02) இறைத்தோழர் இப்ராஹிம் (அலை )

நூல்கள்: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

அன்புள்ள குழந்தைகளே! அருமைச் செல்வங்களே !

அல்லாஹ்வைத் தெரியுமல்லவா உங்களுக்கு ?

நம்மை எல்லாம் படைத்தவன்…..! இந்த பிரபஞ்சத்தின் பேரரசன்……..! அளவே இல்லாத அன்பாளன்……..! கருணையாளன்……..! நமக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கியவன்……! ஒவ்வொரு பொருளையும் கண்காணித்துக் கொண்டு இருப்பவன்….!

சரி , அவனது தோழரைப் பற்றித் தெரியுமா ?

யார் அவர் ?

அவர் மட்டும் எப்படி இறைவனுக்கு தோழனாக ஆனார் ?

இன்னொரு விசயமும் சொல்கிறேன் கேளுங்கள் !

அவர் இறைவனுக்கு தோழர் மட்டுமின்றி , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர் தான் முன்மாதிரி !

நபிமார்களுக்கெல்லாம் அவர் தான் முன்மாதிரி…! நம் தூதரான நபி (ஸல்) அவர்களுக்கே அவர் தான் முன்மாதிரி..!

குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபிமார்களில் அதிகமானவர்கள் அவரது வம்சத்தில் பிறந்தவர்கள் தான் . நபி ஸல் அவர்களும் கூட அவரது வழித்தோன்றல் தான்.

அந்த சிறப்பிற்குரிய மனிதரின் வரலாறை அறிவதற்கு, சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் நாம் பயணப்பட வேண்டும்..

ஆசியா கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் மெசபடோமியா என்றொரு பெரிய நிலப்பரப்பு இருந்தது. இன்றைய எகிப்து , சிரியா , ஜோர்டான் , லெபனான் ,பாலஸ்தீன் , இராக் ஆகிய நாடுகளின் பகுதிகளை அது உள்ளடக்கும் . அது டைக்ரிஸ் மற்றும் யூப்ரடிஸ் நதிகள் பாய்ந்த வளமான பகுதி ஆகும் .

பழங்காலங்களில் நதிப்படுகைகள் தான் குடியிருப்புகளாக இருக்கும். பல குடியிருப்புகள் சேர்ந்தால் ஊராகும் . பல ஊர்கள் சேரும் போது அங்கு பெரிய மக்கள் தொகை உருவாகும். ஒரு ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைப்பும், கலாச்சாரமும் அமைந்த பகுதிகள் நாகரிகங்கள் (civilization) என்று அழைக்கப் படுகின்றன . மெசபடோமியாவின் தெற்கு பகுதியில் சுமேரியர்கள் என்றழைக்கபட்ட பெரிய இனக்குழு வாழ்ந்து வந்தது . அவர்களது நாகரிகம் சுமேரிய நாகரிகம் என்று அழைக்கப் படுகிறது .

மக்கள் குழுக்களாக வசித்து வந்தனர் . மக்களில் வலிமை படைத்தவர்கள் ஊர் விசயங்களில் முடிவெடுப்பவர்களாகவும், மற்றவர்கள் அதற்கு கட்டுப்படுபவர்களாகவும் இருந்து வந்தனர் .

சில ஊர்களுக்கு மட்டும் அரசர்கள் இருந்தார்கள் . மற்ற இடங்களில் அவரவர் ஊர் வழக்கப்படி வாழ்ந்து வந்தார்கள் .

அங்கு வாழ்ந்த மக்கள் பற்பல சிலைகளை தெய்வங்களாக வணங்கி வந்தனர் . பெரிய கோயில்கள் கட்டி வகை வகையான சிலைகளை செய்து வைத்து வழிபாடுகள் செய்து வந்தனர் . ஏராளமான மூட நம்பிக்கைகள் அவர்களிடம் இருந்தன .

கலைகளிலும், பழக்கவழக்கங்களிலும் மேம்பட்டவர்களாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கையில் மிக மோசமானவர்களாக இருந்தார்கள்.

அத்தகைய மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த அப்பெரிய நிலப்பரப்பில் இருந்த ஒரு சிற்றூருக்குத் தான் நாம் பயணப்பட இருக்கிறோம் ..