01) முன்னுரை
மனிதன் சந்திக்கும் சோதனைகளில் நோய் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நோய்க்கு ஆட்படாதவர்கள் யாருமில்லை என்று சொல்லாம். ஆண்டியிலிருந்து அரசன் வரை, சாதாரண மனிதர்களிலிருந்து இறைத்தூதர்கள் வரை நோய்களின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். குறிப்பாக இறையச்சமுடையவர்கள் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
சஅது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகமாகச் சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்குச் சோதிக்கப்படுவான்.
அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியாக இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப் பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப்படுவான்.
ஒரு அடியான் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்ற வரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸயீத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல் : (திர்மிதீ: 2322)
மற்றொரு அறிவிப்பில்…… மரணம் வருகின்ற வரை சோதனை இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (திர்மிதீ: 2324) (முஸ்னஃப் இப்னு அபி ஷைபா 1493) என்ற ஹதீஸில் வருகிறது.
இப்படிபட்ட நேரங்களில் இந்த சோதனைகளை ஒர் முஸ்லிம் எப்படி தாங்கி கொள்ள வேண்டும் இந்த நோய்களை பற்றி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை ஒவ்வொரு தலைப்பாக பார்க்கலாம்.