02) பிரார்த்தனை ஒழுங்குகள்

நூல்கள்: இஸ்லாத்தின் பார்வையில் பிரார்த்தனை

மனத்தூய்மை

எந்த காரியமும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளபட வேண்டுமானால் அந்த காரியத்தில் மனத்தூய்மை இருக்கவேண்டும். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்ப்பதாக பிரார்த்தனை அமைய வேண்டும். அவனது தண்டனைக்கு அஞ்சுவதாகவும் இருக்க வேண்டும். அவனது பொருத்தத்தைக் கொண்டு நிம்மதியடைவதாக இருக்க வேண்டும்.

(ஏக இறைவனை) மறுப்போர் வெறுத்த போதும் நீங்கள் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய எண்ணத்துடன் உரித்தாக்கி அவனிடமே பிரார்த்தியுங்கள்!

(அல்குர்ஆன்: 40:14)

அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.

(அல்குர்ஆன்: 7:56)

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.

(அல்குர்ஆன்: 32:16)

“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்தபோது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். அவருக்கு யஹ்யாவை அன்பளிப்பாக அளித்தோம். அவரது மனைவியை அவருக்காக (குழந்தை பெறும்) தகுதியுடையவராக ஆக்கினோம். அவர்கள் நன்மைகளை நோக்கி விரைந்து செல்வோராகவும், ஆர்வத்துடனும் அச்சத்துடனும் நம்மிடம் பிரார்த்திப்போராகவும் இருந்தனர். நமக்குப் பணிவோராகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன்: 21:89-90)

படைத்தவனிடம் மட்டுமே பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது வணக்கம் என்பதினால் அதை இறைவனிடத்தில் மட்டுமே செய்ய வேண்டும். அதில் அவனுக்கு இணையாக யாரையும் எதுவையும் ஆக்கிவிடக்கூடாது. எதுவென்றாலும் படைத்தவனிடமே முறையிட வேண்டும் படைப்பினங்களிடம் முறையிடக்கூடாது.

உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

(அல்குர்ஆன்: 1:4)

அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:32)

நான் ஒரு முறைநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்புறம் இருந்தேன். அப்போது நபியவர்கள், நான் உனக்கு சில வாக்கியங்களைக் கற்றுத் தருகிறேன் என்று கூறி பின்வரும் வாசகத்தை கூறினார்கள்.

அல்லாஹ்வின் விதிமுறைகளை பேணிக்கொள்! அல்லாஹ் உன்னை காப்பாற்றுவான். அல்லாஹ்வின் விதிமுறைகளை பேணிக்கொள்! அவனை உன் முன்னால் (பாதுகாப்பவனாக) காண்பாய். நீ (எதையும்) கேட்டால் அல்லாஹ் விடமே கேள்! நீ பாதுகாப்புத் தேடினால் அல்லாஹ்விடமே பாதுகாப்புத்தேடு அறிந்து கொள்: இந்த சமுதாயம் ஒன்றிணைந்து உனக்கு ஒரு நன்மையை செய்ய நாடினாலும் அல்லாஹ் உனக்கு விதித்த ஒன்றைத் தவிர வேறு எந்த நன்மையையும் செய்ய முடியாது. அவர்கள் ஒன்றிணைந்து உனக்கு ஏதாவது ஒரு தீங்கை செய்ய நாடினால் அல்லாஹ் உனக்கு விதியாக்கி ஒன்றைத் தவிர வேறு எந்த தீங்கையும் அவர்களால் செய்ய முடியாது. பேனா உயர்த்தப்பட்டு விட்டது (அதாவது விதி எழுதப்பட்டுவிட்டது). ஏடுகள் காய்ந்துவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி). நூல் : (திர்மிதீ: 2440)

கிடைக்கும் என்ற மன உறுதியுடன் பிரார்த்தனை

அல்லாஹ்வை உறுதியாக நம்பி, அவன் கண்டிப்பாக பதிலளிப்பான் என்று உறுதியாக நம்பி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள்: (புகாரி: 7505), (முஸ்லிம்: 5212)

இறைவன் நம்மக்கு உறுதியாக பதிலளிப்பான் என்ற நம்பிக்கையுடன் நாம் பிரார்த்தனை செய்யும்போது இறைவனும் நம்முடைய நம்பிக்கையை பாழாக்காமல் அதற்கேற்றவாறு நடந்து கொள்வான், நமக்கு அவன் பதிலளிப்பானா? மாட்டானா? என்ற சந்தேக எண்ணம் வந்தவிட்டால் இறைவனும் அதன் படியே நடந்து கொள்வான்.

மேலும் அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றல் மிக்கவன் என்று நம்ப வேண்டும். ஆகு என்று அவன் சொன்னால் அது ஆகிவிடும் என்கிற அளவுக்கு அவனது ஆற்றல் மகத்தானது என்ற நம்பிக்கை வைத்து பிரார்த்திக்க வேண்டும்.

“ஒன்றை நாம் நாடினால் ‘ஆகு’ எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும்.”

(அல்குர்ஆன்: 16:40)

“ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும்போது ‘ஆகு’ என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.”

(அல்குர்ஆன்: 36:82)

எவ்வளவு வேண்டுமானலும் கேட்கலாம்

அனைத்து நன்மைகளும் அவனிடமே உள்ளன. எனவே அவனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். அவனிடமுள்ள கஜானா காலியாது.

“எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ண விக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்”.

(அல்குர்ஆன்: 15:21)

நீங்கள் பிரார்த்தித்தால், “இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!” என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) வயுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : (முஸ்லிம்: 5201)

நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:

என் அடியார்களே!

அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

என் அடியார்களே!

உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.

என் அடியார்களே!

உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.

என் அடியார்களே!

உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன்.

என் அடியார்களே!

நீங்கள் இரவிலும் பகலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.

என் அடியார்களே!

உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.

என் அடியார்களே!

உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறி விட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.

என் அடியார்களே!

உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப் போவதில்லை.

‘என் அடியார்களே!

உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனை வரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைக ளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்து விடுவதில்லை; கடல் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!

என் அடியார்களே!

நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்!

அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : (முஸ்லிம்: 5033)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. வாரிவழங்குவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. இரவும் பகலும் (மழை மேகத்தைப்போல் அது தன் அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானங்களையும் பூமி யையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனது கரத்திலுள்ள (செல்வத்)தை வற்றச் செய்துவிடவில்லை என்பதைப் பார்த்தீர்களா? (வானங் களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. அவனது இன்னொரு கரத்தில் தராக உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான். அவனே உயர்த்துகிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: (புகாரி: 7411)

சப்தமின்றி இரகசியமாக பிரார்த்தனை

உரத்த சப்தமின்றி ஊரார் அறியும் வண்ணம் இல்லாமல் இரகசியமாக பணிவுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய் யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 7:55)

ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்தை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

நமது கோரிக்கையைக் கேட்கும்போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்கமாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.

மனிதனிடம் கோரிக்கை வைக்கும்போது காட்டப்படும் பணிவைவிட ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக அல்லாஹ்விடம் பணிவைக் காட்ட வேண்டும். அதைத்தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு அல்லாஹ்விடம் கேட்கும்போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய்விடும்.

பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித்தான் பணிவு இல்லாமல் யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.

ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.

இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத்தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வலியுறுத்தி கேட்க வேண்டும்

இறைவனிடம் கேட்கும்போது, கேட்கப்படும் கோரிக்கை தனக்கு அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.

உனக்கு விருப்பமிருந்தால் தா! இல்லாவிட்டால் தராதே” என்பதுபோல் கேட்கப்படும் துஆக்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எப்படிக் கேட்டாலும் அவன் விரும்பினால்தான் தருவான். விரும்பினால் தா! என்று கேட்கும்போது அவன் விரும்பாவிட்டால் கூட நிர்பந்தப்படுத்தி வாங்க முடியும் என்ற கருத்து இதில் உள்ளது.

நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். “அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல்கள்: (புகாரி: 6338), (முஸ்லிம்: 5202)

அவசரப்படக் கூடாது

அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும்போது அவசரப்படக் கூடாது. ஒன்றுக்குப் பலமுறைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஒரு தடவை பிரார்த்தனை செய்து விட்டு ‘நான் கேட்டேன். கிடைக்கவில்லை’ என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. இத்தகைய எண்ணத்துடன் கேட்பவர்களின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. நாம் கேட்டவுடன் தருவதற்கு அவன் நமது வேலையாள் அல்ல. அவன் நமது எஜமானன். எஜமானனிடம் கெஞ்சிக் கேட்பதே முறையாகும்.

“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி, நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள்: (புகாரி: 6340), (முஸ்லிம்: 5283)

பாவமானதை கேட்கக்கூடாது

பிரார்த்திக்கும் போது இறைவன் எதைத் தடை செய்துள்ளானோ, அதைக் கேட்கக் கூடாது. “இறைவா லாட்டரிச் சீட்டில் என்னைப் பணக்காரனாக்கு” என்பது போன்ற பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. மேலும் இந்த குடும்பத்தினருடன் சேர்த்து வைக்காதே! அவர்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரார்த்தனை செய்யக்கூடாது.

“ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காதவரையிலும் அவசரப்படாத வரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! ‘அவசரப்படுதல்’ என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது.அதற்கு, “ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன்.

ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை” என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : (முஸ்லிம்: 5285)

எதுகை மோனையில் கேட்கக்கூடாது

படைத்தவனிடம் பிரார்த்தனை செய்யும்போது பணிவும் அடக்கமும் இருக்க வேண்டுமே தவிர வார்த்தை விளையாட்டுகள் தேவையற்றுது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வார்த்தைகளில் அலங்கரிப்பதை தடைசெய்துள்ளார்கள்.

எதுகைமோனையுடன் பிரார்த்திப்பதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிருந்து தவிர்ந்திருக்கவே நான் கண்டுள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : (புகாரி: 6337)

அல்லாஹ்விற்குரிய பெயரைக் கொண்டு பிரார்த்தனை

அல்லாஹ்விற்கு ஏரளமான பெயர்கள் உள்ளன. அவற்றில் எதைக்கூறியும் அவனிடம் பிரார்த்தனை செய்யலாம்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்!

(அல்குர்ஆன்: 7:180)

பாவங்களை ஒப்புக் கொண்டு பிரார்த்தனை

நாம் செய்த பாவங்களை ஒத்துக் கொண்டு அவனிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு செய்யுமாறு நபிகளார் நமக்கு வழிகாட்டியுள் ளார்கள்.

‘அல்லாஹும்ம | அன்த்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த்த கலக்த்தனீ. வ அன அப்துக்க வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்யு வ அபூஉ லக்க பி தன்பி ஃபஃக்பிர்லீ ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த‘ என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.

பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக் குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங் கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன் னைத் தவிர வேறெவரும் இல்லை.

யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கை யோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட் டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகின்றாரோ அவரும் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி),

நூல்கள் : (புகாரி: 6306), (திர்மிதீ: 3315), (நஸாயீ: 5427), (அஹ்மத்: 16488)

நல்லறங்கள் செய்து பிரார்த்தனை

பிரார்த்தனை செய்யும்போது ஏதாவது நல்லறங்களை செய்துவிட்டு அல்லது செய்த நல்லறங்களை இறைவனிடம் சொல்லிக்காட்டி இறைவா! இந்த நல்லறத்தை உன்னக்காவே நான் செய்தேன் எனவே என் பாவங்களை மன்னிப்பாயாக! என்று கேட்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 2:153)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன் காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், “நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர்.

அவர்களில் ஒருவர், “இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! ‘நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓரிடைவெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.

மற்றொருவர், “இறைவா! என் தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தராதவரை தன்னை அடைய முடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய (மணபந்த) உரிமையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளை விட்டு நான் எழுந்துவிட்டேன். இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இதை நீக்கு எனக் கூறினார். முழுமையாக அது விலகியது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள்: (புகாரி: 2215), (முஸ்லிம்: 5293)

கைகளை உயர்த்தி பிரார்த்தனை

துஆச் செய்யும் போது கைகளை உயர்த்தியும் உயர்த்தாமலும் பிரார்த்தனை செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் இரண்டு வகையாகவும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அங்ககத்தி (உளூ) செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, “இறைவா! அபூஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக! மறுமை நாளில் மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்கிடுவாயாக” என்று பிரார்த்தித் தார்கள். அப்போது அவர்களுடைய அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : (புகாரி: 6383)

நபி (ஸல்) அவர்கள் என்னை கட்டியணைத்து இறைவா! இவருக்கு வேதத்தின் ஞானத்தை கற்றுத் தருவாயாக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : (புகாரி: 75)

நபி(ஸல்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கட்டியணைத்த நிலையில் பிரார்த்தனை செய்துள்ளார்கள். கட்டியணைத்துக் கொண்டு கைகளை உயர்த்த முடியாது.

இதைப்போன்று உறங்கும்போது வலது புறமாக படுத்து, அல்லாஹூம்ம அஸ்லம்து நஃப்ஸி… என்ற பிரார்த்தனையைக் கேட்க நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். ((புகாரி: 247)

வலது புறமாக படுத்த நிலையில் இரு கைகளையும் உயர்த்தி பிரார்த்தனை செய்ய முடியாது. எனவே சில நேரங்களில் கைகளை உயர்த்தியும் சில நேரங் களில் கைகளை உயர்த்தாமலும் பிரார்த்தனை செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

கிப்லாவை முன்னோக்குதல்

பிரார்த்தனை செய்யும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்த திசையை நோக்கியும் பிரார்த்தனை செய்யலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே, எங்களுக்கு மழைபொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிரார்த்தனை புரிய) தம் கைகளை உயர்த்தினார்கள். அப்போது எந்த சிறு மேகமும் வானத்தில் காணப்படவில்லை. (நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்து முடிப்பதற்குள்) மலைகளைப் போன்ற மேகங்கள் கிளர்ந்தெழத் தொடங்கின. நபி (ஸல்) அவர்கள் தமது மேடையிலிருந்து இறங்கியிருக்கவில்லை. அதற்குள் (மழை பொழியத் தொடங்கி) அவர்களது தாடியில் மழை நீர் வழிவதை நான் கண்டேன். அந்த நாள் அடுத்த நாள், அதற்கடுத்த நாள் (இப்படி) மறு ஜுமுஆ வரை எங்களுக்கு மழை பொழிந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்:  (புகாரி: 1033)

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்து கொண்டு பயான் செய்யும் போது ஒரு கிராமவாசியின் கோரிக்கை ஏற்று பிரார்த்தனை செய்கிறார்கள். அப்போது நபிகளார் மிம்பரில் இருந்து கொண்டு மக்களை நோக்கி பயான் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் கிப்லாவை நோக்கியவர்களாக இருக்கிறார்கள்.

நபிகளார் மக்களை நோக்கியவர்களாக அதாவது கிப்லாவிற்கு எதிர்திசை நோக்கியவர்களாக இருக்கிறார்கள். துஆச் செய்யும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்திருந்தால் நபிகளார் கிப்லாவை முன்னோக்கி நின்று பிரார்த்தனை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாதது கிப்லாவை முன்னோக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறது.

பெற்றோருக்காக முஃமின்களுக்காக பிராத்தனை

நம்மை பெற்றெடுத்தவர்களுக்காகவும் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் முஃமின் களுக்காகவும் பிரார்த்தனையும் செய்யுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! “சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுபோல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 17:24)

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!

(அல்குர்ஆன்: 14:41)

“என் இறைவா’ என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண் களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்).

(அல்குர்ஆன்: 71:28)

(முஹம்மதே!) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான்.

(அல்குர்ஆன்: 47:19)

பிரார்த்தனைக்கு நிச்சய வெற்றி

இந்த ஒழுங்குகளை எல்லாம் பூரணமாகப் பேணிய பிறகும் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் போனால் அதனால் நம்பிக்கையிழந்து விடக் கூடாது. நமது துஆவை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்று எண்ணி விடக் கூடாது.

நாம் கேட்பது நமக்கே தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம். அது நமக்குத் தெரியாவிட்டாலும் அவனுக்குத் தெரியும். எனவே கேட்டதைத் தராமல் அதைவிடச் சிறந்ததை அல்லாஹ் தருவான்.

விபரமறியாத குழந்தைகள் தாயிடம் ஆபத்தான கத்தியை வாங்கிக் கேட்டால் தாய் அதை வாங்கிக் கொடுக்க மாட்டாள். மாறாக அதைவிட அதிக விலையில் உள்ள வேறு பொருளை வாங்கிக் கொடுப்பாள். தாயை விட அதிகக் கருணையுடையவன் இறைவன். அடியான் அறியாமையினால் அவனுக்கு தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டால் அதைத் தராமல் அதை விடச் சிறந்ததை வழங்குவான்.

ஒரு அடியான் பெருஞ் செல்வத்தைக் கேட்கலாம். அந்தச் செல்வம் அந்த அடியானைத் தவறான வழியிலும், இறை நிராகரிப்பிலும் செலுத்திவிடும் என்று இருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததைக் கொடுப்பான்.

அது இல்லையெனில் அவனுக்கு வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுப்பான். நம்மிடம் ஒரு மனிதன் ஒரு உதவியைக் கேட்கிறான். அந்த நேரத்தில் அந்த மனிதன் பின்னால் ஒரு பாம்பு தீண்டத் தயாராக இருப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இந்த நேரத்தில் அவன் கேட்ட உதவியை நாம் செய்ய மாட்டோம். மாறாக பாம்பை அடிப்போம். அல்லது அவனைப் பாம்பு திண்டாமல் வேறு புறம் இழுப்போம்.

அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வும் அடியான் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணராமல் வேறு தேவையைக் கேட்டால் அதைக் கொடுப்பதற்குப் பகரமாக அந்த ஆபத்தை நீக்குகிறான்.

அவ்வாறு இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்காக மறுமையில் அவனது நிலையை இறைவன் உயத்துகிறான். ஆகவே கேட்டது கிடைக்காவிட்டாலும் ஏதோ நன்மைக்காக இறைவன் மறுமைப் பயனாக அதை மாற்றி விடுவான் என நம்ப வேண்டும்.

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான் என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் “அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் அதைவிட அதிகம் கொடுப்பவன்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: (அஹ்மத்: 10709)

எனவே இறைவன் துஆக்கள் அனைத்தையும் அங்கீகரிக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளக் கூடாது.