02) வஹீ வரும் வழிமுறைகள்
(அல்குர்ஆன்: 53:2-4) ➚வசனங்கள் நபிகள் நாயகம் பேசுவது யாவுமே வஹீ என்று திட்டவட்டமாக அறிவிப்பதை சென்ற தலைப்பில் நாம் விளக்கினோம்.
இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.
ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை.அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.
மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகின்றது.
ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல்லி அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.
மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அங்கே அவர் வந்தபோது மூஸாவே என்று அழைக்கப்பட்டார்.
“நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் துவா எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!
நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலைநாட்டுவீராக!
இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பல கட்டளைகள் அப்போது பிறப்பிக்கப்பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல் நேரடியாகவே பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக் காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் “திரைக்கு அப்பால் இருந்து” என்று இறைவன் கூறுகிறான்.
இவ்விரு வகைகளும் வஹீ எனும் இறைச் செய்தியாக இருந்தாலும் இன்னொரு வழியிலும் அல்லாஹ் பேசுவதைக் குறிப்பிட தனிப்பெயர் எதையும் கூறாமல் வஹீயாக – வஹீ மூலம் – என்று அல்லாஹ் கூறுகிறான். மற்ற இரண்டும் வஹீயாக இருந்தாலும் மூன்றாவது வழியை மட்டுமே இவ்வசனத்தில் வஹீ என்கிறான்.
இவ்விரு வகைகள் தவிர வேறு வழியில் இறைவன் மனிதர்களிடம் பேசுவான் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? மனித உள்ளங்களில் மனிதர்கள் என்ற முறையில் தோன்றாத செய்திகளை இறைவன் தோன்றச் செய்வான். அவ்வாறு தோன்றச் செய்வதும் வஹீ தான். இறைச் செய்தி தான் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இதற்கு இருக்க முடியாது.
திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல கட்டளைகளை இப்படித்தான் செயல்படுத்த வேண்டுமென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு காட்டி செயல் வடிவம் கொடுத்தது அவர்கள் இதயத்தில் அல்லாஹ் உதிக்கச் செய்ததன் அடிப்படையில் தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆனே ஒப்புக் கொள்ளக் கூடிய – வலியுறுத்தக் கூடிய மூன்று வகையான வஹீகளில் ஒன்றை யாரேனும் மறுத்தால் அவர்கள் திருக்குர்ஆனைத் தான் மறுக்கிறார்கள். திருக்குர்ஆன் மூன்றாவது வஹீ இருப்பதாக சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் கூறுகிறது.
இந்த இடத்தில் சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூன்று வகையான வஹீ அருளப்பட்டதாகக் கூறவில்லை. அல்லது நபிமார்களுடன் மூன்று வகைகளில் இறைவன் பேசுவதாகவும் கூறவில்லை. பொதுவாக மனிதர்களிடம் பேசுவதாகத் தான் கூறப்பட்டுள்ளது.
மரியம் (அலை), மூஸா நபியின் தாயார் போன்றவர்களிடம் இறைவன் பேசியுள்ளான். எனவே நபிமார்கள் அல்லாதவர்களுடன் இறைவன் பேசுவதைத் தான் மூன்றாவது வஹீ குறிப்பிடுகின்றது என்று கருதலாம் அல்லவா? என்பதே அந்தச் சந்தேகம்.
மனிதர்களுடன் பேசுவதாக இந்த வசனம் கூறினாலும் மற்ற இரண்டு அம்சங்கள் எப்படி மனிதர்களில் உள்ள இறைத்தூதர்களிடம் பேசுவதைக் குறிப்பிடுகின்றதோ அப்படித் தான் மூன்றாவதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது வஹீ என்பதை முதல் இரண்டு வஹீயிலிருந்து வேறுபடுத்திக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.
மேலும் இந்த வாதம் அர்த்தமற்றது; தவறானது என்பதை இதற்கு அடுத்த வசனம் மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்து விடுகின்றது.
இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்றால் என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்தவராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர்வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.
இவ்வாறு தான் உமக்கும் நாம் வஹீ அறிவித்தோம்” என்று இவ்வசனம் குறிப்பிடுகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற்கண்ட மூன்று வஹீயும் வந்துள்ளன என்பதை இவ்விரு வசனங்களும் மிகத் தெளிவாக அறிவிக்கின்றன.
அதாவது நபிகள் நாயகத்துடன்….
* திரைக்கப்பாலிருந்தும் அல்லாஹ் பேசியிருக்கின்றான்.
* ஜிப்ரீலை அனுப்பி குர்ஆன் மூலமும் பேசியுள்ளான்.
* ஏனைய வானவர்களை அனுப்பி குர்ஆன் அல்லாத பல செய்திகளையும் சொல்லி அனுப்பியுள்ளான்.
* இவை தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்திலும் இறைவன் தனது கட்டளைகளைப் பதியச் செய்துள்ளான்
என்பது திட்டவட்டமாக நிரூபணமாகின்றது.
திருக்குர்ஆன் மட்டும் போதும் என்று யாரேனும் கூறினால் இறைவன் திரைக்கப்பாலிருந்து பேசினானே அந்தப் பேச்சுக்கள் எங்கே? உள்ளத்தில் போட்ட வழிகாட்டுதல் எங்கே? அவையும் இறைவனின் கட்டளைகள் எனும்போது அவற்றைக் கடைப்பிடிக்காமல் இருக்க முடியுமா! அவற்றை மறுப்பது மேற்கண்ட இரு வசனங்களையும் மறுத்ததாக ஆகாதா?
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.