02) அடுத்த ஆட்சித் தலைவர் யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆன்மீகம், அரசியல் என இரண்டிற்கும் ஒரு சேர அமையப் பெற்ற ஒருங்கிணைந்த தலைவர் ஆவார்கள். ஆன்மீகத் தலைமைக்கு இறுதி நாள் வரை அவர்கள் தான் தலைவர் என்பதால் அவர்கள் இறந்த பிறகு அந்தத் தலைமை காலியாக இருக்கவில்லை.
ஆட்சி மற்றும் அரசியல் தலைமையிடம் காலியாக உள்ளது. அந்தக் காலியிடத்தை நிரப்புபவர் யார்? இது தான் நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அவர்களது உடல் கிடக்கும் போதே பூதாகரமாக உருவெடுத்த புதுப் பிரச்சனையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணப் பிரச்சனை தீர்ந்து ஆசுவாசமாக, ஆற அமர அமைதி பெறுவதற்குள்ளாக அங்கு அலைக்கழிக்க வந்த அடுத்த விஷயம் அன்சாரிகள் கூட்டிய ஆலோசனைக் கூட்டம்.
“சகீபா பனூ சாயித்’ என்ற இடத்தில் அன்சாரிகள் சங்கமமாகி விட்டார்கள். அன்சாரிகளின் அந்தச் சபை அவ்வளவு அவசரமாகக் கூட வேண்டிய அவசியம் என்னவாக இருக்க முடியும்? அடுத்த ஆட்சித் தலைவரைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து வேறு எதற்காகவும் அது கூட்டப்படவில்லை. முஹாஜிர்கள் – அகதிகள் அபூபக்ர் (ரலி) யிடம் அணி திரண்டு நின்றனர். அன்சாரிகள் சகீபா பனூ சாயிதாவில் சங்கமமாயினர். இந்த நேரத்தில் அபூபக்ர் (ரலி) யும், உமர் (ரலி) யும் அவர்களைச் சந்திக்கக் கிளம்பி விட்டனர். அப்போது அவர்களைச் சந்தித்த இரு தோழர்கள், “நீங்கள் இருவரும் எங்கே போகின்றீர்கள்?” என்று கேட்டனர். அன்சாரிகளைச் சந்திக்கப் போவதாகத் தெரிவித்ததும், “அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் விஷயத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினர். அதாவது வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அன்சாரிகள் அடுத்த ஆட்சித் தலைவரைத் தேர்வு செய்து விட்டனர் என்று குறிப்பிட்டார்கள்.
இது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோதனையான கட்டம். நூறாண்டு காலம் பகைமைத் தீயின் கங்குகள் நீறு பூக்காமல் நீர்த்துப் போகாமல் தொடர்ந்து கனன்று மதீனாவாசிகளை இரு கூறுகளாக்கி வைத்திருந்தது. இந்த நேரத்தில் இறைவாக்கு என்னும் இனிய தூதுச் செய்தி அருள் மழையென அவர்கள் மீது பொழியத் துவங்கி, அவர்கள் ஓரணியில் இஸ்லாம் எனும் ஒரு கொள்கையில் ஒன்றிணைந்தனர். தங்களுக்குள் மட்டும் அவர்கள் ஒன்றுபடவில்லை. மக்காவில் இருந்து அகதிகளாக வந்தவர்களை தங்களது அண்ணன் தம்பிகளாக்கி தங்களது சொத்துக்களை தங்கு தடையின்றி பங்கு போட்டு பகிர்ந்து கொடுக்க முன்வந்தனர்.
இந்த அளவுக்கு ஒன்றுபட்டு வாழக்கூடிய இந்த சமுதாய மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் இந்தத் தேர்தல் களம் அமைந்திடுமா? என்ற கவலை நமக்கு வராமல் இருக்காது. அவர்களின் ஒற்றுமை ஓங்கியதா அல்லது வேற்றுமை அவர்களிடம் வேலையைக் காட்டியதா? இதற்கான விடையையும் விபரத்தையும் உமர் (ரலி) அவர்கள் தரும் நேர்முகத்தில் பார்ப்போம்.
பனூ சாஇதா சமுதாயக் கூடத்தில் அன்சாரிகள் அனைவரும் நமக்கு மாறாக ஒன்று திரண்டனர். (முஹாஜிர்களான) அலீ (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். மற்ற முஹாஜிர்கள் அனைவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அபூபக்ரே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் செல்வோம்” என்று கூறிவிட்டு, அன்சாரிகளை நோக்கிச் சென்றோம்.
அன்சாரிகளை நாங்கள் நெருங்கிய போது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் அன்சாரிகள் (ஸஅத் பின் உபாதா (ரலி)க்கு வாக்களிப்பதாக) ஏகமனதாகத் தீர்மானித்திருப்பது குறித்து தெரிவித்து விட்டு, “முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு நாங்கள், “எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்” என்று கூறினோம். அதற்கு அவ்விருவரும், “அம்மக்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
உடனே நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத் தான் போகின்றோம்” என்று கூறிவிட்டு நடந்தோம். பனூசாயிதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம். அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். இவர் யார்? என்று நான் கேட்டேன். “இவர் தாம் சஅத் பின் உபாதா” என்று மக்கள் பதிலளித்தனர். அவருக்கு என்ன நேர்ந்தது? என்று நான் கேட்டேன். “அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது” என்று மக்கள் கூறினர்.
நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்த போது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லி புகழ்ந்து விட்டுப் பின்னர், “நாங்கள் இறைவனுடைய உதவியாளர்கள் (அன்சாரிகள்). இஸ்லாத்தின் துருப்புக்கள். முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்து சேர்ந்தார்கள். ஆனால் அவர்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டே எங்களைப் பிரித்து விடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றி விடவும் எண்ணுகின்றனர்” என்று கூறினார்.
அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்த போது நான் பேச நினைத்தேன். மேலும் நான் எனக்குப் பிடித்த ஓர் அழகான உரையைத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முன்னரே எடுத்துரைத்திட வேண்டும் என்றும் அபூபக்ர் (ரலி)க்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திட வேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள், “நிதானத்தைக் கையாளுங்கள்” என்று கூறினார்கள். ஆகவே நான் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை.
இதையடுத்து அபூபக்ர் (ரலி) பேசினார்கள். அன்னார் என்னை விடப் பொறுமைசாலியாகவும் நிதானம் மிக்கவர்களாகவும் இருந்தார்கள். எனக்குப் பிடித்த வகையில் நான் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும் விட்டு விடாமல் அதைப் போன்றோ அல்லது அதைவிடச் சிறப்பாகவோ தயக்கமின்றி அன்னார் பேசி முடித்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வருமாறு உரையாற்றினார்கள்:
“(அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட குணநலன்களுக்கு நீங்கள் உரியவர்களே! (ஆனால்) இந்த ஆட்சியதிகாரம் என்பது இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டு வருகின்றது. அவர்கள் தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப் படுகின்றேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களியுங்கள்” என்று கூறி என் கையையும் அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். இந்த வார்த்தையைத் தவிர அபூபக்ர் (ரலி) கூறிய வேறு எதையும் நான் வெறுக்கவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித்தலைவராக ஆவதை விட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் சொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப் படுவதையே நான் விரும்பினேன். தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும் போது என் மனம் நினைத்தால் அது வேறு விஷயம்.
அபூபக்ர் (ரலி) உரையாற்றி முடித்ததும், அன்சாரிகளில் ஒருவர், “சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன். முட்டுக் கொடுக்கப் பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல யோசனையைக் கூறுகின்றேன்) எங்களில் ஒரு தலைவர். குறைஷிக் குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்” என்று கூறினார். அப்போது அங்கு கூச்சல் ஏற்பட்டது. குரல்கள் உயர்ந்தன! பிளவு ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்.
அறிவிப்பவர் : உமர் (ரலி),
உமர் (ரலி) அவர்களின் இந்த நேர்முக வர்ணனையில் அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை நாம் தெளிவாக அறிய முடிகின்றது. இந்தப் பிரச்சனை எப்படி தீர்ந்தது? அபூபக்ர் (ரலி)க்கு மக்கள் வாக்களிப்பு செய்தார்களா?