04) போர்கள்
அக்காலத்தில் போர்கள் அதிகம் நடைபெற்றதும் பலதார திருமணத்திற்குக் காரணமாக அமைந்தது.
தற்காலத்தில் ஏவுகணையின் மூலமும் அணுகுண்டுகள் மூலமும் இரு நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது ஆண்கள் பெண்கள் என அனைவரும் அழிந்து போவார்கள்.
ஆனால் வாளேந்திப் போர் செய்த அக்காலத்தில் போரில் பங்கேற்கும் ஆண்களே மிகுதியாக மாண்டு போகும் நிலையிருந்தது.
எனவே ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாகவும் பெண்களின் இறப்பு விகிதம் குறைவாகவும் இருந்தது.
ஆண்களை விடப் பெண்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும் போது ஏனைய பெண்களின் வாழ்விற்கு உள்ள ஒரே தீர்வு ஒவ்வொரு ஆண்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைப் புரிவதாகவே இருந்தது.
ஓர் ஊரில் ஆண்கள் 25 பெண்கள் 25 என்று வைத்துக் கொள்வோம்.
போரில் 10 ஆண்கள் இறந்து விட்டால் இப்போது ஆண்களின் எண்ணிக்கை 15, பெண்கள் எண்ணிக்கை அதே 25 என்றுள்ளது.
ஒரு ஆண், ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்றிருந்தால் ஏனைய பத்து பெண்களுக்குத் தகுந்த துணையில்லாமல் போகும் நிலையுள்ளது.
ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் புரிவதாக இருந்தால் தான் அந்த பத்துப் பெண்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.
போர் தவிர இதர சண்டை, நோய், தீய பழக்க வழக்கங்களினால் ஏற்படும் மரணங்கள். விபத்துகள் போன்றவற்றிலும் ஆண்களின் இறப்பு விகிதமே அதிகம்.
ஒரு ஆண் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்றிருந்தால் இதர பெண்களின் நிலை என்ன?
இந்த யதார்த்த அடிப்படையை அனைவரும் புரிந்து கொண்டதாலே பல பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்வது அன்றைய காலத்தில் சகஜமாக இருந்தது.
இன்றைக்கு இரண்டாவது மனைவி என்பது அந்தப் பெண்ணுக்கும் அவளது குடும்பத்திற்கும் வாரிசுகளுக்கும் கவுரவக் குறைச்சலாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் அன்றைய காலத்தில் அப்படி ஒரு நிலை இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஓர் ஆண், பல பெண்களைத் திருமணம் செய்வது மிகச் சாதாரண நடைமுறையாக இருந்துள்ளது.
புராண – இதிகாசங்களிலும் பல பெண்களைத் திருமணம் செய்வது அன்றைய சாதாரண வழக்கமாகவே கூறப்படுகிறது.
. தசரதனுக்கு பல்லாயிரம் மனைவியர் இருந்ததாக புராணம் கூறுகிறது.
. தஞ்சை கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு பல மனைவியர் இருந்துள்ளனர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்படுள்ளனர்.
. தாவீது ராஜாவுக்கும் சாலமோனுக்கும் பல மனைவியர் என்று பைபிளில் கூறப்படுகிறது.
இவ்வளவு ஏன்? 1954-ல் இந்திய நாடாளுமன்றம் ‘ஹிந்து திருமணச் சட்டம்’ என்ற ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தும் வரை இந்திய மக்களிடையே குறிப்பாக இந்து மக்களிடையே பலதார மணம் இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கிறது என்பதை ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பல திருமணங்களை புரிந்துள்ள நபிகள் நாயகம் அவர்களை மட்டும் பெண்கள் மீது ஆசை கொண்டவர் போல் சித்தரிப்பது நியாயமற்றதும் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுமாகும்.