03) தந்தையும், மகனும்

நூல்கள்: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

அந்த வீட்டுக்குள் இருந்து தான் அந்தக் குரல் கேட்டது .

“தந்தையே !”

“நீங்கள் பேசுவதை இது கேட்குமா ?

“நீங்கள் செய்வதைப் பார்க்குமா ??”

“எந்த பயனையாவது கொடுக்குமா ??”

“பிறகு ஏன் இதைப் போய் வணங்கிக்கொண்டு இருக்கிறீர் ??!”

அது ஒரு இளைஞனின் குரல்!

ஒரு சிங்கத்தின் கர்ஜனையைப் போல அந்த குரல் ஒலித்தது.

அந்த ஊரின் மதிப்புமிக்க ஒரு பெரியவரின் வீட்டில் தான் அந்த இளைஞர் இப்படி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தார் .

அந்த பெரியவர் பெயர் ஆசர்.

ஊரில் அவருக்கு பெரிய மதிப்பு உண்டு . வீடு நிறைய சிலைகள் வைத்து வணங்கிக் கொண்டிருப்பார் . அவரை பெரிய பக்திமான் என்று மக்கள் கருதினர்.

அவரிடம் அவ்வாறு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல.. அவரது மகன் தான்..

மகன் கேட்ட கேள்விகளில் கடும் எரிச்சல் வந்து விட்டது பெரியவருக்கு..

தான் மரியாதையாக வழிபட்டு வரும் தெய்வங்களை அவரது மகன் மதிப்பதே இல்லை .

தான் வணங்கும் தெய்வம் கல்லாம்..; அதற்கு ஆற்றல் இல்லையாம்…;கேட்காதாம்..; பார்க்காதாம்…;

என்ன ஒரு நெஞ்சழுத்தம்??? இப்படியெல்லாம் சொல்வதற்கு..?

பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்??

மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்தார் ..

அவரது கோபம் அவர் முகத்தில் கொப்பளித்தது ..

மகன் பொறுமையாகச் சொன்னார்..

“தந்தையே !” “ நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்”

“உங்களுக்கு கிடைக்காத ஒரு அறிவு எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுங்கள்”

எது சரியான வழி என்று காட்டுகிறேன் “ என்றார்.

பெரியவர் கோபம் குறையவில்லை .

மகனும் விடுவதாய் இல்லை.

இளைஞர் சொன்னார் , “ தந்தையே !”

“இணை தெய்வங்களை வணங்காதீர்கள்”

“பேரன்புடைய இறைவனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான் “

இளைஞரின் கூற்றில் கவலை தொனித்தது.

பெரியவரின் கோபம் தலைக்கேருவதை இளைஞர் கவனித்தார் .

ஆனாலும் விடுவதாய் இல்லை .

இளையவரின் கவலை எல்லாம், இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, எல்லாம் வழிநடத்தும் பெரும் கருணையாளனான இறைவனை விட்டுவிட்டுத் தன் தந்தை, உதவ முடியாத கற்களை தெய்வமாக வணங்குகிறாரே என்பது தான் .

இந்த சிலைகள் எல்லாம் எதோ ஒரு காலத்தில் மனிதர்களாய் வாழ்ந்தவர்கள் தான். பிற்காலத்தில் மக்கள் தெய்வமாக வணங்க ஆரம்பித்து விட்டனர் .

தெய்வமாக வணங்கினாலும் கல், கல் தானே?

வழிபட்டால் மட்டும் கண் திறந்து பார்த்து விடுமா? காது தான் கேட்டு விடுமா? இவர்கள் கேட்பதைத் தான் கொடுத்து விடுமா ?

வானத்தில் ஒருவன் இருக்கிறானே அவன் என்ன நினைப்பான் ?

நன்றி கெட்ட மனிதர்கள்…..

உணவும், நீரும், காற்றும் பெறுவது ஒருவனிடம்; வழிபாடு செய்வது என்னவோ ஒன்றுக்கும் உதவாத இணையாளர்களுக்கு..,

மனதில் கவலையுடன் தந்தையிடம் இன்னும் பரிவாக பேசினார் .

அவர் கோபம் தணிந்து கொஞ்சம் யோசித்து விட மாட்டாரா? என்ற ஏக்கம் அவரிடம் இருந்தது .

“தந்தையே !”

“அளவற்ற அருளாளனிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் தண்டனை வந்துவிடுமோ என்று பயமாய் இருக்கிறது “

“ஷைத்தானின் கூட்டாளி ஆகி விடுவீர்களோ என்றும் பயமாய் உள்ளது”

“இப்றாஹீமே !!!!!!!!!!! ”

கோபத்தில் கத்தினார் பெரியவர்.

“என்னுடைய கடவுள்களைப் புறக்கணிக்கிறாயா????”

“நீ விலகிவிடு.. இல்லையென்றால்….

கல்லாலே அடித்துக் கொன்று விடுவேன்..

போய்விடு இங்கிருந்து..

திரும்ப எப்போதும் வந்துவிடாதே !!”

இப்படிச் சொல்வார் என்பது எதிர்பார்த்தது தான் .

எப்போதும், சரியான கொள்கையை கூறும்போது தவறில் இருப்பவர்களிடம் மூர்க்கத்தனம் தானே மிஞ்சும்!,

பெத்த பிள்ளை என்றும் பாராமல் , உயிரற்ற சிலைக்காக உயிருள்ள இளைஞனை வெளியே அனுப்ப மனம் வருகிறதே…, பிள்ளையின் சொல்லுக்கு முன் ஊராரிடம் தனக்கு இருக்கும் கவுரவம் பெரிதாக தெரிகிறதே..,

கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் காட்டுத்தனமான குணங்களுக்கே இட்டுச் செல்லும் .

பொங்கிக் கொண்டிருந்த தந்தையிடம் இப்ராஹிம் பணிவுடன் சொன்னார்,

“ உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் தந்தையே!”

“உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பேன்.., அவன் இரக்கமுள்ளவன்”

“உங்களை விட்டு விலகுகிறேன்..

அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்கும் ஒவ்வொன்றையும் விட்டு விலகுகிறேன்..

என் இறைவன் அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திப்பேன்.

அவனிடம் கேட்பதில் பாக்கியமிழந்துவிட மாட்டேன்..”

தந்தை துரத்திவிட்டால் என்ன? அல்லாஹ் இருக்கிறான்.. கனத்த மனதுடன் வெளியேறினார் .