04) ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது
ஓரிறை கோட்பாட்டின் மீது தான் இஸ்லாம் என்கிற சித்தாந்தமே நிறுவப்பட்டிருக்கிறது. இன்று பரவலாக மக்கள் நம்பியிருக்கும் பல தெய்வ நம்பிக்கையை இஸ்லாம் ஏற்கவில்லை. மாறாக, அவற்றை அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கையாகவே பார்க்கின்றது.
சம அளவிலும், சம அந்தஸ்து மற்றும் அதிகாரம் கொண்டவராகவும் ஒரு துறைக்கு இருவர் இருக்க முடியாது என்பதே உலக நியதி.
ஒரு தேசத்தின் பிரதமராக ஒருவர் இருந்தால் அந்த தேசம் கட்டுக்கோப்பாக செல்லுமா அல்லது, சம அதிகாரத்துடன் இருவர் இருந்தால் கட்டுக்கோப்பு இருக்குமா?
ஒரு வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுனராக நாம் ஒருவரை தான் நியமிப்போம்.. ஒரு ஓட்டுனர் இருந்தால் தான் அந்த வாகனம் கட்டுக்கோப்பாக செலுத்தப்படும்.
ஒரே நேரத்தில் ஒரு வாகனத்தை செலுத்த இரு ஓட்டுனர்கள் அமர்த்தப்பட்டால் அதையே நம் அறிவு ஏற்றுக் கொள்ளாது எனும் போது, ஒட்டு மொத்த இந்த அண்ட சராசரங்களையும், கோள்களையும், கடல், மலைகளையும், அனைத்து ஜீவராசிகளையும் கட்டுக்கோப்பாகவும், எவ்வித குழப்பமின்றியும் செலுத்துவதற்கு சம அதிகாரத்துடன் இரு கடவுள்கள் இருந்தால் அனைத்துமே சின்னாபின்னமாகி விடாதா?
இன்று உலகத்தில் எந்த மத கோட்பாடுகளானாலும் ஏதோ ஒரு வகையில் பல தெய்வ வணக்கம் அங்கு குடி கொண்டிருப்பதைப் பாக்கலாம்.
உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள்.
இறந்தவர்களை வணங்குகிறார்கள்.
தாங்கள் பயன்படுத்துகின்ற பொருட்களை வணங்குகிறார்கள்,
சூரியனை வணங்குகிறார்கள்,
பசுமாட்டை வணங்குகிறார்கள்.
இவ்வாறு மனிதர்களுக்கு சமமானவர்கள் அல்லது மனிதர்களை விட கீழ் நிலையில் இருப்பவர்களை கடவுள் என நம்புவது ஒரு புறமிருக்க, கடவுள் என்றால் நம்மை விட அனைத்து வகையிலும் மேம்பட்டவராக இருக்க வேண்டும் என்று நம்புகின்றவர்கள் கூட, அத்தகைய கடவுள் ஒன்றிற்கு மேற்பட்டவர்களாக நம்பப்படுவதைப் பற்றி கவலை கொள்வதில்லை.
ஆக்குவதற்கு ஒரு கடவுள்! அழிப்பதற்கு ஒரு கடவுள்! காப்பதற்கு ஒரு கடவுள்! துன்பத்தை நீக்க ஒரு கடவுள்! இன்பத்தை வழங்க மற்றொரு கடவுள்! மழைக்குத் தனி கடவுள்! உணவு வழங்க இன்னொரு கடவுள்! கல்விக்கு என்று ஒரு கடவுள்! செல்வத்திற்கு ஒரு கடவுள்..
என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். மக்கள் ஆக்க ஒரு கடவுளும் அழிக்க ஒரு கடவுளும் இருப்பது அறிவுப்பூர்வமானதா? சாத்தியங்கள் கொண்டதா?
ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? காக்கப்படுவானா?
இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறார்.
தோற்றுப் போகிறவர் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவர் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்? என இவை தொடர்பான இஸ்லாமிய சித்தாந்தம் முன்வைக்கின்ற அடிப்படையான கேள்விகள் மூலம், உலகில் கடவுள் என்பவர் தனித்தவராக,அவர் ஏகனாக மட்டுமே இருக்க முடியும் என்கிற புரிதலை நோக்கி மனித சிந்தனையை ஒன்றிணைத்து விடுகிறது..!
இந்தப் பூமியையும், ஏனைய கோள்களையும், அண்ட வெளியையும், அவற்றில் கொட்டிக் கிடக்கின்ற அதிசயங்களையும் நாம் காண்கிறோம்.
இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.
ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட ஒரு பகுதியில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும்; அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது.
இப்போதே அதை கணிக்கின்ற தொழிற் நுட்பத்தை மனிதன் கண்டறிந்து விட்டான் என நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில், இவ்வாறு கண்டறிய முடிகிறது என்றால், சூரியனும் பூமியும் நாம் கண்டறிவதற்கு துணை புரிகின்ற வகையில் சீராகவே காலத்திற்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிற பேருண்மையும் இதிலே ஒளிந்துள்ளது.
இந்த சீர் என்பது ஒரே ஒருவர் இயக்கும் போது மட்டுமே சாத்தியப்படும். பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால் தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை.
இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் கொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கின்றது.
ஆக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களின் அவசியம் இல்லை என்பது மட்டுமல்ல, அது சாத்தியமும் இல்லை என்பதை தான் உலக நடப்புகளின் மூலமே மனிதன் விளங்கி வைத்திருக்கும் பேருண்மையாகும்.
உங்கள் கடவுள் ஒரே கடவுள்தான். அளவிலா அருளாளனும் நிகரிலா அன்பாளனுமாகிய அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. (அல்குர்ஆன் 2:163)
அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறுகிறீர்களா? “நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்” என்று கூறுவீராக! “அவன் ஒரே ஒரு கடவுள்தான்! நீங்கள் இணைவைப்பதை விட்டும் நான் விலகியவன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன்: 6:19) ➚
“உங்களுடைய கடவுள் ஒரே கடவுள்தான் என்றே எனக்கு (தூதுச் செய்தி) அறிவிக்கப்படுகின்றது. எனவே நீங்கள் கட்டுப்படுகிறீர்களா?” என்று (நபியே!) கேட்பீராக! (அல்குர்ஆன் 21:108)
இது போன்ற இறைவசனங்களை திருக்குர்ஆன் மனித குலத்திற்கு பிரகடனம் செய்வதன் அடிப்படை நோக்கம், இவ்வுலகில் வணக்கத்திற்கு தகுதியானவன் ஒரே கடவுள் மட்டுமே என்கிற ஏகத்துவ தத்துவத்தை தெளிவுபடுத்துவதற்கு தான். அதே போன்று, ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்குமானால் அதனால் ஏற்படுகின்ற விளைவையும் திருக்குர்ஆன் அழகாக விளக்குகிறது.
வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவ்விரண்டும் சீர்குலைந்து போயிருக்கும். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அர்ஷின் இறைவனான அல்லாஹ் தூயவன்.
(அல்குர்ஆன் 21:22)
அல்லாஹ், (தனக்குப்) பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இருந்ததில்லை.
அவ்வாறு இருந்தால் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றுடன் சென்றிருப்பார்கள். மேலும் அவர்களில் ஒருவர், மற்றவரைவிட மேலோங்கியிருப்பார். இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
அறிவுக்கு பொருத்தமான தர்க்க ரீதியிலான இந்த வாதம் மூலம் ஓரிறையே இவ்வுலகிற்கும் அனைத்து படைப்புக்கும் உகந்ததாக இருக்கிறது என்பதை திருக்குர்ஆன் விளக்குகிறது.
சீராகவும் செம்மையாகவும் செயல்படுகின்ற அனைத்து படைப்பினங்களுமே ஓரிறை கொள்கைக்கு சாட்சி பகர்ந்த வண்ணம் உள்ளன.
இந்த தத்துவம் ஏதோ முஹம்மது நபி அறிமுகம் செய்த தத்துவமல்ல. மாறாக, இதுதான் மனித குலம் முழுமைக்குமான தத்துவமாக, மனிதகுலம் தோன்றிய நாள் முதலே இறைவனால் அருளப்பட்டிருக்கின்ற தத்துவம் என்கிறது திருக்குர் ஆன்..
“நீர் இணை வைத்தால் உமது நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவீர்” என (நபியே!) உமக்கும், உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவீராக!
(அல்குர்ஆன் 39:65-66)
முன்னர் வாழ்ந்து மறைந்த சமூது கூட்டத்தாருக்கு இதே எச்சரிக்கையை செய்ததாக திருக் குர் ஆன் கூறுகிறது
ஸமூது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது…” என்று கூறினார்.
ஆது சமுதாயத்திடம் இதே எச்சரிக்கையை செய்ததாக திருக்குர் ஆன் கூறுகிறது
ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹுதை அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் (அவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்டார்.
நூஹ் நபியின் சமூகத்தாரிடம் எச்சரிக்கை செய்யப்பட்டதாக திருக் குர் ஆன் கூறுகிறது.
நூஹை, அவரது சமுதாயத்திடம் தூதராக அனுப்பினோம். “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு எந்தக் கடவுளும் இல்லை. நீங்கள் (அவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார்.
நபிகள் நாயகம் அவர்கள் மனித குலத்திற்கு இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி தூதராவார்.
அவர்களுக்கு முன் ஏராளமான இறைத்தூதர்கள், அனைத்து சமுதாய மக்களுக்கும், அனைத்து மொழி பேசுவோருக்கும், அனைத்து காலகட்டங்களிலும் இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்னும் சொல்வதானால், முதன்முதலாய் தோன்றிய மனிதரான ஆதம் அவர்களே இறைவனால் தூதராக தான் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள் என்கிறது திருக்குர்ஆன்.
அவ்வாறு நபிகள் நாயகத்திற்கு முன் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களும் இதே கடவுள் கொள்கையை அந்தந்த சமூக மக்களிடையே போதனை செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்
“அளவிலா அருளாளனையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஏற்படுத்தியுள்ளோமா?” என்று உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக! (அல்குர்ஆன்: 43:45) ➚
கோட்பாட்டளவில் ஓரிறை தான் மனித குல துவக்கம் முதலே போதனை செய்யப்பட்டிருக்கிறது. கால ஓட்டத்தில் மனிதனின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் பெருக பெருக, சித்தாந்த கருத்துக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மனிதன் சுயமாக ஆன்மீக தேடலுக்கான பாதைகளை வகுத்துக் கொண்டதனுடைய விளைவு, இன்று தமது மத கோட்பாடுகளுக்கே மாற்றமாக பல தெய்வ நம்பிக்கையையும் சிலை வணக்கங்களையும் கொண்டிருக்கிறான்.
மற்றுமொரு கோணத்தில் உலக சித்தாந்தங்களை நாம் சிந்திப்போமானால், ஒரு கடவுள் கொள்கையை கடந்த காலங்களில் பலரும் போதித்துள்ளனர் என்பதை அறியலாம். ஆனால் அவர்களே பிற்காலத்தில் “கடவுளர்களாக” ஆக்கப்பட்டனர். ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள் கொள்கைக்கு முடிவு எழுதப்பட்டது.
அதே சமயம், இறுதி இறைத் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு கடவுள் கொள்கையைச் சொன்னார்கள். அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.
நபிகள் நாயகத்துக்கு சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லிமும் வழிபடுவதில்லை.
நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அன்பு என்பது வேறு, ஒரு மனிதனை கடவுளாக கருதுவது என்பது வேறு என்கிற வேறுபாட்டை முஸ்லிம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.
அதனால் தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை என்பது வெறுமனே ஒரு வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் உலகம் முழுவதிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆக, இஸ்லாம் கூறுகின்ற இந்த இறைக் கோட்பாடு என்பது ஆதி மனிதரிடம் போதனை செய்யப்பட்டு, ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் அருளப்பட்ட போதனையாகும்.