02) ஒன்றே குலம்

நூல்கள்: பகுத்தறிவை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்

நாம் வாழும் இவ்வுலகில் பன்முகத் தன்மை கொண்ட சித்தாந்தங்கள் பின்பற்றப்படுகின்றன. கடவுட் கோட்பாடானாலும், வாழ்வியல் ரீதியிலான வழிகாட்டுதல்களாக இருந்தாலும் அவை பல உட்கூறுகளுடன் பிரிக்கப்பட்டு, அவற்றை பின்பற்றும் சாராரும் பல மாறுபட்ட கருத்தியல்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், என்ன தான் மாறுபட்ட கருத்தியல் கோட்பாடுகள் மனிதர்களிடையே கருத்து வேறுபாடுகளை கற்பித்தாலும் அவை ஒரு போதும் மனிதகுலத்தை பிளவுபடுத்தி விடக் கூடாது என்பதில் மட்டும் இஸ்லாமிய சித்தாந்தம் அடிப்படையிலேயே உறுதி காட்டுகிறது.

ஏற்றுக் கொண்ட சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் மனிதர்கள் வேறுபட்டு நிற்கிறார்களே தவிர, குலத்தாலோ, இனத்தாலோ அவர்கள் பிளவுக்கு அப்பாற்பட்டவர்கள். மனிதர்களிடையே சாதி வேற்றுமை இல்லை, மொழி, இன வேறுபாடுகள் இல்லை. யாரும் வேறு எவரை விடவும் உயர்ந்தவரும் இல்லை என்பதை வெறும் தத்துவமாக மட்டும் போதனை செய்யாமல், அதையே இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படை கொள்கையாக இவ்வுலகிற்கு பறைசாற்றுகிறது.

குல வேற்றுமைக்கும் சாதிய பிரிவுகளுக்கும் மையப்புள்ளியே பிறப்பால் அனைவரும் சமமில்லை என்கிற நம்பிக்கை தான்.

சிறந்த படைப்பு, சமூகத்தில் உயர் சாதி எனவும், இழிவான படைப்பு சமூகத்தில் தாழ்ந்த சாதி எனவும் நம்பப்படுகிற மிக மோசமான சமூக கட்டமைப்பை 1400 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்தெறிகிறது இஸ்லாம்.

எந்த காரணத்தை மையமாக கொண்டு சாதிய பிளவுகளை இந்த சமுகம் உருவாக்க நினைக்கிறதோ அந்த அடிப்படைக்கே வேட்டு வைக்கும் வகையில், பிறப்பால் மனிதர்களிடையே எந்த வேற்றுமையும் இல்லை என்கிற சமத்துவக் கோட்பாட்டினை திருக்குர்ஆன் உறுதிப்பட பிரகடனம் செய்கிறது.

மனிதர்களே! ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே உங்களை படைத்துள்ளோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவே உங்களைக் கிளைகளாகவும், குலங்களாவும் ஆக்கினோம். உங்களில் இறையச்சம் மிக்கவரே அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவர் ஆவார். அல்லாஹ்வே நன்கறிந்தவன்; எல்லாம் தெரிந்தவன். (அல்குர்ஆன்: 49:13)

மனித குலம் என்பது ஒன்று தான். ஒரு ஆண்/பெண் எனும் ஜோடியிலிருந்து தான் கோடானுகோடி உலக மாந்தர்களும் பல்கிப் பெருகியுள்ளோம் என்கிற இந்த தத்துவம், இவ்வுலகம் இதுவரை கண்டு வரும் அனைத்து வகையான சாதிய, இன ரீதியிலான பிளவுகளுக்கும் குழப்பங்களுக்கும் மரண அடி கொடுப்பதாய் அமைகிறது. இந்த தத்துவமானது நிலைபெறுகின்ற போது, சிறந்த படைப்பு, சிறப்புக் குன்றிய படைப்பு என்கிற பாகுபாடு கொண்ட பார்வைக்கு அவசியமில்லாமல் போய் விடும்..

பெற்றோருக்குப் பிறந்த இரு சகோதரர்களிடையே எப்படி சாதிய வேற்றுமை கற்பிக்க இயலாதோ, அதே போன்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கிடையேவும் சாதிய பிரிவுகள் அறிவுக்கு பொருந்தாதவை.

காரணம் மனித இனம் அனைவரும் ஆதம், ஹவ்வா என்ற ஒரே ஜோடியிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த மாந்தர்களுக்கும் பெற்றோர் அந்த இருவர் தான். அப்படியானால் அவர்களின் சந்ததிகளாக உருவாகியிருக்கும் நமக்கிடையே இனம்,நிறம், நாடு, மொழி, கலாச்சார அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் கிடையாது என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கின்றது.

தற்போது 750 கோடிக்கும் அதிகமான மக்கட் தொகையை இவ்வுலகம் கொண்டிருப்பதாக அறிகிறோம்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் தற்போது அது 130 கோடி. இதே இந்தியாவில் 10 வருடங்களுக்கு முந்தைய மக்கட்தொகை கணக்கெடுப்பை எடுத்துக் கொண்டால் 110 கோடி என்று சொல்லியிருப்பார்கள். 20, 30 வருடங்களுக்கு முன்னுள்ள கணக்கெடுப்பைப் பார்த்தால், 50 கோடி மக்கள் இருந்திருக்கிறார்கள்.

‘நால்வகை மதமும் நாற்பது கோடி ..’ எனும் பழைய கவிதை வரிகள், 194060 களில் இந்தியாவின் மக்கட்தொகை 40 கோடியாக இருந்ததை உணர்த்துகிறது.

பாரதியார் காலமான 1900களில், அதை விட குறைவான ஜனத்தொகையை இந்தியா கொண்டிருந்தது என்பதை, முப்பது கோடி முகமுடையாள் என இந்தியாவை வர்ணனை செய்து அவர் பாடிய பாடல்களே நமக்கு விளக்குகிறது.

இப்படியாக, நூற்றாண்டுகள் முன்னோக்கி செல்ல செல்ல மக்கள் தொகை என்பது கோடியிலிருந்து லட்சம், லட்சத் திலிருந்து ஆயிரம் என குறைந்து கொண்டே தான் இருக்கும்.

பல்லாயிரம் ஆண்டுகள் முன்னோக்கி கணக்கிடும் போது, மக்கள் தொகை என்பது ஆயிரம், நூறு, பத்து என குறைந்து இறுதியில் ஒரு ஜோடியில் சென்று சேரும். இதுவே விஞ்ஞான ரீதியிலாகவும், தத்துவார்த்த ரீதியிலும் நிரூபிக்கப்படுகின்ற பேருண்மையாக இருக்கிறது..

இதனை 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவனால் இவ்வுலகிற்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் தெளிவாக பிரகடனப்படுத்துவது வியப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், மனித தோற்றம் குறித்து இன்று நிலவுகிற பல்வேறு வகையான மூட நம்பிக்கைகள் உடைபடுகிறது என்பது ஒரு புறமிருக்க,

ஒரே குலம் என்கிற ஒற்றை குடைக்குள் மனித குலம் முழுமையும் வந்து விடுகிறது எனும் போது, இன்றைக்கு இவ்வுலகம் எதிர்கொள்கிற, தீண்டாமையானாலும்,சாதிய பிளவுகளானாலும், அடிமைத்துவம் எனும் பெயரால் ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறைகளானாலும், அனைத்துமே முற்றுப் பெற்று விடுகிறது.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனே ஒரேயொரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான். மேலும் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் வேண்டிக் கொள்கிறீர்கள். இரத்த உறவுகளையும் (துண்டிப்பதை அஞ்சிக் கொள்ளுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 4:1)

ஒரேயொரு ஜோடியிலிருந்து தான் தமிழனும் பெருகி யிருக்கிறான், தெலுங்கலும் பெருகியிருக்கிறான், கருப்பினத்தவனும், சிகப்புத் தோலுடையவனும் உருவாகி வந்திருக்கிறான். அந்த ஒரு ஜோடியிலிருந்து தான் இந்தியனும் வந்திருக்கிறான், அமெரிக்கனும் வந்திருக்கிறான், பாகிஸ்தான்காரனும் வந்திருக்கிறான்.

அந்த ஒரு ஜோடியிலிருந்து தான் முஸ்லிம்களும் வந்திருக்கிறார்கள், இந்து, கிறித்தவர்களும் வந்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையை சரிவர புரிந்து விட்டோமெனில், நாம் சார்ந்துள்ள இனமோ, தேசமோ, நாம் பேசுகின்ற மொழியோ நமக்கான சிறப்பை தீர்மானிக்காது, மாறாக, நம்மில் எவர் இவ்வுலகில் நன்மையான காரியங்களில் ஈடுபட்டு மனித நேயத்தை வளர்க்க துணை புரிகிறாரோ அவரே சிறந்தவர்.. என இஸ்லாம் போதனை செய்கின்ற அழகிய தத்துவத்தினை எளிதில் அறிந்து கொள்ள முடியும்..!