04) ஏசு மரணிக்கவில்லை ஆதாரம்: 2

நூல்கள்: ஏசு மரணிக்கவில்லை- ஒரு தெளிவான விளக்கம்

ஏசுவின் பிரார்த்தனை

இப்போது ஏசுவின் பிரார்த்தனையைக் கேளுங்கள்.

பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.

அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம் கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையது தான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.

மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

மத்தேயு 26:39-42

அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது.

லூக்கா 22:44

ஏசு இப்படி ஒரு பெண்ணைப் போன்று அழலாமா? என்ற கேள்வி எழலாம். ஏசு ஒருபோதும் தமக்காக அழ மாட்டார்.

உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

மத்தேயு 5:29, 30

பாவம் செய்த உடலுறுப்பைக் களைந்தெறியச் சொல்லும் ஏசு, தன்னுடலைக் காப்பாற்றுவதற்காக இவ்வாறு வியர்வை சிந்த அழுவாரா? நிச்சயமாக மாட்டார். இவ்வாறு அழுவதற்குக் காரணம், யூத சமுதாயத்திற்காக வேண்டித் தான்.

யூதர்கள் ஒரு வித்தியாசமான வாதத்தை வைத்தனர். மஸீஹ் என்று வரக் கூடிய எவனையும் கொன்று விட்டால் போதும். அவன் பொய்யன் என்பதற்கு அந்தக் கொலையே சான்றாக ஆகி விடும். ஏனெனில் மஸீஹ் – மெஸாயா என்றால் நீண்ட காலம் வாழ்பவர் என்ற பொருளில் யூதர்கள் பயன்படுத்தி வந்தனர். இப்படியொரு விசித்திரமான கருத்தை யூதர்கள் கொண்டிருந்ததற்கு ஓர் அடிப்படையும் இருந்தது.

ஓர் இறைவாக்கினன் எனது பெயரால் பேசுவதாக எண்ணிக் கொண்டு, நான் அவனுக்குக் கட்டளையிடாதவற்றைப் பேசினால், அல்லது வேற்றுத் தெய்வங்களின் பெயரால் பேசினால், அந்த இறைவாக்கினன் சாவான்.

உபாகமம் 18:20

பைபிளின் இந்த வசனத்தின்படி பொய்யன் தான் கொல்லப்படுவான். “தான் கொல்லப்பட்டு விட்டால் பொய்யன் என்றாகி விடும். யூதர்கள் கூறும் அந்த வாதம் சரியாகி விடும். உண்மையாளரான தனக்கு ஒரு பொய்யரின் கதி ஏற்பட்டு விடக் கூடாது’ என்று தான் ஏசு களங்குகின்றார்; கண்ணீர் வடிக்கின்றார்; கதறுகின்றார்.

மரணத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுத இந்த ஏசுவைத் தான் கிறித்தவர்கள், “மக்களைக் காப்பதற்காக ஏசு தன்னை அர்ப்பணித்தார்’ என்று கதையளக்கின்றார்கள். அதுவும் இந்த உலகம் உருவாவதற்கு முன்னரே கடவுளுக்கும் குமாரனுக்கும் அப்படி ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதாம். மூன்று கடவுள்களில் இரண்டாமவரான ஒரு கடவுள், தானே சிலுவையில் தொங்கி மனிதனை முதல் பாவத்திலிருந்து அத்தனை பாவங்களை விட்டும் மீட்க முற்பட்டாராம். எவ்வளவு பெரிய பொய் என்று பாருங்கள்.

மாடி அறை இரவு உணவிலிருந்து, கெத்சமனி தோட்டத்துக் காவல் ஏற்பாடு உட்பட, இரத்தம் சிந்தும் பிரார்த்தனை வரைக்கும் தனக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை ஏசு தெரிந்து வைத்திருக்கவில்லை.

மரணத்திற்குத் தயங்குகின்ற இப்படிப்பட்ட ஒருவரை மனித குலத்தின் பாவ மீட்சிக்காகக் கடவுள் தேர்வு செய்திருந்தால் அதற்குப் பெயர் மீட்பு அல்ல! கடவுள் செய்திருக்கும் மிகப் பெரும் படுகொலையாகும். இந்தப் படுகொலையை பாவ மீட்சி என்று அழைப்பது கடைந்தெடுத்த அநியாயமாகும்.

ஏசுவின் மரணம் என்பது “பவுல்’ அடிகள் பைபிளில் நுழைத்து விட்ட கைச்சரக்கு, கற்பனைக் கலப்பு என்பதற்காக இடையில் இந்த எடுத்துக்காட்டு!

இப்போது ஏசுவின் பிரார்த்தனையைப் பார்க்க வருவோம்.

ஏக்கத்தில் தலைவர்! தூக்கத்தில் தொண்டர்கள்!

(குறிப்பு: ஏசுவின் உதவியாளர்களை அல்லாஹ்,(அல்குர்ஆன்: 3:52, 61:14)ஆகிய வசனங்களில் “அல்லாஹ்வின் உதவியாளர்கள்’ என்று பாராட்டிச் சொல்கிறான். இங்கு நாம் குறிப்பிட்டிருப்பது பைபிளின் நிலைப்பாட்டைத் தான் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.)

ஏசு பிரார்த்தனை செய்து விட்டு வந்து பார்க்கையில் சீடர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். எப்படிப்பட்ட காவலர்கள்?

அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா?” (என்று கேட்டார்.)

மத்தேயு 26:40

தூங்கிக் கொண்டிருந்த சீடர்களைப் பார்த்து ஏசு கடிந்து கொள்கின்றார். மீண்டும் ஏசு வரும் போது அவர்கள் உறங்கிக் கொண்டு தான் இருந்தனர்.

அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.

மாற்கு 14:40

சப்பைக்கட்டு கட்டுகின்ற லூக்கா

தலைவரை ஏக்கத்திலும், துக்கத்திலும் தவிக்க விட்டு விட்டு, தூக்கத்தில் தொலைந்து போய்க் கிடக்கும் சீடர்களைத் துரோகிகள் என்று சாடுவதற்குப் பதிலாக, அவர்களது தூக்கத்தை சோகத் தூக்கம் என்று லூக்கா வர்ணிக்கிறார்.

அவர் இறைவேண்டலை முடித்து விட்டு எழுந்து சீடர்களிடம் வந்த போது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

லூக்கா 22:45

மனிதன் சிக்கலில் மாட்டிக் கொள்கின்ற போது, உடலில் ஒரு சுரப்பியானது இரத்தத்தில் ஒரு விதமான திரவத்தைச் சுரக்கின்றது. அவ்வளவு தான். அவனது தூக்கம் தொலைந்து விடுகின்றது. ஏன் தூக்கம் தொலைய வேண்டும்? அவன் தூங்கி விட்டால் எதிரி தனது திட்டத்தை நிறைவேற்றி அவனைக் கொன்று விடுவான் அல்லது அவனை ஆபத்தில் சிக்க வைத்து விடுவான். இதற்குத் தான் இப்படி ஒரு தூக்கக் கலைப்புத் திரவம். இறைவன் இயற்கையாக இப்படி ஒரு பாதுகாப்பை மனிதனுக்குத் தந்திருக்கின்றான். மனித உடற்கூறு இயல் ஆய்வாளர்கள் இதைத் தெரிவிக்கின்றனர்.

ஆனால் லூக்காவோ இதற்கு நேர் மாற்றமாக ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றார். ஏசு இப்படியொரு இக்கட்டில் மாட்டித் தவிக்கும் போது இவர்களுக்கு எப்படித் தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.

குறட்டை விட்டுத் தூங்கும் இந்தத் தூங்கு மூஞ்சிகளை வைத்துக் கொண்டு முதலில் கோவில் நிர்வாகத்தையும், அதன் பின் ரோம சாம்ராஜ்ய கோட்டையையும் எப்படிப் பிடிக்க முடியும்? ஒருபோதும் முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இதோ ஏசுவைக் கைது செய்வதற்காக அவரது தோட்டத்திற்குக் குருமார்கள் கூட்டம் வந்து நிற்கின்றது.

காட்டிக் கொடுக்கும் யூதாசு! கைதாகும் ஏசு!

ஏசு கணக்குப் போட்டது போன்று யூதாசுடன் யூத மத குருமார்கள், பரிசேயர்கள் மட்டும் வரவில்லை. கூடவே ரோமானியப் படை வீரர்களும் சேர்ந்து வந்திருந்தார்கள்.

படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.

யோவான் 18:3

இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார்.

லூக்கா 22:49

சமயோசிதமிக்க ஏசு இவ்வாறு கேட்டு முடிப்பதற்குள்ளாக சீடர்கள் படை வீரர் (?) ஒருவர் தலைமைக் குழு ஊழியன் ஒருவனின் காதை அறுத்து விட்டார். சீடர்களிடம் இப்போது பொங்குகின்ற இந்த வீரம், தான் ஏற்கனவே தீட்டிய திட்டத்திற்கு எதிரானது என்று விளங்கிக் கொண்ட ஏசு, அந்தச் சீடரைக் கண்டிக்கின்றார்.

அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்”

மத்தேயு 26:52

வெட்டப்பட்ட காதையும் அதே இடத்தில் வைத்துச் சரி செய்து விடுகின்றார்.

கடைசி நிமிட மாற்றம்

ஏசு இப்போது ஏன் எதிர்க்கவில்லை? ஏற்கனவே தன் ஆட்களிடம் வாட்கள் வாங்கச் சொன்னதை ஏசு மறந்து விட்டாரா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏசுவுக்கு நன்கு தெரியும். தன் தூங்கு மூஞ்சி சீடர்களை வைத்துக் கொண்டு இந்த ரோமானியப் படையை எதிர்ப்பது தற்கொலை முயற்சி என்று தெளிவாக விளங்கி வைத்திருந்தார். அதனால் தான் ஏசு இந்தக் கடைசி நிமிட மாற்றத்திற்குத் தள்ளப்பட்டார். இறுதியாகக் கைது செய்யப்பட்டு விடுகின்றார்.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம், ஏசு செய்த இந்தப் பிரார்த்தனை, சீடர்களிடம் அவர் வெளிப்படுத்திய மனவேதனை அனைத்துமே அவர் மரணிக்கத் தயாரில்லை என்பதையே உணர்த்துகின்றன.

துன்பக் கிண்ணம் தன்னை விட்டும் அகலட்டும் என்று அவர் உருக்கமாக வைத்த கோரிக்கை எல்லாம் அவர் மரணிக்க விரும்பவில்லை என்பதைத் தான் காட்டுகின்றன.

இப்படி ஒரு மனநிலையில் உள்ள ஒருவர் மனித குலப் பாவ மீட்சிக்குத் தன்னை அர்ப்பணிக்க வந்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்?