02) சாப்பிடுவதின் ஒழுங்குகள்

நூல்கள்: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை

தூய்மையானதை சாப்பிடுதல் :

தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை ? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் . தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவீராக ! (அல்குர்ஆன்: 5:4)

நான் உங்களுக்கு வழங்கியவற்றில் . தூய்மையானதை உண்ணுங்கள் ! இங்கே வரம்பு மீறாதீர்கள் ! ( வரம்பு மீறினால் ) எனது கோபம் உங்கள் மீது இறங்கும் . எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான் . (அல்குர் ஆன் 20:81)

கீழ்காணும் வசனங்களிலும் இக்கருத்தைக் காணலாம் :
(அல்குர்ஆன்: 16:114, 2:57, 2:168, 5:87, 5:88, 6:142, 7:157), 8:69, 16:72, 17:70, 7:160)

தூய்மையற்றதை சாப்பிட்டால்

நபி ( ஸல் ) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றி நினைவு கூர்ந்தார்கள் . ( உடல் முழுவதும் ) அழுக் கடைந்து. ஆடையெல்லாம் புழுதி படர்ந்த நிலையில் வானத்தின் பக்கம் உயர்த்தி.
என் இறைவா ! என் இறைவா ! ( என்கிறார் ). அவரது உணவு ஹராம் உடையும் ஹராம், அவரது பானமும் ஹராம் . இவ்வாறு ஹராமிலே மூழ்கியிருப்பவருக்கு எவ்வாறு
பதிலளிக்கப்படும் ? எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள் : (முஸ்லிம்: 1686), (திர்மிதீ: 2915) , (அஹ்மத்: 7998)

தூய்மையான உணவு என்பது இரண்டு வகைகளில் அமையும் ஒன்று வெளிப்படையான அசுத்தத்தை விட்டு நீங்கி இருக்க வேண்டும் . இரண்டு இறைவனால் தடுக்கப்பட்ட ஹராமை
விட்டும் நீங்கி இருக்க வேண்டும்.

ஹராம் எனும் அடுத்தத்தை சாப்பிட்டு விட்டால் நமது பிரார்த்தணைகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

உணவு விரிப்பு

சுப்ரா என்ற பெயரில் விரிப்பு ஒன்றை விரித்து அதன்மீது உணவுப் பாத்திரத்தை வைத்து சாப்பிடுவது சுன்னத்தான வழிமுறை என்று சிலர் கடைபிடித்து வருகின்றனர்.

நபி ( ஸல் ) அவர்கள் உணவு விரிப்பு ஒன்றை வைத்திருந்தார்கள் என்பது உண்மை. ஆனால் அந்த விரிப்பு நேரடியாக அதிலேயே உணவைக் கொட்டி சாப்பிடும் வகையில் இருந்தது. உணவுத் தட்டுக்கு கீழே விரிக்கும் விரிப்பாக அது இருக்கவில்லை . நபி ( ஸல் ) அவர்களிடமிருந்த விரிப்பை பற்றி அனஸ் ( ரலி ) அவர்கள் கூறுகிறார்கள் .

நபி ( ஸல் ) அவர்கள் சபிய்யா ( ரலி ) அவர்களைத் திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட்டார்கள். அவர்களின் வலீமாவுக்காக முஸ்லீம்களை நான் அழைத்தேன். தோலால் ஆன உணவு விரிப்பை விரிக்குமாறு கட்டளையிட்டார்கள் அது விரிக்கப்பட்டது. அதில் பேரீத்தம் பழம் , பாலாடைக்கட்டி, நேய் ஆகியவை போடப்பட்டது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 5387)

உணவுத் தட்டின் கீழ் சுத்தமான விரிப்பு ஒன்றை விரித்து கொண்டால் கீழே சிந்தும் பருக்கையை எடுத்து சாப்பிட வசதியாக இருக்கும் என்பன போன்ற காரணங்களுக்காக விரிப்பு
வைத்துக் கொள்வதில் தவறில்லை சுன்னத் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்ய இயலாது.

மேலும் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களும் வஹீயின் அடிப்படையில் விரிப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை . அவர்கள் வாழும் காலத்தில் உள்ள சமூகப்பழக்கத்தின் அடிப்படையில் தான்
இதை செய்து வந்துள்ளார்கள் . எனவே இதை மார்க்க அனுஷ்டானமாகவும் கருத முடியாது.

உண்பதற்கு அமரும் முறை

நபி ( ஸல் ) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிடுவதை பெருமையின் வெளிப்பாடாகக் கருதியிருக்கிறார்கள் . எனவே , அவ்வாறு நான் சாப்பிடமாட்டேன் என அறிவிக்கிறார்கள் .

நான் நபி ( ஸல் ) அவர்களோடு இருந்தேன். அப்போது தனக்கு அருகில் இருந்தவரிடம் நான் சாய்ந்து கொண்டு சாப்பிடமாட்டேன். ஒரு அடிமை அமர்வதைப் போல் அமர்ந்து
அடிமை உண்பதைப் போல் ( பணிவாக ) உண்பேன் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பாளர் ; அபூ ஜுஹைஃபா ( ரலி )
நூல் : (புகாரி: 5399, 5398) (திர்மிதீ: 1735) (அபூதாவூத்: 3277) (இப்னு மாஜா: 3253) (அஹ்மத்: 18005, 18015)

குத்தலிட்டு அமர்தல், ஒரு காலை மடக்கி அதன் பாதங்களின் மீது பித்தட்டை வைத்து மறுகாலை மடக்கி நெஞ்சோடு சேர்த்தணைத்து அமர்தல் , அத்தஹிய்யாத்தில் உட்காருவதைப் போல அமர்தல் ஆகிய முறைகளில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும் மென்றும் அதுவே நபி வழி எனவும் சிலர் வாதிடுகின்றனர்.

இந்த முறைகளில் அமர்ந்து சாப்பிடுவது வசதியாக இருக்கிறது என்பதற்காக ஒருவர் இவ்வாறு சாப்பிட்டால் அதில் நாம் குறை காண முடியாது. ஆனால் இவ்வாறு தான் சாப்பிட வேண்டும் என வலியுறுத்துவதாக் இருந்தால் அதற்கு நபி ( ஸல் ) அவர்களிடமிருந்து இதற்கான கட்டளையை எடுத்துக் காட்டவேண்டும் . அவ்வாறு எதுவும் இல்லை எனும்
போது இதை நபி வழி கூறுவது தவறாகும்.

பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடுதல்

உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும் .

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )
நூல்கள் : (திர்மிதீ: 1781) (அபூதாவூத்: 3275) (இப்னு மாஜா: 3255) (அஹ்மத்: 23954, 24551, 24895, 25089)

அனஸ் ( ரலி ) அவர்கள் கூறினார்கள்:

அபூதல் ஹா ( ரலி ) அவர்கள் ( தனது மனைவி ) உம்மு சுலைமிடம் நபி ( ஸல் ) அவர்களுக்காக உணவு தாயர் செய் என்று கூறிவிட்டு , என்னை நபிய்வர்களிடம் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் வந்து அபூ தல் ஹா ( உங்களை அழைத்து வருமாறு ) என்னை அனுப்பி வைத்தார் என்று கூறினேன்.

உடனே நபி ( ஸல் ) அவர்கள் ( அருகிலிருந்த ) கூட்டத்தாரை நோக்கி எழுந்து வாருங்கள் என்று கூறி நடக்கலானார்கள். கூட்டத்தாரும் அவர்களோடு சேர்ந்து நடந்தார்கள் . அல்லாஹ்வின் தூதரே ! உங்களுக்கு மட்டும் தான் உணவு தயாரித்துள்ளேன் என அபூதல் ஹா கூறினார் . அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் உமக்கு எந்த சிரமமும் இல்லை நீர்செல்லும் என்றார்கள் . அவரும் சென்றார் மக்களும் சென்றார்கள்.

உணவு கொண்டு வரப்பட்டது அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் தனது கரத்தை அதன் மீது வைத்து ( அல்லாஹ்வின் ) பெயரைக் கூறினார்கள் . பிறகு ( கூட்டத்தில் ) பத்து பேரை உள்ளே வர அனுமதிக்குமாறு கூறினார்கள்.

அவர்கள் உள்ளே வந்ததும் பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடுங்கள் என நபி ( ஸல் ) கூறினார்கள் . அவர்கள் வயிறார சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றார்காள். பின்னர் முன்பு போலவே தன் கையை அதன் மீது வைத்து ( அல்லாஹ்வின் ) பெயர்கூறினார்கள் . பிறகு மேலும் பத்து பேருக்கு அனுமதி வழங்குமாறு கூறினார்கள் . அவர்கள் வந்ததும் பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடுங்கள் என்றார்கள் அவர்களும் வயிறாரஸ் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றார்கள் .இவ்வாறு எண்பது பேர் சாப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரும் சாப்பிட்டார்கள் . ( அபுதல் ஹாவின் ) குடும்பத்தாரும் சாப்பிட்டார்கள் அதன் பிறகும் பாத்திரத்தில் மிச்சமிருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 3802)

பிஸ்மி சொல்லாத உணவில் ஷைத்தான்

தனது வீட்டில் நுழையும் ஒருவர் . உள்ளே நுழையும் போதும் , தனது (உணவை) உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஷைத்தான் (தன் சகாக்களிடம் இன்று இரவு) உங்களுக்கு உணவும் இல்லை , தங்குமிடமும் இல்லை எனக் கூறுவான்.

ஒருவர் தன் வீட்டில் நுழையும் போதும் உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறவில்லையென்றால் ( இன்று இரவு ) உங்களுக்கு உணவும் தங்குமிடமும் கிடைத்து விட்டது எனக்
கூறுவான் . என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 3762) , (அபூதாவூத்: 3273) , (இப்னு மாஜா: 3877) , (அஹ்மத்: 14202, 15576)

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உண்ணும் போது அந்த உணவின் முழு பயனையும் நம்மால் அடைந்து கொள்ள முடியாது. ஏனெனில் அந்த உணவை நாம் மட்டும் உண்ணவில்லை. அதில் ஷைத்தானும் நம்மோடு பங்கு போட்டுக் கொள்கிறான். மேலும் நம்மைக் கெடுக்கும் ஷைத்தானுக்கு நாமே உணவளிக்கும் மோசமான நிலையும் எற்பட்டு விடுகிறது.

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லட்டும் . ஆரம்பத்தில் ( சொல்ல ) மறந்து விட்டால் “பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி” என்று கூறட்டும் என      நபி ( ஸல் ) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )
நூல் : (திர்மிதீ: 1781) , (அபூதாவூத்: 3275) , (இப்னு மாஜா: 3255) , (அஹ்மத்: 23954, 24551, 24895, 25089)

வலது கரத்தால் சாப்பிடுதல்

உங்களில் ஒருவர் உண்ணும் போது தனது வலக்கரத்தால் உண்ணட்டும். குடிக்கும் போது வலக்கரத்தால் குடிக்கட்டும் . ஏனெனில் ஷைத்தான் தனது இடது கரத்தால் சாப்பிடுகிறான்
இடது கரத்தாலே குடிக்கிறான் என அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 3764, 3765), (திர்மிதீ: 1721, 1722) , (அபூதாவூத்: 3283) , (அஹ்மத்: 4309, 4654, 5257, 5583, 5843, 5908, 6050)

அருகிலிருப்பதை சாப்பிடுதல்

நான் நபி ( ஸல் ) அவர்களின் பொறுப்பில் வளர்ந்த சிறுவன். எனது கை உணவுத் தட்டின் நாலாபுறத்திலும் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது சிறுவனே பிஸ்மில்லாஹ் கூறு
உன் வலக் கரத்தால் சாப்பிடு உனக்கு அருகிலிருந்து சாப்பிடு என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . அதன் பிறகு இந்தப் பழக்கத்தை நான் கைவிடவே இல்லை.

அறிவிப்பவர் : உமர் பின் அபீ ஸலமா ( ரலி )
நூல் : (புகாரி: 5372, 5377, 5378) (முஸ்லிம்: 3767, 3768) (திர்மிதீ: 1780) (அபூதாவூத்: 3284)  (இப்னு மாஜா: 3258)

தேவைப்பட்டால் தூரத்தில் உள்ளதை சாப்பிடுதல்

பல தரப்பட்ட உணவுப் பொருட்களை கலந்து சாப்பிட நேர்ந்தால் நாலா பக்கத்திலும் எடுத்து சாப்பிடுவதில் தவறில்லை .தையர்காரர் ஒருவர் தாம் தயாரித்த உணவை சாப்பிடவருமாறு நபி ( ஸல் ) அவர்களை விருந்துக்கு அழைத்தார். நானும் நபி ( ஸல் ) அவர்களுடன் அந்த விருந்துக்கு சென்றேன்.
அவர் ரொட்டி, மற்றும் உலர்ந்த இறைச்சித்துண்டுடன், சுரைக்காய் குழம்பை நபியின் முன் வைத்தார்.

நபி ( ஸல் ) அவர்கள் தட்டின் பல பாகங்களிலும் இருந்த சுரைக்காயைத் தேடித் தேடி ( சாப்பிடுவதை) நான் பார்த்தேன். அன்று முதல் நானும் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகிவிட்டேன்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ( ரலி )
நூல் : (புகாரி: 5379, 5435, 5436, 5439, 5379) (முஸ்லிம்: 3803) (அபூதாவூத்: 3288) (அஹ்மத்: 12346, 12396)

கீழே விழுந்ததை எடுத்து சாப்பிடுதல்

உங்களில் ஒருவருக்கு ஒரு கவள உணவு (கீழே ) விழுந்து விட்டால் அதை எடுத்து அதிலுள்ள அசுத்தத்தை நீக்கி விட்டு அதை அவர் சாப்பிடட்டும் . ஷைத்தானுக்காக அதை விட்டு விடவேண்டாம். என நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் ( ரலி )
நூல் ; (முஸ்லிம்: 3793, 3794) (அஹ்மத்: 13869, 14025, 14101, 14410, 14701) (திர்மிதீ: 1725)  (அபூதாவூத்: 3347)

தட்டையை வழித்து விரல்களை சூப்புதல்

எந்த உணவில் பரகத் ( இறையருள் ) இருக்கிறது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் . எனவே தட்டையை வழித்தும் விரல்களை சூப்பியும் சாப்பிடுங்கள் என நபி ( ஸல் ) அவர்கள்
கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 3792)

உங்களில் எவரும் தமது விரல்களை சூப்பும் வரை கைக்குட்டையால் தன் கையை துடைத்து விட வேண்டாம் , ஏனெனில் அவரது எந்த உணவில் பரகத் இருக்கிறது என்பதை அவர் அறிய மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 3793, 3794) (இப்னு மாஜா: 3261) (அஹ்மத்: 13705, 13869, 14025, 14101, 14410, 14689, 14701)

சாப்பிட்ட பின் துஆ ஒதுதல்

உணவு உண்ணும் ஒர் அடியான் , அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அவனை அல்லாஹ் திருப்தி கொள்கிறான் . அதுபோல் நீரருந்தும் ஒர் அடியான் , அந்த ( நீருக்காக ) அல்லாஹ்வைப் புகழ்ந்தால்    ( அவனையும் அல்லாஹ் திருப்தியடைகிறான் ) என அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ( ரலி )
நூல் : (முஸ்லிம்: 4915) (திர்மிதீ: 1738) (அஹ்மத்: 11535, 11724)

நபி ( ஸல் ) அவர்கள் ( சாப்பிட்ட பின் ) உணவு விரிப்பு உயர்த்தப்படும் போது “அல் ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபார (க் ) கன் ஃபீஹி கைர மக்ஃபிய்யின் வலா முவத்தயின் வலா முஸ்தக்னன் அஹு ரப்பனா”. என்று கூறுவார்கள்.

பொருள் : தூய்மையான , பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தம் .எங்கள் இறைவா உனது அருள் . மறுக்கப்படத்தக்கதல்ல .
நன்றி மறக்கப்படுவதுமன்று . அது தேவையற்றதுமல்ல .

அறிவிப்பவர் : அபூ உமாமா ( ரலி )
நூல் : (புகாரி: 5448) (திர்மிதீ: 3378) (அபூதாவூத்: 3351) (இப்னு மாஜா: 3275) (அஹ்மத்: 21147, 21175, 21226, 21269)

நபி ( ஸல் ) அவர்கள் சில வேளைகளில் சாப்பிட்டு முடித்து விரிப்பை சுருட்டியதும் கீழ்கணும் துவையும் ஒதியிருக்கிறார்கள்.

“அல் ஹம்மது லில்லாஹில்லதீ கஃபானா வ அர்வானா கைர மக் ஃபிய்யின் வலா மக்ஃபூரின் “

பொருள் : உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல நன்றி மறக்கப்படுவதுமன்று.

அறிவிப்பவர் : அபூ உமாமா ( ரலி )
நூல் : (புகாரி: 5459)

உணவைக் குறை கூறாதிருத்தல்

நபி ( ஸல் ) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை . பிடித்தால் அதை சாப்பிடுவார்கள் , பிடிக்காவிட்டால் ( சாப்பிடாமல் ) இருந்து விடுவார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )
நூல் : (புகாரி: 3563, 5409) , (முஸ்லிம்: 3844, 3845) (திர்மிதீ: 1954) (அபூதாவூத்: 3271) (இப்னு மாஜா: 3250) (அஹ்மத்: 9142, 9757, 9822, 9852, 10018)

நமக்கு பிடிக்காத உணவு வைக்கப்பட்டால் இது எனக்குப் பிடிக்காது நான் இதை சாப்பிடமாட்டேன் என்று கூறி விலகிக் கொள்வது உணவைக் குறை கூறுவதாகாது . அதன்
தரமும் , ருசியும் குறைவாக இருக்கிறது என்று அதை விமர்சிப்பது தான் தவறாகும்.

நமது பார்வையில் ருசியற்றது , தரம் தாழ்ந்தது என உதாசீனப் படுத்தப்படும் உணவு , உலகில் பலருக்கு ருசிமிக்கதாகவும் , தரமானதாகவும் இருக்கக் கூடும் என்பதை சிந்தித்தால்
உணவை குறை கூறும் பழக்கம் நம்மிடமிருந்து அகன்று விடும்.

ஆட்டிறைச்சியில் சுவையற்றது எனக் கருதப்படும் கால் குளம்பைக் கூட நபி ( ஸல் ) அவர்கள் உயர்வாகக் கருதியிருக்கிறார்கள்.

ஒரு ஆட்டின் கால் குளம்பையோ அல்லது விலா எலும்பையோ ( சமைத்து வைத்துக் கொண்டு ) நான் அழைக்கப்பட்டாலும் அந்த ( விருந்திலும் ) நான் கலந்து கொள்வேன்.
கால் குளம்போ அல்லது விலா எலும்போ அன்பளிப்பாக தரப்பட்டாலும் அதையும் நான் ஏற்றுக் கொள்வேன் என நபி ( ஸல் ) கூறினார்கள் .

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரலி )
நூல் : (புகாரி: 2568, 5178) (அஹ்மத்: 9121, 9822, 9853, 10239)