04) பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்

நூல்கள்: ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

மாற்றுக் கருத்துடையோர் துணை ஆதாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்; அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும்.

ஜகாத் கடமையாக்கப்பட்ட நோக்கம் என்ன என்பது இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நமது முடிவை மேலும் வலுப்படுத்துகின்றது.

سنن أبي داود

فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا أُفَرِّجُ عَنْكُمْ، فَانْطَلَقَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ، إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ، وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ، فَكَبَّرَ عُمَرُ، ثُمَّ قَالَ لَهُ: أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ

தங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(அபூதாவூத்: 1417)

எஞ்சிய பொருட்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகத் தான் ஜகாத் கடமை என்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது மிகத் தெளிவு.

மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று இவர்கள் கூறுகின்றனர்.

முஜாஹித் என்பாரிடமிருந்து ஜஃபர் பின் இயாஷ் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது. ஆனால் ஜஃபர் பின் இயாஷ் என்பவர் முஜாஹிதிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்று அறிஞர் ஷுஅபா கூறுவதால், இது தொடர்பு அறுந்த செய்தி என்று இதற்குக் காரணம் கூறுகின்றனர்.

ஷுஅபா அவர்கள் இவ்வாறு கூறினாலும், ஷுஅபா அவர்களுக்குப் போதிய விபரம் கிடைக்காததால் இவ்வாறு கூறி விட்டார்கள் என்று கருதுவதற்கு தக்க முகாந்திரம் உள்ளது..

ஜஃபர் பின் இயாஷ், நான் முஜாஹிதிடம் கேட்டேன் என்ற சொல்லைப் பயன்படுத்திப் பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இது போன்ற செய்திகள்(புகாரி: 4940, 4310) ஆகிய இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் நானே நேரடியாக முஜாஹிதிடம் கேட்டேன் என்று கூறியிருக்கும் போது, இதில் சம்பந்தப்படாத ஷுஅபா அவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. முஜாஹிதிடம் ஜஃபர் செவியுற்றது ஷுஅபாவுக்குத் தெரியவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மற்றொரு குறைபாடும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதாக மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிக்கின்றனர்.

இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

நூலாசிரியர் அபூதாவூத்

உஸ்மான் பின் அபீஷைபா

யஹ்யா

யஃலா

கைலான்

ஜஅபர் பின் இயாஸ்

முஜாஹித்

இப்னு அப்பாஸ் (ரலி)

உமர் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்)

மேற்கண்ட ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து இதை அறிவிக்கின்றார்கள்.

இந்தப் பட்டியலில் கைலான் (5) என்பவர் ஜஅபர் பின் இயாஸ் (6) என்பாரிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு ஏதும் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முன்கதிவு) ஹதீஸாகும் என்று மறுப்பு கூறுகின்றனர்.

இருவரிடையே சந்திப்பு இல்லை என்று கூறுவோர் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் அல்பானி கூறி விட்டார் என்பதைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

நாஸிருத்தீன் அல்பானியை விடப் பல மடங்கு ஹதீஸ்களை ஆய்வு செய்த இப்னு ஹஜர், தஹபீ, இப்னு மயீன், யஹ்யா பின் ஸயீத் உள்ளிட்ட பல அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களை நிராகரிக்கும் இவர்கள் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த நாசிருத்தீன் அல்பானியின் ஆய்வில் மட்டும் தவறே ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையில் இந்த ஹதீஸைத் தொடர்பு அறுந்தது என்று கூறுகின்றார்கள்.

அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது. நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் பலவீனமானவை என்றும், பலவீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானவை என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கின்றது என்றும் கூறியதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இந்த அறிவிப்பு, தொடர்பு அறுந்தது என்பதற்கு அல்பானி எடுத்து வைக்கும் காரணம் இது தான்.

இந்த ஹதீஸ் இரு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழியில் கைலான் என்பார் ஜஅபர் என்பாரிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது.

மற்றொரு வழியில் கைலான் என்பார் உஸ்மான் என்பார் வழியாகவும் அந்த உஸ்மான் ஜஅபர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு வகையான அறிவிப்புகளை அடிப்படையாக வைத்துத் தான் இது தொடர்பு அறுந்த ஹதீஸ் என்று அல்பானி கூறுகிறார்.

இதை விபரமாக விளங்கிக் கொள்வோம்.

ஜஅபர் பின் இயாஸ் > உஸ்மான் பின் கத்தான் >கைலான்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் இதே ஹதீஸ் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கைலானுக்கும் ஜஃபருக்கும் இடையே உஸ்மான் பின் கத்தான் இடம் பெற்றுள்ளார்.

ஆனால் அபூதாவூத் அறிவிப்பில்

ஜஅபர் பின் இயாஸ் > கைலான்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூதாவூத் அறிவிப்பில் கைலான் என்பார் ஜஃபரிடமிருந்து அறிவிப்பது உண்மையாக இருந்தால் மற்றொரு அறிவிப்பில் கைலான் என்பார் ஜஃபரிடமிருந்து நேரடியாக அறிவிக்காமல் உஸ்மான் வழியாக ஏன் அறிவிக்கிறார்? இதிலிருந்து கைலான் என்பார் ஜஃபர் என்பாரிடம் நேரடியாகக் கேட்கவில்லை. இடையில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்ற அல்பானியின் வாதம் பல காரணங்களால் நிராகரிக்கத் தக்கதாகும்.

ஒரு ஹதீஸை ஒருவர் ஒரு ஆசிரியர் வழியாக அறிவித்து விட்டு மற்றொரு தடவை நேரடியாக ஆசிரியரைக் கூறாமல் இன்னொருவர் வழியாக அதே ஆசிரியர் வழியாக அறிவித்தால் இரு வழிகளில் இந்த ஹதீஸ் அவருக்குக் கிடைத்திருக்கலாம். இரண்டும் ஒன்றுக் கொன்று முரணானவை அல்ல. இதுதான் ஹதீஸ் கலை விதியாகும். அல்பானி கூறுவது ஹதீஸ் கலை விதியில் இல்லாமல் அவர் சுயமாகக் கூறும் கருத்தாகும்.

சம்மந்தப்பட்ட அறிவிப்பாளர் நான் நேரடியாக கேட்கவில்லை என்று மறுக்காத வரை இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி ஏராளமான ஹதீஸ்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு அறிவிப்புகளும் சமமான தரத்தில் நம்பகமானவையாக இருக்கும் போது இப்படி கூறுவதை சதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஹாகிமில் இடம் பெறும் அறிவிப்பாளர் உஸ்மான் பின் கத்தான் பலவீனமானவர் என்பதால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

பலவீனமான இந்த அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.

அடுத்ததாக ஒருவர் தனது ஆசிரியராகக் கூறுபவரை சந்தித்துள்ளாரா என்பதில் சந்தேகம் வந்தால் இருவரது காலத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது என்றால் சந்தித்துள்ளார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கைலான் மரணம் ஹிஜ்ரி 132ஆம் ஆண்டாகும்.

ஜஅபர் மரணம் ஹிஜ்ரி 126 ஆகும்

ஆதாரம் தக்ரீபுத் தஹ்தீப் 1/443, தக்ரீபுத் தஹ்தீப் 1/139

இருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.

மேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை.

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும், இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ்கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள்.

எனவே கைலான், ஜஅபரிடமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.

மேலும் ஹதீஸ் கலை நூற்களில் ஜஃபரின் மாணவர்கள் பட்டியலில் கைலான் சேர்க்கப்பட்டுள்ளார். அது போல் கைலானின் ஆசிரியர் பட்டியலில் ஜஅபர் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லை.

யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவுகோலின் படி அல்பானி செய்த தவறான ஆய்வு என்பதில் ஐயம் இல்லை..

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத் என்பதை மேலும் சில ஹதீஸ்களும் வலுப்படுத்துகின்றன.

صحيح البخاري

1404 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ: خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ أَعْرَابِيٌّ: أَخْبِرْنِي عَنْ قَوْلِ اللَّهِ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ، وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} التوبة: 34 قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: مَنْ كَنَزَهَا، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا، فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلْأَمْوَالِ

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஜகாத்தைக் கொடுக்காமல் இருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஜகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அஸ்லம்

(புகாரி: 1404)

ஜகாத் என்பது பொருட்களைத் தூய்மையாக்குவதற்குத் தான் என்ற அபூதாவூதின் 1917 ஹதீஸில் உள்ளது போல் தான் நபித்தோழர்களும் விளங்கியிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாகும்.

இவ்வாறு நாம் கூறும் போது, நபித்தோழர்களின் கருத்தை எப்படி ஆதாரமாகக் காட்டலாம் என்று, புரிந்தும் புரியாதது போல் சிலர் பேசுகின்றார்கள். ஆதாரமாகக் காட்டுவது வேறு, ஆதாரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வலுப்படுத்துவதற்காக எடுத்துக் காட்டுவது வேறு என்பதைப் புரியாமல் திசை திருப்புகின்றனர்.

நபித் தோழரின் இந்தக் கூற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. அபூதாவூதில் இடம் பெறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை ஆதாரமாகக் காட்டி, மேலதிக விளக்கத்திற்காகத் தான் மேற்கண்ட இப்னு உமரின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் ஸஹாபாக்களின் கூற்று, இஸ்லாத்தின் மூன்றாவது ஆதாரம் என்ற கருத்துடையவர்கள் இந்த மூன்றாவது ஆதாரத்தை (?) மறுப்பதன் மர்மம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.