மரணமும் மறுமையும் – 03 (உலகின் இன்பங்கள் நிரந்தரமானது அல்ல!)

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்
உலக வாழ்க்கை அற்பமானது

இவ்வுலக வாழ்க்கையில் 24 மணி நேரமும் மறுமைக்கான தயாரிப்புகளையே செய்து கொண்டிருக்க வேண்டும் என்று மார்க்கம் நமக்கு கட்டளையிடவில்லை, இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதை அல்லாஹ்வோ, அவன் தூதரோ தடை செய்யவில்லை என்பதனையும் கடந்த உரையிலே பார்த்தோம்.

அதே நேரம், எல்லை மீறி இவ்வுலக இன்பத்திலே அதிகமான நேரத்தையும், பொருளாதாரத்தையும், நம் முயற்சிகளை செலவிட்டால், அது ஒரு மனிதனின் மறுமை வாழக்கையை கேள்விக்குறியாக ஆக்கிவிடும், என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதைப் பற்றி திருமறைக்குர்ஆன் வழிநெடுகிழும் பல்வேறு இடங்களில், நமக்கு பல போதனைகளை, பல எச்சரிக்கைகளை செய்கிறது.

மறுமையை ஒப்பிடும் போடும் இவ்வுலக வாழ்க்கை மிகவும் அற்பமானது என்று குர்ஆனும், ஹதீஸும் பல இடங்களில் நமக்கு சொல்லிக் காட்டுகிறது.

 

மிக எளிய உதாரணம்:

 

வானிலிருந்து வரும் மழைநீர் பூமியில் விழுந்து தாவரங்களுடன் கலந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் காணாமல் போகிறது. அதுபோன்று தான், ஒருநாள் நாமும் இருக்க மாட்டோம்; நமது வாழ்வும் இருக்காது. இன்னும் ஏன்? இந்த உலகமே இல்லாமல் போய்விடும். இப்படியான நிலையற்ற வாழ்க்கைதான் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

وَاضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا

தண்ணீரை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். அது பூமியின் தாவரங்களுடன் இரண்டறக் கலந்தது. (பின்னர் காய்ந்து) அவை சருகுகளாக மாறின. அவற்றைக் காற்று அடித்துச் சென்றது. இதை இவ்வுலக வாழ்வுக்கு உதாரணமாகக் கூறுவீராக! அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 18:45)

كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا ۖ وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ ۚ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

(இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு.

(அல்குர்ஆன்: 57:20)

اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَمَا الْحَيَاةُ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مَتَاعٌ

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும் போது இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகம் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 13:26)

இறைவனின் பார்வையில் இவ்வுலகம்

மறுமை வாழ்க்கையோடு எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் உலக வாழ்க்கை என்பது தரம் குறைந்தது; அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் கீழானது. இப்படியான வாழ்வில் நன்றாக இருப்பதற்காக மறுமை வாழ்வை நாசமாக்கிக் கொள்வது மிகப்பெரும் முட்டாள்தனம்.

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ، دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَهُ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟» فَقَالُوا: مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟ قَالَ: «أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ؟» قَالُوا: وَاللهِ لَوْ كَانَ حَيًّا، كَانَ عَيْبًا فِيهِ، لِأَنَّهُ أَسَكُّ، فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ؟ فَقَالَ: «فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ، مِنْ هَذَا عَلَيْكُمْ»

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) ‘ஆலியா’வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக் காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?’’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?’’ என்று கேட்டார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும்போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?’’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்‘’ என்று சொன்னார்கள்.

அறி: ஜாபிர் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5664)

«وَاللهِ مَا الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ هَذِهِ – وَأَشَارَ يَحْيَى بِالسَّبَّابَةِ – فِي الْيَمِّ، فَلْيَنْظُرْ بِمَ تَرْجِعُ؟»

அல்லாஹ்வின் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த, –அதாவது சுட்டு- விரலை (அறிவிப்பாளர் யஹ்யா சுட்டு விரலால் சைகை செய்கிறார்) கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (அந்த அளவு குறைவானதேயாகும்.) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5490)

ஏமாற்றும் வசதிகளே இவ்வுலக வாழ்க்கை

இந்த உலகத்திலுள்ள வசதி வாய்ப்புகள் அனைத்தும் நமது மறுமைத் தேடலை மறக்கடிக்கும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் மீது அபரிமிதமான ஆர்வத்தையும் மோகத்தையும் தூண்டி வழிகெடுக்க ஷைத்தான் துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு ஒருக்காலும் நாம் இடம்  கொடுத்து விடக் கூடாது.

وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏

மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன்: 57:20)

يَا أَيُّهَا النَّاسُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 35:5)

நபியே! கண்களை நீட்டாதீர்!

மனிதனின் எண்ணத்தை, சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் வகையில் உலக வாழ்வின் கட்டமைப்பு இருக்கிறது. அதன் எந்த மூலைக்குச் சென்றாலும் மனதை மயக்கும் அம்சங்கள் மலிந்து இருக்கும். இதனால்தான் அதன் இனிமையிலும் பசுமையிலும் பலரும் மயங்கிக் கிடக்கிறார்கள்.

وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَىٰ

(முஹம்மதே!) சோதிப்பதற்காக அவர்களில் சிலருக்கு நாம் வழங்கிய இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! உமது இறைவனின் செல்வம் சிறந்ததும், நிலையானதுமாகும்.

(அல்குர்ஆன்: 20:131)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்)’’ என்று காணப்படுகிறது.

வீணும் விளையாட்டும் நிறைந்தது!

பூமியில் பயனற்ற சிந்தனைகளும் செயல்களும் பரவிக் காணப்படும். வேடிக்கை மற்றும் விளையாட்டான விஷயங்கள் நிறைந்திருக்கும். அவற்றில் மூழ்கிவிடாது வாழ வேண்டுமென அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.

وَمَا هَٰذِهِ الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَهْوٌ وَلَعِبٌ ۚ وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன்: 29:64)

وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا لَعِبٌ وَلَهْوٌ ۖ وَلَلدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன்: 6:32)

இது வாழ்க்கையே அல்ல!

இன்னும் தெளிவாகக் கூறுவதாக இருந்தால், மறுமை வாழ்க்கை என்பதுதான் உண்மையான, மெய்யான வாழ்க்கை. இங்கு வாழ்வது ஒரு வாழ்க்கையே அல்ல. மாறாக, மறுமை வாழ்வுக்கான ஒரு முன்னோட்டம் அவ்வளவுதான்.

وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ ۚ لَوْ كَانُوا يَعْلَمُونَ

மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன்: 29:64)

«اللَّهُمَّ لاَ عَيْشَ إِلَّا عَيْشُ الآخِرَهْ، فَأَصْلِحِ الأَنْصَارَ وَالمُهَاجِرَهْ»

(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்கள் “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை; ஆகவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!’’ என்று (பாடியபடி) சொன்னார்கள்.

அறி: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 6413)

எது புத்திசாலித்தனம்? நிரந்தரமானதா? தற்காலிகமானதா?

இவைகள் தான் சுருக்கமாக இஸ்லாம் இவ்வுலகம் மற்றும் மறுமை பற்றி சொல்லும் கருத்துக்கள். இரண்டு வரிகளில் சொல்வதானால் இவ்வுலகம் தற்காலிகமானது மறுமை நிரந்தரமானது.

தற்காலிகமானது நிரந்தரமானது என்ற இரண்டில், ஒரு புத்திசாலி எதை தேர்வு செய்வான்?

வேலையாள்: வேலைக்கு அமர்த்தும் போது ஆறு மாதம் மட்டுமே வேலை செய்கிற ஒருவரை வைப்போமா நிரந்தரமாக இருக்க விரும்புவரை வைப்போமா?

வண்டி:  ஓட்டுவதற்கு ஒரு வண்டி வாங்குகிறோம் ஆறு மாதம் மட்டுமே வேலை செய்யும் என்கிற வண்டியை வாங்குவோமா ஆறு வருடம் வேலை செய்கிற வண்டியை வாங்குவோமா?

 

நிரந்தர சொந்த வீடு:

 

 

ஒருவன் பல வருடங்கள் கஷ்டப்பட்டு பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து ஒரு வீட்டை கட்டுகிறார்களே எதற்காக? நிரந்தரமாக வசிப்பதற்காகத்தானே!

ஒருவரிடத்தில் ஒரு வருடம் மட்டுமே குடியிருக்கும் வாடகை வீடு இருக்கிறது. சிறிது அதிக பணம் கொடுத்தால். நிரந்தரமாக குடியிருக்கும் வீடு இருக்கிறது என்று கூறினால் எதை தேர்வு செய்வார்?

வண்டியாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் காராக இருந்தாலும் எந்த இன்பமும் நிரந்தரமாக வேண்டும் என்று விரும்புகிறோம்.

அதுதான் புத்திசாலித்தனமும் கூட. ஆனால் மறுமை விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறோமே!

பயணியின் வாழ்கையாக நம் வாழ்கை உள்ளதா?

இப்போது பாருங்கள் அந்த ஹதீஸை, பயணியின் வாழ்கையாக நம் வாழ்கை உள்ளதா?

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.

அறி: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 6416) .

அந்நியனைப் போன்று அல்லது வழிப்போக்கனைப் போல வாழ வேண்டும், என்று நபியவர்கள் கூறுகிறார்கள். ஒரு அந்நியன் அல்லது வழிப்போக்கன் தான் செல்லும் இடத்திற்கு போகும் போது தேவையான உணவை, பொருளாதாரத்தை எடுத்துச் செல்வான்.‌ வழியில் ஏதேனும் மேலும் சில உணவோ பொருளாதாரமோ கிடைத்தால் அதைப் பெற்றுக் கொள்வது அவனது இலக்கை பாதிக்காது.

ஆனால் போக வேண்டிய இலக்கை மறந்து உணவுக்காக பொருளாதாரத்திற்காக வேறு சில வசதிகளுக்காக தன்னுடைய ஒட்டுமொத்த உழைப்பையும், நேரத்தையும் செலவிட்டால், அவனை புத்திசாலி என்போமா?  தான் செல்லும் இலக்கை பாதிக்கிற, பொருளாதாரத்தையோ, விளையாட்டையோ, வேறு இன்பத்தையோ தேர்வு செய்தால், அவன் முட்டாள் தானே!

மறுமைக்கு தடை செய்யப்பட்ட பொருள்கள்:

சூயிங் கம் (Chewing gum), பெயிண்டு (Paint) போன்றவைகளை சிங்கப்பூருக்குள் எடுத்துச் சென்றால் பிடித்து உள்ளே வைத்து விடுவான். எடுத்துச் செல்வீர்களா?

கசகசா, போதை தருவதில்லை என்று பல ஆய்வுகள் சொல்கின்றது. எனினும் சில காரணங்களுக்காக சவுதி அரசாங்கம் அதை தடை செய்துள்ளது. 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை. கசகசாவை சவுதிக்கு எடுத்து செல்வீர்களா?

சாட்டிலைட் போன் (satellite phones) 3000 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக வாங்கி ஒருவர் இந்தியாவுக்குள் வர முடியுமா என்றால் பிடித்து உள்ளே வைத்து விடுவார்கள்.

ராணுவ உடை:  பிஜி நாட்டுக்குள், உங்கள் பிள்ளைகளுக்கு ராணுவ வீரரை போன்று உடை போட்டுக் கொடுத்து அழைத்துச் சென்றால் உங்களையும் பிள்ளையையும் பிடித்து வைத்து உள்ளே வைத்து விடுவார்கள்.

இப்படி ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பல சட்ட திட்டங்களை வைத்திருக்கிறது பிரயாணியாக செல்லும் போது அந்த சட்ட திட்டங்களை மதித்து தான் உள்ளே செல்கிறொம்.

ஆனால் மறுமைக்கு செல்வதற்கு இறைவன் வகுத்துள்ள சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றுகிறோமா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறி தான்!

மறுமைக்கு செல்வதற்கு தடையாக இருக்கிற பல அம்சங்கள், இன்பங்கள் இந்த உலகத்தில் தான் உள்ளன.‌ தடையாக இருப்பது அனைத்துமே, இன்பங்களாகத் தான் இருக்கும்.

மறுமை பிரயாணத்திற்கு தடையாக அமைந்திருக்கிற செயல்களை செய்து விட்டு, ஒரு மனிதன் மரணிக்கும் போது அவனது மறுமை நிலை அவனுடைய கப்ரு வாழ்க்கை மற்றும் மறுமை நிலை எப்படி இருக்கும் என்பதனை அடுத்தடுத்த உரைகளிலே காண்போம்.