02) வட்டிக்கு எதிரான எச்சரிக்கை

நூல்கள்: நவீன வடிவங்களில் வட்டி- ஓர் இஸ்லாமிய பார்வை

வட்டி வாங்குவது ஹராம்

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வட்டியின் மூலம் சம்பாதித்து வந்தனர். இதை அல்லாஹ் தடைசெய்து வசனங்களை இறக்கினான்.

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக்  கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:275)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “அல்பகரா’ அத்தியாயத்தின் (வட்டி தொடர்பான) இறுதி வசனங்கள் (அல்குர்ஆன்: 2:275)– 281) அருளப் பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று அவற்றை மக்களுக்கு ஓதிக்காட்டினார்கள். பிறகு மதுபான வியாபாரத்தைத் தடை செய்தார்கள். நூல் : முஸ்லிம் (3221)

முன்வாழ்ந்த சமூகத்தாருக்கும் வட்டி ஹராம்

நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன் வாழந்த யூத கிறிஸ்தவ சமூகத்தாருக்கு அல்லாஹ் நபிமார்களை அனுப்பினான். இந்த நபிமார்கள் வட்டி வாங்குவதை விட்டும் யூதர்களை தடுத்தனர். யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் (நம்மை) தயாரித்துள்ளோம்.  (அல்குர்ஆன்: 4:160)

எனவே வட்டி என்ற பெரும்பாவம் ஆரம்பம் காலம் முதலே இறைவனால் தடுக்கப்பட்டுவிட்டது.

வட்டி கொடுப்பதும் ஹராம்

இன்றைக்கு பலர் வட்டி வாங்குவது மட்டுமே பாவமான செயல் என்றும் வட்டி கொடுப்பது பாவமல்ல என்றும் தவறாக நினைக்கின்றார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வட்டிக் கொடுப்பதையும் வன்மையாக கண்டித்துள்ளார்.

அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள்! நூல் : (புகாரி: 2086)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இ(ந்த வட்டிப் பாவத்)தில் வாங்கியவரும் கொடுத்தவரும் சமமானவர்கள் ஆவர். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (முஸ்லிம்: 3234) ஹாகிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பில் வட்டிப்பாவத்தில் இவ்விருவரும் சமமானவர்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 1) வட்டி வாங்குபவரையும் 2) வட்டி கொடுப்பவரையும், 3) அதற்குக் கணக்கு எழுதுபவரையும் 4) அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.

நூல் : (முஸ்லிம்: 3258)

அறியாமைக்கால கலாச்சாரம்

இஸ்லாத்தை அறியாத அறியாமைக் கால மக்கள் வட்டி வாங்கி வந்தனர். இதை இஸ்லாம் தடைசெய்தது. எனவே இதற்குப் பிறகும் வட்டி வாங்குபவர்கள் உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

நூல் : (முஸ்லிம்: 2334)

வட்டி வாங்குவது யூதர்களின் கலாச்சாரம் அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்ற யூதர்களே வட்டியில் மூழ்கிக் கிடந்தனர். எனவே வட்டி வாங்குபவர்கள் யூதக் கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) தயாரித்துள்ளோம்.

(அல்குர்ஆன்: 4:161)

அழித்தொழிக்கும் பெரும்பாவம்

வட்டி நம்முடைய மறுமை வாழ்வை அழித்து நாசமாக்கக்கூடிய பெரும்பாவங்களில் ஒன்றாகும். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “”அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “”அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல் வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள். நூல் : (புகாரி: 2766)

இறைவனுடன் போர் செய்வதற்கு நிகாரான பாவம்

வட்டி வாங்குவது இறைவனுடன் போர் செய்வதற்கு நிகரான பாவம் என்று குர்ஆன் கூறுகின்றது. இந்த வகையில் மற்ற பாவங்களை விட்டும் வட்டி வேறுபட்டு பெரும்பாவமாக உள்ளது. தந்தை ஒரு வேலையை செய்யுமாறு மகனிடம் கூறினால் அந்த மகன் அதை செய்யாமல் இருப்பது குற்றமாகும். ஆனால் இந்த வேலையை செய்யாததோடு தந்தையிடம் சண்டைக்குச் செல்வது அதைவிடவும் பயங்கரமான குற்றமாகும். வட்டி வாங்குவோர் இப்படிப்பட்ட பயங்கரமான பாவத்தை செய்துகொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ்வுடனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் போர் செய்பவன் மிகப் பெரிய பாவியாகவும் மறுமை வாழ்வில் கடுமையான தண்டனையை அடையக்கூடியவனாகவும் இருக்கின்றான். இவன் ஒருக்காலத்திலும் வெற்றியை அடைய முடியாது. வட்டி வாங்குவோர் இந்நிலையில் இருப்பதாக குர்ஆன் சொல்லிக்காட்டுகின்றது. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. (அல்குர்ஆன்: 2:275)

மேலும் இந்த வசனத்தில் நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். வட்டி வாங்குவது மக்களுக்கு செய்யும் அநியாயம் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. அடுத்தவரின் பொருளை அநியாயமாக உண்டவர்களுக்கு மறுமையில் கொடுக்கப்படும் அனைத்து தண்டனைகளும் வட்டி வாங்கியவருக்கும் கொடுக்கப்படும்.

வட்டி வாங்குபவர்கள் சாபத்திற்குரியவர்கள்

நபி (ஸல்) அவர்கள் வட்டி வாங்குபவரையும் வட்டிக் கொடுப்பவரையும் சபித்துள்ளார்கள்.

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நூல் : (புகாரி: 5347)

வட்டிக்குத் துணைபோவோரும் சாபத்திற்குரியவர்கள்

பொதுவாக எந்த பாவமான காரியத்துக்கும் உதவி செய்வது கூடாது. குறிப்பாக வட்டி என்ற பெரும்பாவத்தில் அறவே சம்பந்தப்படக்கூடாது. வட்டியுடன் தொடர்புடைய அனைவரும் நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்குரியவர்களாக இருக்கின்றார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “”இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் (3258)

வட்டி வாங்குவோர் நன்றிகெட்டவர்கள்

பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் செல்வந்தர்களுக்கு கணக்கில்லாமல் வாரி வழங்குகின்றான். இறைவன் விரும்பக்கூடிய வழியில் செல்வத்தை செலவழிப்பது இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும். ஆனால் இந்த செல்வத்தை இறைவன் கடுமையாக வெறுக்கின்ற வட்டித் தொழிலில் இட்டு பெறுக்குபவர்கள் நன்றிகெட்டவர்கள் என்றும் பாவிகள் என்றும் குர்ஆன் கூறுகின்றது. 11 அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன்: 2:276)

வட்டி வாங்குவோர் இறைநம்பிக்கையாளர் இல்லை

உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் வட்டி வாங்கமாட்டார்கள். இவ்வாறு பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! (அல்குர்ஆன்: 2:278)

வட்டியை உண்போர் பைத்தியமாக எழுப்பப்படுவர்

இந்த உலகத்தில் வட்டி வாங்கி பலருக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியவர்கள் மறுமை நாளில் பைத்தியமாக எழுப்பப்படுவார்கள். வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். (அல்குர்ஆன்: 2:275)

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்திற்குரியவர்கள்

இணைவைப்பு கொலை போன்ற பெரும்பாவங்களை செய்பவர்களே நிரந்தரமாக நரகத்தில் கிடப்பார்கள். வட்டி இதுபோன்ற பெரும்பாவம் என்பதால் இதற்கும் அல்லாஹ் நிரந்தர நரகத்தை தண்டனையாக வழங்குகிறான். வட்டி வாங்குவோர் ஒருக்காலும் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. நரகத்தை விட்டு வெளியேற முடியாது.

அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் (வட்டியிலிருந்து) விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 2:275)

 

நரகத்தில் இறைமறுப்பாளர்களுடன் இருப்பார்கள்

வட்டி வாங்குவோருக்கு இறைமறுப்பாளர்களுக்குத் தயாரிக்கப்பட்டுள்ள நரகம் உண்டு என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்! அல்குர்ஆன் (3:130)

 

வட்டி வாங்கியோர் இரத்த ஆற்றில் கல்லடிபடுவார்கள்

இந்த உலகத்தில் வட்டி வாங்கி மக்களின் இரத்தத்தை உறிஞ்சியவர்கள் மறுமையில் இரத்த ஆற்றில் விடப்படுவார்கள். அந்த இரத்தத்திலிருந்து அவர்கள் வெளியே வர முயற்சி செய்யும் போதேல்லாம் அவர்களின் வாயில் கல்லால் அடிக்கப்படும். அதிலிருந்து அவர்களால் வெளியே வர இயலாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர்  நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது, அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!

அவர் யார்?’’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன்: அதற்கவர்கள் “ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!’’ எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (புகாரி: 2085)

 

அழிவு நிச்சயம்

வட்டித் தொழில் செய்தால் செல்வம் பன்மடங்கு பெருகுவதைப் போன்று நமக்குத் தெரிந்தாலும் அதில் இறைவன் பரகத் எனும் மறைமுக அருளை எடுத்துவிட்டான். வேறு வகையில் அவர்களுக்கு இழப்புகளையும் துன்பங்களையும் அல்லாஹ் கொடுப்பான். அவர்களால் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியாது.

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன்: 2:276)

மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள். அல்குர்ஆன் (30 :39)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் வட்டியின் மூலம் பொருளாதாரத்தை அதிகரித்துக்கொண்டால் அதன் இறுதி முடிவு அழிவைத் தவிர வேறு இல்லை. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : (இப்னு மாஜா: 2270)

இறைவன் வட்டியை அழிக்கிறான் என்பதற்கு சிறந்த உதாரணமாக தற்போது வட்டியினால் அமேரிக்கா போன்ற பணக்கார நாடுகளுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை கூறலாம்.

 

அல்லாஹ்வின் கருணை கிடைக்காது

மனிதர்களுக்கு கருணை காட்டுபவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவான். மனிதர்களிடத்தில் இரக்கமில்லாமல் நடந்தால் அல்லாஹ்வும் இரக்கம் காட்ட மாட்டான். வட்டி வாங்குவது கருணையற்றவர்களின் செயலாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்ட மாட்டான். இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : (புகாரி: 7376)

ஒரு ஊரில் வட்டிப் பெருகிவிட்டால் அல்லாஹ் அவ்வூரார் மீது கோபம் கொண்டு தன் வேதனையை இறக்கிவைத்துவிடுவான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 15 ஒரு ஊரில் விபச்சாரமும் வட்டியும் பெருகிவிட்டால் அவ்வூரார் அல்லாஹ்வின் வேதனை தங்கள் மீது இறங்க வழிவகை செய்துவிடுகிறார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : (ஹாகிம்: 2202)

 

வட்டி வாங்குவோரின் பிரார்த்தனை ஏற்கப்படாது

ஹராமான சம்பாத்தியத்தை உண்பவர்கள் பிரார்த்தனை செய்தால் அந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “”மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்ட வற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறினார்கள். பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “”அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 1844)