03) தீயவர்களின் நிலை
உயிர் கைப்பற்றப்படும் போது இறைமறுப்பாளர்கள் படும் அவஸ்தையை திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
அவர்களின் முகங்களிலும், பின்புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்? அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடியதை அவர்கள் பின்பற்றியதும், அவனது திருப்தியை வெறுத்ததுமே இதற்குக் காரணம். எனவே அவர்களின் செயல்களை அவன் அழித்து விட்டான்.
கெட்டவனது உயிர் பறிக்கப்படும் போது ஈரமான கம்பளியிலிருந்து ரோமத்தை பிடுங்குவதை போன்று வேதனை மிகுதியாக இருக்கும் அதன் பின் அவன் ஆத்மா கெட்ட துர்வாடை வீசும், அதற்கு இறைவனின் அருள்வாசல் திறக்கப்படாது.
இதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறியலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :இறை மறுப்பாளன் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையை நோக்கியவனாக இருக்கும் போது கருப்பு முகங்களைக் கொண்ட வானவர்கள் வானத்திலிருந்து அவனிடம் வருவார்கள். (உயிரைக் கொண்டு செல்வதற்காக) அவர்களுடன் துணிகள் இருக்கும். அவனது பார்வை எட்டும் தூரம் வரை வானவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
பின்பு உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமருவார். செட்ட ஆன்மாவே அல்லாஹ்வின் கோபத்துடனும் அதிருப்தியுடனும் நீ வெளியேறு என்று கூறுவார். அப்போதுதான் அவனது உடம்பிலிருந்து உயிர் பிரித்தெடுக்கப்படும். ஈரமான கம்பளியில் உள்ள ரோமத்தைப் பிடுங்குவதைப் போல் வானவர் உயிரை வாங்குவார். உயிரை வாங்கிய பிறகு கண் சிமிட்டும் நேரம் கூட தன் கையில் வைத்திருக்காமல் உடனே அந்தத் துணிகளில் உயிரைச் சேர்த்து விடுவார்.
பூமியில் இறந்து அழுகிப் போன உடலிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போன்ற கெட்ட வாடை அதிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும். இந்த (கெட்ட) உயிருடன் (வானில்) வானவர்கள் ஏறிச் செல்வார்கள். அந்த உயிருடன் வானவர் கூட்டத்தை அவர்கள் கடந்து செல்லும் போதெல்லாம் இந்த கெட்ட ஆன்மா யாருடையது? என்று வானவர்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள். உலகில் அவன் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த கெட்ட பெயரைக் கூறி இன்னாருடைய மகன் இன்னார்தான் என்று கூறுவார்கள்.
இறுதியாக அவன் இறுதி வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவனுக்காக கதவை திறக்குமாறு கேட்கப்படும். ஆனால் அவனுக்கு கதவு திறக்கப்படாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த இடத்திலே) இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப் போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்
கடைசி பூமியில் உள்ள சிஜ்ஜீன் என்ற ஏட்டில் இவனது கணக்கை பதிவு செய்யுங்கள் என்று சங்ககையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் அப்போது கூறுவான்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: (அஹ்மத்: 17803)
கெட்ட ஆத்மாவிற்கு சங்கைமிகு வானவர்களின் சாபமும் கிடைக்கிறது.
ஓர் இறை மறுப்பாளர் உயிர் பிரியும் போது அந்த உயிரிலிலிருந்து துர்வாடை கிளம்பும். வானிலுள்ளோர் அதைச் சபிப்பார்கள். வானுலகவாசிகள், “ஒரு தீய ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது” என்று கூறுவார்கள். அப்போது “இதை இறுதித் தவணை வரை கொண்டு செல்லுங்கள்” என்று கூறப்படும். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகையில், தம்மிடமிருந்த மிருதுவான துணியைத் தமது மூக்குவரை “இப்படி’ கொண்டுசென்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி, நூல்: (முஸ்லிம்: 5119)
ஒருவன் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அவனது மண்ணறை விசாரணை துவங்கி விடுகிறது.
மரணித்தவரை அடக்கி முடித்தவுடன் அதனருகில் நின்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள். (இறந்து விட்ட) உங்களுடைய சகோதரனுக்காக பாவமன்னிப்புத் தேடுங்கள். (விசாரிக்கப்படும் போது) உறுதியாக இருக்க வேண்டும் என்று அவருக்காக வேண்டுங்கள். ஏனென்றால் இப்போது இவர் விசாரணை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), நூல்: (அபூதாவூத்: 2804)
கப்றில் விசாரணை என்றதும் பெரும்பாலான மக்களின் மனநிலை அப்படி என்ன விசாரித்து விடப்போகிறார்கள்? உன் இறைவன் யார்? தூதர் யார்? இது தானே? எளிதில் சமாளித்து விடலாம் என்று அலட்சியாக எண்ணுகிறார்கள்.
ஆனால் கப்றில் நடைபெறும் விசாரணை அவ்வளவு சாதாரணமானது அல்ல. அது பெரும் சோதனையாகும். அந்த சோதனை தஜ்ஜாலுக்கு நிகரான சோதனையாக அமையும் என்று நபிகள் நாயகம் எச்சரித்துள்ளார்கள்.
நீங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு ”நிகரான’ அல்லது “நெருக்கமான’ அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர். அஸ்மா (ரலி), நூல்: (புகாரி: 86)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, அடக்கவிடத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), நூல்: (புகாரி: 1373)
ஒருவன் கப்றுக்குழிக்குள் அடக்கம் செய்யப்பட்டதும் முன்கர், நகீர் எனும் இரு வானவர்கள் கோரத்தோற்றத்துடன் வருகை புரிந்து விசாரணையை துவக்கி விடுவார்கள். தீயவனாக இருந்தால் பதில் சொல்ல இயலாது திகைத்துப் போவான். விலா எழும்புகள் நொறுங்கும் அளவு அவனது கப்ர் நெருக்கப்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருத்த நிறமும் நீல நிறக் கண்களும் கொண்ட முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் வருவார்கள். (முஹம்மது (ஸல்) அவர்களைக் குறித்து) ”இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதியிருந்தாய்?” என்று கேட்பார்கள்.
இறந்த மனிதன் நயவஞ்சகனாக இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அவன், “இந்த முஹம்மதைப் பற்றி மனிதர்கள் பலவாறாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருக்கின்றேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறுவான். அதற்கு அவ்வானவர்கள், “நீ இப்படித் தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறுவார்கள். அதன் பின்னர் பூமியை நோக்கி, “இவனை நெருக்குவாயாக” என்று கூறப்படும். அவனது விலா எலும்புகள் நொறுங்குமளவுக்கு பூமி அவனை நெருக்க ஆரம்பிக்கும். இறைவன் அவனது இடத்திலிருந்து அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப் பட்டுக் கொண்டே இருப்பான்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நூல்: (திர்மிதீ: 991)
கெட்ட மனிதன் நடுக்கத்துடனும் திடுக்கத்துடனும் மண்ணறையில் உட்கார வைக்கப்படுவான். எந்தக் கொள்கையில் நீ இருந்தாய் என்று அவனிடத்தில் வினவப்படும். அதற்கு அவன்
எனக்குத் தெரியாது என்று கூறுவான். அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி), நூல்: (இப்னு மாஜா: 4258)
மேலும் இரும்பு சுத்தியலால் பலமாக அடி கொடுக்கப்படுவதின் மூலம் தொடர்ந்து அவன் வேதனை செய்யப்படுவான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர்.
அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்பார். பிறகு “”நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார்.
நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் ” நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர். அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 1338)
தீயவனுக்கு கப்றில் வழங்கப்படும் வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
கப்று நெருக்கப்படுதல், இரும்பு சுத்தியலால் அடி. என்பவைகளோடு நிறுத்தப்படாமல் இன்னும் தாங்க இயலாத பல வேதனைகள் வழங்கப்படும். ஆடை. விரிப்பு. போர்வை. காற்று என கப்றில் அவனுக்கு வழங்கப்படும் அனைத்துமே நெருப்பாலானவையாக அல்லாஹ் தயாரித்து வழங்குவான். இதன் மூலமும் கடும் வேதனையை அவன் அனுபவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இவனுக்கு நெருப்பால் ஆன ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திறந்து விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார். நரகத்தின் சூடும் ஜுவாலையும் அவனிடத்தில் வந்து கொண்டிருக்கும்.
அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். பிறகு கண்பார்வையற்ற வாய்பேசாத ஒருவர் அவனை (வேதனை செய்வதற்காக) நியமிக்கப்படுவார்.
அவருடன் இரும்பாலான சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலை கூட மண்ணாகிவிடும். ஜின்களையும் மனிதர்களையும் தவிர கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண்ணாகிவிடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல்: (அபூதாவூத்: 4127)
மண்ணறையில் தீயவர்களுக்கு அளிக்கப்படும் இது போன்ற வேதனையால் அவர்கள் அலறுவார்கள். அவர்களின் அலறலை மனிதர்களால் உணர முடியாது. மனித சமுதாயம் அந்த அலறலை கேட்டால் பிற மனிதர்களை அடக்கம் செய்யவே தயங்குவார்கள் எனுமளவு மண்ணறையில் தீயவனுக்கு அளிக்கப்படும் வேதணை கொடூரமானதாய் இருக்கும்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பனுந் நஜ்ஜார் குலத்தாருக்குச் சொந்தமான தோட்டமொன்றில் தமது கோவேறுக் கழுதையின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களுடன் நாங்களும் இருந்தோம். அப்போது அவர்களது கோவேறு கழுதை அவர்களைத் தூக்கியெறியும் அளவுக்கு வெருண்டோடியது.
அங்கு ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு மண்ணறைகள் இருந்தன. (இவ்வாறு தான் சயீத் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் அறிவித்து வந்ததாக இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களைப் பற்றி யார் அறிவார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், “நான் (அறிவேன்)” என்றார்.
நபி (ஸல்) அவர்கள், “இவர்கள் எப்போது இறந்தார்கள்?” என்று கேட்டார்கள். அவர், “இணைவைப்பு (கோலோச்சியிருந்த அறியாமை)க் காலத்தில் இறந்தனர்” என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தச் சமுதாயம் மண்ணறைகளில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்” என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, “நரக நெருப்பின் வேதனையிலிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
பிறகு “மண்ணறையின் வேதனையிலிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “மண்ணறையின் வேதனையிலிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி), நூல்: (முஸ்லிம்: 5502)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அவளிடம் நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் (புகாரி: 1338)
மண்ணறையில் தீயவர்களுக்கு அளிக்கப்படும் கடும் வேதனைகளை கண்டோம்
இந்நிலையில் அனைவருக்கும். பொதுவான சிற்சில அச்சங்களையும் இறைவன் மண்ணறையில் ஏற்படுத்துகிறான். அதன் விபரம் வருமாறு
மண்ணறையில் அடக்கம் செய்யப்படும் மனிதர்கள் அச்சத்தை உணர வேண்டும் என்பதற்காக இருள் நிரம்பியதாக மண்ணறையை அமைக்கின்றான்.
பொதுவாக மனிதன் இருளை கண்டு அலறுபவனாகவே இருக்கிறான். மண்ணறை பேரிருள் சூழ்ந்ததாக இருக்கும் என்று நபிகள் நாயகம் எச்சரித்துள்ளார்கள்.
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்’ அல்லது “இளைஞர்” ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்’ என மக்கள் தெரிவித்தனர். “நீங்கள் எனக்குத் தெரி வித்திருக்கக்கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்கள், மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு “இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ். எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1742)
நல்லவர்கள் தீயவர்கள் என அனைவரையும் மண்ணறையின் நெருக்குதலுக்கு அல்லாஹ் உள்ளாக்குகிறான் என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிகிறோம்.
ஒவ்வொருவருக்கும் மண்ணறையில் நெருக்குதல் உண்டு. அதிலிருந்து ஒருவர் பாதுகாப்பு பெறுவதாக இருந்தால் ஸஃது பின் முஆத் பாதுகாப்பு பெற்றிருப்பார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர். ஆயிஷா ரலி நூல் ஃபழாயிலுஸ் ஸஹாபா 1448
அது போல மய்யித் அடக்கம் செய்யப்பட்டு குடும்பத்தார் திரும்பி செல்லும் போது மட்டும் அவர்கள் திரும்பி செல்லும் செருப்போசையை அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இறைவன் கேட்கச் செய்வதாக நபிகள் நாயகம் தெரிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: (புகாரி: 1338)
நம் குடும்பத்தார், சொந்தபந்தங்கள் என அனைவரும் நம்மை விட்டு திரும்பி செல்கிறார்கள். நாம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்த இந்த ஏற்பாட்டை இறைவன் அமைத்திருக்கலாம்.
மண்ணறையில் தீயவர்களுக்கு அளிக்கப்படும் பல வகையான வேதனைகளை பற்றி அறிந்தோம், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிய முஸ்லிம்கள் இவ்வேதனைகளை பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.
அறிந்து கொள்வது மட்டுமின்றி, இதை அலட்சியம் செய்யாதிருப் பதுடன் அல்லாஹ் அளிக்கும் வேதனையை கடுமையாக அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் உண்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வேதனையை அஞ்சுவார்கள் என திருக்குர்அன் எடுத்துரைக்கின்றது.
அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள். அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத் தக்கதே.
இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
உண்மையில் மண்ணறை வேதனை என்பது கடும் அச்சம் கொள்வதற்கு தகுதியானது. ஆதலால்தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மண்ணறை வேதனை பற்றி அதிகம் அஞ்சினார்கள்.
அதன் அடையாளமாய் ஒவ்வொரு தொழுகையிலும், தொழுகைக்கு பிறகும். அதுவல்லாத இன்னும் பல நேரங்களிலும் மண்ணறை வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதை அன்றாட பழக்கமாக்கி கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜா-, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’
இறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்தி லிருந்து உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி நூல்: (புகாரி: 832)
நபி (ஸல்) அவர்கள், “இறைவா! நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், மூப்பிலிருந்தும் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். மேலும், புதைகுழியின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று பிரார்த்திப்பது வழக்கம்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: (புகாரி: 2823)
நபி (ஸல்) அவர்கள் தாம் தொழுகின்ற தொழுகைகளில் அடக்கவிட (கப்று) வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததேயில்லை.
அறிவிப்பவர். ஆயிஷா ரலி, நூல்: (புகாரி: 1372)
தாம் அஞ்சியது மட்டுமின்றி மக்களுக்கும் மண்ணறை வேதனையிைன் அச்சத்தை தவறாது நினைவூட்டினார்கள். பல நேரங்களில் அன்றாடம் தொழுகையில் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு கோரும்படி மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும்போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.
(பொருள்: இறைவா, உன்னிடம் நான் நரசுத்தின் வேதனையிலிருந்தும், சவக் குழியின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலி ருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன் .)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் (முஸ்லிம்: 1030)
ஒரு முறை கிரகணத் தொழுகை தொழுது விட்டு மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போதும் தவறாது மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு கோரும்படி மக்களுக்கு அறிவுரை செய்தார்கள்.
ஒரு யூதப் பெண் என்னிடம் யாசித்தபடி வந்தாள். அப்போது அவள் என்னிடம், “அடக்கக் குழியின் (கப்று) வேதனையிலிருந்து உம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக!” என்று கூறினாள். ஆகவே நான் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களிடம் கூறி, “மனிதர்கள் தம் அடக்க விடங்களில் வேதனை செய்யப்படுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(டக்கவிடத்தின் துன்பத்)திலிருந்து நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்கள்.
பின்னர் (ஒரு நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டுவிடவே, உடனே அவர்கள் முற்பகல் நேரத்தில் திரும்பி வந்தார்கள்
தொழுதுமுடித்தபின் அல்லாஹ் சொல்ல நாடியிருந்ததைச் சொன்னார்கள். பிறகு அடக்கக்குழியின் (கப்று) வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு மக்களைப் பணித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா ரலி, நூல்: (புகாரி: 1950)
எனவே மண்ணறை வேதனையை சாதாரணமாக கருதாமல் அதை பற்றிய அச்சத்தை எப்போதும் நினைவில் நிறுத்த வேண்டும். அந்த எண்ணமே நம்மை நல்வழிப்படுத்த உதவும். அத்துடன் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுவதை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.
முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அதிகமதிகம் மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடியுள்ளார்கள் எனில் அவர்களை விட நாம் பாதுகாப்பு தேடுவதற்கு அதிக தகுதி படைத்தவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். சவக் குழியின் வேதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1034)