01) வஹீ எனும் இறைச் செய்தியின் துவக்கம்
(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் ‘ஹிரா’ குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள்.
தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்து வந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை, ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. ஒருநாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, ‘ஓதுவீராக!’ என்றார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்றார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!’ என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கமுடியாத அளவிற்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னைவிட்டுவிட்டு, ‘ஓதுவீராக!’ என்று கூறினார். அப்போதும் ‘நான் ஓதத் தெரிந்தவனல்லவே!’ என்று கூறினேன். உடனே, அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார்.
பின்னர் என்னை விட்டுவிட்டு, ‘படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்’ எனும் (அல்குர்ஆன்: 96:1-5) ➚ இறை வசனங்களை அவர் ஓதினார்.
பிறகு அந்த வசனங்களுடன், தம் கழுத்து சதைகள் (அச்சத்தால்) படபடக்கத் திரும்பி வந்து, கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். ‘எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்தி விடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது.
கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு,) ‘கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு கதீஜா (ரலி), ‘அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலைடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கிறீர்கள். (அதனால் உங்களுக்கு ஒன்றும் தீங்கு நேராது)’ என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான ‘வரக்கா இப்னு நவ்ஃபல்’ என்பாரிடம் சென்றார்கள். வரக்கா என்பார் அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா அவர்கள், ‘என் தந்தையின் சகோதரர் மகனே! உங்களுடைய சகோதரரின் புதல்வரிடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!’ என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), ‘என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள்.
இதைக்கேட்ட ‘வரக்கா’, ‘(நீர் கண்ட) அவர் தாம் மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்’ என்று கூறிவிட்டு, ‘உம்மை உம் சமூகத்தார் (உம்முடைய நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்த சமயத்தில் உயிருடன் இருந்தால் நன்றாயிருக்குமே!’ என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் கூறினார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்கள் என்னை (நாட்டைவிட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்?’ என்று கேட்க, வரக்கா, ‘ஆம். நீர் பெற்றிருக்கின்ற (உண்மையான வேதத்)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரச்சாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவிபுரிவேன்’ என்று கூறினார்.
அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள்.
நூல்: (புகாரி: 4953)