04) தடைசெய்யப்பட்டவை

நூல்கள்: நவீன வடிவங்களில் வட்டி- ஓர் இஸ்லாமிய பார்வை

நாணய மாற்றுதல்

ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணயமாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதல் என இது இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சமமான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம். விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும். அது போல் ஒரு நாட்டின் ரூபாய்க்கு சில்லரை மாற்றும் போது கூடுதல் குறைவு இருக்கக் கூடாது. நூறு ரூபாயை பத்து ரூபாயாக மாற்றும் போது பத்து நோட்டுகள் வாங்கலாம். பதினொன்று அல்லது ஒன்பது நோட்டுக்கள் வாங்க்க் கூடாது. அது போல் நோட்டுக்கு பதிலாக காயன்ஸ் வாங்கும் போது அதற்குச் சம்மான மதிப்பில் தான் வாங்க வேண்டும்.

நாணய வகை மாறுபட்டால் மார்கெட் நிலவரப்படி அல்லது நம் விருபப்ப்படி விலை நிர்ணயிக்கலாம். மார்க்கத்தில் இது குற்றமாகாது. டாலருக்கு ரியாலை அல்லது ரூபாய்க்கு திர்ஹமை மாற்றும் போது அல்லது தங்கத்துக்கு வெள்ளியை மாற்றும் போது எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இது உடனுக்குடன் நடக்க வேண்டும். கடனாக இருக்க்க் கூடாது. இன்று ஒரு நூறு டாலர் கொடு நாளை ஐந்தாயிரம் த்ருகிறேன் என்று வியாபாரம் நட்ந்தால் கடனுக்காக நாம் அதிகம் பெற்றதாக ஆகி வட்டியில் சேர்ந்து விடும்.

ஒரே வகையான நாணயத்தை மாற்றும் போது நாம் அதிகமாக பெறுவதில்லை எனப்தால் கடனாக இருக்கலாம். இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து நாளை அதற்கான சில்லறையைப் பெறலாம். இவை அனைத்துக்குமான ஆதாரங்கள் புகாரியில் இடம்பெற்ற கீழ்காணும் ஹதீஸ்களில் உள்ளன.

அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் நாணயமாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ûஸத் பின் அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்: அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம்; அதற்கு உடனுக்குடன் மாற்றிக் கொண்டால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது என அவர்கள் பதிலளித்தார்கள் என்றார்கள். (புகாரி: 2060, 2061)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக்கொள்ளுங்கள். இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (புகாரி: 2175)

உமர் (ரலி) சம்பந்தப்பட்ட முந்தைய ஹதீஸ் போன்று அபூசயீத் (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு ஹதீûஸ அறிவித்தார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் அபூசயீத் (ரலி) அவர்களை இப்னு உமர் (ரலி) அவர்கள் சந்தித்து, நீங்கள் நபி (ஸல்) அவர்கள் வழியாக என்ன அறிவித்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி), நாணயம் மாற்றும் போது தங்கத்திற்குத் தங்கத்தையோ வெள்ளிக்கு வெள்ளியையோ மாற்றினால் சரிக்குச் சரியாக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள். (புகாரி: 2176)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கிவிடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்! இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : (புகாரி: 2177)

பராஉ பின் ஆஸிப் (ரலி), ûஸத் பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதிலளித்தனர். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக்காட்டி, இவர் என்னைவிடச் சிறந்தவர் என்றனர். நூல் : (புகாரி: 2180, 2181)

சுலைமான் பின் அபீ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : நான் அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணய மாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், நானும் எனது கூட்டாளியான ûஸத் பின் அர்கம் (ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், உடனுக்குடன் மாற்றிக் கொண்டதை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்து விடுங்கள்’ என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள். (புகாரி: 2497, 2498)

ஒத்திக்க விடுவது வட்டியாகும்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒத்தி போகியம் பெந்தகம் குத்தகை என்ற பெயர்களில் ஒரு காரியம் நடைமுறையில் உள்ளது. சிலர் வாடகையும் ஒத்தியைப் போன்றது என்ற தவறான கருத்தைக் கூறுகின்றனர். ஆனால் வீட்டை ஒத்திக்கு விடுவதற்கும் வாடகைக்கு விடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

வீட்டின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு தன் வீட்டை ஒத்திக்கு விடுகின்றார். வீட்டின் உரிமையாளர் அப்பணத்தை தன்னிடம் திரும்ப ஒப்படைக்கும் வரை பணத்தைக் கொடுத்தவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டார். வாடகையும் கொடுக்க மாட்டார். 50 ஒப்பந்த காலம் முடிவடைந்த உடன் வீட்டின் உரிமையாளர் வாங்கிய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுப்பார். இதன் பின் பணம் கொடுத்தவர் தன் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வீட்டைக் காலி செய்வார். இது ஒத்திக்கு விடுதல் என்று கூறப்படுகின்றது. இது தெளிவான வட்டியாகும். பணத்தைக் கொடுத்துவிட்டு அப்பணம் தன்னிடம் திரும்பி வருகின்ற வரை பணம் வாங்கியவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவது வட்டியாகும். மாத வாடகை 1000 ரூபாய் பெறுமானமுள்ள வீட்டை ஒத்திக்குப் பெற்றவர் தான் பணம் கொடுத்ததற்காக வாடகை செலுத்தாமல் வசிக்கின்றார்.

இதன் மூலம் பணம் பெற்றவரிடமிருந்து மாதம் மாதம் 1000 ரூபாய் மறைமுகமாக பெறுகிறார். வீட்டின் உரிமையாளர் பணம் வாங்கிய காரணத்தாலே வாடகை வாங்காமல் வீட்டில் வசிப்பதற்கு அனுமதிக்கின்றார். அதாவது வாங்கிய பணத்துக்காக மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்துகிறார். இது வட்டியாகும். ஆனால் வாடகை என்பது இது போன்றதல்ல. வீட்டைப் பயன்படுத்திவிட்டு அதற்குரிய கூலியாக குறிப்பிட்ட தொகையை வாடகைதாரர் வீட்டின் உரிமையாளரிடம் கொடுக்கின்றார். இங்கே வீட்டைப் பயன்படுத்தியதற்கான கூலி மட்டுமே வாங்கப்படுகின்றது. வாங்கப்பட்ட பணம் திருப்பித்தரப்பட மாட்டாது. இது வியாபாரமாகும்.

ஒத்திக்கு விடுவது வியாபாரமல்ல

ஒத்திக்கு விடுவது வியாபாரம் என்று பலர் நம்புகின்றனர். இது தவறாகும். வியாபாரம் என்பது, இலாபமும் நஷ்டமும் இணைந்தது. ஆனால் வட்டியில் இவ்வாறு இருப்பதில்லை. வட்டி எனும்போதும் அதில் உறுதியான இலாபம் கிடைக்கிறது. மேலும் வியாபாரம் என்பதில் ஒரு தடவை ஒரு பொருளை வாங்கிவிட்டால் அல்லது விற்றுவிட்டால் அப்போது மட்டுமே ஒரு தடவை இலாபம் கிடைக்கும். தொடர்ந்து இலாபம் வந்து கொண்டிருக்காது. ஆனால் வட்டியில் தொடர்ந்து இலாபம் வந்து கொண்டிருக்கும். இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டு போகியம் என்பதைப் பார்ப்போம். ஒருவர் ஒரு இலட்சம் ரூபாயை கொடுக்கிறார்.

அதற்காக ஒரு வீட்டை இரண்டு வருடத்திற்கு பயன்படுத்திக் கொள்ள பணத்தை கொடுக்கிறார். மேலும் இரண்டு வருடம் கழித்த பின்னர் கொடுத்த ஒரு இலட்சத்தையும் திருப்பி வாங்கிக் கொள்கிறார். இந்நிலையில் போகியத்திற்கு வீட்டை பயன்படுத்துபவர், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தால் அவர் சுமார் மாதம் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியானால் அவர் இரண்டு வருடத்திற்கு 48,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த பணம், அவர் கொடுத்த ஒரு இலட்சத்தால் கிடைத்திருக்கிறது. இதை இன்னொரு கோணத்தில் பாருங்கள் : போகியத்திற்கு வாங்கியவர் அந்த வீட்டை பயன்படுத்தாமல் மற்றவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தால் இரண்டு வருடத்திற்கு 48,000 ரூபாய் வாங்கியிருப்பார்.

இந்த 48,000 ரூபாய் வட்டி இல்லையா? இதை வியாபாரத்துடன் ஒப்பிடமுடியுமா? இதில் இலாபமும் நஷ்டமும் இருக்கிறதா? இலாபம் மட்டும்தானே உள்ளது. இது வட்டிதான் என்பதை புரிந்து கொள்ள இன்னொரு உதாரணத்தை கவனியுங்கள்: ஒருவர் இதே ஒரு இலட்சத்தை ஒருவருக்கு வழங்கி, மாதம் எனக்கு 2000 ரூபாய் வட்டி தர வேண்டும் என்று கூறுகிறார். அவரும் ஒத்துக் கொண்டு இரண்டு வருடம் 48000 ரூபாய் வட்டி கட்டுகிறார். பின்னர் ஒரு இலட்சத்தையும் திருப்பிச் செலுத்துகிறார். இதை கூடும் என்று சொல்வோமா?

அடைமானத்தில் வட்டி வரக் கூடாது

ஒருவருக்குப் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இவர் தன்னிடமுள்ள வீட்டை ஒருவரிடம் அடைமானமாகக் கொடுத்து, தனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார். கடன் வாங்கியவருக்கு வசதி வரும் போது அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டு தனது வீட்டை வாங்கிக் கொள்கிறார். இது அடைமானமாகும். கொடுக்கின்ற பணத்திற்கு ஈடாக ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் பணம் கொடுத்தவர் அந்தப் பொருளை உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும். அந்தப் பொருளை அவர் உபயோகிக்க ஆரம்பித்து விட்டால் அது வட்டியாகி விடுகின்றது. அதாவது அந்த வீட்டை அவர் உபயோகிப்பதற்காகக் கொடுக்க வேண்டிய வாடகையை, தான் கொடுத்துள்ள பணத்திற்கு வட்டியாக எடுத்துக் கொள்கின்றார்.

ஒத்தி என்று கூறப்படுவது இது தான். ஒத்தி என்பது தெளிவான வட்டி தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. உயிருள்ள பிராணிகளை அடகு வைத்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும் அந்தப் பிராணியை வளர்ப்பதற்கு ஆகும் பராமரிப்புச் செலவுக்குப் பிரதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

“”அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதன் பாலை அருந்தலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 53 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: (புகாரி: 2511)

இந்த ஹதீஸில், அடகு வைக்கப்பட்ட பிராணியை அதற்காகும் செலவுக்குப் பிரதியாக அதைப் பயன்படுத்தலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். கால்நடைகளைப் பொறுத்தவரை அவற்றை வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட்டாக வேண்டும். அடைமானமாகப் பெற்றவர் இந்தச் செலவுகளை தனது சொந்தப் பணத்திலிருந்து செய்ய முடியாது. எனவே தான் அந்தச் செலவுக்குப் பிரதியாக அந்தப் பிராணிகளைப் பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளிக்கின்றார்கள்.

இந்த அனுமதி இல்லாவிட்டால் யாரும் கால்நடைகளை அடைமானமாகப் பெற மாட்டார்கள். அப்படிப் பெற்றால் பெற்றவர் நஷ்டமடைய வேண்டிய நிலை ஏற்படும். வீடு, நிலம் போன்றவற்றிற்கு இது போன்ற பராமரிப்புச் செலவுகள் எதுவும் இல்லை என்பதால் அவற்றை அடைமானமாகப் பெற்றால் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது அதற்கான வாடகையை வட்டியாக வாங்குவதற்குச் சமம். மேற்கண்ட ஹதீஸில் பிராணிகளைப் பயன்படுத்தலாம் என்று மேலோட்டமாகச் சொல்லாமல் “”அதற்காகும் செலவுக்குப் பகரமாக’ என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்தே வீடு, நிலம் போன்றவற்றை அடைமானம் பெற்றவர் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவாகின்றது. அதே சமயம் அந்த வீட்டிற்கான வாடகையை நில உரிமையாளருக்குக் கொடுத்து விட்டு அந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

பராமரிப்புச் செலவுக்காக பயன்படுத்தலாம்

சில பொருட்கள் செலவு செய்து பராமரிக்கப்படாவிட்டால் அழிந்துவிடும். இதுமாதிரியான பொருட்களை அடைமானமாகப் பெற்றால் அவற்றை பராமரிக்கும் செலவுக்காக இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இதேப் போன்று பயன்படுத்தாமல் போட்டு வைத்தால் வீணாகிவிடும் பொருட்களும் உள்ளது.

உதாரணமாக ஒருவர் காரை அடைமானமாகக் கொடுக்கின்றார். இந்தக் காரை பராமரித்து பயன்படுத்தினால் வீணாகது. பயன்படுத்தாமல் போட்டு வைத்தால் வீணாகிவிடும். இதுமாதிரியான வாகனங்களை அடைமானமாக பெற்றவர் பொருளுக்குரியவரின் அனுமதியுடன் பயன்படுத்தினால் தவறில்லை. ஏனென்றால் இந்த வாகனங்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் செலவு செய்யும் நிலையும் உள்ளது.

ஆயுள் காப்பீடு (லைஃப் இன்சூரன்ஸ்)

சிலர் இன்சூரன்ஸ் முழுவதும் கூடாது என்று இதன் அனைத்து வகைகளையும் ஒரே அடியாக மறுத்துவிடுகிறார்கள். சிலர் அனைத்து இன்சூரன்ஸ்களையும் அனுமதிக்கப்பட்டது என்று பொதுவாக அனுமதித்து விடுகின்றனர். மார்க்க அடிப்படையில் சிந்தித்தால் இன்சூரன்ஸில் அனுமதிக்பட்டவையும் தடைசெய்யப்பட்டவையும் இருப்பதை அறியலாம். இன்சூரன்ஸ் என்ற சொல் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ கூறப்படவில்லை.

இது நவீன காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முறையாகும். இதில் வட்டி மோசடி ஏமாற்றுதல் சூதாட்டம் ஆகிய மார்க்கம் தடை செய்த அம்சங்கள் ஏதாவது இருந்தால் கூடாது என்று நாம் முடிவெடுக்கலாம்.  இன்சூரன்ஸில் லைஃப் இன்சூரன்ஸ் (ஆயுள் காப்பீடு) என்றொரு வகை உள்ளது. குறிப்பிட்ட வருடங்கள் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்டத் தொகையை ஆயுள் காப்பீடு நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும். இடைப்பட்ட காலத்தில் மரணம் ஏறபட்டால் அந்நிறுவனம் ஒரு தொகையை இறந்தவர் குடும்பத்துக்கு செலுத்தும். உதாரணமாக மாதம் ஆயிரம் என்ற கணக்கில் 10 வருடங்கள் செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. 10 வருடத்தில் மொத்தம் ஒரு லடச்த்து இருபதாயிரம் ரூபாய் கட்டியிருப்போம்.

ஆனால் 10 வருடங்கள் கழித்து தொகையை நம்மிடம் திருப்பித் தரும் போது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். இதற்கு ஆயுள் காப்பீடு என்று கூறப்படுகின்றது. இந்த முறையில் வட்டி இருப்பதால் இது தடைசெய்யப்பட்டதாகும். நாம் கொடுத்தத் தொகை ஒரு லட்சத்து இருபதாயிரமாக இருக்க ஒன்றரை லட்சம் வாங்கினால்  ஆயிரம் ரூபாய் நாம் கூடுதலாகப் பெறுகிறோம். இது வட்டியாகும்;. அதே நேரத்தில் கூடுதல் தொகையைப் பெறாமல் நாம் கொடுத்த பணத்தை மட்டுமே திரும்பப் பெற்றால் அது தவறல்ல. இது அனுமதிக்கப்பட்ட சேமிப்பு முறையாகும்.

ஷரீஅத் பைனான்ஸ்

நம் நாட்டில் உள்ள சில இஸ்லாமிய நிறுவனங்களும் அபுதாபி போன்ற சில இஸ்லாமிய நாடுகளும் ஷரீஅத் பைனான்ஸ் என்ற பெயரில் தந்திரம் செய்து வட்டி வாங்கிக்கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய வங்கி என்று தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த நிறுவனத்திடம் ஒருவர் கார் வாங்க பத்து லட்சம் ரூபாய் கடனாக கேட்டால் காரை நாங்களே வாங்கித் தருகிறோம் என்று சொல்வார்கள்.

இந்த வங்கி பத்து லட்சம் ரூபாக்கு இவர் கேட்ட காரை வாங்கி இவரிடம் 11 லட்சத்துக்கு கொடுக்கும். இவர் குறிப்பிட்ட காலத்துக்குள் 11 லட்சத்தை கட்ட வேண்டும். வியாபாரம் என்ற பெயரில் வட்டி வாங்குவதற்காக இவ்வாறு தந்திரம் செய்கின்றனர். 10 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் காரை 11 லட்சம் கொடுத்து எந்த அறிவாலியும் வாங்க மாட்டான். வங்கியில் வாங்கினால் கடன் கிடைக்கும் என்பதற்காகவே வங்கியிடம் 11 லட்சத்தை செலுத்துகிறான்.

கடனுக்காக கூடுதல் தொகையை செலுத்துவது தான் வட்டி ஆகும். இந்த அம்சம் இந்த பைனான்ஸில் உள்ளது. மேலும் இந்த நிறுவனம் வாகனங்களை விற்கும் தொழிலை செய்யவில்லை. தான் கொடுக்கும் கடன் தொகைக்கு கூடுதல் பணத்தை பெறுவதற்காகவே வாகனத்தை வாங்கி தந்திரம் செய்கின்றது.

இதில் வட்டி என்ற அம்சத்தோடு மார்க்கம் தடைசெய்துள்ள இன்னொரு அம்சமும் அடங்கியுள்ளது. இருவருக்கு மத்தியில் வியாபாரம் நடக்கும் போது தேவையில்லாமல் இடையில் குறிக்கிட்டு பொருளின் விலையை உயர்த்திவிடுவது கூடாது. பத்து லட்சம் ரூபாய்க்கு கார் வாங்க நினைப்பவரிடம் இந்த நிறுவனம் குறுக்கிட்டு பதினோறு லட்சமாக உயர்த்திவிடுகின்றது. எனவே இது தவறான முறையாகும்.

வங்கி தரும் வட்டியை வாங்கக்கூடாது

வங்கிகளில் தரக்கூடிய கூடுதல் பணம் மானியம் போனஸ் போன்ற பெயர்களில் வழங்கப்பட்டாலும் நிச்சயமாக அது வட்டி தான். சில அறிவிலிகள் வங்கி வட்டி கூடும் என்று தவறான தீர்ப்பு வழங்கி மக்களை வழிகெடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

வங்கி நம்மிடம் பணம் வாங்கியதற்காக மாதம் மாதம் பணத்தின் அளவுக்கு ஏற்ப கூடுதல் பணத்தை வழங்குகிறது. காலம் கடப்பதற்கும் பணம் அதிகரிப்பதற்கும் ஏற்ப கணக்குப் போட்டு கூடுதலான பணத்தை வங்கிகள் கொடுக்கின்றன. இதற்கு வட்டி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? வட்டிப் பணம் தானாக தேடி வரும் போது அதை வாங்கலாமே என்று மனம் சொல்லும். இதை வாங்கினால் இறைவனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும். வேறு வழியில் இறைவன் நமக்கு பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்திவிடுவான்.

எனவே இறைவனுக்கு பயந்து இதை புறக்கணித்துவிட வேண்டும். வங்கி தரும் வட்டிப் பணத்தை நாம் வாங்கா விட்டால் அதை வேறு யாராவது எடுத்துக்கொள்வார்களே? இஸ்லாத்தின் எதிரிகள் அதை பயன்படுத்துவார்களே? என்றெல்லாம் யூகித்து வட்டிப் பணத்தை வாங்க முயற்சிக்கக் கூடாது. அது நம்முடைய பணம் இல்லை என்பதால் அந்தப் பணத்தைப் பற்றி நாம் கவலைப்படுவது தேவையற்றது. ஒருவன் ஒருப் பொருளை திருடி நம்மிடத்தில் கொடுக்கின்றான்.

அதை நாம் வாங்காவிட்டால் வேறு ஒருவன் வாங்கிச் சென்றுவிடுவான். இதற்காக அந்த திருட்டுப் பொருளை நாம் வாங்க முடியுமா? இலவசமாக சாராயம் கிடைக்கின்றது. நாம் வாங்காவிட்டால் வேறு யாராவது வாங்கிவிடுவார்கள் என்பதற்காக இந்த சாராயத்தை வாங்கி நாம் குடிக்கலாமா? நாம் வாங்காவிட்டால் அடுத்தவன் வாங்கிவிடுவான் என்ற வாதம் தவறானது.

தர்மம் செய்வதற்காக வட்டி வாங்கக் கூடாது

வங்கி தரும் வட்டிப் பணத்தை வாங்கி அதை நாம் பயன்படுத்தாமல் ஏழை எளியவர்களுக்கு வழங்கலாம் என்று பலர் நினைக்கின்றனர். உண்ணுவது போன்ற காரியங்களுக்கு பயன்படுத்தாமல் கழிவறைக்கு செலவிடலாம் என்றும் கூறுகின்றனர். இதுவும் தவறாகும்.

பொருளாதாரம் தொடர்பாக இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை இவர்கள் மறந்துவிட்டார்கள். எந்தப் பொருளை நாம் பயன்படுத்த மார்க்கத்தில் அனுமதி உள்ளதோ அந்தப் பொருளை நாம் மற்றவர்களுக்கு கொடுக்கலாம். எந்தப் பொருளை நாம் பயன்படுத்துவது கூடாதோ அந்தப் பொருளை நாம் மற்றவர்களுக்கும் கொடுப்பது கூடாது. உதாரணமாக பன்றி இறைச்சி மது ஆகியவற்றை நாம் சாப்பிடக்கூடாது.

எனவே இதை மற்றவர்களுக்கு நாம் சாப்பிட கொடுக்கக்கூடாது. இது போன்று தான் வட்டிப் பணமும். இதை நாம் பயன்படுத்தக்கூடாது என்றால் இதை வாங்கி மற்றவர்களுக்கு கொடுப்பதும் கூடாது. ஹராமான சம்பாத்தியத்திலிருந்து நற்பணிகளுக்கு செலவிட்டால் இறைவன் இதை ஏற்றுக்கொள்ளமாட்டான்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “”மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்ட வற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1844)

ஒருவருடைய பணத்தை திருடி தர்மம் செய்தால் இந்த தர்மத்துக்கு இறைவன் கூலி வழங்கமாட்டான். மாறாக திருடியதற்கான தண்டனையை கொடுப்பான். வட்டி வாங்கி தர்மம் செய்வது இது போன்றதாகும். அதை வாங்கி பிறருக்குக் கொடுக்கலாம் என்றால் அந்தப் பொருள் நம்முடையது என்று வாக்கு மூலம் தந்ததாகவே பொருள்.

வாங்கிய குற்றத்திற்குத் தண்டனை பெற வேண்டியது ஏற்படும்.  எனவே வங்கியில் நாம் கொடுத்த பணத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு வட்டிப் பணத்தை வேண்டாம் என்று கூறி வாங்க மறுத்துவிட வேண்டும். வங்கியில் புதிதாக அக்கவுண்டை உருவாக்கும் போதே எனக்கு வட்டி போட வேண்டாம் என்று கூறினால் நம்முடைய கணக்கில் வட்டியை சேர்க்கமாட்டார்கள்.

வட்டிப் பணத்தில் கழிவறை கட்டலாமா?

வங்கி தரும் வட்டிப் பணத்தை வாங்கி உண்ணுகின்ற வகைக்கு பயன்படுத்தாமல் கழிவறை கட்டும் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மார்க்க அறிவில்லாதவர்கள் தவறான தீர்ப்பைக் கூறுகின்றனர். கழிவறையானாலும் ஹலாலான தொழிலில் தான் கட்ட வேண்டும். ஒருவனுடைய பணத்தைத் திருடி நம் வீட்டுக் கழிவறையை சொகுசாக வசதியாக கட்டினால் இந்த திருட்டுச் செயல் நியாயமாகிவிடுமா? வட்டிப் பணத்தில் கழிவறை கட்டுவதும் இது போன்றதாகும். உண்ணுவது மட்டுமின்றி வேறு தேவைகளுக்காகவும் ஹராமான முறையில் பொருளீட்டக்கூடாது.

ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “”அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.                    (முஸ்லிம்: 1844)

இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் ஹராமான சம்பாத்தியத்தில் உண்ணுவது கூடாது என்று சொல்வதுடன் அதன் மூலம் ஆடை அணிவதையும் குறிப்பிடுகிறார்கள். நாம் அன்றாட வாழ்வில் கழிவறையை பல முறை பயன்படுத்துகிறோம். இதற்காக வட்டிப் பணத்தை செலவிட்டாலும் நாம் வட்டி வாங்கிய பாவத்திலிருந்து விடுபட முடியாது.

வட்டிக்கு கடன் வாங்கி வழிபாடு செய்யக் கூடாது

குர்பானி அகீகா ஹஜ் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு பொருளாதாரம் தேவைப்படுகின்றது. இவற்றை செய்வதற்குத் தேவையான பொருளாதாரம் நம்மிடத்தில் இருந்தால் இந்த வணக்கங்களை தாராளமாக நிறைவேற்றலாம். பொருளாதாரம் இல்லாவிட்டால் இதை செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஆனால் சிலர் கடன் வாங்கி இந்த வணக்கங்களை செய்ய நினைக்கின்றனர். இது தவறாகும். மார்க்கம் கூறாத சுமையை நம்மீது சுமத்திக்கொள்வதாகும். இதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். (அல்குர்ஆன்: 2:286)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அது அவரை மிகைத்துவிடும். எனவே, (அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; 61 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (புகாரி: 39)

குறிப்பாக வட்டிக் கடன் வாங்கி வணக்கங்களை புரிவதால் எந்த நன்மையும் கிடைக்காது. இத்துடன் இந்தப் பாவத்தின் காரணத்தால் இறைவனுடைய தண்டனைக்கு ஆளாக நேரிடும்.

வங்கியில் வேலை செய்யலாமா?

வட்டிப் பணத்தை வசூலித்தல் கணக்கு எழுதுதல் இது போன்று வட்டியுடன் தொடர்புடைய வேலைகளை செய்யக்கூடாது. வட்டியுடன் தொடர்புடைய வேலைகளை செய்யக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள். நூல் : (முஸ்லிம்: 3258)

அதே நேரத்தில் வட்டியுடன் தொடர்பில்லாத வேறு வேலைகளை வங்கியில் இருந்து கொண்டு செய்தால் அதில் தவறேதுமில்லை. உதாரணமாக வங்கியில் ஆபீஸ் பாய், கிளீனிங் போன்ற வேலைகள் வட்டியுடன் தொடர்புடையவை அல்ல. குறிப்பிட்ட சிலருக்கு வட்டி இல்லாத கடன் வழங்குவதற்காக வங்கியில் ஒரு தனிப்பிரிவு உள்ளது. இதற்கு நம்மைப் பொறுப்பாளராக நியமிக்கிறார்கள். தாராளமாக இதில் நாம் பணியாற்றலாம். வட்டியுடன் தொடர்பில்லாத அனைத்து வேலைகளும் இது போன்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் ஊழியராக பணியாற்றினால் சில நேரங்களில் வட்டியுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட வேலைகளையும் நாம் செய்துகொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். வட்டிக் கணக்கு நோட்டுகளை கொண்டு செல்வது போன்ற வேலைகளை செய்யுமாறு வங்கி கூறினால் இதை செய்து கொடுக்கக்கூடாது.

முஸ்லிமல்லாதவர்கள் வட்டி வாங்க துணை செய்யக்கூடாது

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை இரண்டு வகைகளில் உள்ளன. முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் என்ற வேறுபாடில்லாமல் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை ஒரு வகையாகும்.

மற்றொரு வகை முஸ்லிமுக்கு மட்டும் தடுக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்கள் செய்தால் தடுக்காமல் விடப்படுபவை. மது அருந்துவது முஸ்லிமுக்குத் தடை செய்யப்பட்டது போலவே இஸ்லாமிய அரசில் முஸ்லிமல்லாதவருக்கும் இது தடை செய்யப்பட்டதாகும். முஸ்லிமல்லாதவர் மது அருந்தினாலும் விற்பனை செய்தாலும் அது இஸ்லாமிய அரசில் தடுக்கப்படும். அதே நேரத்தில் பட்டாடை அணிவது முஸ்லிம் ஆண்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிமல்லாத ஆண்களுக்கு இது தடை இல்லை. எனவே பட்டாடையை முஸ்லிமல்லாத ஆண்களுக்கு விற்பனை செய்யலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : (ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் நுழைவாயிலருகே கோடுபோட்டபட்ட அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, அல்லாஹ்வின்தூதரே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால் ஜுமுஆ நாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்ளலாமே! என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மறுமையில் எந்தப் பேறும் இல்லாதவர் தாம் (இம்மையில்) இதை அணிவார் என்று கூறினார்கள். பின்னர் அதே வகையைச் சேர்ந்த சில பட்டு  அங்கிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றில் ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களே! (பனூ தமீம் குலத்து நண்பர்) உதாரித் அவர்கள் வழங்கிய கோடு போட்ட பட்டு அங்கி விஷயத்தில் வேறு விதமாகச் சொன்னீர்களே! என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அதை நீங்கள் அணிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக உமக்கு நான் கொடுக்கவில்லை! (அதன் மூலம் வேறு ஏதேனும் வகையில் நீங்கள் பயன் பெற்றுக் கொள்ளவே நான் வழங்கினேன்) என்று கூறினார்கள். ஆகவே, உமர்பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மக்காவிலிருந்த இணை வைப்பாளரான தம் சகோதரர் ஒருவருக்கு அதை அணியக் கொடுத்து விட்டார்கள். இந்த அடிப்படையில் தான் தமக்குக் கிடைத்த பட்டாடையை முஸ்லிமல்லாத தன் சகோதரருக்கு உமர் ரலி வழங்கினார்கள். (புஹாரி: 886)

வட்டி, விபச்சாரம், மது, சூது, மோசடி, லஞ்சம், திருட்டு, கொலை, மற்றும் அனைவருக்கும் கேடு விளைவிப்பவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்றால் இஸ்லாமிய அரசில் முஸ்லிமல்லாதவருக்கும் அது தடை தான். முஸ்லிமல்லாதவருக்காக மட்டும் ஒருவர் விபச்சார விடுதி நடத்துவது எவ்வாறு குற்றமோ அது போல் வட்டிக்கு விடுவதும், வட்டிக்கு வாங்குவதும் முஸ்லிமல்லாதவருக்கும் தடுக்கப்பட்டது தான். இந்த பாவமான காரியத்துக்கு நாம் துணைபோகக்கூடாது. நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்:)

வட்டிக்குத் துணைபோகக்கூடியவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.                         ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள். நூல் : (முஸ்லிம்: 3258)

எனவே வேறுக் கொள்கையில் உள்ளவர்கள் வட்டி வாங்கினாலும் அதற்கு நாம் உதவி செய்யக்கூடாது.

ஃபிக்சட் டெபாசிட்

வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் என்ற முறை ஒன்று உள்ளது. குறிப்பிட்ட வருடத்துக்கு மாதம் மாதம் குறிப்பிட்டத் தொகையை கட்ட வேண்டும். உதாரணமாக 5 வருடத்துக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் கட்ட வேண்டும். நாம் கட்டிய பணத்தை 5 வருடம் முடிவதற்கு முன்பு பெற முடியாது. 5 வருடம் கழித்தே பெற முடியும்.

5 வருடத்தில் நாம் அறுபதாயிரம் ரூபாய் கட்டி இருப்போம். ஆனால் வங்கி நமக்கு பணத்தை திருப்பித் தரும்போது நாம் கட்டிய தொகையை மட்டும் கொடுக்காமல் அதை விட கூடுதலான பணத்தையும் சேர்த்துக் கொடுக்கும். உதாரணமாக நாம் கட்டிய தொகை அறுபதாயிரம் என்றால் வங்கி நமக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கும். ஐந்து வருட காலங்கள் நம்முடைய பணத்தை 65 பயன்படுத்தியதற்காக வங்கி கூடுதலாக நாற்பதாயிரம் ரூபாயை கொடுக்கின்றது. இது தெளிவான வட்டியாகும்.

கடன் அட்டை பயன்படுத்தலாமா?

வங்கியில் கணக்கு வைத்தவர்களுக்கு வங்கி கடன் அட்டையை வழங்கும். இந்த அட்டையை பன்படுத்தி வெளி இடங்களில் பொருட்களை வாங்க முடியும். நாம் வாங்கிய பொருட்களுக்கு வங்கி பணத்தை செலுத்தும். இந்த அட்டைக்கு கிரடிட் கார்டு (கடன் அட்டை) என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு கடன் வாங்கியவருக்கு வங்கி குறிப்பிட்ட நாட்கள் தவணை கொடுக்கும். அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கி கொடுத்த கடனை திருப்பி அடைத்து விட வேண்டும். அடைக்காவிட்டால் கடன் வாங்கியவர் வங்கியிடம் வட்டி கட்ட வேண்டும். வங்கியுடன் மேற்கண்டவாறு ஒப்பந்தம் செய்து கையெழுத்து இட்டால் தான் வங்கி கடன் அட்டையை கொடுக்கும். வங்கி கொடுக்கும் அவகாசத்துக்குள் கடனை அடைத்துவிட்டால் வட்டி கட்ட வேண்டிய நிலை வராது. எ

னவே வட்டி கட்டாத வகையில் இந்த அட்டையை வாங்கி பயன்படுத்தலாம் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியானக் கருத்து போலத் தெரிந்தாலும் சற்று ஆழமாக சிந்தித்தால் கடன் அட்டையை பன்படுத்துவது முற்றிலும் தவறானது என்பதை அறியலாம். ஒருவர் வட்டி கட்டாமல் கடன் அட்டையை பயன்படுத்திக் கொண்டால் அவர் வட்டி வாங்கிய பாவத்தையோ வட்டி கொடுத்த பாவத்தையோ செய்யவில்லை. ஆனால் மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு காரியத்தை ஏற்றுக்கொண்டவராகிவிடுகின்றார்.  குறிப்பிட்ட நாட்களை கடந்தால் வட்டி கட்டுவேன் என்று வங்கியிடம் ஒப்பந்தம் செய்கிறார். இது மார்க்கத்திற்கு மாற்றமான ஒப்பந்தம். ஒரு முஸ்லிம் இதில் எப்படி கையெழுத்து இட முடியும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் ஒரு தீமையை                          (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல் : (முஸ்லிம்: 78)

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்ôவின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத்தக்கதும், உறுதியானதும் ஆகும்! எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : (புகாரி: 2155)

இவ்வாறு ஒப்பந்தம் செய்தால் ஒரு தீமையை அங்கீகரித்த குற்றம் ஏற்படும். இந்த ஒப்பந்தம் செய்யாமல் கடன் அட்டையை வாங்க முடியாது. வங்கி இவ்வாறு கடன் வழங்குவதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. கடன் வாங்கி விட்டால் இயலாமை அலட்சியம் மறதி போன்ற காரணங்களால்  குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை செலுத்த முடியாத நிலை மனிதனுக்கு ஏற்படும். கடன் அட்டை வாங்கியவன் பெரும்பாலும் வட்டி கட்டும் நிலைக்கு ஆளாகிவிடுவான் என்ற எதிர்பார்ப்பில் வங்கி இவ்வாறு செய்கின்றது. ஹராமான விசயங்களை தவிர்த்துக் கொள்வதோடு அதில் விழுவதற்கான வாய்ப்புகளையும் பேணுதல் அடிப்படையில் தவிர்க்க வேண்டும் என மார்க்கம் அறிவுறுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேயோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (புகாரி: 52)

எனவே வட்டியில் நம்மை தள்ள நினைப்பவர்களுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது.

சொன்னால் குற்றமா?

நம்முடைய செயல்பாட்டில் வட்டியை கொண்டு வந்தால் தானே குற்றமாகும். வட்டி செலுத்துவேன் என்று வாயளவில் கூறுவது எப்படி தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர். மார்க்கத்தில் பாவமான காரியத்தை செய்வது குற்றமாக இருப்பதைப் போன்று பாவமான காரியத்தை பேசுவதும் குற்றமாகும். ஒரு பாவத்தை மனதிற்குள் நினைத்தால் அதற்கு குற்றம் ஏற்படாது. ஆனால் அதை பேசிவிட்டாலோ செய்துவிட்டாலோ அதற்கு குற்றம் ஏற்படும்.

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத் தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன்:)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான். இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல் : (புகாரி: 2528)

ஒரு விசயத்தை பேசுவதும் எழுதுவதும் ஒன்றாகும். ஒருவரை திட்டிப் பேசினால் எப்படி கோபப்படுவாரோ அது போன்று திட்டி எழுதினாலும் கோபப்படுவார். சொல்லப்போனால் ஒப்பந்தம் போன்ற விசயங்களில் பேச்சை விட எழுத்தே வழுமை வாய்ந்ததாக இருக்கின்றது. எனவே வட்டி கொடுப்பேன் என்று கூறுவதும் எழுதிக்கொடுப்பதும் தவறாகும்.

எம்எல்எம்-மல்டிலெவல் மார்க்கெட்டிங் கூடுமா?

எம்எல்எம் (மல்டிலெவல் மார்க்கெட்டிங்) சங்கிலித்தொடர் வியாபாரம் என்பதில் பல வகைகள் உள்ளன. அனைத்து முறைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவைதான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமானதாகும். குறைந்த தொகைக்கு அதிக மதிப்புள்ள பொருள் வழங்குவது வியாபாரத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும். என்றாலும் சில கம்பெனிகள் இவ்வாறு அறிவிப்பு செய்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் 2000 ரூபாய் கட்டினால் மூன்று மாதம் கழித்து 10000 மதிப்புள்ள கலர் டிவி தருவோம் என்று விளம்பரம் செய்வார்கள்.

அவ்வாறே சிலருக்கு வழங்கவும் செய்வார்கள். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல் இவ்வாறு சிலருக்கு வழங்கப்படுவதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். இதைத்தான் அந்த ஏமாற்றுக் கம்பெனியினரும் எதிர்பார்த்தார்கள். இவ்வாறு அதிகமானோர் பணம் கட்டியவுடன் யாருக்கும் எதையும் வழங்காமல் மொத்தமாகப் பணத்தைக் கையாடல் செய்து சுருட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு குறைவான பணத்திற்கு அதிக மதிப்புடைய பொருள் தரப்படும் என்று அறிவிக்கும் போதே இது ஒரு மோசடி வியாபாரம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இது போன்று தான் மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்பதும் . இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பலவகைகள் உள்ளன.

முதல்வகை

நம்மிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு அதைவிட மிகக் குறைந்த மதிப்பிலான ஒரு பொருளைத் தருவார்கள். உதாரணத்திற்கு நாம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் கட்டினோம் என்று சொன்னால் 6 கிராம் தங்கக்காசு தருவார்கள். 6கிராம் தங்கக் காசிற்கு 15000 (பதினைந்தாயிரம்) ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நம்மிடமிருந்து அதிகப்படியாக 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் பிடித்து வைத்துக் கொள்வார்கள். இவ்வாறு நம்மிடமிருந்து ஒரு கணிசமான தொகையைக் கொள்ளையடித்து விடுவார்கள். .

நம்மிடம் பெற்ற பணத்தை விட மிகக் குறைவிலான மதிப்புள்ள பொருளைத் தந்து விட்டு அந்தப் பொருளைப் பற்றி பலவிதமான பொய்மூட்டைகள் அவிழ்த்து விடுவார்கள். இது சாதாரண தங்கக் காசு அல்ல. இதை ஆன்லைனில் விளம்பரம் செய்தால் பலகோடிக்கு விற்பனையாகிவிடும். இதைப் போன்று யாரும் தயாரிக்க முடியாது என்றெல்லாம் கூறி அப்பாவிகளை நம்ப வைப்பார்கள். பெரும் தொகையைக் கொடுத்து விட்டு அதைவிடக் குறைந்த மதிப்பிலான பொருளைப் பெறுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்காக அவர்களிடம் நீங்கள் இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்கள் இருவரும் இரண்டிரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குப் பின்னால் ஆறு பேர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போனஸôகக் கிடைக்கும் என்று கூறுவார்கள். 71 அவ்வாறு ஆறு பேர் சேரவில்லை என்று சொன்னால் உங்களுடைய 35000 (முப்பந்தைந்தாயிரம்) ரூபாய் திரும்பக் கிடைக்காது என்று நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள். தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் தன்னைப் போல் ஆறு நபர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று அந்தக் கம்பெனியிடம் வழங்குவார்..

தனக்கு கம்பெனி கூறியதைப் போன்று அவர்களிடம் அவர் கூறுவார். இவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தக் கம்பெனி 35000 ரூபாய் பிடித்து வைத்துக் கொண்டு முதலாமவருக்கு சொன்னது போன்றே மற்றவர்களுக்குச் சொல்லுமாறு தனக்கு கீழ் உள்ளவரிடம் கூறும். ஆறு நபர்களைச் சேர்த்து விட்டவுடன் கிடைக்கும் பல இலட்சங்களில் முதலமாவருக்கு ஒரு சிறுதொகையை போனஸôக அந்தக் கம்பெனியினர் வழங்குவார்கள். அவர் தனக்குக் கீழ் உள்ளவர் ஆறு நபர்களைச் சேர்த்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை போனஸôக வழங்குவார். இவ்வாறு நமக்குப் பின்னால் சங்கிலித் தொடர் போன்று இணைபவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அதற்கு முன்னால் உள்ளவர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.

ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு போனஸôக வழங்குவார்கள். இதில் எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை. எந்தப் பொருளையும் வியாபாரம் செய்து அவர் இலாபம் சம்பாதிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி இதில் இணையவைத்து அவருடைய பொருளைக் கொள்ளை அடிப்பதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை. 72 ஒவ்வொருவரிடமும் அடிக்கும் கொள்ளையில் பெரும் பகுதியை அந்தக் கம்பெனி வைத்துக் கொள்ளும். சிறு பகுதியை உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும். இவ்வாறு தனக்கு அதிகமான போனஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல இலட்சங்களைப் பலரிடம் வாங்கி தனக்குப் பின்னால் பலர் இருப்பதைப் போன்று காட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார். இப்படி பல கோடிகள் சேர்ந்தவுடன் அந்தக் கம்பெனி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உறுப்பினர்களுக்கு டாடா காட்டிவிடும். இது போன்ற மோசடி வியாபாரத்தில் எந்த ஒரு உறுப்பினரிடமும் அந்தக் கம்பெனி நேரடியாகச் சென்று பணத்தைப் பெறாது.

ஒவ்வொருவருக்கும் தான் யாரிடம் பணம் கட்டினோம் என்பது மட்டும்தான் தெரியுமே தவிர அவருக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது. பணத்தை இழந்தவர்கள் யாரிடம் போய் கேட்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள். இன்றைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டு பலகோடிகளை இழந்துள்ளனர். பலர் நஷ்டமடைந்து தற்கொலை செய்துள்ளனர். இப்படி அறியாத விதத்தில் பிறர் பொருளைக் கொள்ளை அடித்துச் சம்பாதிப்பதை எப்படி வியாபாரம் என்று கூறமுடியும்? இது எப்படி ஹலாலான வியாபாரமாக ஆகமுடியும்.

இரண்டாவது வகை

இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் மற்றொரு வகையான மோசடியும் நடைபெறுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி இல்லாத பொய்களைச் சொல்லி அதனை மிகப்பெரும் விலையில் யாருக்காவது விற்பதாகும். வியாபாரத்தில் பொய் சொல்லி சம்பாதிப்பது ஹராம் ஆகும். அது வியாபாரத்தின் பரக்கத்தை அழித்துவிடும். சாதரண ஒரு படுக்கையை இது அதி அற்புதமான சக்திவாய்ந்த மூலிகைப் படுக்கை அல்லது காந்தப் படுக்கை. இதில் படுத்தால் குறுக்கு வலி குணமாகிவிடும். மலட்டுத் தன்மை நீங்கி விடும். கேன்சர் குணமாகி விடும்.

இது போன்ற ஒரு கண்டுபிடிப்பை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையம் இதற்கு சர்ட்டிஃபிகேட் வழங்கியுள்ளது என்று பலவிதமான பொய்களைக் கூறி நம்பவைத்து மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள். சாதாரண ஒரு பற்பசையை இதனை பட்டாணி அளவில் வைத்தாலே அதிக அளவில் நுரை வரும். இதில் பல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றெல்லாம் பொய் கூறி நம்பவைத்து அதிகமான விலையில் விற்பனை செய்வார்கள். இந்த வியாபாரத்தைப் பற்றி விளக்குகிறோம் என்ற பெயரில் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் கூட்டி லேப்டாப்பில் பல விதமான காட்சிகளைக் காட்டுவார்கள்.

நான் மிகவும ஏழையாக இருந்தேன். இந்த வியாபாரத்தில் சேர்ந்தவுடன் மிகப் பெரும் பணக்காரானாகி விட்டேன் என்றெல்லாம் சிலர் பேசும் காட்சிகளைக் காட்டுவார்கள். உற்பத்திச் செலவு இரண்டாயிரம் உள்ள பொருளை இப்படி பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.

இங்கு சங்கிலித் தொடர் எப்படி வருகிறது என்று சொன்னால் நாம் ஒரு பொருளை வாங்கியவுடன் அந்தக் கம்பெனி பின்வருமாறு நம்மிடம் கூறும். நீங்கள் ஒரு ஐந்து உறுப்பினர்களிடம் இந்தப் படுக்கையை வாங்க வைத்தால் ஒவ்வொரு படுக்கைக்கும் உங்களுக்கு ஜந்தாயிரம் ரூபாய் கிடைக்கும் என்பார்கள்.

ஐந்து உறுப்பினர்களை நாம் சேர்த்தால் நமக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கிடைத்துவிடும். இந்தப் பணத்தை அடைவதற்காக கம்பெனி தன்னிடம் எதையெல்லாம் கூறி ஏமாற்றி விற்பனை செய்ததோ அது போன்று இவரும் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கூறி வியாபாரம் செய்வார். இவருக்குக் கீழ் உள்ள ஐந்து பேரும் தங்களுக்குக் கீழ் தலா ஐந்து நபர்களைச் சேர்த்தால் இவருக்கு ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலாபமாக வழங்குவார். ஒவ்வொருவரும் தான் யாரிடம் பொருள் வாங்கினோம் என்பதை மட்டும்தான் அறிவார்கள்.

யாரும் கம்பெனியோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது. இது போன்ற பொருட்களை எந்தக் கடையிலும் வைத்து விற்பனை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை வாங்கிய மக்கள் உரிய பலன் கிடைக்காமல் ஏமாறும் போது இதனை விற்பனை செய்யும் மூலத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே வியாபாரம் செய்வார்கள். நாம் உதாரணத்திற்குத்தான் பொருட்களையும் அதற்கு வழங்கப்படும் இலாபத்தையும் குறிப்பிட்டுள்ளோமே தவிர பல கம்பெனிகள் பல பொருட்களைப் பல விதமான இலாப சதவிகிதத்தில் ஏமாற்றி விற்பனை செய்கின்றன. இவ்வாறு பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி செய்யப்படும் வியாபாரம் எப்படி ஹலாலான வியாபாரமாக இருக்க முடியும்.?

மூன்றாவது வகை

அன்றாடம் தேவைப்படக்கூடிய சில அவசியமான பொருட்களை ஒரு கம்பெனி தயார் செய்யும். உதாரணத்திற்கு சோப்பு, பவுடர், பேஸ்ட். சட்டை இது போன்ற பொருட்களைத் தயார் செய்யக் கூடிய ஒரு கம்பெனியாக இருக்கும். இவர்கள் தயார் செய்யும் பொருட்களை இவர்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் ஆட்களைப் பிடித்து அவர்களின் மூலம் விற்பனை செய்வார்கள். இதற்கு அவர்கள் நிபந்தனை விதிப்பார்கள்.

யார் அவர்களுடைய கம்பெனியில் உறுப்பினர்களாக இணைகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அவர்கள் வியாபாரச் சரக்கை வழங்குவார்கள். உறுப்பினர்களாக இல்லாதவர்ககுக்கு வியாபாரச் சரக்கு வழங்க மாட்டார்கள். அவர்களுடைய கம்பெனியில் நாம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று சொன்னால் நாம் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்ட வேண்டும். அதில் ஒரு கணிசமான தொகை உறுப்பினர் கட்டணம் என்று எடுத்துக் கொண்டு மீதித் தொகைக்கு நாம் வியாபாரம் செய்வதற்கு சரக்கு தருவார்கள். உதாரணத்திற்கு ஒருவர் 20,000 ரூபாய் செலுத்தினால் 10,000 ரூபாயை உறுப்பினர் கட்டணம் எனப் பிடித்துக் கொண்டு 10,000 ரூபாய்க்கு சரக்கு தருவார்கள்.

அவர்கள் நமக்கு குறிப்பிட்ட விலையில் சரக்கினைத் தருவார்கள். நாம் அதனை விற்றால் நமக்கு அதில் இலாபம் கிடைக்கும். இவ்வாறு மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் இத்தோடு நில்லாமல் நீங்கள் விற்பனை செய்வதோடு நின்று விடாமல் நீங்கள் இரண்டு உறுப்பினர்களை எங்கள் கம்பெனியில் சேர்த்து விட்டால் அவர்கள் செய்யும் விற்பனையில் கிடைக்கும் இலாபத்திலிருந்து உங்களுக்கு நாங்கள் பங்கு தருவோம் என்று நமக்கு கூறுவார்கள். 76 உதாரணத்திற்கு நாம் சேர்த்துவிடுகின்ற இருவர் ஒரு மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் நமக்கு இலாபத்தில் இரண்டு சதவிகிதம் அல்லது குறிப்பிட்ட ஒரு அளவு பங்கு தருவார்கள். இத்தோடு நில்லாமல் நம்மால் சேர்த்து விடப்பட்ட இரண்டு பேர் ஒவ்வொருவரும் இன்னும் இரண்டு நபர்களைச் சேர்த்து விடுவார்கள்.

அவர்கள் செய்யும் விற்பனையிலிருந்தும் நமக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் இலாபமாகக் கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து சங்கிலி போன்று செல்லும் போது ஒவ்வொரு மட்டத்தினர் செய்கின்ற வியாபாரத்திலிருந்தும் முதலாமவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்கின்ற வியாபாரத்தின் இலாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும். சில நேரங்களில் 100 பேர் , 200 பேர் என்று அதிகமான நபர்கள் சங்கிலித் தொடராகச் சேரும் போது முதல் நிலையில் உள்ளவருக்கு இலட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

நம்முடைய எந்த முதலீடும் இல்லாமல் மற்றவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு நமக்கு லாபம் கிடைப்பது எப்படி மார்க்க அடிப்படையில் ஹலாலான சம்பாத்தியமாக இருக்க முடியும்? நாம் எந்த வியாபாரமும் செய்யாமல் நமக்கு இலாபம் கிடைக்கிறது எனும் போது அது ஹராமானா சம்பாத்தியமாகத்தான் இருக்கும். நாம் சேர்த்து விடுவதினால் மட்டும் நமக்கு இலாபம் கிடைக்கும் என்பது நியாயமானது கிடையாது. ஒரு வாதத்திற்குச் சரி என்று வைத்து கொண்டாலும் முதல் இருவரைத்தான் நாம் சேர்த்து விடுகிறோம். அவர்களுக்குப் பின்னால் இணைபவர்கள் வியாபாரத்தில் இருந்தும் நமக்கு பங்கு வருகிறதே? இப்படி இலாபம் கொடுக்க வேண்டும் என்பதற்காக குறைவான உற்பத்திச் செலவுள்ள பொருட்களைக் கூட பொய்களைச் சொல்லி அதிகமான விலைக்கு விற்பனை செய்ய வைக்கின்றார்கள். இப்படி பொய்களைச் சொல்லி விற்பனை செய்வதின் மூலம் அந்த வியாபாரம் ஹராமானதாக மாறிவிடுகிறது.

பொதுவாக எந்தெந்த வியாபாரங்களில் எல்லாம் ஏமாற்றுதல், மோசடி, பொய் போன்றவை காணப்படுகிறதோ அவை அனைத்துமே ஹராமான வியாபாரங்கள்தான். வியாபாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்த சில போதனைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள். (முஸ்லிம்: 3033)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் ”உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ”ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, ”மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.  நூல் : (முஸ்லிம்: 164)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! இதை ஹகீம் பின் ஹிஸôம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                       நூல்: (புகாரி: 2079)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல. அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி) நூல் : (இப்னுமாஜா: 2237)

பங்குச் சந்தை மோசடி

வட்டி தான் இந்தச் சீரழிவுக்குக் காரணம் என்றால் அதை மேலும் தீவிரப்படுத்தியது பங்குச் சந்தை எனும் சூதாட்டம் எனலாம். ஒரு நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதோ அது தான் அந்நிறுவனத்தின் உண்மையான மதிப்பு. ஆனால் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள அல்லது இருப்பு வைத்துள்ள நிறுவனத்தின் பங்குகளை ஆயிரம் கோடி என்று மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் பங்குச் சந்தை.

புரிந்து கொள்வதற்காக சிறிய தொகையை உதாரணமாகக் கொண்டு இதைப் பின்வருமாறு விளக்குகிறோம். ஒரு நிறுவனத்தில் நூறு ரூபாய் அளவுக்குத் தான் இருப்பு உள்ளது. இதை நூறு பங்காக ஆக்கினால் ஒரு பங்கு ஒரு ரூபாய் தான். ஆனால் ’’அந்த நிறுவனம் முக்கியமான பொருளைத் தயாரிக்கிறது. அதன் பங்குகளை வாங்கினால் அதை விட அதிகமான தொகைக்கு ஏமாளிகள் தலையில் கட்டலாம்’ என்று ஆசை காட்டி ஒரு ரூபாய் பங்கை பத்து ரூபாய்க்கு விற்கின்றனர். இப்படி நூறு பங்கையும் வாங்கியவர்கள் ஒன்று கூடி அந்த நிறுவனத்தை தங்கள் கையில் எடுத்தால் அதில் நூறு ரூபாக்குத் தான் சரக்கு இருக்கும். ஆனால் இவர்கள் இதற்கு அழுதது 1000 ரூபாய்.

உண்மை மதிப்பை விட ஏன் அதிகம் கொடுத்து வாங்குகிறார்கள்? அந்தக் கம்பெனியில் அவ்வளவு இருப்பு உள்ளது என்பதற்காக அல்ல. அந்தக் கம்பெனியின் பங்குகளை வாங்குவது அதன் உரிமையாளராவதற்காக அல்ல. மாறாக பத்து ரூபாய்க்கு வாங்கியதை எவன் தலையிலாவது அதை விட அதிகமாகக் கட்டி விடலாம் என்பது தான் காரணம். இந்த மோசடியை உலகிற்குக் கற்றுத் தந்தவர்கள் அமெரிக்கர்கள் தான். பைசா பெறுமானமில்லாத நிறுவனங்களின் பங்குகளை செயற்கையாக ஏற்றி கோடி கோடியாகச் சுரண்டினார்கள். வங்கிகள் திவாலான பின் அனைத்து நிறுவனங்களும் இனி மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஒரு லட்சம் டாலருக்கு பங்கு வாங்கியவன் அதை ஆயிரம் ரூபாய்க்குக் கூட விற்க முடியாத நிலை. இதுவும் அமெரிக்காவை அதள பாதாளத்துக்குக் கொண்டு சென்று விட்டது. இவ்வளவு நடந்த பின்பும் மீண்டும் பங்குச் சந்தை சூதாட்டத்தை தூக்கி நிறுத்தவும் வங்கிகள் மீண்டும் வட்டித்தொழில் செய்ய மக்களின் பணத்தை அள்ளி 80 இறைப்பதைக் காணும் போது இவர்கள் இந்த வீழ்சிக்கான காரணத்தைக் கூட அறியவில்லை என்பது தெளிவாகிறது.

வியாபாரத்தில் சூது, ஏமாற்றுதல், செயற்கையாக மதிப்பை அதிகப்படுத்துதல் போன்ற அயோக்கியத்தனங்களை இஸ்லாம் தடை செய்துள்ளது. இதை விளங்கி நடந்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது என்று அடித்துச் சொல்ல முடியும்.

தவணை வியாபாரம்

பொருட்களை தவணை அடிப்படையில் விற்பனை செய்வது தவறல்ல. தவணையில் வட்டி என்ற அம்சம் சேரக்கூடாது. தவணைக்காக கூடுதல் பணம் வாங்கினால் அது வட்டியாகிவிடும்.

பணத்தை உடனடியாக கொடுத்தால் ஒரு விலையும் கடனாக கொடுத்தால் இன்னொரு விலையும் வைக்கக்கூடாது. உதாரணமாக உடனடியாக பணம் கொடுத்தால் ஒரு சோப்பின் விலை 10 ரூபாய் என்றால் இதை கடனாக வாங்கினால் 12 ரூபாய் என்று கடனுக்காக விலையை கூட்டினால் இது வட்டியாகும். அதே நேரத்தில் உடனடியாக பணம் கொடுத்தாலும் தாமதமாக பணம் கொடுத்தாலும் பொருளின் மதிப்பு 12 ரூபாய் தான் என்று முடிவு செய்தால் இது வட்டியாகாது.

இங்கே ஒரு முக்கியமான விசயத்தை கவனிக்க வேண்டும். ரொக்கத்திற்கு ஒரு மதிப்பும் கடனுக்கு ஒரு மதிப்பும் வைப்பதே தவறு. கடனுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக இரண்டு விலை வைப்பது தவறில்லை. சில்லறையாக வாங்குபவருக்கு ஒரு விலையும் மொத்தமாக வாங்குபவருக்கு ஒரு விலையும் வைத்து விற்பனை செய்யலாம். ஒரு பொருளை ஒருவருக்கு 50 ரூபாய்க்கு விற்கும் போது இன்னொருவருக்கு நமது லாபத்தை குறைத்து 45 ரூபாய்க்கு விற்கலாம். இது நம்முடைய உரிமையை விட்டுக்கொடுப்பதாகும். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.

ஏலச் சீட்டு

ஏலச் சீட்டுத் திட்டத்தில் சுமார் 10 பேர் இணைந்திருந்தால் இவர்களில் ஒருவர் இதில் இணைந்த அனைவரிடமும் மாதம் மாதம் பணத்தை வசூலித்து இதை நடத்தும் பொறுப்பாளராக இருப்பார். ஒவ்வொருவரும் மாதம் 1000 ரூபாய் என்ற வீதம் 10 மாதத்துக்கு கட்டுவார்கள். ஒவ்வொரு மாதத்திலும் ஒரு லட்சம் ரூபாய் சேர்ந்தவுடன் அனைவரும் கூடுவார்கள். பிறகு இந்தப் பணத்தை வாங்குவதற்கு போட்டி நடக்கும்.

யார் அதிகமான வட்டி செலுத்துவதாக ஒத்துக்கொள்கிறாரோ அவருக்கு பணம் ஒப்படைக்கப்படும். அதாவது ஒருவர் 90 ஆயிரம் எனக்கு கொடுத்தால் போதும். 10 ஆயிரம் ரூபாயை நான் பொதுவில் விட்டு விடுகிறேன் என்று கேட்பார். இன்னொருவர் 80 ஆயிரம் கொடுத்தால் போதும். 20 ஆயிரம் ரூபாயை பொதுவில் விட்டு விடுகிறேன் என்று கேட்பார். இன்னொரு நபர் 70 ஆயிரம் கொடுத்தால் போதும். 30 ஆயிரம் ரூபாயை பொதுவில் விட்டு விடுகிறேன் என்று கேட்பார். இம்மூவரும் 10 மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் கட்டுவார்கள் என்றாலும் சீக்கிரமாக பணத்தை வாங்குவதற்காக ஒரு லட்சத்தை வாங்காமல் அதை விடக் குறைவானத் தொகையை பெற சம்மதிக்கிறார்கள். இவர்களில் 70 ஆயிரம் ரூபாயை கேட்டவர் அதிகமான பணத்தை கொடுக்க முன்வருவதால் இவருக்கு 70 ஆயிரம் ரூபாய் பணம் உடனடியாக தரப்படும்.

ஆனால் இவர் இதற்குப் பிறகும் 10 மாதம் வரை மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். மொத்தத்தில் ஒரு லட்சம் கட்ட வேண்டும். இந்தக் குழுவின் தலைவர் ஒரு லட்சத்தில் 70 ஆயிரம் ரூபாயை இவருக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள 30 ஆயிரம் ரூபாயை மற்ற ஒன்பது பேருக்கும் சமமாக பிரித்து வழங்குவார். 82 இது தெளிவான வட்டியாகும். கடனுக்காக கூடுதல் தொகை கொடுப்பதும் கூடுதல் தொகை வாங்குவதும் வட்டியாகும்.

இந்த இரு அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது. இதில் பலர் கூட்டு சேர்ந்து வட்டித் தொழில் செய்கின்றனர். ஒரு லட்சம் ரூபாயை வாங்க வேண்டியவன் தனக்கு உடனே பணம் கிடைக்கின்றது என்பதற்காக 10 ஆயிரத்தையோ 20 ஆயிரத்தையோ 30 ஆயிரத்தையோ கூடுதலாக கொடுக்கின்றான். இதில் இணைந்த ஒவ்வொருவரும் பணத்தை வாங்கும் போது வட்டி கொடுப்பவராகவும் பணத்தை விட்டுக் கொடுக்கும் போது வட்டி வாங்குபவராகவும் இருக்கின்றனர்.

பிராவிடண்டு ஃபண்ட் (PF)

அரசாங்கம் அரசு ஊழிகயர்களின் மாத வருமானத்தில் குறிப்பிட்ட அளவை மாதம் மாதம் எடுத்துக்கொள்ளும். ஊழியர்களின் எதிர்கால நன்மைக்காக அரசாங்கம் இதை கட்டாயமாக செய்து வருகின்றது. ஊழியர்களுக்கு திடீர் தேவைகள் ஏற்பட்டாலோ அல்லது பணிக்காலத்தை முடித்து ஓய்வு பெறும்போதோ இந்தத் தொகை முழுவதையும் அரசாங்கம் ஒப்படைக்கும். ஆனால் இதனுடன் கூடுதலான வட்டிப் பணத்தையும் சேர்த்துக்கொடுக்கும்.

நமது சம்பளத்தில் பிடிக்கப்பட்டத் தொகை 5 லட்சம் என்றால் அரசாங்கம் ஒரு லட்சத்தை வட்டியாக சேர்த்து 6 லட்சம் வழங்கும். பெரிய அளவிலான சில தனியார் நிறுவனங்களிலும் இந்தத் திட்டம் கட்டாயமாக கடைபிடிக்கப்படுகின்றது. ஊழியர்களின் விருப்பத்தைக் கேட்காமல் வலுக்கட்டாயமாக வாங்கப்படுவதால் இது நிர்பந்தமான நிலையாகும்.

இயன்றவரை அரசாங்கம் தரும் கூடுதல் வட்டிப் பணத்தை வாங்காமல் நம் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட தொகையை மட்டும் வாங்க முயற்சிக்க வேண்டும். 83 அல்லது நமது பணத்துக்கு அரசாங்கம் கொடுக்கும் வட்டிப் பணத்தை அப்படியே விட்டு விட்டு லோன் கேட்டு நமக்குரிய அசல் தொகையை மட்டும் வாங்கிக்கொண்டால் வட்டி வாங்குவதிலிருந்து தப்பிக்கலாம்.