03) ஜிஹாத் பொருள் விளக்கம்
“ஜிஹாத்’ என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல! அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம். ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக் கண்டோம்.
அழைப்புப் பணி செய்வதும் “ஜிஹாத்’ தான் என்பதை வ-யுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.
நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.
இந்த வசனத்திலும் “போரிடுதல்’ என்ற அர்த்தத்தில் “ஜிஹாத்’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால் இது நேரடியாக ஆயுதமேந்திப் போரிடுவதைக் குறிக்கக் கூடியதல்ல. ஏனென்றால் ஒட்டுமொத்தமாக இறை மறுப்பாளர்கள் எல்லோருடனும் ஆயுதமேந்தி போர் செய்ய அனுமதி கிடையாது. (இதுபற்றி பின்னர் திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் காண்போம்).
மேலும் இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் – நயவஞ்சகர்களுடனும் போரிடுமாறு நபி (ஸல்) அவர்களை நோக்கி இறைவன் கூறுகின்றான். முனாஃபிக்கீன்களைப் பொறுத்த வரை அவர்கள் இடத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு மாற்றி, மாற்றி பேசக்கூடியவர்களாகவும், முஸ்லிம்களிடம் இரண்டறக் கலந்து வாழ்பவர்களாகவும், போரிலும் கூட முஸ்லிம்களுடன் கலந்து கொள்பவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை, முனாஃபிக்கீன்களின் தன்மைகள் குறித்த ஏராளமான குர்ஆன் வசனங்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒரு சில வசனங்களைக் காண்போம்.
நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே” எனக் கூறுகின்றனர்.
மேற்கண்ட வசனம் முனாஃபிக்கீன்களின் இரட்டை நிலையைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
மேற்கண்ட வசனங்கள் முனாஃபிக்கீன்களின் தன்மையைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் அல்லாஹ்வையும், ரசூலையும் மறுத்த போதும் உள்ளுணர்வோ, இறையச்சமோ இன்றி அசட்டையாக, மக்களுக்குக் காட்டுவதற்காக தொழுகையில் ஈடுபட்டதையும், இறைவழியில் செலவு செய்ததையும் பற்றி கூறுகிறது.
(முஹம்மதே!) உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச் செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் “என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!” என்று கூறுவீராக!
இந்த வசனத்தில் முனாஃபிக்கீன்கள் வேண்டா வெறுப்புடன் முஸ்லிம்களுடன் சேர்ந்து போர் செய்து வந்ததையும், அந்த அடிப்படையிலேயே அவர்கள் போருக்குச் செல்ல அனுமதி கேட்டால், மறுத்து விடுமாறு இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறான். இதிலிருந்து முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களின் அணியில் சேர்ந்து இறை நிராகரிப்பாளர்களுடன் போரிட்டு வந்ததையும், அந்த வழக்கப்படியே அனுமதி கேட்டார்கள் என்பதையும் விளங்க முடிகிறது.
மேலும், முனாஃபிக்கீன்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து போரிட்டதை அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. (ஆனால் அவர்கள் போரிட்டது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக அல்ல, மக்களுக்குக் காட்டுவதற்காக என்பது தனி விஷயம்) முனாஃபிக்கீன்கள் நபி (ஸல்) அவர்களை நேரடியாக எதிர்க்கவில்லை. அவர்கள் மறைமுகமாக இஸ்லாத்திற்கு எதிரான வேலைகளைச் செய்துள்ளனர். எனவே தான் முனாஃபிக்கீன்களுடன் நபி (ஸல்) அவர்கள் ஆயுதமேந்தி போரிட்டது கிடையாது.
இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “ஜிஹாத்’ என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளக்கம் தந்தால், முனாஃபிக்கீன்களுடன் (ஆயுதமேந்தி) போரிடுமாறு இறைவன் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் புறக்கணித்ததாக ஆகிவிடும். (நவூதுபில்லாஹி மின்ஹா)
எனவே முனாஃபிக்கீன்களுடன் ஆயுதமேந்தி நபி (ஸல்) அவர்கள் போரிடாமல் இருந்ததிலிருந்து இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “ஜிஹாத்’ என்பதற்கு குர்ஆனைக் கொண்டு கடுமையான முறையில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்து அவர்களின் தவறான பிரச்சாரங்களை முறியடித்தார்கள் என்றே பொருள்.
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூலம் அழைப்புப் பணியில் ஈடுபடுவதும் “ஜிஹாத்’ தான் என்பதை விளங்க முடிகிறது.