03) அழகிய மார்க்கத்துக்குச் சொந்தக்காரர் யார் ?

நூல்கள்: அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை)

உலக காரியங்களில் ஒவ்வொரு மனிதனும், தான் மற்றவரை விட ஏதேனும் ஒரு விதத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றே கருதுகிறான். அதனால் தான் மனிதன் உலக விஷயங்களில் அதிகம் போட்டி போடுகிறான்.

அதே போல் மார்க்க விசயங்களிலும் சிறப்பாக வாழ்ந்து எல்லையில்லாத மறுமை வாழ்வில் தொல்லையில்லாத சுவனத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். மறுமையில் இத்தகைய உயர்வை நாம் அடையவேண்டுமெனில் அழகிய மார்க்கத்திற்கு உரியவர்களாக நாம் திகழ வேண்டும். அங்ஙனம் திகழ்ந்தவர்தான் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள்.

மறுமை நம்பிக்கையுடன் வாழும் முஸ்லிம்கள் தனது மார்க்க விசயங்களில் உயர்ந்து நிற்க வேண்டுமெனில் அவர்கள் செல்ல வேண்டிய பாதை நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பாதையே ஆகும்.

நன்மை செய்பவராக, தனது முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்து, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றியவரைவிட அழகிய மார்க்கமுடையவர் யார்? இப்ராஹீமை, அல்லாஹ் உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்.

(அல்குர்ஆன்: 4:125)

இப்ராஹீம் நபி அழகிய மார்க்கத்தை உடையவர் என்கிற காரணத்தினால் தான் இறைவன் திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் நமக்கு இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளை பிறப்பிக்கின்றான்.

“நீங்கள் யூதராகவோ அல்லது கிறித்தவராகவோ ஆகி விடுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்” என (வேதமுடையோர்) கூறுகின்றனர். “அவ்வாறல்ல! சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 2:135)

“அல்லாஹ் உண்மையைக் கூறியுள்ளான். எனவே, சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணைவைப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை”என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:95)

“எனது இறைவன் என்னை நேரான வழியில் செலுத்தியுள்ளான். (அது) நிலையான மார்க்கம். சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை”என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 6:161)

நமக்கு நல்வழிகாட்ட வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் இதையே இறைவன் கூறியுள்ளான். என்பதை திருக்குர்ஆனின் இந்த வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது.

(நபியே!) “சத்திய நெறியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு அறிவித்தோம். இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை. அவர்

(அல்குர்ஆன்: 16:123)

இதே கருத்தில் குர்ஆனில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. மேற்கண்ட வசனங்களில் இடம்பெறும், “அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை” என்ற வார்த்தை இப்ராஹீம் நபியின் கொள்கைப் பரிசுத்தத்தை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

பின்வரும் இப்ராஹீம் நபியின் வார்த்தைகளும் அவரின் அப்பழுக்கில்லாத ஏகத்துவத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

“நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பும்வரை, உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை மறுத்து விட்டோம்.

(அல்குர்ஆன்: 60:4)

அவர் தமது தந்தையிடம், “என் அருமைத் தந்தையே! செவியேற்காததை, பயனளிக்காததை நினைவூட்டுவீராக! பார்க்காததை, உமக்குச் சிறிதும் ஏன் வணங்குகிறீர்?” என்று கூறியதை

“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி என்னிடம் வந்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! நான் உமக்குச் சரியான வழியைக் காட்டுகிறேன்”. “என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! அளவற்ற அருளாளனுக்கு ஷைத்தான் மாறு செய்பவனாக இருக்கிறான்”

“என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்குத் தண்டனை ஏற்படுவதையும், நீர் ஷைத்தானின் கூட்டாளியாக ஆவதையும் நான் அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)

(அல்குர்ஆன்: 19:42-45)

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைத்தார். இணைவைப்பிற்கு எதிராக நின்றார்.

இப்ராஹீம் நபி அவர்கள் ஏற்றுக் கொண்ட ஏகத்துவம் எத்தகையது என்பதையும் அவர் இணைவைப்பை எவ்வாறு எதிர்த்தார் என்பது குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏகத்துவம் என்றால் என்ன?

ஏக இறைவன் ஒருவனே என்ற தத்துவத்தை எடுத்துரைப்பதே ஏகத்துவக் கொள்கை. அதையே முஸ்லிம்கள் லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் மூலம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சொல்கிறோம்.

(நபியே!) அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை என்பதை அறிந்து கொள்வீராக!

(அல்குர்ஆன்: 47:19)

இந்த ஏகத்துவக் கொள்கையைத் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் உட்பட அனைத்து நபிமார்களும் பிரச்சாரம் செய்தார்கள்.

ஏகத்துவத்தை தான் அரபு மொழியில் தவ்ஹீத் என்று குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கும் முஸ்லிம்களில் சிலர் அவனுக்கு எதையும் யாரையும் இணையாக்க கூடாது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

இணைவைப்பைப் பற்றி அறிந்தால் தான் தவ்ஹீத் எனும் இஸ்லாத்தின் அடிப்படைக் கலிமாவையே முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்விற்கு எள்ளவும். எள் முனையளவும் இணை துணை கற்பித்துவிடக் கூடாது என்பதே ஏகத்துவக் கலிமா சொல்லும் பாடம்.

இப்ராஹீம் நபியின் ஏகத்துவக் கொள்கை

* அவனே என்னைப் படைத்தான்.

* அவனே என்னை நேர்வழியில் செலுத்துகிறான்.

* அவனே எனக்கு உணவளிக்கிறான்:

* அவனே எனக்கு அருந்துவதற்கும் தருகிறான்.

* அவனே நான் நோயுற்றால் என்னைக் குணப்படுத்துகிறான்.

* அவனே என்னை மரணிக்கச் செய்வான்;

* அவனே பின்னர் என்னை உயிர்ப்பிப்பான்.

* அவனே இறுதித் தீர்ப்பு நாளில் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும்.

இன்னும் இதுபோன்ற இறைவனின் அதிகாரங்களில் யாரையும் அவனுக்கு இணையாக்காமல் அனைத்து அதிகாரத்திலும் ஆற்றலிலும் அல்லாஹ்வையே நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சார்ந்திருந்தார்கள் என்பதை (அல்குர்ஆன்: 26:78-82) ஆகிய வசனங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

இணைவைப்பு என்றால் என்ன?

ஏகத்துவம் என்றால் என்ன? என்பதையும் இணை வைத்தல் என்றால் என்ன என்பதையும் ஒரு இஸ்லாமியன் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ஏகத்துவம் இணைவைத்தல் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று | முரண்பட்ட நேர் எதிரான விசயங்களாகும். இன்றைய முஸ்லிம்களில் பலருக்கு ஏகத்துவத்தைப் பற்றியும் தெரிவதில்லை. இணை வைத்தலைப் பற்றியும் தெரிவதில்லை.

அல்லாஹ்வை வணங்குவது போல் ஒரு மனிதனையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளையோ வணங்குவது தான் இணைவைப்பு என்று மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளனர்.

ஆனால் அது மட்டும் இணைவைப்பு அல்ல. இறைவனின் ஆற்றல் அதிகாரம் பண்பு போன்ற அல்லாஹ்விற்கு மட்டும் உரிய பிரத்யேகத் தன்மைகளில் ஒரு தன்மையை மற்ற படைப்பினங்களோடு கூட்டாக்கினாலும் அது இணைவைத்தலே ஆகும்.

அவனையன்றி யாரை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் சிறிதளவு கூட அதிகாரம் பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 35:13)

அல்லாஹ்வை தவிர்த்து ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ கடவுள் என்றோ இறைவன் என்றோ சொன்னால் தான் இணைவைத்தல் என்பது இல்லை.

அல்லாஹ்வை நம்புவது போல அணுவளவு நம்பிக்கையை ஒரு படைப்பினத்தின் மீது வைத்தாலும் அதுவும் இணைவைத்தலே.

அல்லாஹ்வே படைத்தவன். மற்ற அனைத்தும் படைப்பினங்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒவ்வொரு படைப்பினத்திற்கும் இயற்கை யதார்த்த தன்மையொன்று உண்டு. அவற்றை மட்டும் நாம் நம்பினால் நமது கொள்கைக்கு எந்த சிக்கலும் இல்லை

அந்த இயற்கை தன்மையைத் தாண்டி ஒரு அதீத ஆற்றல் ஒரு படைப்பினத்திற்கு இருப்பதாக நாம் நம்பினால் அதுவே இணைவைத்தலாகும்.

உதரணத்திற்கு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொண்டால் அது சமையலுக்கு உதவும் இன்னும் சில பயன்களும் அதில் இருக்கலாம். அதை நாம் நம்புவதில் பிழை ஏதும் இல்லை. இதைத் தாண்டி ஐம்புலன்களுக்கு எட்டாத மாந்திரீக குணங்கள் அதற்கு இருப்பதாக ஒருவர் நம்பினால் அது இணைவைத்தலாக மாறிவிடும்.

இதே போலத்தான் ஒவ்வொரு படைப்பினத்தையும் படைப்பினமாகப் பார்க்க வேண்டும். படைத்தவனின் தன்மையைப் படைப்பினங்களுடன் இணைத்தால் அது சிறிதளவாக இருந்தாலும் இணைகற்பித்தலாக மாறிவிடும்.

இணைகற்பித்தல் என்பது அரபு மொழியில் ஷிர்க் என்று சொல்லப்படும்.

ஏகத்துவம் எனும் இஸ்லாத்தின் அடிப்படையை சொல்லித் தரும் லா இலாஹ இல்லல்லாஹ் கலிமாவை நாம் முழுமையாக நம்ப வேண்டும் எனில் அதில் சிறிதளவும் ஷிர்க் இருக்கக் கூடாது.

இதுவே நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கையாகும். ஆனால், இன்று முஸ்லிம்களில் சிலர் தாங்கள் இப்ராஹீம் நபியின் கொள்கையில் இருக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இப்ராஹீம் நபிக்கு எதிரான ஷிர்க் எனும் இணைவைப்புக் கொள்கையில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

எந்த ஒரு மனிதன் இறந்து விட்டாலும் அவரது உடல் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடும். மனிதன் வாழும் போது அவனுக்கு உள்ள ஆற்றல் கூட இறந்த பின்பு அவனுக்கு இல்லாமல் போய் விடும். ஆனால் ஏகத்துவத்தை ஏற்க மறுக்கும் இணை வைப்புக் கொள்கையுடையோரின் நம்பிக்கை இதற்கு நேர் முரணமாக உள்ளது.

அவர்கள் யாரை நல்லடியார்கள் எனக்கருதுகிறார்களோ அவர்கள் இறந்ததற்குப் பிறகும் செவியேற்பார்கள் என்றும் மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்றும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கை இருக்கின்ற காரணத்தினால் தான் தர்ஹாக்களைக் கட்டி வைத்துக் கொண்டு அங்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நம்பிக்கை இஸ்லாத்தை விட்டே ஒருவரை வெளியேற்றிவிடும்.

இணைவைப்பு பல வகைகளில் இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் காணப்படுகிறது. இந்தக் காரியங்கள் அனைத்துமே நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கைக்கு எதிரானதாகும். | மறுமையை நம்பி மார்க்கத்தை அழகாக்க விரும்புவோர் இப்ராஹீம் நபியின் திடமான ஏகத்துவ கொள்கைப் பாட்டையில் பயணிக்க வேண்டுமே தவிர அழிவிலும் இழிவிலும் நம்மைத் தள்ளிவிடும்| இணைவைப்பை நோக்கிச் சென்று விடக் கூடாது.

ஏனெனில் இணைவைப்பு என்பது மறுமையை நாசாமாக்கும் மாபாதகச் செயலாகும்.

மன்னிக்கப்படாத குற்றம்!

இணைவைத்தல் என்பது அல்லாஹ்விடம் மன்னிக்கப்படாத மாபெரும் குற்றமாகும்.

தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர வேறு எதையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் மிகப் பெரிய பாவத்தை இட்டுக்கட்டி விட்டான்.

(அல்குர்ஆன்: 4:48)

அழிந்து போகும் நல்லறங்கள்!

“நீர் இணை வைத்தால் உமது நற்செயல் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தோரில் ஆகி விடுவீர்” என (நபியே!) உமக்கும். உமக்கு முன்னிருந்தோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவீராக!

(அல்குர்ஆன்: 39:65-66)

அவர்கள் இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்கள் அவர்களை விட்டு அழிந்திருக்கும்.

(அல்குர்ஆன்: 6:88)

சுவனம் செல்லத் தடை!

எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான்.