03) விதியும் நாத்திக வாதமும்

நூல்கள்: விதி ஒரு வரையாவிலக்கணம்

விதியைப் பற்றி முஸ்லிம்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் செய்யும் வாதத்தையும் அதற்கான விளக்கத்தையும் கண்டோம்.

நாத்திகர்களாக இருந்து விதியில் சர்ச்சை செய்பவர்களின் வாதங்களை இனி பார்ப்போம்.

இஸ்லாத்தின் விதி நம்பிக்கையில் தர்க்க ரீதியான விளக்கம் கிடையாது என்பதால் இஸ்லாமிய மார்க்கம் பொய்யானது என்று இவர்கள் கூறுகின்றனர்.

இவ்விஷயத்தை நாம் சற்று விரிவாகவே விளங்க முனைவோம்.

அண்ட சராசரங்களின் அனைத்து விஷயங்களையும் தனது சிற்றறிவால் விளங்கிட முடியும் என்ற இறுமாப்பில் தான் விஞ்ஞான உலகம் இன்னும் உள்ளது.

முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலவும் உதவும் என்பது உண்மை தான். ஆனால் அதுவே மனிதனை, உலகில் எதையும் சாதித்து விடலாம் என்ற அளவுக்கு இட்டுச் செல்லும் என்று நம்புவது மடமையிலும் மடமை.

மனிதனது புலன் உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளப்படும் 5 அறிவுடன் சேர்த்து 6வதாக அவனுக்கே உரிய பகுத்தறிவுடனும் இவ்வுலகில் இயங்குகிறான்.

கண் எனும் புலன் உறுப்பின் மூலம் பார்த்து அறியும் அறிவைப் பெற்றுள்ளான். பார்த்து அறியும் அறிவு என்பது மனிதனுக்கு ஒரு குறித்த வரையறைக்குள் தான் இருக்கிறது. உலகிலுள்ள எல்லாவற்றையும் பார்த்து அறியும் அறிவை மனிதன் இயற்கையாகப் பெறவில்லை.

மனிதன் தனது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி பார்த்து அறியும் அறிவின் எல்லையை விசாலமாக்கியுள்ளான். நுண்ணோக்கி, தொலைநோக்கி இன்னும் பல நவீன கண்டுபிடிப்புகள் மூலம் காலத்துக்குக் காலம், பார்த்து அறியும் அறிவுத் திறன் மனிதனுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரு காலத்தில் அண்ட சராசரங்கள் அனைத்தையும் பார்த்து அறிந்து விடலாம் என்று விஞ்ஞான உலகம் இறுமாப்புக் கொள்வதும் இதனால் தான். இதே போலத் தான் கேட்டு அறியும் அறிவு, நுகர்ந்து அறியும் அறிவு, சுவைத்து அறியும் அறிவு, உணர்ந்து அறியும் அறிவு ஆகிய எல்லா அறிவுகளையும் தனது பகுத்தறிவின் மூலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறான். இவ்வாறு அதிகரித்துச் செல்லும் மனித அறிவு வரையறுக்கப்பட்டது தானா?

மனித அறிவுக்கு ஏதாவது எல்லை இருக்குமா?

இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடை கண்டோமேயானால் விதி பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

ஆறறிவுடன் திகழும் மனிதனுடன் ஏராளமான பலவீனங்களும் சேர்ந்தே தான் இயற்கையில் அமைந்துள்ளது.

மனிதனின் மிகப் பெரிய பலவீனங்களான மறதி, அசதி, தூக்கம் பைத்தியம், பசி, தாகம், காமம், தேவை, முகஸ்துதி, அவசரம், துக்கம், பொறாமை, தடுமாற்றம், குழப்பம், நோய், முதுமை, மரணம் போன்ற ஏராளமான விஷயங்கள் எப்போதும் மனிதனுடன் ஒட்டிக் கொண்டே இருக்கின்றன.

இவை அனைத்துமே மனிதனின் அறிவுக்கு எதிரான ஆயுதங்கள். மேலும் அன்பு, கருணை, நன்றி, கோபம் போன்ற ஏராளமான நல்ல பண்புகள் கூட சில நேரங்களில் அவனைப் பலவீனப்படுத்தி விடும். இந்தப் பலவீனம் எதுவுமே இல்லாத இலட்சிய புருஷர்கள் யாராவது வாழ்ந்தால் அவருக்கு மாத்திரமே எல்லையில்லா அறிவுண்டு என வாதிட முடியுமே தவிர எந்த மனிதனாலும் தன் அறிவு எல்லையற்றது என வாதிட முடியாது.

தன் வாழ்நாளில் ஒரு பிழையேனும் செய்யாத ஒரு மனிதரைக் கூட நம்மால் காண முடியாமைக்கு இதுவே காரணம்.

அத்தனை விஞ்ஞானிகளும் தனது ஆய்வுகளில், ஆராய்ச்சியில், கண்டுபிடிப்புகளில் பாதிக்கு மேல் பிழை செய்திருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

புத்திக் கூர்மையின் தந்தை எனப் போற்றப்படும் அல்பட் ஐன்ஸ்டைன் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

இவர் உருவாக்கிய ஊ=ம்ஸ்ரீ2 எனும் சமன்பாடு ஊ=ம்ஸ்ரீ2-ல என்று தற்போது திருத்தப்பட்டுள்ளது.

மனிதனின் முதல் ஐந்து அறிவுகளுக்கும் எல்லை உண்டு என்பது போலவே சிந்தனா சக்தியாகிய பகுத்தறிவிற்கும் எல்லை உண்டு.

அந்த எல்லையை மிஞ்சிய அறிவு தான் விதி பற்றிய அறிவு என்று விளங்கிக் கொண்டால் எந்தக் குழப்பமும் இல்லை.

கோள்கள் அனைத்தும் ஈர்ப்பு விசையை இழந்து ஒன்றோடொன்று மோதி இவ்வுலகமும் மனித இனமும் அழியும் என்ற (மறுமைக்) கோட்பாட்டை விஞ்ஞான உலகம் சொல்கிறது.

எத்தனையோ கேள்விகளுக்கான விடைகள் இதனால் மனித குலத்திற்குத் தெரியாமல் போக வாய்ப்புள்ளது என்பதை விஞ்ஞானமே தன்னையும் அறியாமல் ஒத்துக் கொள்ளத் தான் செய்கிறது.

மனிதனால் அறியப்பட்ட எல்லா விஷயங்களுக்கும் அதன் உண்மை நிலை உணர்த்தப்படவேண்டும் என்ற கட்டாயம் ஒரு போதும் இல்லை.

எனவே மனித அறிவுக்கு எட்டாமல் இருக்கும் எத்தனையோ விஷயங்கள் கூட உண்மையாக இருக்கலாம். இப்படி மனித அறிவுக்கு எட்டாமல் இருக்கும் உண்மைகளில் விதி என்றொரு கோட்பாடும் இருப்பதாக நம்புவது ஒன்றும் பகுத்தறிவிற்கு முரணானதல்ல.

விடை தெரியாத விதி பற்றிய நம்பிக்கை அறிவுப்பூர்வமானது தான் என்பதை இன்னொரு உதாரணத்தின் மூலமாகவும் விளங்கலாம்.

10 கோடி ரூபாய் பணத்துடன் யாரென்றே தெரியாத இரண்டு பேருடன் தனிமையில் பயணித்து ஒரு அறையில், தனிமையில் உறங்குவதற்கு யாராவது முன்வருவார்களா?

அப்படி ஒரு நிலை வந்தால் ஒவ்வொரு மனிதனுடைய பகுத்தறிவும் என்ன சொல்லும்? இத்தனை பெரிய தொகையுடன் இவர்களோடு தூங்கலாமா? இவர்கள் கள்வர்களாக மாறி விட்டால்? பணத்தாசை பிடித்தவர்களாக இருப்பார்களா? என்னைக் கொன்று பணத்தைக் கொள்ளையடிப்பார்களா? என்று சிந்தித்து, தூங்கக் கூடாது என்ற முடிவையே பகுத்தறிவு சொல்லும். பகுத்தறிவு வழங்கிய இந்த முடிவு சரியானது தான்.

இதே நேரம் தனது தாயுடனும் தந்தையுடனும் இதே போன்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மேலே உள்ளது போல் தான் நமது பகுத்தறிவு நமக்குச் சொல்லுமா?

அல்லது நமது பெற்றோர் இவ்வளவு காலமும் நம்மோடு நடந்து கொண்ட விதம், சிறு வயது முதல் அவர்கள் நம்மீது காட்டிய அக்கறை, நம்மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு, பாசம் இதையெல்லாம் வைத்து, தைரியமாகத் தூங்கு என்று சொல்லுமா?

பணத்தாசை எந்த மனிதனையும் எப்படியும் மாற்றி விடலாம். எந்த நேரத்தில் எது நடக்குமோ என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும் அவர்களை நம்புவது தான் பகுத்தறிவு.

இதுவரை சந்தித்துள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் துளியேனும் நம்மீது தீங்கு நினைத்திராத அவர்களை இந்த ஒரு விஷயத்திலும் அட்வான்ஸாக நம்புவது அறிவுள்ள செயல் தான் என்பதை மறுக்க முடியாது.

இப்படித் தான் ஒவ்வொரு பகுத்தறிவுவாதியும் நடந்து கொண்டு இருக்கிறான். இதே போன்று தான் இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தின் கொள்கை கோட்பாடாகட்டும்; சட்ட திட்டங்களாகட்டும்; வணக்க வழிபாடாகட்டும்; அறிவியல் சம்பந்தப் பட்ட விஷயமாக இருக்கட்டும்; இன்ன பிற அம்சமாகட்டும். எதுவும் அறிவுப்பூர்வமானது என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

இஸ்லாத்தின் அத்தனை அம்சங்களும் அறிவுப்பூர்வமாக, கண் முன்னாலேயே நிரூபிக்கப்பட்டு இருக்கும் போது, விதியை மாத்திரம் வைத்து மொத்த இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பிழையெனத் தள்ளுவது எவ்வாறு பகுத்தறிவு வாதமாக அமையும்?

இஸ்லாத்தின் அத்தனை அம்சங்களையும் அல்லாஹ் அறிவுப் பூர்வமாகத் தந்து விட்டு விதியை மட்டும் நமது அறிவுக்குச் சிக்காமல் வைத்திருப்பது நம்மைச் சோதித்துப் பார்ப்பதற்காகத் தான்.

எல்லாவற்றையும் சரியாகவே சொன்ன இறைவன் விதியையும் சரியாகத் தான் சொல்லியிருப்பான் என்று மனிதன் நம்புகிறானா? அல்லது விதியை மாத்திரம் வைத்துக் கொண்டு இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் மறுக்கிறானா? என்று மனிதனை சோதித்துப் பார்க்கக் கூட விதியை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கலாம்.

எதையுமே விட்டு வைக்காமல் எல்லா விஷயங்களையும் அறிவுப் பூர்வமாகத் தந்தால் மனிதனை சோதித்துப் பார்க்க என்ன இருக்கிறது? ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விஷயத்திலும் தனக்குக் கீழிருப்பவன் தன்னைக் கண்மூடி நம்ப வேண்டும் என எதிர்பார்க்கும் போது, படைத்த ரப்பு ஒரு விஷயத்தில் மாத்திரம் நாம் அவ்வாறு நம்ப வேண்டுமென எதிர்பார்ப்பது எந்தப் பகுத்தறிவிற்கு முரணானது?

முதலாளி சொல்லும் ஒவ்வொரு வேலையையும் அறிவுப்பூர்வமாக அவர் நிரூபித்தால் தான் அதைச் செய்வேன் என்று அவனது வேலைக்காரன் சொல்வது எவ்வாறு பைத்தியக்காரத் தனமானதோ அவ்வாறு தான் இதுவும்.

ஒரு மனிதன், தான் கட்டளையிடும் எந்த ஒரு விஷயத்தையும் தனக்குக் கீழிருப்பவன் காரணம் கேட்காது செயல்பட வேண்டும் என நினைக்கும் போது, விதியைத் தவிர்த்து அத்தனை அம்சங்களையும் காரணத்தோடு இறைவன் சொல்லியிருப்பது அவனது தயாள குணத்தையே காட்டுகிறது

நம்மைப் படைத்துவிட்டு இறைவன், “நீ விரும்பியவாறெல்லாம் வாழ்ந்து கொள்’ என்று நம்மை விட்டு விடவில்லை. சில செயல்களை செய்யக் கூடாது என்று நமது செயல்களுக்குக் கடிவாளம் இட்டிருக்கிறான். செயல்களுக்குக் கடிவாளம் இட்டது போன்றே சிந்தனைக்கு அல்லாஹ் இட்ட கடிவாளம் தான் விதி பற்றி சர்ச்சை செய்யக் கூடாது என்பது.

விதியினால் உண்டாகும் நன்மை

விதியினை நம்புவதால் மனித குலத்துக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

மனிதன் தனது வாழ்க்கையில் ஏராளமான இன்ப துன்பங்களைச் சந்திக்கின்றான்.

ஒரு மனிதன் தனது முழு முயற்சியையும் பிரயோகித்து ஒரு காரியத்தைச் செய்கிறான். அது கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகிறவன், “நாம் என்ன முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?’ என நினைத்து உடனே சகஜ நிலைக்குத் திரும்பி விடுகிறான்.

அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். “இவ்வளவு பாடுபட்டும் கைக்கூடவில்லையே’ என்று புலம்பியே வாழ்க்கையை அழித்து விடுவான்

துன்பங்களைக் கண்டு துவண்டு போகாமல் தடுக்கும் கேடயமே விதி.

திடீரென மனிதனுக்கு இலாபம் கிடைத்துவிடும் போதும் அவனுக்குத் தலை கால் புரிவதில்லை. விதியை நம்பிய மனிதன் அல்லாஹ்வின் நாட்டப்படி கிடைத்தது என்று நினைக்கும் போது அவனது கர்வம், பெருமை, திமிர் போன்றவை ஒழிகின்றன.

இது தான் விதியினால் ஏற்படும் நன்மை என்பதைக் குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தி உள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 57:23)

இறுதியாக, விதியை நம்பி முடங்கிக் கிடக்க வேண்டும் என்று மற்ற மதங்கள் கூறுவது போன்று இஸ்லாம் கூறவில்லை. மனித முன்னேற்றத்திற்கு எந்தத் தடங்கலும் ஏற்படாத வகையில் தான் விதியை நம்புமாறு இஸ்லாம் கூறுகிறது.

இந்த நிமிடம் வரை என்ன நடந்து விட்டதோ அது தான் நமது விதி என்று நமக்குத் தெரியும். அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பது தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.

“எது நடந்து முடிந்து விட்டதோ, விதி இன்னதென்று தெரிந்து விட்டதோ அந்த விதியை நம்பி ஆறுதல் படு. எது நடக்கவில்லையோ அதில் நீயாகத் திட்டமிட்டுச் செயல்படு” என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது.

விதி பற்றிய தெளிவையும் அதைப் புரியும் அளவுக்கு உள்ள அறிவையும் இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ் தருவான். அதுவரை அல்லாஹ்வால் ஏவப்பட்டதை அப்படியே செய்யவும் அவனால் தடுக்கப்பட்டதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் முயற்சிப்பதே அறிவுடமை!