01) முன்னுரை
2010 ஆம் ஆண்டு ரமலான் மாதம் மதுரையில் உணவின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அவ்வுரையைக் கேட்ட சிலர் இதை ஒரு நூலாகக் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன் விளைவே உங்கள் கரங்களில் தவழும் இந்நூல்.
உணவைப் பற்றிய செய்திகளை ஒரு சிறு நூலுக்குள் சிறைபிடிக்க நினைப்பது சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில் உணவைப் பற்றி எழுதுவது ஒருவிதத்தில் மனிதகுல வரலாற்றையே எழுதுவதற்க்குச் சமம் எனலாம்.
முதல் மனிதன் பூமியில் தேடிய முதல் தேடலே வயிற்றின் பசி போக்கும் உணவுத் தேடலாகத் தான் இருந்திருக்க வேண்டும்..
அன்று முதல் இன்று வரை மனிதன் தனது சிறு மதியின் துணை கொண்டு எதைச் சாப்பிடலாம்? எதைச் சாப்பிடக்கூடாது? எந்த உணவில் ஆரோக்கியம் இருக்கிறது? அறுசுவை எதிலிருக்கிறது? அவற்றை உண்ணும் முறை என்ன? என்றெல்லாம் பக்கம் பக்கமாக பாடம் படித்திருந்தாலும் அதில் தெளிவற்ற நிலையே இன்னும் தொடர்கிறது.
அது குறித்து தீர்க்கமான முடிவுக்கு வருவதாக இருந்தால் முக்காலமும் அறிந்த முதலோனின் வார்த்தைகளே அதற்கு முழுமையான வழிகாட்டும். ஆதி மனிதனின் காலம் தொட்டு
இறைவனும் இதை நினைவூட்டிக் கொண்டே வருகிறான்.
என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 2:38) ➚
இது மனித குலத்தின் ஆதிப் பெற்றோருக்கு இறைவன் கூறிய வார்த்தைகளாகும். அந்தப் பேரறிவை முதலாய்க் கொண்டு நான் அறிந்த சில விஷயங்களை இங்கே தொகுத்துள்ளேன். இந்நூல்:
வெளிவர ஊக்கமளித்து உதவிகள் செய்த என் நண்பர்களுக்கும் அருள்புரிந்த அல்லாஹ்வுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அல்லாஹ்வுக்கே எல்லாம் புகழும்
எம்.ஏ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி