03) அரபியர்களின் அறியாமை பழக்கங்கள் மற்றும் வழிபாடுகள்

நூல்கள்: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

அரபியர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றி வந்தார்கள். பின்பு காலம்
செல்ல செல்ல இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை மறக்க ஆரம்பித்தார்கள். நபியவர்கள் பிறப்பதற்கு முன் அரபியர்களிடத்தில் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன.

சிலைகளை வழிபட்டனர்

அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்கள் மற்றும் கால்நைடகளில் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். அல்லாஹ்வுக்கு உரியது, அவர்களின் தெய்வங்களைச் சேருமாம். அவர்கள் அளிக்கும் தீர்ப்பு மிகவும் கெட்டது.

(அல்குர்ஆன்: 6:136)

கஅபாவை நிர்வாணமாக தவாஃப் செய்வார்கள்

உர்வா (ரஹ்) கூறுகின்றார்கள் : அறியாமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவைச்)
சுற்றி வந்துள்ளனர்.

(புகாரி: 1665)

பின்வாசல் வழியாக நுழைதல்

ஹஜ்ஜூக்காக சென்று விட்டு திரும்பும்போது பின் வாசல் வழியாக திரும்புவார்கள். அவர்களின் இந்தச் செயலை திருக்குர்ஆன் கண்டிக்கின்றது. வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவைன) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவர்கள். (அல்குர்ஆன்: 2:189)

விபச்சாரத்தில் திளைத்தல்

திருமணம் என்ற பெயரில் சர்வசாதரணமாக விபச்சாரம் புரிந்து வந்தனர். இதை அவர்களில் யாரும் குற்றமாக கருதுவது கிடையாது. (புகாரி: 5127) வது ஹதீஸில் அறியாமைக் கால மக்கள் இது போன்ற பாவங்களில் அதிகம் ஈடுபட்டனர் என்று விரிவாக வந்துள்ளது.

பெண் குழந்தைகைள உயிரோடு புதைத்தனர்

அறியாமைக் கால மக்கள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்தனர். இதனை பின்வரும் வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். (அல்குர்ஆன்: 6:151)

மூடப் பழக்கங்கள்

அறியாமைக் கால மக்களிடம் நட்சத்திர ஜோதிடம், குலப்பெருமை, ஒப்பாரி வைத்தல் போன்ற பல மூடப் பழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவை யாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.
(முஸ்லிம்: 1700)

இவ்வாறு பல அநீதங்களையும் மதுவில் மூழ்கி திளைப்பது போன்ற இன்னபிற சீர்கேடுகளையும் அதிகமான அளவில் செய்து வந்தனர்.

இத்தகைய பழக்கவழக்கங்கள் கொண்ட மக்களிடையே தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.