02) அவன் பெயர் என்ன?
“அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!
அஹ்மத் தீதாத் கூறுகின்றார்:
முஹம்மத் (ஸல்) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இயற்கையான அடுத்த வாரிசு என்ற தலைப்பின் கீழ் நான் ஆற்றிய உரைக்குப் பின்னால் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது ஒரு கிறித்தவப் பிரச்சாரகர் என்னிடம் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
அவனது பெயர் என்ன? என்பது தான் அவரது கேள்வி.
பதிலளிப்பதற்காக எழுந்தேன். நான் வாயைத் திறப்பதற்கு முன் அவர் கேள்வி கேட்பதற்காக வைக்கப்பட்டிருந்த மைக்கின் முன் வந்து, தானே பதிலளிப்பதாகக் கூறினார்.
“கேள்வி கேட்டது நீங்கள்; பதிலளிப்பது என் கடமை தானே” என்று சொன்னேன்.
“அது சரி தான். எனினும் இந்தக் கேள்விக்கு நானே பதிலளிக்கிறேன்” என்று சொன்னார். அவையில் சிரிப்பலை எழுந்தது.
உண்மையில் அவர் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். ஒரு பெரும் கூட்டம் உள்ள இந்த சபையில் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு இனி எங்கே கிடைக்கப் போகின்றது? அதுவும் முஸ்லிம்களுடைய செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரும் கூட்டம்.
தொடருங்கள் என்றேன். ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, கடவுளின் பெயர் இயேசு கிறிஸ்து என்று கூறி முடித்தார்.
இயேசு கடவுள் தானா? என்று அந்தக் கூட்டத்திலேயே விவாதிப்பதற்கு அது உரிய தருணமில்லை. இந்த இடத்தில் அதை அலசுவது உகந்ததும் அல்ல.
இப்போதைக்கு மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் (ஸல்) ஆகியோரது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அந்த ஆற்றல் மிகக் கடவுளின் பெயர் அல்லாஹ் என்பது தான். இதற்கான ஆதாரம் பின்னர் தரப்படும்.
கடவுள் மீதுள்ள நம்பிக்கை, மனிதனின் இயற்கை குணத்துடன் ஒன்றியது; இரண்டறக் கலந்தது. அவனிடமிருந்து அந்த நம்பிக்கை ஒரு போதும் பிரியாது. மனிதன் இந்தப் புவியில் இருக்கும் வரை எல்லாம் வல்ல இறைவனின் ஞானமும் அவன் கூடவே இருந்து கொண்டு தான் இருக்கும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.
“இவரது இறைவனிடமிருந்து இவருக்கு ஏதேனும் சான்று அருளப்பட வேண்டாமா?” என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழி காட்டி உண்டு.
தூய காற்று, மழை, சூரிய ஒளி போன்ற மனித வாழ்வுக்கு அத்தியாவசியமான பொருள் வளங்களில் பாரபட்சம், பாகுபாடு காட்டாத வல்ல இறைவன், ஆன்மீக அருள் வளங்களில் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? அவ்வாறு பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. காரணம் அவன் பகுதிக் கடவுள் இல்லை. ஏதாவது ஒரு பெயரில் கடவுளை அறியாத எந்த ஒரு இனமும், சமுதாயமும் இப்பூமியில் இல்லை என்று தெளிவாகக் கூறலாம்.
படைத்த இறைவனே இந்த அறிவை, தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களின் வாயிலாக மக்களுக்கு வழங்கினான்.
நாம் தெரிந்து வைத்திருப்பது மிகக் குறைவான தூதர்களின் பெயர்களைத் தான். மற்ற பெயர்கள் தொலைந்து போயிருக்கின்றன, அல்லது ஆதாரமற்ற செய்திகளில் அமிழ்ந்து கிடக்கின்றன. கடவுளைப் பற்றிய அறிவு கடவுளிடமிருந்து வந்தாலும் மனித இனம் அந்தத் தூய, புனிதக் கடவுள் கொள்கையில் கவனமற்ற முறையில் கண்மூடித்தனமாக விளையாட ஆரம்பித்தது. அதனால் அவற்றில் கவர்ச்சிகரமான, அலங்காரக் கருத்துக்கள் கலந்து விட்டன.
“வேதத்தின் வரிகளை எளிதாக்குகிறோம் என்று கருதிக் கொண்டு, கற்றவர்கள் சில கட்டங்களில் அதன் வார்த்தைகளை மாற்றி விடுகின்றார்கள். ஆனால் உண்மையில் எளிதான வார்த்தைகளை இவர்கள் குழப்பி விடுகின்றனர்” என்று செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்ற கிறித்தவ இயக்கத்தின் பெண் தீர்க்கதரிசி எலன் ஜி ஒயிட் கூறுகின்றார்.
இவர்களின் இந்தக் கைவரிசை அந்த வேதம் கூற வந்த கருத்தையே குலைத்து விட்டது.
உலகத்தின் மத வரலாறுகளில் புனித பைபிள் என்று அழைக்கப்படுகின்ற யூத, கிறித்தவ வேதங்கள், கடவுளை மனிதத் தன்மையில் சித்தரிக்கும் அதிகமான உதாரணங்களைக் கொண்டிருக்கின்றன.
கீழே இடம் பெறுகின்ற இந்த பைபிள் வசனங்கள், கடவுள் தன்மைக்கு ஊறு விளைவிக்கின்ற, உலை வைக்கின்ற வர்ணனைகள் ஆகும். கடவுளை மனிதனாகச் சித்தரிக்கின்ற வசனங்களாகும்.
மனிதன் போன்ற கடவுள்
மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்.
ஆதியாகமம் 11:5
பின்பக்கத்தைப் பார்க்கும் மூஸா
பின்பு, “நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.
விடுதலைப் பயணம் 33:23
யாக்கோபுடன் குத்துச் சண்டை
அவர்; “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, “இஸ்ரயேல்” எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார்.
ஆதியாகமம் 32:28
குடிகாரனைப் போல..
அப்பொழுது, உறக்கத்தினின்று எழுவோரைப்போல், திராட்சை மதுவால் களிப்புறும் வீரரைப்போல் எம் தலைவர் விழித்தெழுந்தார்.
திருப்பாடல்கள் 78:65
கவலைப்படும் கடவுள்?
மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.
ஆதியாகமம் 6:6
வாசனையை முகரும் கடவுள்?
ஆண்டவர் நறுமணத்தை நுகர்ந்து, தமக்குள் சொல்லிக் கொண்டது; “மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்”
ஆதியாகமம் 8:21
மடங்கிப் படுத்த சிங்கம்?
அவன் துயில் கொண்டான்; சிங்கம் போன்றும் பெண் சிங்கம் போன்றும் படுத்துக்கொண்டான்; அவனை எழுப்பி விடுவோன் யார்? உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்; எனவே உன்னைச் சபிப்போன் சாபமடைவான்!
எண்ணாகமம் 24:9
பற்றி எரியும் நெருப்பு
மலை உச்சியில் ஆண்டவரது மாட்சியின் காட்சி, பற்றியெரியும் நெருப்புப்போன்று இஸ்ரயேல் மக்களின் கண்களுக்குத் தெரிந்தது.
விடுதலைப் பயணம் 24:17
கடவுளை மனித நிலைக்குத் தரம் தாழ்த்துகின்ற மலிவான, மட்ட ரகமான வசனங்கள் 73 அத்தியாயங்களைக் கொண்ட ரோமர் கத்தோலிக்க கலைக் களஞ்சிய பைபிளிலும், 66 அத்தியாயங்களைக் கொண்ட புராட்டஸ்டண்ட் கலைக் களஞ்சிய பைபிளிலும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு கடவுளை மனித நிலைக்கு இறக்குகின்ற வர்ணனைகளை பைபிளிலிருந்து காட்ட வேண்டுமென்றால் அதற்கென தனியாக ஒரு நூல் வெளியிட வேண்டும். ஆனால் மேலே குறிப்பிட்ட அந்த உதாரணங்களே இந்தத் தலைப்புக்குப் போதும்.
ஆன்மீக சாம்ராஜ்யத்தில் இஸ்ரவேலர்களைப் போன்று திருந்துவதற்குரிய வாய்ப்புகளையும், சூழ்நிலைகளையும் வழங்கப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
இது தொடர்பாக திரும்பத் திரும்ப எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தங்கத்தினால் செய்யப்பட்ட மாட்டை வணங்கினார்கள். மீண்டும் சிலை வணக்கத்தின் பக்கம் திரும்பினார்கள்.
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.
நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ள மாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.
விடுதலைப் பயணம் 20:2-5
இதுபோல் கிறித்தவ சமுதாயத்தின் பெரும் பகுதியினர் இந்த இணை வைப்பு எனும் களங்கத்திலிருந்து விடுபடவில்லை. லண்டனிலுள்ள செயின்ட் பால் தேவாலயத்திற்கும், ரோமிலுள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்திற்கும் சென்று பாருங்கள். அதற்கும் இந்தியாவிலுள்ள சோம்நாத் கோயிலுக்கும் எந்த வித்தியாசத்தையும் வேறுபாட்டையும் காண முடியாது.