01) முன்னுரை

நூல்கள்: பைபிள் ஒளியில் இயேசு

இயேசு என்று அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் தூதர்தான் என திருமறைக் குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும்.

இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் உண்மையான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும்தான் வணங்குமாறு மக்களுக்குக்குப் போதித்தார்கள். இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத், இன்ஜீல் வேதங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆனால் ஈஸா எனும் இயேசு அவர்கள் இறைவனிடம் உயர்த்தப்பட்ட பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் அவரை இறைவனுடைய மகன் என்றும், அவர்தான் இறைவன் என்றும் தவறான கொள்கைகளைக் கிறித்தவ மக்களுக்கு மத்தியில் பரப்பினர். இயேசு போதித்த உண்மையான கொள்கைகள் மறைக்கப்பட்டு அவருக்குப் பின் தோன்றிய வழிகேடுகளே இயேசுவின் கொள்கைகளைப் போன்று ஆகிவிட்டது.

ஒரு உண்மைக் கிறித்தவர் தனது கைகளில் வைத்திருக்கும் பைபிளை உண்மையை அறியும் எண்ணத்துடன் படிப்பாரேயானால் நிச்சயமாக திருமறைக் குர்ஆன் குறிப்பிடுவதைப் போல் இயேசு இறைவனின் தூதர்தான் என்பதையும், ஒப்பற்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத்தான் இயேசு வணங்குமாறு மக்களுக்குப் போதித்தார் என்பதையும் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் என்பதை இயேசுவே எடுத்துரைக்கும் வகையிலும், மற்றவர்கள் கூறுவதை இயேசு ஆமோதிக்கும் வகையில் ஏராளமான வசனங்கள் பைபிளில் இடம் பெற்றுள்ளன. அவற்றை ஒவ்வொரு ஆதாரமாகக் காண்போம்.