02) இரண்டாவதாக இறங்கிய வசனங்கள்

நூல்கள்: நபித்துவமும் நபிகளாரின் வாழ்க்கையும்

போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!

(அல்குர்ஆன்: 74:1-5)

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் கூறினார்கள்:

நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ், ‘போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக!’ எனும் (அல்குர்ஆன்: 74:1-5) வசனங்களை, தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான்.

நூல்: (புகாரி: 4925, 4922, 4923)

வஹீயைப் பாதுகாப்பது அல்லாஹ்வின் பொறுப்பு
(நபியே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

(அல்குர்ஆன்: 75:16)-19)

(அல்குர்ஆன்: 75:16) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:

ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே காணப்படலாயிற்று.
எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75வது அத்தியாயத்திலுள்ள) ‘இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது’ எனும் (அல்குர்ஆன்: 75:16-17) வசனங்களை அருளினான்.

அதாவது, ‘உங்கள் உள்ளத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!’ என்ற (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்’ என்று கூறினான். ‘பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது’ எனும் (அல்குர்ஆன்: 75:19) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான்.
(இதன் பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு) வரும்போது தலையைத் தாழ்த்தி (கேட்டுக்) கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும் போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.   நூல்: (புகாரி: 4929)

இறைவிருப்பப்படியே வானவர்கள் வருகிறார்கள்
(நபியே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல.

(அல்குர்ஆன்: 19:64)

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதை விட அதிகமாகச் சந்திப்பதற்குத் தடையாக இருப்பதென்ன?’ என்று கேட்டார்கள். அப்போதுதான் ‘உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவன் அல்ல’ எனும் (அல்குர்ஆன்: 19:64) இறைவசனம் அருளப்பெற்றது.

நூல்: (புகாரி: 4731)

அபூஜஹ்ல் அரங்கேற்றிய அநியாயம்

அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

(அல்குர்ஆன்: 96:6-19)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஜஹ்ல், “உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது “ஆம்’’ என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடறியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைகளையும் கண்டேன்” என்று சொன்னான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள்.
ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்” (அல்குர்ஆன்: 96:6-19) எனும் வசனங்களை அருளினான்.

நூல்: (முஸ்லிம்: 5390)

அபூலஹபின் மீது அல்லாஹ்வின் சாபம்

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

(அல்குர்ஆன்: 111:1-5)

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (அல்குர்ஆன்: 26:214) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்தனர்.
நபி (ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (மறுமையைக் குறித்து) கூறினார்கள்.
(இதைக் கேட்ட) அபூ லஹப், ‘நாளெல்லாம் நீர் நாசமாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினீர்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…’ என்று தொடங்கும் (111வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

நூல்: (புகாரி: 4770)