02) சோதனையானால் நன்மையே!
யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு நோயையும் அதுபோன்ற துன்பத்தையும் ஏற்படுத்துவான் என்பதை கீழ்க்கண்ட ஹதிஸிலிருந்து விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (புகாரி: 5645)
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! (இந்தத் துன்பத்தின் காரணமாக) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் உண்டுதானே! எனக் கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், ஆம். ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அதற்கு ஈடாக), மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய தவறுகள் அவரை விட்டு உதிராமல் இருப்பதில்லை என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல் (புகாரி: 5661)