02) மிகப்பெரிய பாவம்
அப்துல்லாஹ்பின்மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லி விட்டு, “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது” என்று சொன்னார்கள்.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை) என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்)தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எவர் நம்பிக்கை (ஈமான்) கொண்டு பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர் எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள் எங்களில் (தமக்குத் தாமே) அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தாம் இருக்கிறார்? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ், இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும் எனும் (31:13ஆவது) வசனத்தை அருளினான்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை எவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும்தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், ஆம் என்று பதிலளிப்பான்: அப்போது அல்லாஹ், நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பிய போது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)(புகாரி: 3334)