02) விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பதற்கா?

மற்றவை: குர்ஆன் வசனத்திற்கு நபியின் விளக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாம் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து நபியவர்களுக்குத் துணை நின்ற பல நபித்தோழர்கள் தங்கள் இன்னுயிரை அல்லாஹ்வின் பாதையில் அந்தப் போர்க்களங்களில் அர்ப்பனம் செய்தனர். இதன் காரணமாக விதவைகளாகி விட்ட அந்த நபித்தோழர்களின் மனைவியருக்கு வாழ்வளிக்கவும், விதவை மறுமணத்தை ஆர்வமூட்டவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த விதவைகளை மணம் செய்தனர் என்று சில அறிஞர்கள் காரணம் கூறுகின்றனர்.

இந்தக் காரணம் ஏற்க முடியாததாகும். விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டவும், விதவைகளுக்கு வாழ்வளிக்கவும் நபியவர்கள் நான்குக்கு மேற்பட்ட மனைவியரை மணந்தார்கள் என்றால் இதே காரணத்திற்காக மற்றவர்களுக்கும் இது அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எண்ணற்ற விதவைகளில் பத்துப்பன்னிரண்டு விதவைகளுக்கு மாத்திரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வளித்தார்கள். அனைத்து விதவைகளுக்கும் இதன் மூலம் மறுவாழ்வு கிடைக்கவில்லை.

விதவைகளுக்கு மறுவாழ்வளிப்பது தான் காரணம் என்றால் இந்தக் காரணம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, யாரெல்லாம் இந்தக் காரணத்தைச் சந்திக்கிறார்களோ அப்போதெல்லாம் அத்தகையவர்களுக்கு நான்கு மனைவியர் எனும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். ஆனால் ஒரே சமயத்தில் நான்குக்கு மேல் மணம் செய்வதை எக்காலத்துக்கும் என்ன காரணத்திற்காக இருந்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர மற்றவர்களுக்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தாலும் இந்தக் காரணம் சரியானதல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் விதவை மறுமணம் ஆர்வமூட்டப்பட வேண்டிய நிலைமையில் இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பே அன்றைய அரபுகள் விதவை மறுமணம் செய்து வந்தனர். இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்த அரபுகளும் விதவை மறுமணம் செய்திருந்தனர். இதற்குச் சான்றாக கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய திருமணங்களைக் கூறலாம்.

காதீஜா (ரலி) அவர்கள் முன்னர் அபூ ஹாலா என்பவரின் மனைவியாக இருந்தார்கள். அவர் மரணித்த பின் அதீக் பின் ஆயித் என்பவரைத் திருமணம் செய்தார்கள். அவரும் மரணமடைந்த பிறகே நபியவர்களைத் திருமணம் செய்தார்கள்.

(பார்க்க : அல் இஸாபா)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணப்பதற்கு முன்பே விதவையாக இருந்த கதீஜா (ரலி) அவர்களை அதீக் என்பவர் மணந்திருக்கிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அன்றைய அரபுலக வரலாற்றைப் பார்க்கும் போது இந்தியாவில் இருந்தது போல் விதவை மறுமணம் மறுக்கப்பட்டிருக்கவில்லை. ஏராளமானோர் விதவை மறுமணம் செய்திருந்தனர் என்பதை அறியலாம். அந்த நல்ல வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அங்கீகரித்தார்கள். இது தான் வரலாற்று உண்மை.

இந்த உண்மைக்கு மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் தான் விதவை மறுமணம் செய்தார்கள் என்பதும், விதவை மறுமணத்தில் ஆர்வமூட்டுவதற்காக நிறைய விதவைகளைத் திருமணம் செய்தார்கள் என்பதும் பொருந்தாத காரணங்களாகும்.