04) அந்தஸ்துகள் உயர்த்தபடும்
ஒர் இறைநம்பிக்கையாளர் தமது வாழ்க்கையில் அனுபவிக்கும் நோய் போன்ற அனைத்துச் சோதனைகளும் அவருடைய தவறுகளுக்குப் பரிகாரமாக அமையும். பெரிய நோயாக இருந்தாலும் சரி, அல்லது காலில் தைக்கும் முள் போன்ற சிறிய நோயாக இருந்தாலும் சரி. தவறுகள் மன்னிக்கப்படுவது மட்டுமன்றி, நன்மைகளும் எழுதப்படும். மறுமையில் அந்தஸ்துகளை அல்லாஹ் உயர்த்துவான். இவை இறைநம்பிக்கையாளர்களின் பொறுமை மூலம் ஏற்படும் நன்மையாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் “மினா’வில் இருந்தபோது அவர்களிடம் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்தார். அப்போது அ(ங்கிருந்த)வர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்களுடைய சிரிப்புக்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், “இன்ன மனிதர் கூடாரத்தின் கயிற்றில் இடறி விழுந்து விட்டார். அவரது கழுத்தோ கண்ணோ போயிருக்கும் (நல்லவேளை பிழைத்துக் கொண்டார்)” என்று கூறினர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “(இதற்கெல்லாம்) சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிடச் சிறிய துன்பம் எதுவாயினும், அதற்காக அவருக்கு ஓர் அந்தஸ்து பதிவு செய்யப்படுகிறது; அதற்குப் பகரமாக அவருடைய தவறுகளில் ஒன்று துடைக்கப்படுகிறது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பவர் : அஸ்வத் பின் யஸீத், (முஸ்லிம்: 5024)