01) முன்னுரை

நூல்கள்: இஸ்லாம் கூறும் மண்ணறை வாழ்க்கை

பரபரப்பாக இயங்கும் தற்கால சூழ்நிலையில் மனிதர்கள் முக்கியமான பல விஷயங்களை மறந்து வாழ்கின்றனர். இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிய முஸ்லிம்கள் இவ்வுலக வாழ்க்கையின் பரபரப்பிலும், கவர்ச்சியிலும் சிக்கியவர்களாக. தாங்கள் ஏன் படைக்கப்பட்டோம் என்பதை கூட மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வுலகம் நிலையானதல்ல

என்றாவது ஒரு நாள் மரணித்து இவ்வுலகை விட்டும் நிரந்தரமாக பிரிந்து செல்வோம்.

மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு

இத்தகைய இஸ்லாத்தின் போதனைகளை மறந்து இவ்வுலகமே நிலையான வாழ்க்கை என்பது போல் முஸ்லிம்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

அல்லாஹ்வை நம்பிய முஸ்லிம்கள் ஒரு போதும் மரணத்தை மறந்து வாழலாகாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), நூல்: (திர்மிதீ: 2229)

நாம் மரணத்தை தழுவியதும் நமக்கும் இவ்வுலகுக்குமான தொடர்பு முற்றிலும் அறுந்து போய் விடுகிறது. அதற்கு பின் மண்ணறை வாழ்க்கை ஆரம்பமாகிறது.

உலகம் அழிக்கப்பட்டு, முழு மனித சமுதாயமும் இறைவனால் இறுதி தீர்ப்புநாளில் எழுப்பபடும் வரை மனிதர்கள் வாழும் வாழ்க்கையே மண்ணறை வாழ்க்கை எனும் பர்ஸக் வாழ்க்கையாகும்.

இந்த வாழ்க்கையே மறுமை பயணத்தின் துவக்கமாகும். ஒருவனது மண்ணறை வாழ்வு எப்படி அமைகிறதோ அதை பொறுத்தே அவனது மறுமை வாழ்வும் அமைகிறது. அந்த வகையில் மறுமை நம்பிக்கை உள்ள முஸ்லிம்களிடம் மண்ணறை வாழ்க்கை பெரிய முக்கியத்துவத்தை பெறுகிறது. மண்ணறை வாழ்வை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் நமது செயல்கள் சீராகி மறுமை வாழ்க்கைக்காக வாழும் ஓர் இதமான சூழல் நம் வாழ்க்கையில் வசமாகும். அதற்கு மண்ணறை வாழ்வில் என்ன நடைபெறுகிறது என்பதை தக்க சான்றுகளுடன் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணறை வாழ்க்கையை மறந்து வாழும் மக்களுக்கு அதை நினைவூட்டவே மாமறை கூறும் மண்ணறை வாழ்க்கை எனும் இச்சிறு நூலை தொகுத்துள்ளோம்.

அல்லாஹ் நம் நோக்கத்தை பூர்த்தி செய்வானாக.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு ”இந்த உலகத்தில் நீ ஒரு பயணியைப் போன்று வாழ். அல்லது வழிப்போக்கனைப் போல் வாழ். மண்ணறைக்குள் சென்று விட்டவர்களில் ஒருவனாக உன்னை நீ கருதிக்கொள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: முஃஜம் இப்னில் அஃராபி