01) முன்னுரை

நூல்கள்: இப்படியும் சில தஃப்ஸீர்கள்

இறைவன் மனித குலத்திற்கு வழிகாட்டியாக திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அருளினான். அப்பழுக்கற்ற இறைவேதத்தின் விளக்கத்தை மனித சமுதாயத்திற்கு விளக்கிட முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக நியமித்தான்.

திருக்குர்ஆன் என்பது கருத்து மோதல்களற்ற, முரண்பாடுகளில்லாத ஒரு பரிசுத்த வேதம். தூய இறைவனின் தூது வார்த்தைகள். இறைவனே இதற்கு ஆசிரியர் என்பதால் திருக்குர்ஆனில் தவறு என்றே பேச்சுக்கே இடமில்லை. உலகம் முழுவதிலும் தவறே இல்லாத ஒரு புத்தகம், வேதம் இருக்கும் எனில் அது திருக்குர்ஆன் என்ற ஒன்று மட்டுமே.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்

(அல்குர்ஆன்: 4:82)

இப்படிப்பட்ட இறைவேதத்தை மக்கள் குருட்டுத்தனமாக நம்பக்கூடாது என்றும். அவற்றில் உள்ள கருத்துக்களை ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் இறைவன் உத்தரவிடுகிறான்.

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழமாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 25:73)

சிறிதளவும் தவறில்லாத திருக்குர்ஆனையே குருட்டு பக்தியோடு கையாளக்கூடாது. அவற்றில் உள்ள கருத்துகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று இறைவன் கூறுகிறான் எனில், திருக்குர்ஆன் அல்லாத ஏனைய வேதங்களையும், புத்தகங்களையும் அணுகும் முறையைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் முஸ்லிம்கள், இமாம்களின் தஃப்ஸீர்களை (திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியின் விளக்கங்கள்) தவறுகளுக்கு அப்பாற்பட்டது, பரிசுத்தமானது என்று குருட்டுத்தனமாக நம்புகின்றனர். அதாவது இதன் மூலம் தங்கள் இமாம்களுக்குத் தவறே ஏற்படாது என்ற ஒரு அபத்தமான கருத்தை விதைத்து, அவர்களை தூய இறைவனுடன் சமமாக்குகின்றனர்.

இமாம்களின் மீதுள்ள குருட்டு பக்தி அவர்களின் கண்ணை மறைப்பதே இதன் காரணம்.

குர்ஆனுடைய வசனங்களை இன்னபிற வசனங்களுக்கும், நபிகளாரின் நடைமுறைக்கும் முரணாகப் புரியக்கூடாது என்ற அடிப்படையில் நின்று அறிஞர் பி.ஜே உட்பட தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர்கள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கூறும்போது கருத்தால் எதிர்க்க வலுவற்றவர்கள் இது தவறான விளக்கம் என கூப்பாடு போடுகின்றனர். அவ்விளக்கம் குர்ஆனுக்கு எதிராக இருக்கிறது என்பதால் அல்ல. தங்கள் இமாம்களின் தஃப்ஸீருக்கு மாற்றமாக இருப்பதாலேயே இந்தக் கூப்பாடு.

தங்கள் இமாம்கள் விளக்கம் என்ற பெயரில் எதை உளறிக் கொட்டினாலும் “ஆஹா… என்னே ஒரு அற்புதமான விளக்கம்’ என்று துதி பாடுகின்றனர்.

ஒரு முஸ்லிம், எந்த ஒரு மனிதரின் கருத்தை ஆமோதிப்பதாக, சரி காண்பதாக இருந்தாலும், அது குர்ஆனுடனும் ஆதாரப்பூர்வமான ஹதீசுடனும் ஒத்துப் போகின்றதா என்பதையே அளவுகோலாக முன்னிறுத்த வேண்டும்.

குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றுடன் சம்பந்தமில்லாத, கேலிக்கூத்தான, முரண்பாடான விளக்கங்களை எந்த இமாம் கூறினாலும் அது தவறு என்று அறிந்து நிராகரித்து விட வேண்டும். அதை விடுத்து அவர்களுக்காக வக்காலத்து வாங்கும் வேலையை செய்யக் கூடாது.

மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் தலைசிறந்த இமாம்களாக இருந்தாலும் அவர்களும் தவறு செய்பவர்கள் என்பதை இஸ்லாமியர்கள் நன்கு உணர வேண்டும்.

இதை உணர்த்துவதற்காகவே குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் இமாம்கள் அளித்த தவறான, அர்த்தமற்ற, கேலிக்கூத்தான, குர்ஆனுக்கு எதிரான விளக்கங்களை இங்கே தொகுத்தளிக்கின்றோம்.

இதன் நோக்கம் அறிஞர்களை குற்றப்படுத்துவதோ, குறை காண்பதோ அல்ல. மார்க்கத்தின் போதனைகள் மக்களைச் சென்றடைய உழைத்த உழைப்பாளிகள் அவர்கள் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

எனினும் அவர்கள் கூறியிருக்கின்ற குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான ஏராளமான விளக்கங்களை மக்கள் போற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்க, மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட காரியம் என்பதை இஸ்லாமிய சமுதாயத்திற்கு உணர்த்திடவும், எச்சரித்திடவும், இமாம்களின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள குருட்டு பக்தியை வேரறுப்பதுவுமே இதன் நோக்கம் என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாய்க்கு விளக்கம்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), (புகாரி: 3225)

ஒருவரது வீட்டில் நாய் இருந்தால் மலக்குமார்கள் அவ்வீட்டில் நுழைய மாட்டார்கள் என்பது இந்த ஹதீஸ் சொல்லும் சேதி. (இதில் விதிவிலக்குகளும் உண்டு. அதை ஏனைய ஹதீஸ்களில் நபிகள் நாயகம் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.)

இந்த ஹதீஸை ஒரு முறை படித்தாலே இக்கருத்து நன்கு விளங்கி விடுகின்றது. இதன் பொருளை புரிவதற்காக சிந்திப்பதற்கோ, மூளையை கசக்குவதற்கோ கடுகளவும் வேலை என்பது தெளிவு. இதோ! கல்விக்கடல் என்று போற்றப்படுகின்ற இமாம் கஸ்ஸாலி அவர்கள் மிகத் தெளிவான இச்செய்திக்கு விளக்கம் (?) அளிப்பதைப் பாருங்கள்.

மனிதர்களின் உள்ளம் தான் மலக்குமார்களின் வீடு, அவர்களின் தங்குமிடமாகும். கோபம், தவறான இச்சை, பொறாமை, பெருமை, கர்வம் இது போன்ற தீய குணங்கள் குரைக்கின்ற நாய்களுக்கு சமமானவை. கல்வி எனும் ஒளியை மனிதர்களின் உள்ளத்தில் மலக்குகளின் மூலமே இறைவன் வழங்குவான் எனும் போது (தீய குணங்கள் என்ற) நாய்களால் சூழப்பட்டிருக்கும் இவர்களிடத்தில் மலக்குமார்கள் எவ்வாறு வருவார்கள்?

நூல்: இஹ்யாவு உலூமித்தீன் வ மஅஹூ தக்ரீஜூல் ஹாஃபிழில் இராக்கி

பாகம் 1, பக்கம் 95

மேற்கண்ட ஹதீஸில் நாய் என்பது தீய பண்புகளையும் வீடு என்பது மனிதர்களின் உள்ளத்தையும் குறிக்குமாம். எனவே எந்த மனிதனுடைய உள்ளத்தில் தீய பண்புகள் உள்ளனவோ மலக்குமார்கள் அவனிடத்தில் இறைக் கல்வியைக் கொண்டு வர மாட்டார்கள் என்பதே இந்த ஹதீஸின் பொருள் என்று இமாம் கஸ்ஸாலி விளக்கமளிக்கின்றார்.

பாமரர்களுக்கும் புரிகின்ற ஒரு ஹதீஸின் பொருளை விளக்கம் என்ற பெயரில் அதற்கு இது அர்த்தம், இதற்கு அது அர்த்தம் என்று ஹதீஸின் கருத்தையே அனர்த்தமாக்குகின்றார் இமாம் கஸ்ஸாலி. இது தவறு என்று அறிந்தும் வக்காலத்து வாங்கும் மேதாவிகளை என்னவென்று சொல்வது?

ரூஹ் என்றால் என்ன?

(முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 17:85)

இவ்வசனம் இறக்கப்பட்டதன் பின்னணி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நான் மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், “இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்” என்று சொன்னார். மற்றொருவர், “நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்-விடக் கூடாது” என்று சொன்னார். பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, “அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், “அவர்களுக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்து கொண்டேன். ஆகவே, வஹீ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) “நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்” எனும் (அல்குர்ஆன்: 17:85) ஆவது இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

(புகாரி: 7297)

யூதர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ரூஹைப் பற்றி கேட்கின்றனர். ரூஹ் என்ற அரபுச் சொல்லுக்கு உயிர் எனப் பொருளாகும். உயிர் என்பதன் அடிப்படை, அதன் செயலாக்கம், அதன் இயக்கம் போன்றவற்றை உள்ளடக்கி உயிர் என்றால் என்னவென்று நபிகளாரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மேற்கண்ட வசனத்தை நபிகளார் கூறுகின்றார்கள்.

ரூஹ் என்பது இறைவனின் கட்டளைப்படி இயங்கக்கூடியது. அதை முழுமையாய் விளங்கும் அளவுக்கு மனிதர்கள் கல்வியறிவை பெறவில்லை. இது தான் மேற்கண்ட வசனம் கூறும் கருத்து என்பதை நபிகளார் பதிலாகக் கூறும் வசனத்திலிருந்தே எளிதாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் தஃப்ஸீர் என்ற பெயரால் ரூஹ் தொடர்பாக இமாம்கள் கூறும் விளக்கத்தைக் கேட்டால் நமது தலை கிறுகிறுவென சுற்ற ஆரம்பித்து விடுகின்றது. இது ஒன்றும் மிகையான வர்ணணையல்ல. பின்வரும் விளக்கத்தைக் கொஞ்சம் பாருங்கள்.

ரூஹ் என்றால் வானவர்களில் ஒருவர் ஆவார். அவருக்கு எழுபதாயிரம் முகம் உண்டு. ஒவ்வொரு முகத்திற்கும் எழுபதாயிரம் நாவுகள் உண்டு. ஒவ்வொரு நாவிற்கும் எழுபதாயிரம் மொழிகள் உண்டு. அனைத்து மொழிகளிலும் அவர் இறைவனை தஸ்பீஹ் செய்வார். ஒவ்வொரு தஸ்பீஹின் மூலம் ஓர் வானவரை படைத்து மறுமை நாள் வரை ஏனைய வானவர்களுடன் இறைவன் பரவச் செய்வான்.

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 5, பக்கம் 115

ரூஹ் என்பது ஆயிரம் தலைகள் உள்ள வானவர் ஆவார் என்றும் ஆதம் (அலை) அவர்களின் தோற்றம் கொண்ட வானவர்களில் ஒரு பிரிவினர் என்றும் இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

(பார்க்க: தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 5, பக்கம் 116)

இவைகள் தாம் அற்புத விளக்கமா? இந்த விளக்கங்கள் குர்ஆனுடைய வசனத்தைச் சரியாக புரிய வழிவகுக்குமா? அல்லது தலைவலியை ஏற்படுத்துமா என்பதை சிந்தித்துப் பாருங்கள். இது போன்ற விளக்கங்களுக்கு சால்ஜாப்புகள் கூறும் உலமா சபையினர் இனியாவது இமாம்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதிலிருந்து விலகிக் கொள்வார்களா?

அதிசய உயிரினம்

அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.  (அல்குர்ஆன்: 27:82)

உலகம் அழிக்கப்படுவதற்கு முன் மனிதர்களிடத்தில் உரையாடும் ஒரு உயிரினத்தை வெளிப்படுத்துவதாக இறைவன் தெரிவிக்கின்றான். நபிகளாரும் மறுமை நாள் நெருங்கி வருவதன் ஒரு அடையாளமாக இந்த உயிரினத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். அது என்ன உயிரினம்? அதன் தன்மைகள் யாவை? என்பதையெல்லாம் இறைவனே நன்கறிவான். எந்த ஒரு முஸ்லிமும் நமக்குப் புலப்படாத, அறிவில்லாத விஷயத்தைப் பற்றிப் பேசலாகாது. மறுமை நாள் நிகழ்வதற்கு முன் பேசும் உயிரினத்தை இறைவன் வெளிப்படுத்துவான் என்று நம்பிக்கை கொள்வதே ஒரு முஃமினுக்கு போதுமானதாகும்.

இறைவன் சொல்லித் தராததை நாமாகக் கற்பனை செய்து நம்பிக்கை கொண்டால் அதைப் பற்றி இறைவனிடம் நாம் பதில் சொல்லியாக வேண்டும். இதை மனதில் நிறுத்திக் கொண்டு குறிப்பிட்ட உயிரினம் தொடர்பான இமாம்களின் விளக்கங்களைப் பார்வையிடுவோம்.

அதனுடைய தலை குள்ளநரியின் தலையை போன்றிருக்கும். அதனுடைய கண் பன்றியின் கண் போன்றிருக்கும், அதனுடைய காது யானையின் காது போன்றிருக்கும், அதனுடைய கொம்பு மானின் கொம்பு போன்றிருக்கும், அதனுடைய கழுத்து நெருப்புக் கோழியின் கழுத்து போன்றிருக்கும். அதன் நெஞ்சு சிங்கத்தின் நெஞ்சாகும். அதன் நிறம் புலியின் நிறமாகும். அதன் இடுப்பு பூனையின் இடுப்பாகும். அதனுடைய வால் ஆட்டின் வால் போன்றிருக்கும் அதனுடைய கால்கள் ஒட்டகத்தின் கால்கள் போன்றிருக்கும். ஒவ்வொறு மூட்டுக்கும் இடையில் பன்னிரெண்டு 12 முழம் இடைவெளி இருக்கும்.

நூல்: தஃப்ஸீருல் குர்துபீ, பாகம் 13 பக்கம் 236

தஃப்ஸீர் இப்னு கஸீரில் இவ்வசனத்திற்கு விளக்கம் கூறுகையில் மேற்கூறியவைகளைக் குறிப்பிட்டு விட்டு அந்த உயிரினத்திடம் மூஸா (அலை) அவர்களின் கைத்தடியும் சுலைமான் (அலை) அவர்களின் மோதிரமும் (?) வெளிப்படும். மூஸா (அலை) அவர்களின் கைத்தடியின் மூலம் ஒவ்வொரு முஸ்லிமுடைய முகத்திலும் அது வெண்புள்ளியை ஏற்படுத்தும். அந்த வெண்புள்ளி பரவி முகம் முழுவதும் வெண்மையாகிவிடும். சுலைமான் (அலை) அவர்களின் மோதிரத்தின் மூலம் காபிருடைய முகத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தும். அது பரவி முகம் முழுவதும் கருத்துவிடும் என்று விளக்கம் கூறி அடுக்கிக் கொண்டே போகின்றனர்.

(பார்க்க தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் 6, பக்கம் 214)

இறைவன் கூறாத, இறைத்தூதர் அளிக்காத விளக்கத்தை இவர்கள் யாரிடமிருந்து கற்றுக் கூறுகிறார்கள்? தங்களுடைய கற்பனைத் திறனை, புலமையை திருக்குர்ஆனின் வசனங்களுக்கு விளக்கம் கூறி நிருபிக்க முனைகிறார்களோ என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு இவர்களின் விளக்கம் அமைந்திருக்கின்றது.

இறைவன் விளக்கித் தராத ஒன்றை, தன் மனம் போன போக்கில் விளக்கம் அளிப்பது இறைவன் மீதே இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலல்லவா? இதை எவ்வாறு இவர்கள் செய்யத் துணிந்தார்கள்?

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

(அல்குர்ஆன்: 18:15)

இமாம்கள் கூறிய இது போன்ற விளக்கங்களை, தவறை நியாயப்படுத்தவும் ஒரு பிரிவினர் இருக்கின்றார்கள் எனும் போது நம்மை ஆச்சரியம் தொற்றிக் கொள்ளவே செய்கின்றது.