01) முன்னுரை

நூல்கள்: ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்

இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். 

ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன

குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.

ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.

என்றெல்லாம் காரணங்கள் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கச் சொல்கின்றனர்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறும் இந்தக் காரணங்களை குர்ஆன் விஷயத்திலும் கூற இயலும். இக்கட்டுரைத் தொடரின் இடையே நாம் விரிவாக அதை விளக்கவுள்ளோம்.

குர்ஆன் மட்டுமே இறைவனுடைய புறத்திலிருந்து வழங்கப்பட்ட வஹீ – இறைச் செய்தி. ஹதீஸ்கள் என்பது வஹீ அல்ல. உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டதை மட்டுமே பின் பற்றுங்கள் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே இறைவனிடமிருந்து அருளப்பட்ட குர்ஆனை மட்டுமே மூல ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இது தான் இந்தக் கருத்துடையவர்களின் வாதத்தில் உள்ள சாராம்சம்.

இறைவனிடமிருந்து வஹீயாக அருளப்பட்டதைத் தான் பின்பற்ற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. நிச்சயமாக இறைவன் புறத்திலிருந்து வஹீயாக அருளப்பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்றே நாமும் கூறி வருகிறோம்.

ஆனால் இறைவனிடமிருந்து வஹீயாக அருளப்பட்டது குர்ஆன் மட்டும் தான். குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைவனிடமிருந்து வஹீயாக அருளப்படவில்லை என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. குர்ஆன் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்று குர்ஆன் கூறுகிறதே தவிர, குர்ஆனைத் தவிர வேறு எதுவும் இறைச் செய்தி இல்லை என்று திருக்குர்ஆனில் சொல்லப்படவில்லை.

திருக்குர்ஆனைப் பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு குர்ஆன் ஆதாரமில்லாத வாதத்தையே இவர்கள் எழுப்புகின்றனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டுள்ளதோ – குர்ஆன் எப்படி வஹீயாக அருளப்பட்டுள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயும் உள்ளது என்று திருக்குர்ஆன் ஒரு இடத்தில் அல்ல – ஏராளமான இடங்களில் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

2. உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழிகெடவுமில்லை.

3. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

4. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.(அல்குர்ஆன்: 53:2-4)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவதெல்லாம் வஹீ என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறக்கூடியவர்கள் இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது. குர்ஆன் வஹீ என்பது தான் இதற்கு விளக்கம் என்று கூறுகின்றனர். குர்ஆன் வஹீயாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு அமையவில்லை.

“இவர் மனோ இச்சைப்படி பேச மாட்டார்” என்பது பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் எடுத்துக் கொள்ளும். மனோ இச்சைப்படி பேசமாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹீ தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இதற்கு விளக்கம் என்று இவர்களாகக் கற்பனை செய்து வாதிப்பது ஏற்புடையதல்ல. இவர்கள் குர்ஆனைப் பின்பற்றும் போர்வையில் தங்கள் மனோ இச்சையைத் தான் பின்பற்றுகிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

உள்ளத்தில் எந்த அபிப்பிராயத்தையும் வைத்துக் கொள்ளாமல் – முன் கூட்டியே தீர்மானித்துக் கொள்ளாமல் – விளக்கம் என்ற பெயரில் நாமாக எதையும் சேர்க்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப்பட்டவையல்ல. மாறாக அது இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹீ எனும் இறைச் செய்தி தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

குர்ஆன் எப்படி வஹீயாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹீயாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதித்தால் – அந்தப் பேச்சுக்கள் வஹீ இல்லை என வாதித்தால் அவர் மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்று கூறுபவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு இவர்களாக சுய விளக்கம் அளிப்பது தான் விந்தையானது; வேடிக்கையானது. நபிகள் நாயகத்தின் விளக்கமே தேவையில்லை என்றால் இவர்களும் விளக்கம் என்ற பெயரில் எதையும் திணிக்காமல் உள்ளதை உள்ளபடி கூற வேண்டும். அப்படி கூறினால் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் முழுவதும் வஹீதான் இறைச் செய்தி தான் என்பது சந்தேகமற நிரூபணமாகி விடும். குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்பது குர்ஆனுக்கே முரணான வாதம் என்பதும் நிரூபணமாகி விடும்.

குர்ஆன் அல்லாத வஹீ உண்டு என்று அந்த ஒரு வசனம் மட்டும் தான் கூறுகிறதா? இல்லை. ஏராளமான வசனங்கள் இவ்வாறு கூறுகின்றன.