ் 15. இஸ்மாயீல் 16. அல்யஸவு 17. யூனுஸ் 18. லூத் ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம் வசனத்தில் இவர்களது முன்னோர்கள், இவர்களின் சந்ததிகள் இவர்களது சகோதரர்களில் தோன்றிய நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான்.

அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும், சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு “இவர்களுக்கு கிதாபையும் வழங்கினோம். ஹுக்மையும் வழங்கினோம். நுவுவ்வத்தையும் வழங்கினோம்” என்று அல்லாஹ் 89வது வசனத்தில் கூறுகிறான்.

கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. நுபுவ்வத் என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது. இவ்விரண்டை மட்டுமின்றி மூன்றாவதாக “ஹுக்மை’ வழங்கியதாகக் கூறுகிறானே அது என்ன?

ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள். இவர்களில் தாவூத், சுலைமான், யூசுப், மூஸா போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று இந்த இடத்தில் பொருள் கொள்ள முடியாது. மாறாக மார்க்க ரீதியிலான சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள். அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுவுவ்வத்தையும், ஹுக்மையும் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். “இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத – காஃபிர்களாக இல்லாத – ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம்” என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ தமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

“இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத (காஃபிராக இல்லாத) வேறு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்பேன்” என்று அல்லாஹ் கூறுவது மூன்றுமே சமமானவை என்பதற்கும், மூன்றில் எதையும் நபிமார்களே மறுக்கக் கூடாது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக உள்ளது.

மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ, இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது. குர்ஆன் மட்டும் போதும் என்போர் காஃபிர்கள் தான் என்று திட்டவட்டமாக குர்ஆனே அறிவிக்கிறது.

54. அல்லாஹ் தனது அருளை இம் மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும்67 கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.

(அல்குர்ஆன்: 4:54)

இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் கிதாபையும் ஹிக்மத்தையும் வழங்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

பொதுவாக எல்லா நபிமார்களுக்கும் குர்ஆனுடன் ஹிக்மத்தும் அருளப்பட்டதாகக் கூறும் இறைவன் இதே முறையில் தான் இதே மாதிரியாகத் தான் நபிகள் நாயகத்துக்கும் வஹீ அருளியிருப்பதாகக் கூறுகிறான்.

163. நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச்செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம்.

(அல்குர்ஆன்: 4:163)

இந்த நபிமார்களுக்கு எவ்வாறு வஹீ அருளப்பட்டதோ அந்த வழிமுறைக்கு மாற்றமாக புது முறையில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக குர்ஆனுடன் ஹிக்மத்தும் சேர்த்தே அருளப்பட்டது என்பதை இவ்வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எனவே நபிமார்கள் புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரர் போல் அனுப்பப்படவே இல்லை. மாறாக அதற்கு விளக்கம் சொல்லி, செய்து காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர். அதே அதிகாரத்துடன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்.

குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் அவர்கள் மறுப்பது மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனங்களையும், கடந்த மூன்று தொடர்களாகச் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களையும் தான் மறுக்கிறார்கள். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரமே என்பதற்கான சான்றுகள் இவ்வளவு தானா! இன்னும் உள்ளன.