01) முன்னுரை

நூல்கள்: இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு (கதை வடிவில்)

உலகில் முஸ்லிமாக வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் முன்மாதிரியாக இப்ராஹிம் அலை அவர்களை அல்லாஹ் தேர்வு செய்துள்ளான் . இப்ராஹிமின் மார்க்கம் தான் இஸ்லாம் என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடுகிறான் .

இப்ராஹிம் (அலை) அவர்களை அறிந்து கொள்ளாமல், இஸ்லாத்தை முழுமையாக நம்மால் அறிய முடியாது . ஓரிறைக் கொள்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் புரிந்து கொள்ளவும் , அதைப் பிரச்சாரம் செய்வதை அறிந்து கொள்ளவும், இப்ராஹிம் (அலை) அவர்களைக் கற்பது அவசியம் ஆகிறது .

கொள்கையில் உறுதியாக இருப்பதையும் , இறைவனுக்கு எவ்வாறு கட்டுப்படுவது என்பதையும் இப்ராஹிம் (அலை) நமக்கு கற்றுத்தருகிறார்கள் . ஒருவனுக்கு எந்த அளவிற்கு ஈமான் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அல்லாஹ்வால் சோதிக்கப்படுவார் ; அந்த சோதனைகள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்திற்காக தரப்படுகிறது என்றும், சோதனைகளின் இறுதி இறைவனின் உதவியைக் கொண்டும், ஈமானைக் கொண்டும் நிறைவு பெரும் என்பதையும், இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு நமக்கு கற்றுத் தருகிறது . இன்னும் பல படிப்பினைகளும் இப்ராஹீம் அலை அவர்களின் வரலாற்று நிகழ்வுகளில் இருந்து நமக்கு கிடைக்கின்றன .

நமது இளவல்களுக்கு இப்ராஹிம் அலை அவர்களை அறிமுகப்படுத்துவது அவசியம் ஆகும். வாசிப்பு அவர்களது சிந்தனையை விரிவடைய செய்யும். இந்த ஆக்கம் இப்ராஹிம் (அலை) அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளைக் குறித்து , குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்ட விசயங்களை மட்டும் தொகுத்து கதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது . அவர்களது வாழ்க்கையில் சில நிகழ்வுகளின் வரிசை ஹதீஸ்களின் மூலம் தெரிகிறது ; மற்ற நிகழ்வுகள் வரிசைகிரமமாக நமக்கு தரப்படவில்லை . எனினும் , நிகழ்வுகளைக் குறித்த வசனங்களின் முன் பின் வசனங்களைக் கொண்டும் , ஹதீஸ்களில் இருந்து கிடைக்கும் பொருளைக் கொண்டும் , இது இந்த வரிசையில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற கணிப்பிலேயே இந்த ஆக்கம் தொகுக்கப்பட்டுள்ளது . நிகழ்வுகளின் வரிசையை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

நிகழ்வுகள் சொல்லப்பட்டதோடு அல்லாமல், அதன் மூலம் கிடைக்கும் பாடங்களையும் படிப்பினைகளையும் வாசகர்கள் உணரும் விதமாக இந்த ஆக்கம் எழுதப்பட்டுள்ளது.

எனவே, சிறார்கள் வாசிக்கும் போது, பெரும்பாலான இடங்கள் அவர்கள் படித்ததும் புரிந்து கொள்வர். சில பகுதிகளை ஆசிரியரோ அல்லது பெற்றோரோ விளக்கினால் அவர்கள் பல தெளிவுகளை அடைவார்கள் . அவர்களது சிந்தனைத் திறனும் ஆளுமைத் திறனும் வளரும் . இன்ஷா அல்லாஹ் .

அல்லாஹ் நல்ல நோக்கங்களை அங்கீகரிப்பானாக !!