02) மரண சிந்தனை
இறைவனை தவிர உள்ள அனைத்துமே குறிப்பிட்ட தவணையின் அடிப்படையிலேயே இயங்கி கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் அதற்குரிய தவணையை அடைந்ததும் மரணத்தை எய்துவிடுகின்றன.
நமக்கும் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. தவணை முடிந்ததும் மரணத்தை தழுவியே தீருவோம் என்ற மரண சிந்தனையை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் மரணம் தான் நம்மை மண்ணறைக்கு அழைத்து செல்லும் கருவியாகும். இவ்வுலக வாழ்க்கையிலிருந்து பர்ஸக் வாழ்க்கைக்கு நம்மை அழைத்து செல்ல வரும் அழையா விருந்தாளியே மரணம்.
பல இறைமறை வசனங்களும் நபிவழி போதனைகளும் இத்தகைய மரண சிந்தனை கொள்வதை வலியுறுத்தி பேசுகின்றன.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.
“நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம் வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் “சூழ்ந்துள்ள’ அல்லது ”சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனை களில்) ஒன்றி-ருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இயற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: (புகாரி: 6417)
நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ரலி) “தமது குழந்தை’ அல்லது “தம் மகன்’ இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், “என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!” என்று கூறியனுப்பினார்கள்.
அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி), நூல்: (முஸ்லிம்: 1682)
“நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கக் கூடியது. பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப் படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக!
நமக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தவணையை, ஆயுட்கால முடிவை நம்மில் யாரும் அறிந்து கொள்ளவில்லை. அது ஒரு நாளாக இருக்கலாம். இரண்டு நாள்களாக இருக்கலாம். ஒரு வருடமாகவோ சில வருடங்களாகவோ இருக்கலாம். கண்டிப்பாக மரணம் வரும்போது அது நம்மிடம் சொல்லிக் கொண்டு வராது.
நாம் அறிந்த எத்தனையோ நபர்கள் திடீரென இறந்து விடுவதை பல தடவை அறிகிறோம். மரணத்தை அவர்கள் முற்றிலும் எதிர்பார்த்திராத தருணத்திலேயே அவர்கள் இறந்து விட்டார்கள்.
அதுபோன்று நம் தவணை எப்போது வேண்டுமானாலும் முடிந்து மண்ணறை வாழ்க்கைக்குள் சென்று விடுவோம் என்ற மரண சிந்தனை எப்போதும் நம் நினைவில் இழையோட வேண்டும்.
உமர் ரலி அவர்களின் அறிவுரையை இவ்விடத்தில் நினைவு கூர்வது சாலச்சிறந்ததாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இவ்வுலகம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மறுமை முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் புதல்வர்கள் உள்ளனர். எனவே, நீங்கள் மறுமையின் புதல்வர்களாயிருங்கள். இம்மையின் புதல்வர் களாகிவிடாதீர்கள். இன்று வினை உண்டு விசாரணை இல்லை. நாளை விசாரணை உண்டு ஆனால், வினை இல்லை.
”நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப் படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளுக்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு”
நூல் (புகாரி: 6416)
நம் வாழ்நாளில் அதிகம் சந்திக்கப்பட வேண்டிய இடமாக மண்ணறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் என்றாவது ஒரு நாள் இம்மண்ணறையை தஞ்சம் அடைவோம் என்ற எண்ணம் நம்மை நல்வழியை நோக்கி வழிநடத்தும். இவ்வாறு நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர் களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1777)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.
அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல்: (திர்மிதீ: 974)
மண்ணறை வாழ்க்கையை அனுபவிக்கும் முன்பாக மரணிக்கும் தருவாயிலேயே சில வேதனைகளை அனுபவிக்க நேரிடும். நல்லவர்கள். தீயவர்கள் யாராக இருப்பினும் மரணிக்கும் வேளையில் ஏற்படும் வேதனையை உணர்ந்துதான் ஆக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக்கொண்டு, “வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு” என்று கூறலானார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 4449)
மரண நேரத்தில் நேரும் வேதனையை பற்றி திருக்குர்ஆன் தெளிவாக எச்சரிக்கின்றது.
மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே.
ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 56:83-84) ➚
அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது “மந்திரிப்பவன் யார்?” எனக் கூறப்படும். “அதுவே பிரிவு” என்று அவன் விளங்கிக் கொள்வான். காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
மரத்தின் போது பார்வைகள் நிலை குத்தி விடும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு மனிதன் இறக்கும்போது அவனது பார்வை நிலை குத்தி நிற்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம்’ (கவனித்திருக்கி றோம்)” என்று விடையளித்தனர். “உயிர் பிரிந்து செல்லும்போது, அதைப் பார்வை பின்தொடர்வது தான் அது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (முஸ்லிம்: 1680)
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களும் கூட மரண நேரத்தில் பல சிரமங்களை அனுபவித்துள்ளார்கள். ஆதலால் ஒருவர் மரண வேளையில் படும் அவஸ்தையை வைத்து அவரது மறுமை வாழ்வின் முடிவை நிர்ணயிக்க முடியாது.
என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 4446)
ஒருவனது மண்ணறை வாழ்வை தீர்மானிப்பதில் அவனது இறுதி செயல்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஒருவன் துவக்கத்திலிருந்து நற்செயல்களை புரிந்து கொண்டு இருப்பினும் மரண நெருக்கத்தில் நரகத்திற்குரிய செயல்களை புரிந்து, பாவியாக மரணிப்பான் எனில் அத்தீமைகள் அவனது மண்ணறை வாழ்வில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இறுதி செயல்கள் எப்படி அமைகின்றன என்பதையே இறைவன் கவனிப்பதால் இறுதி செயல்கள் நல்லவையாக அமைய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்துவருவார். ஆனால், (இறுதியில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராகிவிடுவார். இன்னொருவர் சொர்க்க வாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (இறுதியில்) அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் சஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: (புகாரி: 6607)
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், “உங்களில் ஒருவர் அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொள்ளாமல் மரணிக்க வேண்டாம்” என்று கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: (முஸ்லிம்: 5116)
மரணத்திற்கு முன் நம் செயல்களோடு சேர்த்து எண்ணங்களையும் சீர் செய்து கொள்ள வேண்டும் என்று இந்நபிமொழிகள் தெரிவிக்கின்றன. மரணம் எப்போது வரும் என்பது அறிய முடியாததால் எந்நிலையிலும் எண்ணத்தையும் செயல்களையும் நல்லவையாக ஆக்கி கொள்வதே நம் மண்ணறை வாழ்க்கை சிறப்படைய மிகவும் நல்லது.
ஏனெனில் உயிர் தொண்டைக்குழியை அடைந்து மரண நெருக்கத்தில் நாம் கேட்கும் பாவமன்னிப்பு அல்லாஹ்விடம் ஏற்கப்படாது.
தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏக இறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
கொடுங்கோல் மன்னன் ஃபிர்அவ்ன் இறுதியில் மரணிக்கும் முன் அல்லாஹ்வை நம்புவதாகவும் தன் பாவத்திற்கு இறைவனிடம் பாவமன்னிப்பு கோருவதாகவும் கூறினான். இதன் பிறகும் அவனுடைய இறைநம்பிக்கை ஏற்கப்படவில்லை. பாவமன்னிப்பு அவனுக்கு வழங்கப்படவில்லை.
பாவமன்னிப்பு ஏற்கப்படாத, உயிர் தொண்டைக்குழியை அடையும் நேரத்தில் தான் இறைவனை நம்புவதாக அவன் சொன்னதே இதற்கு காரணம்.
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்” என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய் (என்று கூறினோம்.)
எனவே உயிரை கைப்பற்றும் வானவர், வருமுன் அல்லாஹ்விடம் நம் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கோர வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்து விடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் (முஹம்மதையும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். “எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கு வாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவர்.
நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப் பவனாக இருக்கிறான்” என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
அறிவிப்பவர்: அஃகர்ரு பின் யசார் அல்முஸனீ (ரலி), நூல்: (முஸ்லிம்: 5234)
நல்லோர்களுக்கும் தீயோர்களுக்கும் அவர்களது உயிர் பிரியும் தருணம் எவ்வாறு அமையும் என்பது ஹதீஸ்களில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.
ஆத்மா அவனை விட்டும் பிரியும் முறைகளைக் கொண்டே அவன் நல்லவனா? தீயவனா? என்பது அறியப்பட்டுவிடும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் இறக்கும் முன்னே தம் மண்ணறை நிலை, மற்றும் மறுமை நிலை ஆகிவற்றை அறிந்து கொள்வான்.
ஒருவன் இறக்கும் போதே அல்லாஹ் அவனை பொருந்திக் கொண்டானா? அல்லது அவன் மேல் கோபம் கொண்டுள்ளானா? என்பது தெரிவிக்கப்பட்டுவிடும்.
இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரிக்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரண வேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள்பாலிப்பதை வெறுப்பான்” என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), நூல்: (புகாரி: 6507)
அதனால் தான் அடக்கஸ்தலத்திற்கு அவன் கொண்டு செல்லப்படும் போது நல்லவர்களாக இருந்தால் மகிழ்ச்சியோடிருப்பதாகவும், தீயவர்களாக இருந்தால் கவலையோடிருப்பதாகவும் நபிகள் நாயகம் தெரிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் “என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்; என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்” என்று கூறும்; அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், “கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்” என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: (புகாரி: 1380)