04) நல்லோர்களின் நிலை
இதுவரை தீயவர்களின் மண்ணறை வாழ்க்கை எப்படி அமையும்? என்பது தொடர்பான தகவல்களை பார்த்தோம். அல்லாஹ் அத்தகையவர்களிலிருந்து நம்மை காப்பானாக என்ற பிரார்த்தனையுடன் இனி நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை எப்படி அமையும்? மண்ணறையில் அவர்களுக்கு வழங்கப்படக்கூடிய இன்பங்கள் என்ன என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அலசுவோம்.
தீயோர்களின் மண்ணறை வாழ்வு எவ்வாறு அமையும் என்பது அவர்களின் உயிர் கைப்பற்றப்படும் முறையிலிருந்தே அவர் அறிந்து கொள்வதை போல நல்லோர்களின் மண்ணறை வாழ்வு நல்விதமாக அமையும் என்பதும் அவர்களின் உயிர் கைப்பற்றப்படும் முறையிலிருந்து அறிந்து கொள்வர்
நல்லோர்களின் உயிர்கள் கைப்பற்றப்படும் போது அவர்களுக்கு வேதனை அளிப்பதை இறைவன் வெறுக்கிறான். ஆகவே உண்மையான முஸ்லிமின் உயிர் எவ்வித சிரமமின்றி தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்துவிடுவது போன்று மிக எளிதாக கைப்பற்றப்படும்.
ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று. நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி, நூல் (புகாரி: 6502)
மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொட்டான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும் சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.
அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மண்ணிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறி விடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.
அறிவிப்பவர்: பராட பின் ஆஸிப் ரலி,
நூல் (அஹ்மத்: 17803)
இறைநம்பிக்கையாளரின் உயிர் கைப்பற்றப்படும் முன் அவருக்கு அல்லாஹ்வின் திருப்தியை பற்றி நற்செய்தி கூறப்படும். எவர்கள் அல்லாஹ்வின் திருப்தி குறித்து நற்செய்தி சொல்லப்பட்டு விட்டார்களோ அவர்கள் மண்ணறை வாழ்க்கை குறித்து கவலை கொள்ள மாட்டார்கள். இறைவனை சந்திக்க பேராவலில் இருப்பார்கள்.
மேலும் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டில் தம்மை சீக்கிரம் மண்ணறைக்கு கொண்டு செல்லப்படுமாறும் கூறுவதாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக! எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!, எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.) (அல்குர்ஆன்: 89:27) ➚
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி “அஞ்சாதீர்கள் கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” எனக் கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர்.
இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வையிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தித்து உபசரிக்க விரும்புவாள். அறிவிப்பாளர் உபாதா பின் அஸ்லாமித்
நூல் (புகாரி: 6507)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோன்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், “கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?” என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் அறிவிப்பவர் ஆழாயீத் அல்குத்ரீ ரலி நூல் (புகாரி: 1316)
நல்லோர்களின் ஆத்மாக்களுக்கு அளிக்கப்படும் மதிப்பும் மரியாதையும் தனிச்சிறப்பானது
பிரகாசமான முகத்துடனும் சொர்க்கத்தின் நறுமணப் பொருட்களுடனும் வானவர்கள் வருகை, மன்னிப்பு பற்றிய நற்செய்தி. கஸ்தூரி மணம், உயர்வான அந்தஸ்தில் செயல்கள் பதிவு செய்யப்படுதல் என அமோக மதிப்பும் மரியாதையும் நல்லோர்களின் ஆத்மாக்களுக்கு வழங்கப்படும்.
முமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது போ சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும் சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள்.
அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மன்னிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார்.
அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.
அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும் ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்துவிட்டு பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : (அஹ்மத்: 17803)
தீயவர்களின் ஆத்மாக்களுக்கு வானவர்களின் சாபம் கிடைப்பதை போன்று நல்லோர்களின், உண்மையான முஸ்லிம்களின் ஆத்மாக்களுக்கு வானவர்களின் பிரார்த்தனை கிடைக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளரின் உயிர் பிரியும் போது அதை இரு வானவர்கள் எடுத்துக் கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள்.
அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்). “ஒரு நல்ல ஆன்மா பூமியிலிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!” என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், “இதை இறுதித் தவணை வரை (மறுமை நாள்வரை தங்க வைக்கப்பதற்காகக்) கொண்டு செல்லுங்கள்” என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி. நூல் (முஸ்லிம்: 5510)
மண்ணறையில் கேட்கப்படும் அத்தனை கேள்விகளுக்கும் திக்காமல் திணறாமல் நல்ல முஸ்லிம் எளிமையாக பதிலளித்து விடுவார். மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பது நல்ல முஸ்லிமுக்கு சிரமமாக இருக்காது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும்.
அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்பார். பிறகு “(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். அறிவிப்பவர் அளஸ் (ரலி). நூல்: (புகாரி: 1338)
நல்ல முஃமின் சரியான பதில் அளித்ததை தொடர்ந்து அல்லாஹ் அவருக்கு மண்ணறையில் இன்பமான வாழ்க்கையை அளிக்கிறான். சொர்க்கத்தின் விரிப்பு, சொர்க்கத்தின் நறுமணம் கமழ வசந்தமான காற்று, விசாலமான கப்று என பல இன்பங்களை நல்லடியாருக்கு மண்ணறையில் அல்லாஹ் வழங்குகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரண்டு வானவர்கள் இறந்தவரிடம் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியானை நோக்கி உனது இறைவன் யார்? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். பிறகு உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். உங்களிடத்தில் அனுப்பப்பட்ட இவர் யார்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர் இவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று கூறுவார். இதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதினேன். அதனை விசுவாசம் கொண்டேன். அதனை உண்மைப்படுத்தினேன் என்று கூறுவார்.
எனது அடியான் உண்மை கூறி விட்டான். அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்புகளை விரித்து விடுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை அவனுக்காகத் திறந்து விடுங்கள் என்று ஒருவர் வானிலிருந்து அப்போது கூறுவார். அவனுடைய கண்பார்வை எட்டும் அளவிற்கு அவனுடைய கப்ரு விசாலமாக்கப்படும்.
அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட உனக்கு மகிழ்வூட்டக்கூடிய நன்னாள் இதுவாகும் என்று கூறுவார்.
அந்த இறைநம்பிக்கையாளர் அம்மனிதரை நோக்கி நீ யார்? என்று கேட்பார். அதற்கு அம்மனிதர் நான் தான் (நீ உலகில் செய்து வந்த) உனது நல்ல காரியங்கள் என்று கூறுவார். அப்பொழுது அந்த இறை நம்பிக்கையாளன் இறைவா. நான் தேடி வைத்துள்ள செல்வமான (நன்மையையும்) எனது குடும்பத்தினர்களையும் சென்றடைய மறுமை நாளை இப்போதே ஏற்படுத்திவிடு என்று கூறுவார். மரண வேளையின் போது ஒரு இறை நம்பிக்கையாளரின் நிலை இதுவாகும்.
அறிவிப்பவர் ; பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: (அஹ்மத்: 17803)
விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகு நல்ல முஃமினுக்கு நிம்மதியான, தடைகளற்ற நீண்ட உறக்கத்தையும் மண்ணறையில் அல்லாஹ் வழங்குகிறான்.
(மண்ணறையில் நல்லடியாரிடம் விசாரணை முடிந்த உடன்) உறங்குங்கள் என்று அவரிடம் சொல்லப்படும். அதற்கு அவர் எனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று (எனக்குக் கிடைத்த நல்வாழ்கையை) அவர்களிடம் கூறிவிட்டு வருகிறேன் என்று கூறுவார். அதற்கு இருவானவரும் அல்லாஹ் உன்னை இந்த இடத்திலிருந்து எழுப்பும் வரை புது மாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்கு. புதுமாப்பிள்ளையை அவருக்குப் பிரியமானவரைத் தவிர வேறுயாரும் எழுப்ப மாட்டார்கள். என்று கூறிவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: (திர்மிதீ: 1991)
நல்ல முஃமின் மண்ணறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற போதும் சொர்க்கத்தில் அவர் தங்கவிருக்கிற இடம் தினமும் காலை மாலை எடுத்துக் காட்டப்படும்..
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், “அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்” என்றும் கூறப்படும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி). நூல் (புகாரி: 1379)
இவ்வுலகில் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்ட ஷஹீத்கள் அல்லாஹ்விடம் தனி அந்தஸ்தை பெறுகிறார்கள்.
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(நபியே!) அல்லாஹ் வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்பெறு கின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத் தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
அறிவிப்பவர், மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்). நூல்: (முஸ்லிம்: 3834)
மண்ணறையில் நல்லவர்கள் பெறும் இன்பங்கள். தீயவர்கள் பெறும் வேதனைகள் என இரு சாராரின் கப்ர் நிலைகளை அறிந்து கொண்டோம். ஒரு சாரார் வேதனையை அனுபவிப்பதற்கும் இன்னொரு சாரார் இன்பங்களை பெறுவதற்கும் எது எது காரணங்களாக அமைகின்றது. என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மண்ணறை வேதனையிலிருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ள இயலும்.
அதற்கு முன் கப்ர் எனப்படுகின்ற பர்ஸக் வாழ்க்கையை பற்றி சரியான புரிதலை, தெளிவை நாம் பெற வேண்டும். இது தொடர்பாக அறிஞர் பிஜே அவர்கள் ஒரு கேள்விக்கு அளித்த பதிலை இங்கே தருகிறோம். அது கப்ர் தொடர்பான சரியான புரிதலை நமக்கு அளிக்கிறது.
பிஜே அவர்களின் விளக்கம் இதோ:
கப்ருடைய வேதனையைக் குறிப்பிடும் போது அடக்கம் செய்யப்பட்ட இடத்தைக் கூறுவது பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டே சொல்லப்படுகின்றது. மண்ணுக்கு உள்ளேதான் அந்த வேதனை நடக்கின்றது என்று கருதிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு நாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
முஸ்லிம்களானாலும் காபிர்களானாலும் அவர்கள் அனைவரும் கப்ருடைய வாழ்வைச் சந்தித்தே தீருவார்கள். காபிர்களும் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்பதைப் பல ஹதீஸ்கள் கூறுகின்றன.
மண்ணுக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நாம் கூறினால் பெரும்பலான காபிர்கள் அந்த வேதனையிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்ற முடிவுக்கு வரும் நிலை ஏற்படும். ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் இறந்தவர்களை மண்ணில் புதைக்காமல் எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றனர். காபிர்களுக்கும் கப்ருடைய வேதனை உண்டு என்ற நபிமொழிக்கு இது முரணாக அமைகின்றது.
பாவம் செய்த முஸ்லிம்களைக் கப்ரில் வேதனை செய்யும் இறைவன் சில காபிர்களுக்கு அத்தகைய வேதனை வழங்க மாட்டான் என்பது இறைவனின் நிபதிக்கும் அவனது நியாயத்திற்கும் ஏற்புடையதாக இல்லை.
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ”என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
அவர்கள் திரும்ப எழுப்பப்படும் வரை திரை மறைவு (வாழ்க்கை) உண்டு என்ற வசனத்தின்படி கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை என்பது புரிகிறது. மண்ணுக்குள் தான் அது நடக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.
மேலும் ஒரு கப்ரில் ஸாலிஹான நல்லடியார்களும். மிக மோசமானவர்களும் அடுத்தடுத்து அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்த இடத்திற்குள்ளேயே வேதனை நடக்கிறது என்றால் அதே இடத்தில்தான் நல்லவர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அனைத்து உயிர்களையும் இறைவன் தன் கைவசம் வைத்துள்ளான் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது. நமது புலனுணர்வுக்குத் தென்படாத மற்றொரு உலகத்தில் அந்த ஆத்மாக்களுக்கு அவன் வேதனையோ சுகமோ வழங்குவான் என்று எடுத்துக் கொண்டால்தான் அனைவருக்கும் கப்ரு வாழ்க்கை என்பது மெய்யாகும் மண்ணுக்குள்தான் கப்ரு வேதனை என்று எடுத்துக் கொண்டால் முஸ்லிமல்லாதவர்களுக்கு கப்ர் வேதனை இல்லை என்ற விபரீதமான கருத்து வந்து விடும்
கப்ருகளுக்கு நாம் ஸலாம் கூறுவதும், ஸியாரத்துக்குச் செல்வதும், கப்ரில் வேதனை செய்யப்பட்ட இருவரின் அடக்கத்தலத்தில் நபி (ஸல்) அவர்கள் பேரிச்சை மட்டையைப் பிளந்து ஊன்றியதும், அந்த இடத்தில் வேதனை செய்யப்படுகின்றது என்ற கருத்தைத் தருவது போல் அமைந்திருந்தாலும் இதை அடிப்படையாக வைத்து மண்ணுக்குள்தான் வேதனை செய்யப்படுகின்றது என்று நாம் முடிவு செய்தால் காபிர்கள் அந்த வேதனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்படுகின்றது.
யார் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படுகிறார்களோ அவருடைய கப்ரு வாழ்க்கை அடக்கத்தலத்தில் அமையும். யார் அடக்கம் செய்யப்படாமல் வேறு வகையில் இறுதிப் பயணத்தை அடைகிறார்களோ அவர்களுக்கு இறைவன் தன் வல்லமையினால் ஒரு உலகை உருவாக்கி அதில் அவர்களின் கப்ருடைய வாழ்வை அமைப்பது அவனுக்கு சிரமமானதல்ல.
அல்லது அனைவருக்குமே மண்ணுலகம் அல்லாத மற்றொரு உலகில் கப்ருடைய வாழ்வை இறைவன் அமைக்கலாம். அடக்கத்தலம் அடையாளமாக இருப்பதாலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதாலும் அடக்கத் தலத்தில் நபி (ஸல்) அவர்கள் பேரிச்சை மட்டைகளை நட்டு வைத்திருக்கலாம். எப்படி வைத்துக் கொண்டாலும் கப்ருடைய வாழ்விலிருந்து எவரும் விலக்குப் பெற முடியாது என்பதில் சந்தேகமில்லை.
அனைவருக்கும் கப்ரு உண்டு என்ற கருத்தை உடைத்து விடாத வகையில்தான் கப்ரு பற்றிய செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி மண்ணறை வேதனைக்கான காரணங்களை ஒவ்வொன்றாக காண்போம்