01) முன்னுரை
அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியைக் காண்பதற்கு முன் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கைக் காட்சிகளைக் கொஞ்சம் கண்டு வருவோம்.
அன்றைய அரபியப் பாலைவனம் நிலத்தால் மட்டும் பாலைவனமாக இல்லை! சீரிய சிந்தனை வளத்திலும் வறண்ட பாலைவனமாகக் காட்சியளித்தது. பல தெய்வக் கொள்கை தான் அந்தப் பாலைப் பெருவெளியை ஆட்சி செய்தது. இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏற்றி வைத்த ஏகத்துவ இறைக் கொள்கை அணைந்து, கல்லையும் களிமண்ணையும் வணங்கும் அறியாமை இருள் மக்காவை அப்பிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இப்ராஹீம் (அலை) அவர்ளின் வழித்தோன்றல்களில் வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் ஏகத்துவ விளக்கின் திரியைத் தூண்டி எரிய விடுகின்றார்கள். அதுவரை அவர்களை அல்அமீன் – நம்பிக்கையாளர், நம்பிக்கை நட்சத்திரம் என்று பாராட்டிக் கொண்டிருந்த அரபுலகு தங்களின் அதிபரம வைரியாக, குறைஷிக் குலத்தின் கோடாரிக் காம்பாக பார்க்க ஆரம்பித்தது. பகைமைத் தீயை வளர்த்தது. முதலில் ஊர் நீக்கம் செய்தது. உணவுப் பொருள் எதுவும் அவர்களைச் சென்றடைய விடாமல் பார்த்துக் கொண்டது. பைத்தியம் என்று பட்டம் சூட்டியது. மந்திரக்காரர், மாயக்காரர், மதிகளை மயக்கும் சூன்யக்காரர், குறி சொல்பவர்,பொய்யர் என்றெல்லாம் கூறியழைத்தது.
இந்தச் சோதனையான கால கட்டத்தில் தான் நபி (ஸல்) அவர்களை நோக்கி, நீங்கள் ஓர் உண்மையாளர், அல்லாஹ்வின் அகில உலகத் தூதர் என்று ஒருவர் நம்பிக்கை கொண்டு,அவர்கள் கொண்டு வந்த கொள்கையை அப்படியே ஏற்றார். நபி (ஸல்) அவர்களை நோக்கி சோதனைகள் சூழ்ந்திருக்கும் அந்த சோகக் காலகட்டத்தில் தோழமை கொண்ட அந்தத் தோழர் அபூபக்ர் (ரலி) ஆவார்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்னி ஆற்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் போது ஆதரவாக வந்தவர் அபூபக்ர் (ரலி). இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி வந்த அடக்குமுறைகள், அத்துமீறல்கள் அனைத்தும் அபூபக்ர் (ரலி) மீதும் பாய்ந்தன! அதனால் அன்னார் அபீசீனியா நோக்கிப் பயணமானார்.
பாதையின் நடுவே பழகிய நண்பர் ஒருவர், உம்மைப் போன்ற உத்தமர் இந்த ஊரை விட்டு வெளியேறலாகாது என்று பழக்கம் பேசி அவரை ஊருக்குத் திரும்ப அழைத்து வருகின்றார். அந்த அடைக்கலம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இந்த நேரத்தில் தான் மதீனாவை நோக்கிப் பயணமாக அல்லாஹ்வின் அனுமதி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.
அந்தத் துறவுப் பயணத்தின் போது தூதருக்குப் பயணத் தோழராகும் பாக்கியம் அபூபக்ர் (ரலி)க்குக் கிடைக்கின்றது. அன்று நபி (ஸல்) அவர்களை தற்காலிகமாக ஊரை நீக்கியவர்கள் இனி இவர் உயிருடன் இருந்தால் மக்கா பக்காவாக அவர் பக்கம் போய் விடும் என்று பயந்து அவர்களது உயிரை நீக்கம் செய்ய முன்வருகின்றார்கள். கொலை செய்யத் திட்டமிடுகின்றார்கள். பகைக் கூட்டம் தலைக்கு விலை நிர்ணயித்து வலை போட்டுத் தேடும் போது தான் உற்ற தோழராய் – நபி (ஸல்) அவர்களின் உயிர் தோழராய் மக்காவை விட்டு வெளியேறுகின்றார் அபூபக்ர் (ரலி).
பகை துரத்தும் இந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி)யுடன் குகை புகுகின்றார்கள். அபூபக்ர் (ரலி)யின் இந்த அர்ப்பணிப்பு, அருந்தியாகம் அல்லாஹ்வினால் அத்தவ்பா என்ற அத்தியாயத்தில் ஸாஹிப் – தோழர் என்ற பட்டத்துடன் திருமறையில் பதிக்கப் பட்டு விட்டது. அபூபக்ர் (ரலி)யைப் பற்றி உலக மக்கள் புரிந்து கொள்ள இதை விட வேறென்ன பாடம் வேண்டும்? இறுதி நாள் வரை நிலைத்து நிற்கும் குர்ஆன் வசனம் ஒன்றே அவரது சிறப்பைத் தெரிந்து கொள்வதற்குப் போதுமானது.
* இதன் பின் குகையிலிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களுடன் மதீனா வருகின்றார்.
* பல்வேறு போர்க்களங்களில் நபி (ஸல்) அவர்களுடன் பங்கேற்கின்றார்.
* நபி (ஸல்) அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவர்களது வாழ்நாளிலேயே அவர்களுக்கு முன்னிலையில் இமாமாக நின்று தொழும் மகத்தான தகுதியைப் பெறுகின்றார்.
* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த எல்லா அமல்களிலும் முதலிடம் வகிக்கின்றார்.
* மாநபியவர்கள் மரணித்ததும் மக்கள் அவர்களை மரணிக்கவிலை என்ற எண்ணத்தில் மயக்கமுற்றுக் கிடக்கும் போது அல்குர்ஆனின் வசனங்களை ஆதாரமாக, அணிகலனாகக் கொண்டு தனது மணிமொழிகள் மூலம் மக்களை மயக்கத்திலிருந்து மீட்டு, ஏகத்துவத்தில் நிலை பெறச் செய்கின்றார்.
இவை அபூபக்ர் (ரலி) ஆட்சிக் கட்டிலில் ஏறி, அமீருல் முஃமினீனாக அமர்வதற்கு முன்னால் அமையப் பெற்ற வரலாற்று நிகழ்வுகள்! நல்லாட்சி புரிந்த நான்கு கலீபாக்கள் என்ற தொடரில் ஆரம்பமாக இடம்பெறும் அபூபக்ர் (ரலி)யின் வாழ்க்கை வரலாற்றுக்கான அடிப்படைக் குறிப்புகள்! சுருக்கமான விவரப் பின்னணிகள்!
இனி….
* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் முன் ஆட்சித் தலைவராக அரியணை ஏறுதல்
* ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று கிளம்பிய சதிகார சக்திகளுக்கு அபூபக்ர் (ரலி) அடித்த சாவு மணி!
* போலி இறைத்தூதர்கள் மீது அன்னார் தொடுத்த புனித அறப்போர்கள்
* இரண்டே கால் ஆண்டு கால ஆட்சியில் அவர் சந்தித்த சரித்திரம் – சாதித்த சாதனைகள்
* அவரது மரணம்
இவற்றை விரிவாகக் காண்பதற்கு முன் ஒரு முக்கிய விஷயத்தை இங்கு குறிப்பிடக் கடமைப் பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைத் தவிர வேறு யாருடைய வாழ்க்கையும் பாதுகாக்கப்பட்டவை அல்ல! அதனால் அபூபக்ர் (ரலி) வரலாற்றில் இடம் பெறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர்களை சமர்ப்பிக்க இயலாது. அது சாத்தியமும் அல்ல!
ஆனால் அதே சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட சொல் செயல் அனுமதி ஏதேனும் இந்த வரலாற்றில் இடம் பெற்றிருப்பின் அதற்கான அறிவிப்பாளர் தொடர் என்ற ஆதாரப்பூர்வமான பாதையை விட்டு நிச்சயம் தடம் புரளாது என்று உறுதி கூறுகின்றோம்.
வரலாறு என்றாலே அதில் கற்பனை நதிகள் சங்கமமாகும் கடலாகி விட்டது. இந்தச் சரித்திரத் தொற்று நோய் எல்லா வரலாறுகளையும் தாக்கியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் நான்கு கலீபாக்களின் வரலாறும் விதிவிலக்கல்ல!
எனினும் அடித்துக் கரை புரண்டு வரும் வெள்ள ஓட்டத்தில் கலந்து வரும் கற்பனை வள வண்டல்கள், குப்பைக் கூளங்கள் உள்ளே வந்து விடாத அளவுக்கு அணைகள் கட்டப்பட்டு,உண்மை எனும் தெளிந்த நீர் மட்டும் இங்கு பாய்ச்சப்படும் வகையில் செய்திகளின் தரம் பார்த்து இந்தத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அந்த வகையில் இந்த வரலாற்றுத் தொடர் ஏனைய வரலாறுகளைப் போலல்லாமல் ஒரு விதி விலக்காகத் திகழும் இன்ஷா அல்லாஹ்!