01) முன்னுரை

நூல்கள்: அல்லாஹ் உருவமற்றவனா? ஓர் ஆய்வு

உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;

உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.

இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், “அல்லாஹ்வுக்கு உருவமில்லை’ என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள்.

அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், “அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது’ என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் இருக்கும் தெளிவான ஆதாரங்கள் இந்த ஆலிம்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, தவ்ஹீது பிரச்சாரம் தலைகாட்டத் துவங்கிய மாத்திரத்தில் மக்கள் திருக்குர்ஆனின் தமிழாக்கங்களை அதிகமதிகம் படிக்கத் துவங்கினர். இந்தத் தமிழாக்கங்கள் மக்களிடம் மாபெரும் தாக்கத்தையும் தூய இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற தாகத்தையும் அதிகரித்தது.

உண்மையான கடவுள் கொள்கையை அவர்கள் அறியத் தலைப்பட்டனர். அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது என்ற விளக்கம் அந்த உண்மையான கடவுள் கொள்கையில் உள்ளது தான் என்பதை அவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். அல்லாஹ் அரூபி, உருவமற்றவன் என்ற அசத்திய நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட்டனர்; வெளியேறினர்.

ஆனால் இந்த பரேலவிஸ ஆலிம்கள் மட்டும் இந்தச் சிந்தனைக்கு வரவில்லை. இது வரை வர மறுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைந்து கொடுப்பதாக இல்லை.

அண்மையில் சென்னையில் இந்த பரேலவிஸக் கொள்கைவாதியான அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இது தொடர்பாக விவாதம் நடந்தது.

இதில் தவ்ஹீத் அணி சார்பில் “இறைவனுக்கு உருவமுண்டு’ என்ற தலைப்பில் வாதம் புரிந்து. அல்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளி, அள்ளி வழங்கப்பட்டது.

அல்லாஹ் உருவமற்றவன் என்ற தலைப்பில் பேசிய அப்துல்லாஹ் சமாளி, நாம் எடுத்து வைத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்குக் கண்ட கண்ட, கழிவு கெட்ட வியாக்கியானங்களைக் கொடுத்து கடைசி வரைக்கும் மறுத்துக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் வசனங்களையும் ஹதீஸ்களையும் கேலியும் கிண்டலும் செய்தார்.

இதற்குக் காரணம் இந்தப் பரேலவிகள், அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று ஏற்கனவே முடிவில் இருந்தது தான். அதனால் தான் அந்தக் குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் கடைசி வரை மறுத்தனர்; கேலி செய்தனர்.

அவர்கள் மறுத்த குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் என்னென்ன? என்பதை நாம் பார்க்கின்ற அதே வேளையில், இந்த ஆதாரங்கள் இஸ்லாமியக் கடவுள் கொள்கையின் உயிர் நாடிகள் என்பதைக் கருத்தில் கொண்டு அவற்றை ஒரு தொகுப்பாகவும் ஆக்கமாகவும் இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது அந்தத் தொகுப்பிற்குள் செல்வோம்.